தங்கம், தாலி: ஒரு பெண்ணியப் பார்வை
[ விரிவான ஆய்வுக்கட்டுரை ]
6000 வருடங்களுக்கு முன்பாக மனிதன் கண்டெடுத்த முதல் உலோகமானது தங்கம் என்று வரலாற்றுத் தகவல்கள் சொல்கின்றன. இரும்புத்தாதுவும், தாமிரமும் (செம்பு) மனித இனத்திற்கு மாபெரும் பயனை அளித்ததாக சொல்லப்பட்டாலும், அதற்கும் முன்னறே கண்டுபிடக்கப்பட்ட உலோகம் தங்கம். அவ்வுலோகத்தின் தன்மையும், மஞ்சள் நிறமும், அதன் மீது ஏற்றிவைக்கப்பட்ட மதிப்பும் காலம் காலமாக அதன் மீது மாபெரும் நாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக பொருளாதார அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு மன்னராட்சி முறை ஏற்பட்ட பின்பு தங்கம் மற்றும் இதர இரத்தினங்கள் ‘அரச’ மரியாதை பெற்று பின்பு மதங்களின் ஊடுருவலால் (இந்தியச் சூழலில் பார்ப்பனிய ஊடுருவலால்) ‘புனிதத் தன்மை’ ஏற்றிவைக்கப்பட்டது.
அரச நாணையம் உள்ளிட்ட வடிவங்களில் புழங்கி வந்த தங்கமானது ஒரு காலக் கட்டத்திற்குப் பிறகு வேறு உலோகங்களிற்கு மாற்றம் பெற்றது. மூன்று தலைமுறைக்கு முன்னர் 60 ரூபாய்க்கு பவுன் வாங்க முடிந்தக் காலம் போய் ஒரு கிராம் 500 ரூபாய் என்ற அளவை 9 அல்லது 10 வருடங்களுக்கு முன்னர் எட்டியது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் தங்கத்தின் விலை பன்மடங்காக உயர்ந்து 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 2564 ரூபாய் ஐ எட்டியுள்ளது. ஏன் இந்த திடீர் விலையேற்றம்?
டாலருக்கு நிகரான இருப்பு மதிப்பை விட தங்கத்தின் இருப்பு பற்றாக்குறையாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது டாலரின் மதிப்பு குறையும் பொழுது தங்கத்தின் விலை ஏறுவதும், டாலரின் மதிப்பு ஏறும் பொழுது தங்கத்தின் விலை குறைவதுமான ஒரு பொருளாதார சூழல். பொருளியல் வல்லுனர்களே அது குறித்த சிறந்த விளக்கங்களை அளிக்கவல்லர். இத்தகையச் சூழலில் ஏழை நாடான இந்தியாவில் தங்கம் வாங்கும் திறன் குறையாமல் இருக்கிறது.
2010ல் 963 டன்னாக இருந்த தங்கத்தின் நுகர்வளவு, 2011ல் 1000 மெட்ரிக் டன்னை எட்டும் என்றும், உலகிலேயே இந்தியா தங்கத்தைப் பயன்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறது என்றும் புள்ளியியல் விபரங்கள் தெரிவிக்கின்றன. அணிகலனாக பார்க்கப்பட்டத் தங்கம் இப்போது ஒரு முதலீடாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிராமப் புரங்களில், விவசாயிகளின் மத்தியில் வங்கிகளின் மீது நம்பிக்கையற்றத் தன்மையினால் தங்கத்தை பொற்கட்டிகளாக கொள்முதல் செய்கின்றனர். 70% தங்கம், வைரம் விவசாயிகளால் வாங்கப்படுவதாக அல்பெனியன் மினரல்ஸ் எனும் நிறுவனம் தெரிவிக்கிறது.
1848ல் கலிபோர்னியாவில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது தங்கச் சந்தையில் பெறும் மாற்றங்களைத் தோற்றுவித்துள்ளது எனலாம். தங்கச் சந்தையில் நிலவும் சூதாட்டம் புரியாத புதிராகவே இருந்தாலும், ஒன்று மட்டும் உறுதியாக சொல்லலாம் அமெரிக்காவும், ஐரோப்பாவும் தங்கம், வைரம் என்று விலையுயர்ந்த வளங்களை கொண்டுள்ள ஆப்ரிக்க நாட்டை இன்னும் ஏழையாகவே வைத்திருப்பதற்கான காரணமாக இருப்பதோடு இவர்களே உலகம் முழுதும் உள்ள தங்கச் சந்தையைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலக தங்க மன்றம் (world Gold Council) எனும் அமைப்பு ’தங்க வியாபிர்களின் நலன்’ காப்பதற்காக செயல்படுகிறது. இதற்கு உலகெங்கிலும் இணைப்புகள், கிளைகள் உள்ளது. தங்க நகைகள் விற்கும் பெரும் முதலாளிகளுடன் இணைந்து தங்கம் பற்றிய பல்வேறு கருத்தாக்கங்களை, மதிப்பீடுகளை பரப்புவதில் அவ்வமைப்புக்கும் பங்கு உள்ளது.
குறிப்பாக சமீபத்தில் மிகவும் பிரபலமடைந்திருக்கும் ‘அக்ஷய த்ரிதியை’ எனும் வெறியாட்டத்திற்கு நிகரான ஓர் வெறி அலை உருவாக்கப்பட்டது ஒரு சான்று. அது போன்று ‘வெள்ளைத் தங்கம்’ என்று உலக ப்ளாட்டினம் மன்றமும், ‘தூய இரத்தினன்’ என்று வைரத்தை உலக வைர மன்றமும் விளம்பரம் செய்கின்றன. வெண்மை, தூய்மை, பரிசுத்தம், அன்பின் வெளிப்பாடு, காதலின் வெளிப்படு, காதலர் தினம், அன்னையர் தினம் என்று பல்வேறு யூகங்களில் அவை சந்தைப் படுத்தப்படுகின்றன. . நாடுக்கு நாடு போட்டிப் போட்டுக் கொண்டு தங்கச் சுரங்கங்களை கண்டுபிடிக்கும் போக்குகளும், தோண்டி எடுக்கப்படும் தங்கத்தின் அளவு ஏற்றம் இறக்கமாகவும் இருந்திருக்கின்றன.
தங்கத்தின்பால் நிலவும் கவர்ச்சியும், பொருளாதார மதிப்பீடும் ஆணாதிக்க முதலாளித்துவம் மற்றும் ஆணாதிக்க தந்தைவழி சமூகம் தோற்றுவித்த ‘கருத்தாக்கங்களின்’ மற்றுமொரு சித்து விளையாட்டு. மன்னராட்சிக் காலம் வரை இருபாலாரும் பல வகையான அணிகலன்களை சரி நிகராக அணிந்து வந்திருக்கின்றனர். பின்னர் அது வழக்கொழிந்து தங்கம் புனிதத் தன்மையூட்டப்பட்டு, நகைகள் பெண்மைகுரியவையாக மாற்றம் பெருகின்றன. இலக்கியங்களில், புராணங்களில் தங்கம் (மற்றும் அணிகலன்கள் என்று சேர்த்துக் கொள்ளவும்) பெண்களுக்கு பொலிவு சேர்ப்பது, தங்கத்தை விட அவளது மேனி மின்னியது என்பன போன்ற விவரிப்புகள் இருந்தாலும், ஆண்களும் அணிகலங்கள் அணிந்து வந்திருக்கின்றனர் என்பது உண்மை. 18ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் நவீன மாற்றங்களினால், “ஆண்மை”க்குறிய இலக்கணங்கள் மாற்றம் பெருகின்றன. உடை முதற்கொண்டு பெறும் மாற்றத்திற்கு உள்ளாகிய சூழலில் தங்கம் என்பது பெண்மைக்குரிய அடையாளமாய் நின்றுவிட்டது.
