மனிதச் சந்தையில் விலைபோகும் ‘ஆடுகள்’
ஸஹீஹுல் புகாரியில் ஒரு பாடம். ‘‘சுதந்திரமானவரை விற்பது குற்றமாகும்’’ என்பது பாடத்தின் தலைப்பு. அதில் இடம்பெற்றுள்ள நபிமொழி இதுதான்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: ”மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்குரைப்பேன். ஒருவன், என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, மோசடி செய்தவன்; இன்னொருவன், சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தை உண்டவன்; மூன்றாமவன், ஒரு கூலியாளிடம் நன்றாக வேலை வாங்கிக்கொண்டு, அவனது கூலியைத் தராமல் இருந்தவன்.” (ஹதீஸ் – 2227)
இதில் குறிப்பிடப்படும் மூவருமே குற்றவாளிகள்தான். இருப்பினும், சுதந்திரமான ஒருவரை விற்றுப் பிழைப்பவன்கூட இருப்பானா என்ற ஐயம் வந்ததுண்டு. அவனுக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை என்ற வினாவும் எழுந்ததுண்டு. விரிவுரைகளில் பொருத்தமான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக மனிதர்கள் சுதந்திரமானவர்களே; அடிமைத்தளை என்பது இடையில் பூட்டப்படும் விலங்கு. அப்படியிருக்க, சுதந்திரமான ஒரு மனிதனைப் பிடித்து ‘அடிமை’ என்று சொல்லி விற்றுக் காசாக்குவது வன்கொடுமை ஆகும்.
இதனால் அவனது சுதந்திரம் பறிக்கப்படுகிறது; இழிவு பூசப்படுகிறது. இறை அடியானான அவனுக்கு இழைக்கப்பட்ட இக்கொடுமைக்கு, எஜமானனான இறைவனே வழக்காடுவதுதான் பொருத்தமானதாகும். (ஃபத்ஹுல் பாரீ)
அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு
பணத்துக்காக மனிதன் மனிதனையே வேட்டையாடிக்கொண்டிருக்கின்றான். இது காலங்காலமாக இடைவிடாது நடந்துகொண்டிருக்கிறது. மனிதச் சந்தையில் விற்கப்படும் மனிதர்களின் எண்ணிக்கை எவ்வளவு? விற்கப்படுவோர் யார்? கிடைக்கும் லாபம் எவ்வளவு? தடுப்பதற்கு வழி என்ன?
அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சகம், ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச தொழில் கழகம் ஆகிய அமைப்புகள் அளிக்கும் புள்ளி விவரங்கள் நம்மை உறையவைக்கின்றன; அதே நேரத்தில், இஸ்லாத்தின் கருணையை நமக்குப் புரியவைக்கின்றன.
மனிதச் சந்தை, அல்லது மனித விற்பனை என்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை அளித்துள்ள விளக்கம் நீளமானது. கடத்தல், குடிபெயர்தல், குடிபெயரவைத்தல், மிரட்டிப் பணியவைத்தல், ஆற்றலைச் சுரண்டுதல், விபசாரத்தில் ஈடுபடுத்தல், பிச்சையெடுக்கவைத்தல், கொத்தடிமைகளாக நடத்துதல், உறுப்புகளை வெட்டி எடுத்தல், போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்டுத்துதல், வீட்டு அடிமைகள் முதலான அனைத்து ஈனச்செயல்களும் மனித விற்பனையில் அடங்கும் என்கிறது ஐ.நா. சபை.
இவற்றில் பாலியல் குற்றங்களுக்காகப் பயன்படுத்துவதே மனித விற்பனையில் 79 விழுக்காடாக உள்ளது. அடுத்து 18 விழுக்காடு கொத்தடிமைத் தொழிலில் ஈடுபடுத்துவதாக உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் இந்த அநியாயம் பரவலாக நடக்கிறது.
புள்ளி விவரம்
உலகம் முழுவதிலும் நடக்கும் மனித விற்பனை மூலம் ஆண்டுதோறும் கிடைக்கும் பணம் எவ்வளவு தெரியுமா? 32 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் 100 கோடி.)
