சென்னையில் சுற்றிய போலி ஐபிஎஸ் அதிகாரி கைது: இட்லி, தோசை சப்ளை செய்வதை கண்காணிப்பவர்
சென்னை: சென்னை கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ரயில் நகர் சந்திப்பில் கோயம்பேடு போக்குவரத்து போலீஸ் எஸ்ஐ பாண்டியராஜன் நேற்று காலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். அப்போது புளூ கலர் சைரன் பொருத்திய ஒரு கார் வேகமாக சிக்னலை தாண்டி சென்றது. இதனால் எஸ்ஐ பாண்டியராஜன், விரட்டிச் சென்று அந்த காரை மடக்கிப் பிடித்தார். கார் கண்ணாடியில் போலீஸ் என்று எழுதப்பட்டு இருந்தது.
காரை ஓட்டிய நபர், தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்று கூறினார். மேலும் தன்னுடைய ஐடி கார்டையும் காண்பித்து விட்டு காரை அங்கிருந்து எடுத்துச் சென்றார். இதில் சந்தேகம் அடைந்த எஸ்ஐ பாண்டியராஜன், அடுத்த சிக்னலில் நின்றிருந்த எஸ்ஐ சக்திவேல், வேதகிரிக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் உஷாராவதற்குள் அந்த நம்பர் கொண்ட கார், சிக்னலை தாண்டி சென்றது.
இதையடுத்து அந்த காரை போலீசார், பைக்கில் விரட்டிச் சென்று நெற்குன்றம் படேல் ரோட்டில் சுற்றிவளைத்து பிடித்தனர். காரில் இருந்தவரிடம் விவரங்களை கேட்டனர். அப்போது அவர் காட்டிய விசிட்டிங் கார்டில், விவேகானந்த மிஸ்ரா (43), டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நரம்பியல் துறை டாக்டராக பணியாற்றுவதாக இருந்தது.மேலும் அவர் ஐபிஎஸ் அதிகாரி என்று போலி ஐடி கார்டும் வைத்து இருந்தார். இதனையடுத்து கோயம்பேடு மார்க்கெட் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
கோயம்பேடு உதவி கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் விரைந்து சென்று அந்த நபரை காவல் நிலையம் கொண்டு வந்தனர். துணை கமிஷனர் மனோகரன் அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், பிடிபட்ட விவேகானந்த மிஸ்ரா, மேற்கு வங்கம் புருடா மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 6 மாதமாக கோயம்பேட்டில் உள்ள ஸ்டார் ஓட்டலில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணிபுரிந்து வந்தார்.
ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்கும் இட்லி, தோசை போன்ற உணவுப் பொருட்கள் சரியாக சப்ளை செய்யப்படுகிறதா என்கிற பணியை செய்து வந்தார். ஆவடி அருகே அண்ணனூர் சிவசக்தி நகர் 7வது அவென்யுவில் தங்கியுள்ளார். அவரது வீட்டை சோதனையிட்ட போது 6 செல்போன்கள், கிரெடிட் கார்டுகள் மற்றும் 6 வங்கி பாஸ்புக் ஆகியவற்றை கைப்பற்றினர். ஒரு சில வங்கியில் ஓவர் டிராப்ட் செய்துள்ளார். மேலும் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் பள்ளி முதல்வர் என்ற முத்திரையையும் கைப்பற்றினர். அவரிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
அவர் போலீசிடம் தெரிவித்த தகவல்: நான் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து முடித்துள்ளேன். கடந்த 13 வருடங்களுக்கு முன் சென் னைக்கு வந்துவிட்டேன். இங்கு பல்வேறு ஓட்டல்களில் வேலை செய்து வந்த நான் இந்த ஓட்டலில் ரூ.35,000 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தேன். படித்து கொண்டிருக்கும்போது நிறைய நாடகங்களில் நடித்துள்ளேன். அதில் பெரும்பாலும் போலீஸ் அதிகாரியாகவே நடித்தேன். அந்த படங்களை நான் ஆல்பத்தில் வைத்திருந்தேன். அதை பார்த்த எனது மகன் விஷால் மிஸ்ரா, என்னை போலீஸ் அதிகாரியாக பார்க்க ஆசைப்படுவான். அதனால் நான் இன்டர்நெட்டில் போலீஸ் அதிகாரியின் ஐ.டி. கார்டை டவுண்லோடு செய்து அதில் எனது முகத்தை பதித்து செராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டேன். இந்நிலையில் தான் போலீசிடம் சிக்கி கொண்டேன்’’ என்று கூறியுள்ளார்.
source: http://www.dinakaran.com/