ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ‘அறிவு’ எனும் பொக்கிஷத்தை இறைவன் வைத்திருக்கிறான்
[ ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அறிவு எனும் பொக்கிஷத்தை இறைவன் வைத்திருக்கிறான். உலகில் உள்ள அனைவருக்கும் அல்லாஹ் வழங்கியிருப்பது ஒரே அறிவுதான்.
ஒருவருக்கு அறிவை அதிகமாகவும் மற்றவர்களுக்கு, மற்றவருக்கு அறிவை நடுநிலையாகவும், இன்னொருவருக்கு குறைவாகவும் வைத்து இறைவன் நம்மை படைத்திருந்தால் இறைவன் பாரபட்சம் பார்ப்பவனாக ஆகிவிடுவான். பாரபட்சம் காட்டுவது எப்படி இறைவனின் தன்மையாக இருக்க முடியும்? எனவே! இறைவனது படைப்பில் நாம் குறை காண முடியாது! குறை காணவும் கூடாது.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு திறமைகள்! திறமைகள் இல்லாத மனிதர்களே கிடையாது! தனக்குள் இந்த திறமை இருக்கிறது என்று கண்டு பிடித்ததால்தான் இன்று பல அறிஞர்கள் நமக்கு கிடைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் இன்று அடையாளம் தெரியாதவர்களாக இருந்திருப்பார்கள்.]
ஒரு கல்லூரிப் பேராசிரியரின் மனம் திறந்த மடல்..
அன்பிற்குறியவர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
நீங்களும், உங்களைச் சார்ந்தவர்களும் நலமோடு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிந்த் பின் நல்ல மதிப்பென்கள் பெற்று நீங்கள் விரும்பிய துறையோ அல்லது நீங்கள் விரும்பாத ஏதேனும் துறையோ கிடைக்கப் பெற்று கல்லூரிகளின் வாசத்தில் உங்களையும் இணைத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களது கல்லூரி அனுபவத்திற்கும், பள்ளி அனுபவத்திற்கும் மிகுந்த வேறுபாடுகள் இருக்கும். சீருடை, வகுப்பு நேரங்கள், படிக்கும் போன்று அனைத்தும் உங்களுக்கு புதிதாக தெரியும். வாழ்கை என்பது மாறும் அல்லது மாற்றப்படும் அனுபவங்கள் என்பதை உனது கல்லூரி வாழ்க்கை உனக்கு சொல்லிக் கொடுத்து விடும்.
மாறுகின்ற சூழ்நிலைக்கேற்ப உங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது விதி! உங்களை கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக உங்கள் பெற்றோர்கள் எடுத்த சிரமங்களும், உன்னை மேல் படிப்பு படிக்க வைப்பதற்காக அவர்கள்பட்ட பணக்கஷ்டங்களும், அடைந்த மனக்கஷ்டங்களும், பள்ளி, கல்லூரி முதல்வரை பார்ப்பதற்காக நீண்ட நேரம் வரிசையில் வெயிலில் வேர்த்துக் கொட்ட காத்துக் கிடந்த உன் பெற்றோரின் தியாகத்தை நீ அறிவாயா?
நீ சிரமப்படக்கூடாது என்பதற்காக உன் தந்தை செய்த தியாகங்களும், அவருடைய மனக்குமுறல்களும் உனக்குத் தெரியுமா? தெரியாதா? என்று எனக்குத் தெரியவில்லை.!
ஒரு கல்லூரியில் தனது மகனுக்காக விண்ணப்பப்படிவம் வாங்க வந்த ஒரு தந்தையிடம் கேட்டேன். ஏங்க சார்! நீ உங்கள் வேலையை விட்டு விட்டு இங்கு வரிசையில் நின்று கஷ்டப்படுகிறீர்கள்! ஏன் உங்கள் பிள்ளையை ஏன் அழைத்து வரவில்லை? என்று கேட்டதற்கு நான்தான் படிக்காம போயிட்டேன் என் மகன் கஷ்டப்படக் கூடாது. எங்களது கஷ்டம் அவனுக்கு தெரியவும் கூடாது என்பதற்காக இங்கு அவனை அழைத்து வரவில்லை என்று அந்த ஏழை மனிதரின் பதில் எனக்கு சம்மட்டியால் அடித்தது போல இருந்தது.
ஏழையின் தந்தைதான் கஷ்டப்படுகிறார்; எங்கள் அப்பா பணக்காரர்! அவருக்கெல்லாம் கஷ்டம் எதுவும் இல்லை என்று நினித்து விடாதே! அவரவர் தகுதிகளுக்கு தகுந்தார் போல கஷ்டப்பட்டிருப்பார்கள். எனவே எனதருமை மாணவச் செல்வங்களே! உங்கள் தந்தையும், நீங்களும் அடைந்த தியாகத்தை நினைவு கூர்ந்து உங்களது கல்லூரி வாழ்க்கையை தொடங்குங்கள்.