தங்கத்தின் பயன்பாட்டில் திருமணங்களோடும், மதச் சடங்குகளோடும் தொடர்பு படுத்தப்பட்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தாய்வழிச் சமூகத்தின் வேளான் பொருளாதார காலகட்டத்தில் இனக்குழு மக்கள் பெண் வேண்டி ஆணின் இனக் குழுவிற்கு ஆடு, மாடுகள், விளை பொருட்களைக் கொடுத்து பெண் எடுத்தக் காலம் மறைந்து பெண்கள் ‘சவரன்’ கணக்கில் நகைகள் போட்டு, வரதட்சனைக் கொடுத்து, திருமணச் செலவையும் ஏற்று ஆணின் வீட்டிற்கு அடிமையாக செல்ல தன்னை ஒப்புவிக்கும் சூழல் உருவாகியது.
இன்றும் தாய்வழிச் சமூகத்தின் அடையாளமாக இருக்கும் குறவர் சமூகத்தில் (ஆதி வேட்டுவர்கள்) ஆண் தான் பெண் வேண்டி பணம் தந்து பெண் எடுக்க வேண்டும். முதலாளித்துவ வாழ்க்கைக்கு அடிபணிந்துவிட்ட அல்லது அடிமையாக்கப்பட்ட மற்ற சமூகங்களில் பெண் வீட்டாருக்கு ’மதிப்பு’ தங்கம் போடுவதை வைத்துத்தான். வரதட்சனையாக தங்கத்தை சொன்ன அளவுக்கு செய்யமுடியாமல் எத்தனையோ ஆயிரம் பெண்கள் எரித்துக் கொல்லப்பட்ட வரலாற்றுப் பெருமை(!!!!!) இந்திய மண்ணுக்குண்டு.
பல்வேறு முனைகளில் இருந்து ஏற்றிவைக்கப்படும் கருத்தாக்கங்களும், சமூக மதிப்பீடுகளுமே இக்கொடுமைகளுக்கு காரணமாய் இருக்கிறது. எனினும் மனித மனம் அப்பேராசைகளிலிருந்து விடுபட்டுவிடா வண்ணம் முதலாளிகளால் கையாளப்படுகிறது. ’மண், பெண், பொன்’ இவைகளின் மீதான ஆசைகளே மனித அழிவிற்கு காரணமாய் சொல்லி ‘துறவை’ பரிந்துரைக்கும் நாட்டில்தான் அவற்றின் மீதான நாட்டமும் கட்டுக்கடங்காமல் இருக்கிறது.
அது எவ்வாறு நடந்தது? ஏன் நடந்தது என்பதற்குள் செல்லாமல் அதன் கவர்ச்சியிலிருந்து மீள்வது குறித்தான உரையாடலும், அதைத் தொடர்ந்த சில தீர்மானங்களும் அவசியமாகிறது. தங்கத்தின் அளவு குறைந்து வருவதாக சொன்னாலும், சரக்கிறிப்பு குறைந்ததாகத் தெரியவில்லை, வாங்கும் திறனும் குறைந்ததாகத் தெரியவில்லை. திறக்கப்படும் புதிய நகைக் கடைகளின் அளவும் குறையவில்லை. உயிரைப் பறிக்கும் அளவுக்கு ‘ஆபத்து’ நிறைந்ததாக இருந்தும் பெண்கள் தங்கம் அணிவதை விடுவதில்லை. எந்த குடும்ப நிகழ்ச்சிக்கு செல்வதானாலும் முதலில் திட்டமிடப்படுவது நகைகள் குறித்துத்தான். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை, கொள்ளைச் சூழலில் தங்கத்திற்கும், அணிகலன்களுக்கும் இத்தனை முக்கியத்துவம் கொடுப்பது அவசியமா என்ற கேள்வியை பெண்கள் எழுப்பும் காலம் நெருங்கிவிட்டது.
தங்கத்தில் முதலீடானது பெரும் லாபங்களை ஈட்டுத் தருவதோடு, அவசரத்திற்கு அடகு வைத்து பணம் பிரட்டவும் உதவியாக இருக்கிறது என்பது இருக்கட்டும் ஆனால் அதைவிட அதிகமாக அது ‘ஆபத்தையும்’ வட்டியுடன் தருகின்றது. குறைந்த வட்டியாக இருந்தாலும் வங்கிகளில் சேமித்து வைப்பதில் குறைந்த பட்ச பாதுகாப்பாவது எஞ்சியுள்ளது. சமூக பாதுகாப்பு ஒருபுறமிருக்க, மனம் சார்ந்த, உறவு சார்ந்த சிதைவுகளில் இருந்து மீள்வது அவசியமில்லையா?
அன்பால் பிணைக்கபப்டவேண்டிய உறவுகளில் இத்தங்கமானது எத்தகைய சிதைவுகளை தோற்றுவிக்கிறது என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். திருமணம் மூலம் ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்குப் பதிலாக தங்கத்தின் அளவானது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது? பெண்ணானவள் திருமணத்தின் போது சவரன் கணக்கில் தங்கம் போட்டுக் கொண்டு வந்தாள் என்றால் அவளுக்கு மாமியாரிடம், புகுந்த வீட்டாரிடம் கிடைக்கும் ‘மதிப்பு’ வேறாக இருக்கிறது. அதையும் மீறி சில காலங்களுக்குப் பிறகு மேற்கொண்டு நகையோ, பணமோ கேட்டு கொடுமை படுத்தி, அடித்துக் கொல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
வரதட்சனைக் கொடுமை நம் மண்ணைத் தாண்டி இந்தியர்கள் வாழும் அயல் நாடுகளிலும் அதிதீவிரமாக செயல்படுகிறது. மிக சமீபத்திய கொடூர நிகழ்வு ஒன்று நிணைவுக்கு வருகிறது. 2008ல் ஜெனிதா என்ற திருச்சியைச் சேர்ந்த பெண்ணுக்கு நடந்த கொடுமையை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. திருமணமாகி அமெரிக்கா குடிசென்ற அப்பெண் வரதட்சனைக் கொடுமையால் பல சித்திரவதைகளுக்கு ஆளானார். உச்சகட்டமாக 3 மாத காலம் கர்ப்பமாக இருந்தபோது காரிலிருந்து தள்ளப்படு கோமா நிலைக்கு சென்றார். உடல் முழுக்க காயங்களோடு அவர் இந்தியா கொண்டு வந்து பெரும் போராட்டங்களுக்குப் பிறகு காப்பாற்றப் பட்டார். இருந்தும் இடது தாடை செயலிழந்து பேச முடியாமல் பேசி தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார். அவரது பெற்றோர்களுக்கு வெறும் கார் விபத்து என்று தான் தகவல் சொல்லப்பட்டது. திருமணத்தின் போது செய்த சீருக்கும் (2 லட்சம் ரொக்கம், 62 சவரன் நகை) மேலாக 100 சவரன் ’தங்கமும்’ , ரொக்கமும் கேட்டு கொடுமைகள் நடந்துள்ளன. இது போன்று எண்ணற்ற கதைகள் உள்ளன.
