ஃபேஸ்புக்கும் செக்ஸும்!
செக்ஸ் தொடர்பான குற்றங்களும், வக்கிரங்களும் எப்போதும் ஒரு தொடர்கதையாவே இருக்கறதுக்கு ஒரு முக்கிய காரணம் செக்ஸ் கல்வி! அப்படியோரு செக்ஸ் கல்வியே நம்ம சமுதாயத்துல சுத்தமா கிடையாது. ஆமா, அந்த செக்ஸ் கல்விய யாரு கொடுப்பாங்க?
நம்ம குழந்தைகளுக்கு (ஒவ்வொரு வயது வந்த மாணவர்களுக்கும்), அவங்க கல்வி கற்கச் செல்லும் ஒரு கல்வி நிறுவனம்தான், பொதுவான கல்வியுடன் இந்த செக்ஸ் கல்வியையும் சேர்த்து வழங்கனும்னு சமுதாயமும், பெற்றோர்களுமாகிய நாம நெனக்கிறதுல எந்தவித தவறும் இல்லையெனும் அதேசமயத்தில், நம் பிள்ளைகளின் வளமான வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒரு தேவையான, செக்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் நமக்கும் ஒரு முக்கிய பங்குண்டு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!
செக்ஸும் சமுதாயமும்!
இப்படி, “செக்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெற்றோருக்கும் முக்கிய பங்குண்டு”ன்னு, குத்து மதிப்பா யாரு வேணும்னாலும் சொல்லிட்டு போகலாம். ஆனா, செக்ஸ் அப்படீங்கிறது நம் சமுதாயத்துல ஒரு ரகசியமான, (மத்தவங்ககூட பேசும்போது மட்டும்) அருவருக்கத்தக்க, மர்மங்கள் நிறைந்த ஒரு செயலாகத்தான் பாவிக்கப்படுகிறது?!
அப்படியிருக்கும்போது, அடிப்படையில் ஒரு சிக்கலான விஷயமாக மாறிப்போன/மாற்றப்பட்டுவிட்ட (?) செக்ஸைப் பற்றிய சரியான புரிதல், அதை மற்றவர்களுக்கு சொல்லிப் புரிய வைக்கும் முதிர்ச்சி, அதில் ஆரோக்கியமான ஒரு ஆர்வம், இப்படியான விஷயங்கள் இல்லாத ஒருத்தரால, (அது பெற்றோராயிருந்தாலும்) குழந்தைகளுக்கு/வயது வந்தோருக்கு செக்ஸைப் பற்றிய ஒரு அறியாமையை எப்படி போக்க முடியும்?
செக்ஸ் கல்வி/விழிப்புணர்வும் சில சிக்கல்களும்!
ஆக, செக்ஸ் விழிப்புணர்வு/கல்வியில் முதல் தடைக்கல் ‘செக்ஸைப் பற்றிய சரியான புரிதல்’! அந்தத் தடைக்கல்லையும் ஒரு படிக்கல்லாக்கி முன்னேறும் சில பெற்றோருக்கு மற்றுமொர் சிக்கல் என்னன்னு கேட்டீங்கன்னா, நம்ம குழந்தைங்களுக்கு செக்ஸ் ஆர்வம்/ஈடுபாடு வந்திடுச்சா இல்லியாங்கறத எப்படி கண்டுபிடிக்கறது. அதாவது, நம்ம குழந்தைங்க செக்ஸ் செயல்பாட்டுக்கு தயாரா இருக்காங்களா இல்லியா? ஏன்னா, செக்ஸ் கல்விக்கான சரியான தருணம் அதுதானே?!
இதுதான், செக்ஸ் கல்வி/விழிப்புணர்வுல ரொம்ப சிக்கலான விஷயம்! ஏன்னா, நம்ம பிள்ளைகளின் செக்ஸ் ஈடுபாடு/ஆர்வம் பத்தி ஒன்னுமே தெரியாம அவங்க கிட்டப்போய் செக்ஸ் பத்தி பேசினா, “சும்மா கெடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி” அப்படீங்கிற மாதிரி ஆயிடும் நெலம?! ஆமா இல்ல? அது சரி, அப்ப இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு அப்படீன்னுதானே கேக்குறீங்க!
இந்தப் பிரச்சினைக்கான ஒரு சுலபமான (?) தீர்வை, சமீபத்திய ஒரு ஆய்வு சொல்கிறது. இதுல விசேஷம் என்னன்னா, இந்த ஆய்வுக்கு அடிப்படையே, இணைய உலகின் இதயமாகிப்போன, தற்போதைய வலைப்பின்னல் உலக ஜாம்பவான் ஃபேஸ்புக் அப்படீங்கிறதுதான். “அட அப்படியா, ஆச்சரியமாயிருக்கே! அது எப்படி?” அப்படீன்றீங்களா? வாங்க பார்ப்போம் எப்படின்னு…
ஃபேஸ்புக் கணக்கும் செக்ஸும்
பிரபல வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக்கில் கணக்கில்லாத குட்டிப் பசங்ககூட இல்ல இந்தக் காலத்துல! அந்த அளவுக்கு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், அலுவலகம் இப்படி எல்லா சமூக நிலைகளையும் வியாபித்திருக்கிறது இந்த ஃபேஸ்புக் மோகம்!