”வாய்ப்புகள் வரும் வரை காத்திருக்காதீர்கள்! நீங்களே வாய்ப்புகளை உருவாக்குங்கள்” என்ற வாசகங்களை இங்கே உங்களுக்கு நினைவூட்டுகிறேன்! நீங்கள் விரும்பிய துறை உங்களுக்கு கிடைத்திருந்தால் மனமுவந்து ஏற்றிருப்பீர்கள்! உங்களுக்கு பிடிக்காத துறையில் சேர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருந்தால் அதை உங்கள் விருப்பத்திற்குட்பட்டதாக மாற்ற முயற்சி செய்யுங்கள். எதையும் முடியாது என்று ஒதுக்கித் தள்ளி விடாதீர்கள்.
பொதுவாக பல மாணவர்களுக்கு இருக்கும் குணம் என்ன தெரியுமா? நம்மால் முடியாது; சாதிக்க முடியாது, அது அவர்களால் மட்டும்தான் முடியும் என்று தன்னைப் பற்றி குறைவாக மதிப்பிட்டு தாழ்வு மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள். அதை விட்டும் உன்னை எச்சரிக்கிறேன்!
ஒரு பிச்சைக்காரன் அது அவனது தொழில் பல ஆண்டு காலம் ஒரே இடத்தில் இருந்து பிச்சை எடுப்பது அவனது சிறப்பம்சம். அவனுக்கு வயது அதிகரித்தது; மரணம் நம்மை சூழ்ந்து கொள்ளும் என பயந்த போது தனது சகாக்களை அழைத்து எனக்கு வயது அதிகரித்து விட்டது. மரண தருவாயில் இருக்கிறேன் நான் மரணித்து விட்டால் என்னை இந்த இடத்திலேயே அடக்கி விடுங்கள் என்று தனது சகாக்களுக்கு உபதேசித்தார். அது போல் நாளும் நகர்ந்தது. அவரும் இறந்து போனார். அவரின் விருப்பப்படி அவரைப் புதைக்க அந்த இடத்தை தோண்டினார்கள்; அனைவருக்கும் ஆச்சர்யம்! அதிசயித்து அதிர்ந்து நின்று விட்டார்கள்! ஆம் அந்த குழிக்குள் ஒரு தங்கப் புதையல் இருந்தது.
இப்போது அவர்கள் யோசித்தார்கள் இந்த மனிதர் (பிச்சைக்காரர்) தனது வாழ்நாளில் பெரும் பகுதி பிச்சை எடுத்தே பிழைப்பு நடத்தினார். அதுவும் ஒரே இடத்தில் 20 வருடங்கள். 240 மாதங்களை தாண்டி வந்திருக்கிறார்; 960 வாரங்களை கடந்திருக்கிறார். 7300 நாட்கள் பயணித்திருக்கிறார். இத்தனை நாட்களில் சுமார் 2 மணி நேரம் ஒதுக்கி அந்தக் குழியைத் தோண்டியிருந்தால் அவர் எவ்வளவு பெரும் பணக்காரராக மாறியிருப்பார்.
அதுபோல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ‘அறிவு’ எனும் பொக்கிஷத்தை இறைவன் வைத்திருக்கிறான். உலகில் உள்ள அனைவருக்கும் அல்லாஹ் வழங்கியிருப்பது ஒரே அறிவுதான். ஒருவருக்கு அறிவை அதிகமாகவும் மற்றவர்களுக்கு, மற்றவருக்கு அறிவை நடுநிலையாகவும், இன்னொருவருக்கு குறைவாகவும் வைத்து இறைவன் நம்மை படைத்திருந்தால் இறைவன் பாரபட்சம் பார்ப்பவனாக ஆகிவிடுவான். பாரபட்சம் காட்டுவது எப்படி இறைவனின் தன்மையாக இருக்க முடியும்? எனவே! இறைவனது படைப்பில் நாம் குறை காண முடியாது! குறை காணவும் கூடாது.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு திறமைகள்! திறமைகள் இல்லாத மனிதர்களே கிடையாது! தனக்குள் இந்த திறமை இருக்கிறது என்று கண்டு பிடித்ததால்தான் இன்று பல அறிஞர்கள் நமக்கு கிடைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் இன்று அடையாளம் தெரியாதவர்களாக இருந்திருப்பார்கள்.