o மங்கை இது பற்றி அளித்த பேட்டி ஒன்றில். ‘‘பொதுவாவே கல்யாணம் ஆகி இங்க இருந்து வெளிநாடு போற பெண்களுக்கு ‘ஸ்பவுஸ் விசா’னு ஒண்ணுதான் கொடுப் பாங்க. ‘நான் இன்னாருடைய மனைவி. இவரை சார்ந்தது இருப்பவள்’ங்கறதுதான் அந்த விசாவோட அடையாளமே! அதனால அங்க ஒரு டாக்டரைக் கூட அவளால தனியா போய் பார்க்க முடியாது. கணவனோட தான் போகணும். இப்படி ஒரு பிரச்னை இருக்கும்போது ஒரு மோசமான கணவன் அவனோட மனைவியை சித்ரவதை செஞ்சா, அதை எதிர்க்குற துணிச்சல் அந்தப் பொண்ணுக்கு வராமலே போயிடலாம்’’ என்றவர், நமது குடும்ப உறவுகள் அங்கு பாதிக்கப்படுவதையும் சுட்டிக் காட்டினார்.
’பெண்மைக்குரியவை’ என்று முன்னிறுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொன்றையும் பெண்கள் கேள்வி கேட்கும், சந்தேகிக்கும், புறக்கணிக்கும் விழிப்புணர்வு பிரசாரங்கள் இன்னும் அதிகமாக தேவைப்படுகின்றன. சாதி எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, கல்வி உரிமை, சம-உரிமை, அரசியலில் இட ஒதுக்கீடு ஆகிய போராட்டங்களோடு, பெண்களை பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து, குறிப்பாக ‘விலையுயர்ந்த அந்த அடிமைச் சங்கிலியை’ விரும்பி அணியும் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்கும் விழிப்புணர்வு பிரசாரங்கள், போராட்டங்கள் அவசியமாகிறது. பெரியார் அவர்கள் இது குறித்து எவ்வளவோ பேசியிருக்கிறார். பெண்களை நகை மாட்டும் ஸ்டாண்டுகளாக்கக் கூடாது என்று கூறியுள்ளார். சுயமரியாதை இயக்கப் பெண்கள், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய தத்துவத்தில் நம்பிக்கைக் கொண்ட பெண்கள் நகைகளை, அலங்காரங்களை புறக்கணிப்பது குறித்து ஆங்காங்கே எடுத்துரைத்தாலும், இது குறித்த முழுவீச்சான பிரசாரங்களை வெகுஜன ஊடகங்கள் வழியாக எடுத்தச் செல்ல இயலாததால், இம்முயற்சி நத்தையின் வேகத்திலேயே செல்கிறது.
இப்பின்னடைவுக்கு இரு தரப்பினர் பங்களிக்கின்றனர் ஒருவர் ஊடகத்துறையினர், மற்றொருவர் மேல்தட்டு வர்க்கப் பெண்கள். பெண்களுக்கான இதழ்கள், பெண்களுக்கான நிகழ்ச்சிகள், போட்டிகள் என்று எல்லாமே ஆணாதிக்கம் முன்மொழியும் “பெண்மை சார் விசயங்களும், திறமைகளையுமே’ மையப்படுத்துகின்றன. வெகுஜன பெண்கள் இதழ்கள் கோலம், சமையல், உடையலங்காரம், அணிகலங்கள், பிள்ளைப் பேறு இவற்றையே அரைத்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சிகள், வானொலிகளும் தொலைபேசிகளில் பெண்களிடம் நடத்தும் உரையாடல் ‘பெண்மை’ சார்ந்ததாகவே இருக்கிறது. “பெண்கள் நேரம்” என்பதில் கையாளப்படும் தலைப்புகள் பெரும்பாலும் சமையல், அழகுக் குறிப்பு, ஷாப்பிங், அவ்வப்போது உடல் நலம். பகுத்தறிவு விவாத நிகழ்ச்சிகளும் ஆணாதிக்க சிந்தனையோடு ‘தற்காலத்தியப் பெண்கள் இருக்கிறார்களே’ என்கிற அளவில்தான் நடத்தப்படுகிறது. நாகரீக மாற்றத்தையும், சுதந்திரத்தையும் குழப்பிக்கொண்டு பகுத்தறிவு, முற்போக்குச் சிந்தனை குறித்தான தவறான புரிதலை மட்டுமே இந்நிகச்சிகள் ஏற்படுத்துகின்றன.
ஊடகம் எனும் சக்திவாய்ந்த ஒரு தொடர்பு சாதனத்தில் தோன்றும் அத்தனை மேல்தட்டுப் பெண்களும் அலங்காரங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குறிப்பாக “புகழ் பெற்றவர்” என்றழைக்கப்படும் “செலிபிரிட்டீஸ்” தங்களது பீரோக்களை திறந்து காட்டி நான் இவ்வளவு புடவைகள், நகைகள், நவீன செருப்புகள் வைத்திருக்கிறேனாக்கும் என்று தங்களது ‘ரசனையை’ பறைசாற்றும் ஆபாசம் சில காலங்களுக்கு முன் பெண்கள் பத்திரிகை வாயிலாக அரங்கேறியது. அப்பெண்களிடன் கேட்கப்படும் பகுத்தறிவு சாயல் பூசப்பட்டக் கேள்விகள் ஆணாதிக்க நலனுக்கேயன்றி, பெண் விடுதலைக் கேள்விகள் அல்ல.
தற்போது தங்க விற்பனையில் “பாரம்பரியம், பண்பாடு, நாட்டுப் பற்று” என்று முத்திரைகள் பூசி விளம்பரம் செய்யப்படுகிறது, அதிலும் “தொல்பழம் நகை” என்று சொல்லக்கூடிய “ஆண்டிக் ஜுவெல்லரி” என்பதன் மேல் மேல்தட்டுப் பெண்கள், மத்திய வர்க்க பெண்கள் மத்தியில் மிக மோசமான பித்து ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது. நகைகளை வடிவமைப்பதற்கென்றே சிறப்பு படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அத்தகைய வடிவமைப்பாளர்களை வைத்து போட்டி போட்டுக் கொண்டு வியாபார நோக்கோடு நகைகளை வடிவமைத்து அதற்கென்று கதைகள் சொல்லி சந்தை படுத்தப்படுகின்றன. தங்கத்தைப் பொறுத்தவரை (இதர உலோகங்கள், இரத்தினங்கள் எல்லாமும் தான்) விற்பனையாளர்கள் சொல்வதைதான் நம்பவேண்டியுள்ளது.