ஃபேஸ்புக் தளத்துல கணக்கிருந்தா, அதுல ஒருத்தரோட அடிப்படையான சுயவிவரம் தொடங்கி அவங்களோட சுயசரிதையைக்கூட பார்க்க/படிக்க முடியும்ங்கிறது ஃபேஸ்புக் கணக்கு வச்சிருக்கிற உங்கள்ல பல பேருக்கு தெரிஞ்சிருக்கும்! இதுல ரொம்ப சுவராசியமான ஒரு சேவை என்னன்னு கேட்டீங்கன்னா, “இப்போ உங்க மனசுல என்ன நினைக்கிறீங்க/தோனுது” அப்படீங்கிற ஒரு ரியல் டைம் சேவை!
அதாவது, ஒருவர் எந்தச் சமயத்தில் என்ன நினைக்கிறார் என்பதை தன் ஃபேஸ்புக் தள கணக்குப் பக்கத்தின் முகப்பில் எழுதி, தன்னைச் சார்ந்த நண்பர்களுக்கு மட்டும் அல்லது பரிச்சியமில்லாத உலகத்தினர் எல்லாருக்கும் தெரியப்படுத்தும் ஒரு சேவை. இந்தச் சேவையின் மூலமா ஒருத்தர் மனசுல எந்தவிதமான எண்ணங்கள் ஓடிக்கிட்டிருக்குன்னு தெரிஞ்சிக்க முடியும். இது ஒரு குறிப்பிட்ட நாள்/மாதம்/வருடம் என எல்லா காலவரயறைக்குள்ளும் அடங்கும்!
ஃபேஸ்புக் தளத்தின் இந்தச் சேவையின் மூலமாக, அதில் கணக்கு வைத்திருக்கும் ஒருவருக்கு ஏற்படும் செக்ஸ் குறித்த ஈடுபாடு/ஆர்வம்/ஆயத்தம் இப்படி எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள முடியும்னு சொல்றாங்க அமெரிக்காவின் விஸ்கான்சன்-மேடிசன் பல்கலைக்கழக ஆய்வாளர் மேகன்.ஏ.மொரீனோ! (Megan A. Moreno from the University of Wisconsin-Madison)
ஆய்வு சொல்லும் அறிவுரைகள்
ஆக, இத்தகையச் சேவையை கூர்ந்து கவனிப்பதன் மூலம், ஒரு குழந்தையின் செக்ஸ் ஆர்வங்கள் குறித்த விவரங்களானது அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளிப்படும்போது, அந்தக் குழந்தைக்கு செக்ஸ் கல்வியை போதிக்கும், மருத்துவர்களுக்கும் மற்றும் குழந்தைகளின் பெற்றோருக்கும், அக்குழந்தைகளுடன் “செக்ஸ் விழிப்புணர்வு குறித்த விவாதம்/கலந்துரையாடல் போன்றவற்றை தொடங்க சரியானதொரு சமயம் இதுதான்” என தெளிவாக உணர்த்தவல்லது ஃபேஸ்புக்கின் இச்சேவை என்பதை எங்களின் ஆய்வு உறுதிசெய்கிறது அப்படிங்கிறாங்க மொரீனோ?!
அதுமட்டுமில்லாம, மொரீனோ அவர்களின் முந்தைய ஒரு ஆய்வில், மை ஸ்பேஸ் (MySpace) என்னும் மற்றுமோர் வலைப்பின்னல் தளத்திலுள்ள 54% கணக்குகளில், செக்ஸ் வக்கிரம் குறித்த தவறான செயல்பாடுகளில் ஈடுபடுவதற்க்கான, விவரங்கள் நண்பர்களுக்கு மத்தியில் பகிர்ந்துகொள்ளப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது! அது சரி, இதுவரைக்கும் நான்கூட சும்மா வெட்டியா இருக்குபோதுதான், மக்கள் ஃபேஸ்புக் பக்கத்துல மூழ்கிடுறாங்கன்னு தப்பு கணக்குப் போட்டுட்டேன். இப்பத்தானே புரியுது, தப்பா நடக்கிறதுக்காகவேகூட சில பேரு ஃபேஸ்புக்குல கணக்கு தொடங்கலாமுன்னு?!