மற்றொரு கதை:
ஒரு நிலத்தில் ஆடுகள் எல்லாம் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த ஆடுகளோடு ஒரு சிங்க குட்டியும் புல்லை தின்று கொண்டிருந்தது. சிங்கம் புல் திங்குமா? அந்த சிங்கம் தின்றது. காரணம் அது பிறந்தது முதல் ஆடுகளோடு வளர்ந்ததால் ஆடுகளுக்கு என்ன குணம்
இருக்குமோ? அதே குணத்தில்தான் அந்த சிங்கமும் வளர்ந்தது! ஒரு நாள் அந்த ஆட்டு மந்தைகள் காட்டிற்கு சென்றது. காட்டு ராஜா சிங்கம் இந்த ஆடுகளைப் பார்த்து அதிசயித்துப் போனது! நம் இனத்தை சார்ந்த ஒரு சிங்கம் ஆடுகளோடு சேர்ந்து புல்லை தின்று கொண்டு உலாவிக் கொண்டிருக்கிறதே என்று நினைத்தவாறு அந்த இடத்திற்கு காட்டு ராஜா சிங்கம் சென்று அந்த ஆடுகளை எல்லாம் விரட்டி விட்டு இந்த சிங்கத்தை மட்டும் அழைத்து நீ யார்? என்று கேட்டது; அதற்கு அந்த சிங்கம் நான் ஆடு என்றது. இல்லை நீ சிங்கம்தான்; இந்த காட்டியே ஆளப் பிறந்த நீ ஆடுகளோடு சுற்றிக் கொண்டிருப்பதா? நமது வயிற்றுப் பசிக்கு இறையாக இருக்கு ஆடுகளிடம் உனக்கு என்ன உறவு? என்று அந்த சிங்கம் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கூட அந்த சிங்கம் நான் ஆடுதான் என்றது! காட்டுராஜா சிங்கம் ஆடுகளோடு இருந்த சிங்கத்துக்கு அது சிங்கம் என்று புரிய வைக்க ஒரு ஒரு தந்திரம் செய்தது!
அந்த சிங்கத்தை ஒரு குளத்துக்கு அழைத்துச் சென்றது. அந்த குளத்தில் இருந்த தண்ணீரில் காட்டுராஜா சிங்கம் குட்டி சிங்கத்தை பார்க்க சொன்னது. தண்ணீரில் தனது உருவம் சிங்கமாக தெரிந்ததால் அதற்கு அதையே தன்னால் நம்ப முடியவில்லை!
உண்மையிலேயே நாம் சிங்கம்தானா! இவ்வளவு நாள் ஆடு என்று நம்மை நினைத்து நம்மை குறைத்து மதிப்பிட்டிருகிறோமே! நான் ஆடு இல்லை சிங்கம்தான் என்பதை உணர்ந்த அந்த சிங்கம் இதுவரை எந்த ஆடுகளோடு பழகியதோ அந்த ஆடுகளை விட்டுவிட்டு காட்டு ராஜா சிங்கத்துடன் ராஜ கலையோடு காட்டுக்கள் சென்றது குட்டி காட்டு ராஜா சிங்கம்.
இது போன்றதுதான் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு திறமையும், சக்தியும் இருக்கிறது! அது என்னவென்றே தெரியாமல் ஒரு சிங்கம் ஆடாக வளர்ந்தது போல் நம்மில் சிலர் வாழ்கிறார்கள். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் ஏராளமாக நிறைந்திருக்கின்றன! அந்த திறமையை பயன்படுத்தாமல் விட்டு விட்டால் அது உன் குற்றமாகிவிடும். தங்களுக்குள் இருக்கும் திறமைகளை சரியாக பயன்படுத்தாமல் தீய வழியில் எத்தனையோ இளைஞர்கள் பாதை மாறி சென்று கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டு விட்டு சரியான பாதையில் சென்று உலகி வெல்வாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
உனக்குள் ஒளிந்திருக்கும் அந்த திறமைகளை கண்டு பிடிக்கவும், வெளிப்படுத்தவும் உனது இந்த கல்லூரி வாழ்க்கையை பயன்படுத்திக் கொள். உனது இந்த மூன்று ஆண்டு கால வாழ்வில் உனது திறமைகளை கண்டு பிடித்து வெளிக்கொண்டு வராவிட்டால் சிக்கலான பலரது வாழ்க்கையைப் போல் உனது வாழ்வும் மாறிப்போகும் என்பதை மறந்து விடாதே!
உனது இந்த கல்லூரி வாழ்க்கை வளம் பெற்று உனது திறமைகளை வெளிக் கொண்டு வந்து என்னாலும் சாதிக்க முடியும் என்ற வைராக்கியத்தோடு இருக்கும் உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! மீண்டும் அடுத்த மாதம் உன்னை சந்திக்கும் வரை காத்திருஸ..
மாறாத உணர்வுகளுடன்,
-அல்ஹாஃபிழ் எம்.எம். ஃபக்கீர் இஸ்மாயீல் பிலாலி
உதவிப் பேராசிரியர், பொருளாதாரத்துறை, புதுக்கல்லூரி, சென்னை, தொடர்புக்கு: ismaileco81@gmail.com இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
source: http://www.samooganeethi.org/index.php/category/special-articles/item/192-