ஒரு காலத்தில் தங்கத்தின் விலை போக 20%, 23% சேதாரம் இது தவிர செய்கூலி என்று வசூலித்து வந்தனர். தற்போது தங்கத்தின் விலையேறியதும் செய்கூலி முற்றிலுமாக விலக்கப்பட்டு, சேதாரம் 10% முதல் 20% போடப்படுகிறது. சில நகைகளுக்கு 24% வரை செல்கிறது. பேரம் பேசினால் 2% தள்ளுபடி செய்கிறார்கள். அப்படியென்றால் முன்பு ஏன் செய்கூலி வாங்கப்பட்டது, இப்பொழுது ஏன் அது விலக்கப்பட்டிருக்கிறது? தங்கத்தின் விலை சந்தை நிர்ணயிப்பதாய் இருந்தால், ஒவ்வொருவர் அதிலும் விலை குறைப்பு செய்வதும், சலுகைகள் தருவதும் எவ்வாறு சாத்தியமாகிறது? தங்கம் சர்வதேசிய மதிப்பு பெற்ற ஒரு பொருளாக இருந்தாலும், விலைக் குறைத்து விற்கப்படும் ஒரு குறிப்பிட்டக் கடையின் தங்கம் சான்று முத்திரை இருந்தாலும் மற்ற வியாபாரிகளால் மறுத்தலிக்கப்படுவது ஏன்? இது என்ன விதமான சூதாட்டம் என்பது புரியவில்லை?
அதிகார வர்க்கமும் அது தோற்றுவித்த மதமும், அதற்கு ஆதரவாக செயல்படும் சில வரலாற்றாசிரியர்களும், முதலாளித்துவமும் நிணைத்தால் ஒன்றை புனிதமாக்கவும், தீட்டாகவும், தோஷமாகவும் முத்திரைக் குத்த முடியும். தங்கம் என்பதனுடன் நெருங்கியத் தொடர்புடையது திருமணமும், தாலியும். தற்போதைய நடைமுறையில் உள்ள தாலி கட்டும் வழக்கம் தமிழர் பண்பாட்டில் முன்னர் இருந்த முறைதானா என்று நோக்கினால் வியப்பும், ஏமாற்றுமுமே மிஞ்சுகிறது. ‘சங்க காலம் முதல் கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரையில் தமிழர் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கம் இருந்தமைக்குச் சான்றில்லை என்கிறார் மா. இராசமாணிக்கனார். பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிய, தமிழர் வகுப்புகளிலும், ஏனைய திராவிட வகுப்புகளிலும் தாலிகட்டும் பழக்கம் இருந்து வந்ததா? தாலியெனும் சொல்லுக்குப் பொருள் யாது? என்று பல கேள்விகளுக்கு ”தமிழர் பண்பாட்டு வரலாறு” எனும் நூலில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அகநானூற்றுச் செய்யுளில் திருமணம் பற்றி வரும் இரண்டு இடங்களில் நீராட்டு, விருந்து முதலியவற்றைக் கூறும் புலவர் – தாலி கட்டும் சடங்கை குறிப்பிடவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார். ‘கற்புச் சின்னம்’ கண்ணகியின் திருமணத்தில் அகநானூற்றுத் திருமணத்தில் குறிக்கப்படாத ‘மாமுதுபார்ப்பான் மறைவழி காட்டலும், தீவலம் வருதலும்’ எனும் பாடலின் மூலம் கைபற்றி தீவலம் வரும் (பாணிக்கிரகணம்) எனும் சடங்கு குறிப்பிடப்படுகிறது. ”அகலுள்ள மங்கல அணி எழுந்தது” எனும் பாடல் வரிக்கு உரையாசிரியர்களின் உரைகளில் முன்னுக்குப் பின் உள்ள முரண்களை ஆய்ந்து கண்டறிந்து அப்பாடல் வரிக்கு இளங்கோக்களளாகிய பெருங்குடி வணிகர் திருமண மரபுகளை விளக்குவதோடு, தமிழ் சமூகத்தில் ‘வீடு சொல்லுதல்’ எனும் சடங்கை விவரிக்கிறார். உறவினர் வீட்டிற்குச் சென்று மணநேரத்தை நினைவூட்டி அழைத்தல். இம்மங்கலச் செய்தியைக் கூறுவோர் ஒருவர்பின் ஒருவராக முறையாக (அணியாக)ச் சென்று மீள்தல் அன்றி அரும்பதவுரையாசிரியர் கூறியது போல் ”மங்கலிய சூத்திரம்” என்று பொருள் வாராது என்கிறார்.
கண்ணகி தன் கணவனை இழந்த பின்பு “பொற்றொடி தகர்த்தாள்’ என்பது கவனிக்கத்தக்கது. அவள் ‘தாலியை கழட்டியதாக எங்கும் குறிப்பில்லை’. தொடி என்றால் வளையல், தம் கைம்மை நிலைக்கு அறிகுறியாக தொடியைக் களைதல் மரபு. அதேபோல் இழை களைதல் எனும் மரபு புறநானூற்றுப் பாடலில் உள்ளது. “ஈகை அரிய இழை மட்டும் எஞ்சி நின்றது” – கொடுத்தற்கரிய நகை எனும் பொருள் குறிக்கும் இம்மரபோடு அருகலம் முதலாகிய அணி எனும் விளக்கத்தின் வாயிலாக திருமணத்தின் போது ‘அரிய நகை’ (precious ornament) எனும் அருங்கல / அரிய நகையை ஆண் பெண்ணுக்கும் கொடுத்து மணம் முடிக்கும் வழக்கமும், கணவன் இறந்த பின்பு இழை களைதல் எனும் அருங்கலத்தை களைதல் எனும் வழக்கமும் குறிக்கப்படுகிறது. அதுவல்லாது இழை என்பதற்கு மாங்கலிய சூத்திரம் எனும் பொருள் கூறுவது பொருந்தாது. 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் இதற்குப் பொருள் உரைத்த நம்பியப் பெருமாள் ‘அருங்கலம் அணிதல்’ என்பதற்கு ‘பொன் அணிதல்’ என்று எழுதியதிலிருந்து ‘பொன்’ அணியும் பழக்கம் அக்காலத்தில் தோன்றியிருக்கலாம் என்றோ அல்லது உரையாசிரியர் தாம் பயின்ற அறிவைக் கொண்டு அவ்வாறு உரைத்தார் எனவும் நோக்கலாம்.