“ஏய்….அதெல்லாம் சரிதாம்பா, ஒருத்தரோட ஃபேஸ்புக் பக்கத்துல அவங்க எழுதுற சில செக்ஸ் சம்பந்தமான விஷயங்கள மட்டுமே வச்சிக்கிட்டு, அவங்க தப்பான செக்ஸ் வக்கிரங்கள்ல ஈடுபடுவதற்க்கான வாய்ப்புகள் இருக்குன்னெல்லாம் எங்களுக்கு காது குத்தலாமுன்னு பார்க்காத” அப்படீன்னு நீங்க வெவரமா கேப்பீங்கன்னு தெரிஞ்சுதான்….
.
ஃபேஸ்புக் கணக்குப் பக்கத்தில் எழுதப்படும் செக்ஸ் செயல்பாடுகள் குறித்த விஷயங்களுக்கும், நடைமுறையில் சமுதாயத்தில் (Offline world-ல்) நிகழும் செக்ஸ் செயல்கள்/குற்றங்களுக்கும் எதாவது தொடர்பிருக்கான்னு பார்க்க, ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள பல்வேறு கணக்குகளையும், அதிலுள்ள 85 பேரை, செக்ஸ் அனுபவங்கள், செக்ஸ் வக்கிரங்கள் தொடர்பான ஒரு சர்வேயுக்கும் உட்படுத்தி, செக்ஸில் இன்னும் ஈடுபடாதவர்களின் செக்ஸ் ஆர்வங்களையும் கேட்டு ஒரு ஆய்வு செஞ்சு பார்த்திருக்காங்க மொரீனோ!
இந்த ஆய்வின் மூலமா, ஃபேஸ்புக் பக்கங்களில் எழுதப்பட்ட செக்ஸ் ஆர்வங்கள் குறித்த கருத்துகளுக்கும், செக்ஸில்/உடலுறவில் ஈடுபட மிகுந்த ஆர்வம் இருக்கிறது எனக் கூறிய சிலரின் சுய கருத்துக்களுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது! ஆக, குத்து மதிப்பா யாரும் எதையும், ஃபேஸ்புக் மாதிரியான வலைப்பின்னல் தளங்கள்ல எழுதறதில்லைப் போலிருக்கு… .அப்படிப்போடு!!
மொத்தத்துல இந்த ஆய்வு என்ன சொல்லுதுன்னா, செக்ஸ் குறித்த சரியான புரிதல் இல்லாமை/தவறான புரிதல், அறியாமை போன்றவற்றால், சமுதாயத்தில் ஏற்படும் செக்ஸ் குற்றங்கள் நடக்காமல் இருக்கு, தத்தம் குழந்தைகளை அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடாமல் தடுக்க, பெற்றோர்களும், குடும்ப நல மருத்துவர்களும் ஃபேஸ்புக் போன்ற பல்வேறு வலைப்பின்னல் தளங்களில், தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து அவர்களை நல்வழிப்படுத்த முடியும் அப்படீங்கிற ஒரு உண்மையைத்தான்?!
இந்தக் கருத்து/ஆய்வுல, உங்கள்ல எத்தனை விழுக்காட்டினருக்கு உடன்பாடு, எதிர்மறையான கருத்துகள் இருக்குன்னு எனக்குத் தெரியாது. ஆனா, என்னைப்பொறுத்தவரை ஃபேஸ்புக் மாதிரியான வலைப்பின்னல் தள செயல்பாடுகள், பெரும்பாலும் நன்மைகளைவிட தீமைகளுக்கே வித்திடுகின்றன. இதை அத்தளத்தில் கணக்கு வைத்திருக்கும் என்னால் சில சமயங்களில் கண்கூடாகவும் காண முடிகிறது!
அதனால, இந்த ஆய்வு முன்வைக்கிற கருத்துல எனக்கு உடன்பாடு இருக்கு! அதுக்காக, நூத்துக்கு நூறு செக்ஸ் குற்றங்களை, இம்மாதிரியான தள செயல்பாடுகளை கவனிப்பதன் மூலமே களைந்துவிட முடியும்னு நான் சொல்ல வரல. ஆனா, ஃபேஸ்புக் மாதிரியான தள நடவடிக்கைகளைப் பார்த்துட்டு, கண்டும் காணாம போறுதுக்கும், ‘வலைப்பின்னல்ன்ற பேர்ல இந்தப் பசங்க என்னென்னா அட்டகாசங்கள் பண்ணுதுங்க பாரு”ன்னு ஒரு மூனாவது மனுசன் மாதிரி புலம்பிட்டு போறதுக்கும், இந்த ஆய்வின் அறிவுரையின்படி ஃபேஸ்புக் தள நடவடிக்கைகளை, நம் குழந்தைளின் அறியாமையால் அல்லது சமுதாயத்தில் நிகழப்போகும் செக்ஸ் குற்றங்களை தடுக்க, தனிமனித அடிப்படையில் நம்மாலானதை செய்ய முடியுமென்று முயல்வதற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்குன்னு நான் நெனக்கிறேன்!
source: http://padmahari.wordpress.com