மனவலிமை பெற வைக்கும் மகத்தான ‘துஆ’
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
“எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக” (அல்குர்ஆன் 3:147)
பல அருமையான கருத்துக்களை உள்ளடக்கி இந்த ‘துஆ’வை அல்லாஹ் கற்றுத் தருகிறான்.
1. பொதுவான பாவங்களுக்கு மன்னிப்பு.
2. வரம்பு மீறலுக்கான மன்னிப்பு.
3. சோதனையான கட்டங்களில் பதட்டம் கொள்ளாது உறுதியுடன் சமாளித்து நிற்றல்.
4. இறை மறுப்பாளர்கள், நம்பிக்கையாளர்களான முஸ்லிம்களை ஒழிக்க அணி திரளும் சமயத்தில் அவர்களுக்கு எதிரான உதவியை வேண்டுதல்.
இந்த நான்கு வித நற்பாக்கியங்கள் நமக்கு கிடைத்திட அல்லாஹ்வே வரிசைப்படுத்தி இந்த ‘துஆ’வைக் கற்றுத்தருகிறான்.
உஹது யுத்தத்தின் போது முஸ்லிம்கள் சொல்லொனா துன்பத்திற்கு ஆளானார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஹீதாக்கப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி வேகமாகப் பரவியதால் பல முஸ்லிம்கள் நிலைகுலைந்து போனார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொலை செய்ய முயன்ற அப்துல்லாஹ் இப்னு கமீஆ என்பவனை முஸ்அபு இப்னு உமைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தடுத்து நிறுத்த முயன்றபோது முஸ்அபு இப்னு உமைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அவன் கொன்று விட்டான். இதுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஹீதானார்கள் என்ற வதந்தி பரவ காரணமானது.
“முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் ஒரு தூதர்தான். அவருக்கு முன்பும் தூதர்கள் (மரணமுற்று) சென்றது இவர்களும் ஒரு நாள் செல்ல வேண்டியவர்கள் தான்” என மேற்கண்ட பிரார்த்தனைக்கு முன் சொல்லிக் காட்டிய அல்லாஹ், “இதற்கு முன் எத்தனையோ நபிமார்களும் அவர்களுடன் அதிகமான மக்கள் திரளும் (அறப்)போர் புரிந்துள்ளனர். அல்லாஹ்வின் வழியில் தமக்கு ஏற்பட்ட (துயரத்)திற்காக அவர்கள் துவண்டுவிடவுமில்லை. பலம் குன்றிடவுமில்லை. இன்னும் பணிந்து விடவுமில்லை. (அத்தகைய) பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கிறான்” என்றும் அருளினான்.
இதன் பிறகுதான் தைரியத்தை ஊட்டும் இந்த ‘துஆ’வை அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். இந்த ‘துஆ’வை கேட்பதன் மூலம் “இவ்வுலக பலனையும், மறுமையின் அழகிய பலனையும் அல்லாஹ் வழங்குகிறான். அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களை நேசிக்கிறான்” (அல்-குர்ஆன் 3:148)
சோதனையான கட்டத்தில் மனவலிமை பெற வைக்கும் இந்த ‘துஆ’வை நாமும் ஓதி பிரார்த்திப்போம்.
-மவ்லவி மர்ஹூம் எம்.ஏ. முஹம்மது இப்ராஹீம் பாகவி,
– ”ஜமா அத்துல் உலமா” மாத இதழ், அக்டோபர் 2014