சங்க நூல்களில் குறிப்பிடப்படும் தாலி என்பதற்கு காலத்திற்கு தகுந்த பொருளும், உரையாசிரியர்களின் அறிவுக்குகந்த பொருளும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐம்படைத்தாலி, மாணிக்கத்தாலி, புலிப் பற்தாலி (குறவன் புலியை வேட்டையாடி வென்றதன் அடையாளமாக அவனும், அவனது மனைவி மக்களுக்கும் அழகு செய்த நூலில் அணிவிப்பது. இப்பொழுதும் தாலி புலிப்பல் வடிவிலேயே இருப்பதை பொருத்திப் பார்க்கவும்), ஆமைத் தாலி பின் தாலி என்று பலவகை தாலிகளும், அதனோடு தொடர்புடைய சடங்குகளும், மரபுகளும் உரையாசிரியர்களின் முரண்களோடும், மரபுகளோடும், வரலாற்று நிகழ்வுகளோடும் விளக்கியுள்ள ம. இராசமாணிக்கனார் தாலி – சொற்பொருள் ஆராய்ச்சி எனும் தலைப்பில் கூறுவது:
‘தால்’ எனும் சொல் நாவைக் குறிக்கும். ‘தாலி’ என்பது தாலத்தை அதாவது நாவை (வாய்) உடையது எனப் பொருள்படும். எனவே ‘தாலி என்பது புலியின் அங்காந்த வாய் வடிவில் செய்த ஆபரணத்தைக் குறிப்பதாயிற்று”.
மேலும் அவர் கூறுவது: தமிழ் இலக்கணத்தில் எழுத்துப்போலி என்பது உண்டு, எழுத்து மாறினாலும் பொருள் மாறாமல் வரும். உ.ம் ஞண்டு – நண்டு, ஞாய் – நாய், அரைசன் – அரசன்…இவ்வாறாக ஞாய் – தாய் எனத் திரிவதுபோலவே, ஞால் என்பது தால் எனத் திரிதல் கூடும். உலகத்தைக் குறிக்கும் ‘ஞாலம்’ என்ற சொல் ‘தாலம்’ எனத் திரிந்தது. ஞால் – தொங்குதல் என்று பொருள்படும். ஞால் என்பதன் திரிபாகிய ‘தால்’ தொங்குதல் என்ற அப்பொருளையே உணர்த்துவதாகல் வேண்டும். தால்+இ = தாலி – தொங்கு தலையுடையது. எனவே ‘தாலி’ என்பது கழுத்தில் அணியும் கயிற்றில் தொங்கு நகையைக் குறிப்பதாகும். (பெருங்கதையில் வரும் உதயணன் ஏறிய குதிரை கூட ‘தாலி’ எனும் ஒருவகை நகையை அணிந்திருந்தது எனும் குறிப்பைக் காண முடிகிறது).
‘தாலி’ என்பது பனைக்கு ஒரு பெயர். இது பெரியாழ்வார் பாசுரத்தால் அறியப்படும். தாலிக் கொழுந்து – பனங்கொழுந்து என்று உரைகாரரும் கூறியிருக்கின்றனர். இக்காலத்தும் பனையோலைக் கொழுந்தைப் பதக்கம்போல அழகுறப் பின்னி அதனைக் கயிற்றிலோ, அவ்வோலைக் கிழிப்பிலோ கோத்துத் தொங்கவிட்டுக் கழுத்தில் அணிந்து மகிழ்தல் சில சிற்றூர்ச் சிறாரிடம் காணலாம். பனையைக் குறிக்கும் ‘தாலி’ என்னும் இச்சொல், நானூறு ஆண்டுகட்குமுன் ‘தாளி’ என மருவின்மை மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டால் அறியப்படும். பனையோலைக் கொழுந்தால் செய்யப்பட்ட அணி ‘தாலி’ எனப் பண்டை மக்களால் குறிக்கப்பட்டது எனக் கொள்ளினும் தவறாகாது. பண்டை மக்களுக்கு ஒரு காலத்தில் பனையோலையே காதணியாக இருந்தது. அதனால் காதணி ‘ஓலை’ என்ற பெயரால் வழங்கப்பெற்றது. ‘தோடு’ என்பதும் பனையோலையைக் குறிப்பதே. பின்னர் அது பொன்னால் செய்து அணியப்படும் அணிக்கும் ‘தோடு’ என்று வழங்கப்பட்டது. இவை போலவே பனங்குருத்து (தாலி) கொண்டு செய்யப்பட்ட அணியைக் குறித்த ‘தாலி’ எனும் சொல், பிற்றை நாட்களில் பொன்னால் செய்து கழுத்தில் அணியப்பட்ட நகையைக் குறிக்கலாயிற்று எனக் கோடலே இதுகாறும் கூறப்பெற்ற சான்றுகளால் ஏற்புடையதாகும்.
தாலி பற்றிய இந்த நீண்ட விளக்கமானது இனி தாலிக் கட்டத் தேவையில்லை என்று பரிந்துரைப்பதற்காக அல்ல. தாலி என்பது ஒரு அடையாளமாக, வெற்றிச் சின்னமாக இருந்திருக்கிறதே ஒழிய அது எவ்வித ‘புனிதங்களும்’ நிறைந்ததாக இருக்கவில்லை. குறிப்பாக ‘மஞ்சள் கயிறு’ கொண்டு தங்கத்தில் கோர்த்துக் கட்டப்பட்டதாக எங்கும் இருக்கவில்லை. காலமாற்றத்தில், பார்ப்பனியம் புகுத்திய பல கருத்தாங்களில் ஒன்று தான் அந்த ‘மஞ்சள் மகிமை’ என்பதை புரிந்து கொண்டால் அது நம் மீது கட்டாயமாகத் திணிக்கப்படுவதிலிருந்தும், அப்புனிதம் கெட்டுப்போகாமல் இருக்க கடன் வாங்கி ’தங்கக் கடமையை’ நிறைவேற்றுவதும் அவசியமிருக்காது.
ஒரு அலுவலகத்தில் பணி புரிவதற்கே அடையாள அட்டையை அணிந்து செல்ல வேண்டியுள்ளது. வாழ்நாள் முழுதும் அமைத்துக் கொள்ளப் போகும் ஒரு உறவு முறையை ஊராருக்கு அறிவிக்கவோ அல்லது சம்பந்தப்பட்ட இருவர் உறுதி செய்து கொள்ளவோ ஏதோ ஒரு அடையாளத்தை வைத்துக் கொள்வது வரவேற்கத்தக்கதே. ஆனால் அது தங்கத்தால் செய்யப்பட்டும், மஞ்சள் கயிற்றால் கட்டப்பட்டும்தான் இருக்க வேண்டும், அப்படி ஒரு கயிற்றைக் கட்டிய பின்னர் அப்பெண் அடிமையாக மாறிவிடவேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா என்று பகுத்தறிய வேண்டியே மேற்கூறிய ஆய்வு விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டது.
அவரவர் வசதிக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப அடையாளங்களை வைத்துக்கொள்வதில் என்ன குறை இருந்துவிடப்போகிறது. அல்லது அப்படி ஒரு அடையாளம் தேவையில்லை என்று சம்பந்தபட்ட இரு துணைகளும் முடிவெடுப்பதில் என்ன புனிதம் கெட்டுவிடப்போகிறது. நெற்கதிர்கள் விளைய, நிலம் வளமாக இருக்க சூரியனின் சக்தி இன்றியமையாதது. அதுபோல் பெண்ணின் தூமையும் (மாதவிடாய் இரத்தம்) பல மருத்துவ குணங்கள் கொண்டதாக, உற்பத்தியின் சின்னமாக கருதப்பட்டது. விளைநிலங்களில் மாதவிடாய் இரத்தம் தூவப்பட்டதாக பழங்காலப் பாடல் குறிப்புகள் உள்ளன. தற்போது முதலாளித்துவ விஞ்ஞானமானது ‘மாதவிடாய் இரத்தத்தின்’ மருத்துவ குணத்தை ஆராய்ந்து, பெண்களின் எல்லா பாகங்களையும் உறுஞ்சியது போதாதென்று, அதையும் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக ‘மாதவிடாய் இரத்த சேமிப்பு வங்கி’ (menstrual blood stem cell banking) என்ற ஒன்றை துவங்கியுள்ளது.
பல்வேறு நோய்களுக்கு மாதவிடாய் நேரத்தில் எடுக்கப்பட்ட இரத்திலிருந்து மூல உயிரணுக்களை விளைவித்து சிகிச்சை அளிக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘செழுமையை’, ‘உற்பத்தியை’ குறிக்கும் நிறங்களாக மஞ்சளும், சிவப்பும் கருதப்பட்டதே ஒழிய, அதாவது ’மங்கலமாக’ கருதப்பட்டதே ஒழிய பார்ப்பனிய ‘புனிதத் தன்மை’ என்பது பின்னர் ஏற்றிவைக்கப்பட்ட ஒன்று என்று கவனத்தில் கொள்ளுதல் சிறப்பாகும்.
மதங்கள் பரப்பும் கருத்தாக்கங்கள் ஒருபுறம் என்றால் முதலாளித்துவம் அரங்கேற்றும் புனித நாடகம் அதற்கிணையாக செயல்படுகிறது. அது மத நம்பிக்கைகளை தனக்கு சாதகமாக, தேவைப்படும் நேரங்களில் எதிராக திறமையுடன் கையாள்கிறது. ‘ஆடி’ மாதம் என்பது ‘விளங்காத’ மாதமாக (தமிழ் சமூகத்தின் காரணம் வேறு, பார்ப்பனியம் கூறும் காரணங்கள் வேறு) இருந்த நம்பிக்கையை ”ஆடித் தள்ளுபடி, ஆடிக் கொண்டாட்டம்” என்று முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறது. சமீப காலங்களில் ஆடி மாதம் தான் வியாபாரிகளுக்கு ‘மங்கலகரமான’ மாதமாக இருப்பதை கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தைக் காணும்போது அறியமுடிகிறது. அதே போல் ‘அக்ஷயத் த்ருதியை’ எனும் ஒரு ‘பார்ப்பனிய நம்பிக்கையூட்டப்பட்ட தினம்’ கடன் வாங்கியாவது சிறிய அளவு தங்கத்தை வாங்கும் மனநிலையை விதைத்துள்ளனர். குறிப்பாக அடித்தட்டு மக்கள் இதில் முற்றிலும் மூளை சலவைச் செய்யப்பட்டு அவதியுறுவதைக் காணமுடிகிறது.
தங்கம், தாலி என்பதன் பின்னணியில் சூது உள்ளதோ, வரலாற்று புரட்டு உள்ளதோ இல்லையோ ஆனால் அதை வைத்து பல கொடுமைகள், மன நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள், பாதுகாப்பின்மை நிகழ்வது மறுக்க முடியாத ஒன்று. பெண்கள் தங்கத்தின் பின்னும், அழகு, அலங்காரம், வீடு, வாகனம், வசதி, உறவுகளுக்கு மத்தியில் பெரும் மதிப்பு கோரி உலவுதல் என்று தங்கள் கவனத்தை சிதறவிடுவதன் காரணமாக கணவனாகிய ஆண்கள் கை மீறிப் போய்விடுகிறார்கள் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டியுள்ளது.
சேமிப்பு, வசதி வாய்ப்புகள், பிள்ளைகளை ‘பெரிய’ பள்ளிக்கூடங்களில் மட்டுமே சேர்க்க வேண்டி கொடுக்கப்படும் நெருக்கடிகள் தொழில் முறையில், பணியிடங்களில் ஆண்கள் பல சமரசங்களையும், குறுக்கு வழிகளையும் மேற்கொள்ள வழிவகுக்கிறது. இது அறியாமையின் வெளிப்படு என்பதில் ஐயமில்லை, இன்னும் எத்தனைக் காலங்களுக்கு “பெண்மையின்’ பெருமைகளை, கடமைகளை மட்டுமே பேசிக் கொண்டு கிணற்றுத் தவளையாக இருக்கப் போகிறோம். பகுத்தறிவு, முற்போக்கு, பெண்ணியம், மார்க்சியம் ஆகிய சிந்தனைகளைப் பாவச் சொல்லாகவும், பெண்மைக்கெதிராகவும், வெறும் பாலியல் சுதந்திரத்திற்க்காக மட்டுமே என்று ஆணாதிக்கப் பார்வையுடன் தட்டையாகப் புரிந்து கொண்டு அவை முன் வைக்கும் சமூக விடுதலை, சமதர்ம வழிகாட்டுதல்களை புறந்தள்ளப் போகிறோம்.
“பெண்ணாசை, பேராசை” என்று சாடை பேசிவிட்டு ஆண்கள் இதிலிருந்து நழுவிவிட முடியாது. நீங்கள் விரித்த வலையில் நீங்களே விழுந்து விட்டீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பெண்களை வீட்டுகுள்ளேயே முடக்கி வைக்க அவளுக்கு ’கையூட்டாக’ நீங்கள் கொடுத்த பொருள்களும், அந்தஸ்தும், அவளுக்கென்று நீங்கள் ஒதுக்கிய கடமைகளும் இன்று தலைக்கு மேல் எழுந்த வெள்ளமாகிவிட்டது. உங்களால் கட்டுக்குள் வைக்கப்பட்ட காலம் எனும் அரக்கன் அதை முழுமையாக உட்செறித்து பெண்களுக்கு சிந்திக்கும், பகுத்தறியும் தன்மையை இல்லாமல் செய்துவிட்டான்.
வாழ்வை அர்த்தப் படுத்திக் கொள்வது பற்றி உங்கள் துணையுடன் உரையாடுவது ‘சமூக அடையாளம்’ எனும் நெருக்கடியிலிருந்து உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்ள உதவும். உங்களுடன் பணி புரியும் பெண்களிடம் நீங்கள் பேசும் முற்போக்கு சிந்தனைகளை, சுதந்திர உணர்வுகளை உங்கள் மனைவிகளிடமும் பேசுங்கள். வீட்டு உணவு ருசியாக இருந்தால், ஆண் ஏன் வெளியில் உணவு தேடப்போகிறான் என்பது பெண்களுக்கும் பொருந்தும் தானே. ’ருசி’ என்பது எதில் இருக்கிறது என்பதை சம்பந்தபட்ட இரு துணைகளும் சுவைத்து, உரையாடி கண்டறிய வேண்டிய ஒன்று, எவரோ சுவைத்து விட்டு சென்ற எச்சில் இலையிலிருந்து சுவைத்ததை வைத்து ருசி எனப்தை உணர்வது பொருத்தமாக இருக்காது.
கேள்விகளை அனுமதியுங்கள். கேள்வி கேட்பதனால் மட்டுமே ’கடைமைகளை’ பெண்கள் மீறப்போகிறார்கள் என்று அவசரகதியில் புரிந்துக் கொள்ளாமல் என்ன விதமான விடுதலையை நோக்கி அக்கேள்விகள் எழுப்பப்படுகின்றன என்பதில் சற்று கவனம் செலுத்துங்கள். ஊடகம், திரைப்படம், புராணம், இலக்கியம், முதலாளியம் இன்னும் இதர அணைத்துக் குப்பைகளும் சொல்லியுள்ளவற்றை புறந்தள்ளி, துணைகளாகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது, எவ்வகையான மதிப்பீடுகளுக்கு, அங்கீகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்று உங்களுக்குள் உரையாடி முடிவெடுப்பது உறவுகளைப் பலப்படுத்தும், போலிகளை, சுயநலவாதிகளை விரட்டியடிக்க உதவும். உங்களுடைய தலைமுறையில் அது சாத்தியமில்லாமல் போயிருக்கலாம், குறைந்தபட்சம் உங்கள் பிள்ளைகளின் தலைமுறையினருக்கு இத்தகைய ‘மாயை’ ‘பொருளாதார மதிப்பீடுகள்’ அவசியமா என்று கேள்வியெழுப்புங்கள்.
நீங்கள் செல்லமாக வளர்த்த மகள் ‘அற்ப’ தங்கத்திற்காகவும், பணத்திற்காகவும், ஏற்றிவைக்கப்பட்ட ‘புனிதங்களுக்காகவும்’ கொடுமைப் படுத்தப்படுவதை இன்னமும் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமா என்று எண்ணிப் பார்த்தலே இதற்கு விடிவாய் அமையும். உங்கள் மகளை தங்க நகைக் கடை பொம்மை போல் அலங்கரித்து திருமணம் செய்து வைப்பதன் மூலம், அவள் மனதில் “கடனை உடனைப் பெற்று என் பெற்றோர் எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் என்னை திருமணம் செய்து வைத்தார், அதனால் நானும் என் புகுந்த வீட்டில் என் கணவனின் பொருளாதாரத்தின் மீதே அதிக கவனம் செலுத்துவேன், உறவுகளுக்கென்று ஒரு பைசா தரவிடமாட்டேன் என்று குடும்பத்தை ஒரு வங்கி போல் நடத்தும் எண்ணத்திற்கு வழிவகுக்கவேண்டாம்.
மகனைப் பெற்ற ’பெருமக்கள்’ தங்கத்தை வைத்து வரும் மருமகளை தராசில் வைத்துப் பார்க்கும் அவர்கள், மகனுக்கு உறவை அமைத்துக் கொடுக்கிறார்களா இல்லை ஒரு வங்கிக் கணக்கை தொடங்கித் தருகிறார்களா என்பது கேள்வியாக எழுகிறது. வங்கிக் கணக்குத் தான் என்றால், அதற்கு வட்டியும், முதலுமாக ஒரு பெண் தன் கணவனின் அத்துணை கவனத்தையும் ஈர்த்து, அதிகாரத்தையும், தன் மூதலீடு திவாலாகாமல் இருக்க பாதுகாப்பையும் கோரி உங்களை ஒதுக்குவதில் தவறில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
இறுதியாக, நகைக் கிடங்குகளாக இருக்கும் கோயில்களில் இருக்கும் நகைகளின் மதிப்பும், பணத்தின் மதிப்பும் எத்தனை ஆயிரம் கோடிகளாய் இருக்கின்றன. சமீபத்தில் திருவனந்தபுரம் பத்மனாபசாமிக் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாதாள அறையிலிருந்து எடுக்கப்பட்ட நகைகள், புதையல்களின் மதிப்பு 5 லட்சம் கோடியைத் தாண்டும் என்று அறியப்படுகிறது.
15ஆம் நூற்றாண்டில் ”எட்டரை யோகம்” எனப்படும் 8 1/2க் குழுவால் நிர்வகிக்கப்பட்டு வந்த அக்கோயிலில் பார்ப்பனர்களின் ஒரு பிரிவினரான பூட்டி என்பவர்கள் 8 பேருக்கு 8 வோட்டும் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு வெறும் ண ஓட்டும் எஞ்சியிருந்த நிலையில், திருவாங்கூர் சமஸ்தானம் 8 மாகாணங்களாக 8 நாயர் குடும்பங்களின் தலைமையில் பிரிக்கப்பட்டது. அவர்கள் (நிலப்பிரபுக்கள்) பெரும் கொடுங்கோன்மைகளை செய்ததோடு, அரசரை விட அதிகாரத்தில் உயர்ந்திருந்தனர். திருவாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மாவை கொல்லவும் திட்டமிட்டனர். அவ்வெட்டு பேரையும் கொன்று மார்த்தாண்ட வர்மா அரசவையைக் கைப்பற்றிய பின்னர் இது போன்ற உள்ளூர் சக்திகள், அந்நிய சக்திகளின் தாக்குதல்களிலிருந்தும் தப்பிக்க தன்னை ’பத்மனாப தாசா’ என்று அறிவித்துக் கொண்டு, தன் சொத்து முழுவதையும் கோவிலுக்கு என்று அறிவித்தான் (அதுவும் வரியாக வசூலித்தது தான்). கோயிலின் மூலஸ்தானத்தின் கீழ் பெருத்த கிடங்குகளைக் கட்டினான்.
அந்தக் காலத்தில் பாப்பனியத்தால் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து பல்வேறு வகையான அநியாய வரிகள் வசூலிக்கப்பட்டது. திருமணம், குழுந்தைப் பேறு ஏன் இறப்புக்கு கூட வரி வசூலிக்கப்பட்டது. நாட்டுப் படகுகள், ஏர், மாட்டு வண்டி, குடை, தலைத் தாவணி என்று எல்லாவற்றிகும் வரி. சொல்லகூசும் அளவுக்கு மீசைக்கு கூட வரி வசூலிக்கப்பட்டது. அதை எல்லாம் விடக் கொடுமையான வரி ”முலாக்காரம்” (முலை வரி). குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டுமென்றால் முதலில் வரியைக் கட்டி விட வேண்டும். ‘தாழ்த்தப்பட்ட’ இனமான சேர்த்தலா கபுந்தலாக் குடும்பத்தைச் சேர்ந்தப் பெண்ணொருத்தி அதையும் மீறி பால் கொடுத்ததால், சினம் கொண்ட உள்ளூர் நிலப்பிரபு அவள் வீட்டுக்குச் செல்ல பயம் கொளாத அப்பெண் உள் சென்று தன் இரு முலைகளையும் வெட்டி தட்டில் வைத்துக் கொண்டு வந்தாள். அதைக் கண்டு அங்கேயே மயங்கி விழுந்து இறந்து போனான் அந்நிலப்பிரபு.
இப்படி மீசைக்கும், முலைக்கும், போரில் தோற்றால் அதற்கும் வரி போட்டு ஏழைகளின், உழைப்பாளிகளின் ரத்தத்தையும், வியர்வைவையும் உறிஞ்சி வசூலிக்கப்பட்ட வரிதான் திருவாங்கூர் சமஸ்தானம் உரிமைக் கோரும் ’புதையல்’. மக்களின் பணத்தைக் கடவுள் பணம், கோயில் பணம் என்று ஏமாற்றி சுரண்டுவதற்கு அரசும் துணை செல்கிறது அதனால்தான் முதல்வர் உம்மண் சாண்டி, அக்கோயிலைச் சுற்றி சிறப்பு பாதுகாப்பு மண்டலம் அமைக்க ரூபாய் 1 கோடி ஒதுக்கியுள்ளார்.
மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து, அதை மக்களுக்கு பகிர்ந்தளிக்காமல் இருக்க மக்களின் வரிப் பணத்திலேயே 1 கோடி ஒதுக்கீடு. பத்மனாபசாமி திருக்கோயில் மட்டுமல்லாமல், திருப்பதி கோவில், தமிழ்நாட்டில், இந்தியாவில் உள்ள பல கோவில்கள், மடங்கள், சாமியார்களின் ஆசிரமங்கள் என எல்லா இடத்திலும் கோடிக் கணக்கில் பணம் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துக் கொண்டேயிருக்கிறது. (“தெய்வம் மனுஷ்ய ரூபேணா” என்று ஒரு சப்பைக் கட்டு வேறு, அந்த மனுஷாக்கள் தானே மத்தவாள கோயிலுக்குள்ள வரப்டாதுங்கறா ஊர அடிச்சி உலையில போடுறா). மக்களும் ஏன் கடவுள் வரமறுக்கிறார் என்று கேட்பதாகவும் தெரியவில்லை. அத்தனை திடமாக பாவ புண்ணிய, முன் ஜென்ம கருத்தாக்கங்களை ஏற்றி வைத்திருக்கிறது அக்கும்பல். கடவுள் தான் கைவிட்டுவிட்டார் என்றால் மாநில அரசோ, மத்திய அரசோ கோயிலில் உள்ள அத்தனை சொத்துக்களும் பொது நிதிக்கே சேரும் என்று எந்தத் தீர்மானமும் நிறைவேற்றுவதாயில்லை.
ஏழைகள் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு கால் காணி தங்கம் கூட போட முடியாமல் அவதிப்பட கடவுளுக்கு பிரம்மாண்ட ‘திருக்கல்யாணங்கள்’ நடத்தப்படுகின்றன. அதுதவிர ஆடி, ஆவணி, ஐப்பசி, மார்கழி என்று பல்வேறு முகூர்த்தங்கள், பூசைகள். யாருடைய வரிப் பணத்திலும், உழைத்துக் கொட்டும் பணத்திலும் இதெல்லாம் நடக்கிறது. 2001 அரசாங்க புள்ளிவிவரப்படி 2 மில்லியன் மக்கள் வீடில்லாமல் இருக்கிறார்கள், ஆனால் 2003ல் தனியார் நிறுவனம் ஒன்று எடுத்தக் கணக்கின் படி 78 மில்லியன் மக்கள் வீடில்லாமல் நடைபாதையில் வசிக்கின்றனர். இத்தனை சதவிகித மக்கள் வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழும் நிலையில் தங்கத்தின் நுகர்வு சதவிகிதம் நம் மனங்களின் மனிதாபமற்ற, சுரணையற்ற, பொறுப்பற்ற, சுயநலத் தன்மையின் அளவுகோலாகத்தான் கருதத்தோன்றுகிறது.
எவரோ சிலர் பணக்காரர்களாக நிலைத்திருப்பதற்கு ரத்தமும் வேர்வையையும் சிந்தி நாம் சம்பாதிக்கும் பணத்தினை கைதுடைக்க வேண்டுமா. அடிப்படை மருத்துவ வசதி, கல்வி வசதி கூட இல்லாத ஒரு நாட்டில் தங்கம் வாங்கும் திறன் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது வெட்கப்படவேண்டிய விசயமாக இருக்கிறது. வயிற்ப்பாட்டிற்கே வழியில்லாத மக்கள் மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கி தங்கள் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்து அதுவும் நிலைத்திருக்காமல், கடனையும் அடைக்க முடியாமல் அவதியுற்று சிதைந்து போவதை எவ்வளவு காலங்களுக்கு பார்த்துக் கொண்டிருப்பது. படித்தப் பெண்களே இம்மாயையிலிருந்து விடுபடாமல் இருக்கும் பொழுது கல்வியறிவற்ற பெண்களிடம் இது குறித்த விழிப்புணர்வை எங்கிருந்து துவங்குவது. தொலைக்காட்சி முன் தங்களை இழந்து நிற்கும் பெண்கள் அத்தொடர்களில் வரும் பெண்களின் துன்பங்களைக் கண்டு வருந்துவதும், தொலைபேசி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கும் தொடர்பு கொண்டு கொஞ்சுவதும் எத்தகையப் பயன்களை சமுதாயத்திற்கு அளிக்கபோகிறது என்பது தெரியவில்லை.
பல்வேறு முனைகளிலிருந்து மக்கள் அறிவுநிலைகள் மேல் தொடுக்கப்படும் அத்துமீறலானது அபாய நிலையை எட்டியுள்ளது, கட்டுக்கடங்காமல் ஊடகங்களின் வாயிலாக விசக் கிருமி போல் பரவுகிறது. எத்தகைய கொள்கைகளோடு தொடங்கப்படும் ஊடகங்களாய் இருந்தாலும் “பெண்கள்”, “பெண்மை”, “மதம்” பற்றிய அவர்களது மதிப்பீடுகள் ஆணாதிக்கமும் வழிமொழிந்தப் பாடங்களைச் சார்ந்தே உள்ளன. பெண்ணிய சிந்தனை தனக்கென ஒரு காட்சி ஊடகத்தை நிறுவ வேண்டிய காலகட்டம் நெருங்கிவிட்டது. அது பாலியல் சுததிரம், ஆணுக்கு நிகரான நாகரீக சுதந்திரம் பேசும் ஊடகமாக இல்லாமல் வறுமைக்கோட்டிற்கு கீழே உழலும், சாதியத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட்ரிஉக்கும் ஒடுக்கபப்ட்ட இனப் பெண்களின் விடுதலையை மையப்படுத்தி அமைதல் என்பது அவசியமாகிறது. உழைக்கும் மக்களோடு கைகோர்க்காத எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் ‘மேட்டுக் குடி’ நலனை மட்டுமே வளர்த்தெடுத்திருக்கிறது என்பதை வரலாற்றில் காணமுடிகிறது. அந்நலன் முதலாளித்துவம் வகுப்பெடுக்கும் தேவைகளாகவும், நலன்களாகவும், சுதந்திரமாகவும் இருப்பதை ஒவ்வொரு நிகழ்வும் உறுதிசெய்கிறது.