விற்கப்படும் மனிதர்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளே அதிகம் (79%)
கட்டாயப்படுத்தி, அல்லது கூலியே இல்லாமல், அல்லது விபசாரத்தில் வேலை (?) செய்வோர் 21 மில்லியன். (ஒரு மில்லியம் 10 லட்சம்.)
ஒவ்வோர் ஆண்டும் எல்லை தாண்டி கடத்தப்படுவோர் எண்ணிக்கை 8 லட்சம்.
எல்லைக்குள்ளேயே கடத்தப்படுவோரையும் கணக்கில் எடுத்தால் 2 முதல் 4 மில்லியனை எட்டும்.
ஒவ்வொரு வகையான மனித விற்பனையில் 20 விழுக்காட்டிற்கும் அதிகமாகப் பலியாவோர் குழந்தைகளே.
எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெறும் லாட்வியா குடியரசு, இந்த மனித விற்பனையைத் தடுக்க அதிகக் கவனம் செலுத்த வேண்டுமென அயர்லாந்து அரசை வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்குவதற்கு அனுமதி பெறுவதற்காக, 400 பேர் லாட்வியா இளம்பெண்களைக் கட்டாயப்படுத்தி மணமுடித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
பிபிசி வெளியிட்ட ஒரு செய்தி: ஆண்டுதோறும் ஒரு லட்சம் இளம்பெண்கள் (வயது 14 முதல் 19) விபசாரத்திற்காக லத்தீன் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குக் கடத்தப்படுகிறார்கள்.
விலைமாதுகள்
விபசாரம், இலாபம் கொழிக்கும் ஒரு தொழிலாக (?) வளர்ந்துவருகிறது. ஏதோ தொழில்சாலைகளில் பணியாற்றுவதைப் போன்று விபசாரத்தையும் ஒரு தொழிலாக்கி, அதில் இருப்போரை ‘பாலியல் தொழிலாளர்கள்’ என்று பெயர்சூட்டும் மானக்கேடு நடந்தேறுகிறது. இவர்களில் பெரும்பாலோர் குழந்தைகளும் இளம்பெண்களும் ஆவர். உண்மையில் இவர்கள்தான், நவீன காலத்து ‘அடிமைகள்’ ஆவர்.
ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான பெண்கள் வறுமை காரணமாக உலகின் பல பகுதிகளிலிருந்து ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், ஜப்பான், அமெரிக்கா, வளைகுடா நாடுகள் ஆகியவற்றுக்கு வேலைக்காகப் படையெடுக்கின்றனர்.
கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைச் சொல்லி இடைத் தரகர்கள் மூலம் இளம்பெண்களை விலைக்கு வாங்கும் தீய சக்திகள், எல்லைக்குப் போனபின் பெரிய விலைக்கு ஏலத்தில் விற்றுவிடுகின்றனர். அங்குதான் அந்த அபலைப் பெண்கள் தங்களுக்குத் தெரியாமலேயே கடன்காரர்களாகின்றனர். கடனை அடைக்க ஓய்வின்றி உழைக்கின்றனர்.
உதாரணத்திற்கு நியூயார்க்கில் ஓர் இளம்பெண் நாளொன்றுக்கு 10 மணிநேரம் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறாளாம்! 25 முதல் 30 வாடிக்கையாளர்களை அவள் திருப்திப்படுத்த வேண்டியுள்ளது. ஆனாலும், அவள்மீதான கடன் ஒருகாலும் அடையப்போவதில்லை. காரணம், அவள் சம்பாதிப்பதில் (?) பாதி விபசார விடுதி நடத்துபவர்களுக்கும் மீதிப் பாதி, கடத்தியவர்களுக்கும் அவள் செலுத்தியாக வேண்டும்.
விடுதியிலிருந்து ஓடிப்போக நினைத்தால் சித்திரவதைதான். போலிஸுக்குப் போனால், வேலையிலிருந்து நிறுத்தப்படுவாள்; அவளது குடும்பத்தார் அவள் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தியாக வேண்டும். அப்படியே யாரும் தப்பித்துச் சென்றாலும் மறுபடியும் அவள் விலைக்கு வாங்கப்பட்டுவிடுவாள். மொத்தத்தில் இந்த நரகத்தில் நுழைந்தவள், அதிலிருந்து வெளியேற முடியாது.
இஸ்லாமே தீர்வு
இக்கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமென்றால் இஸ்லாம் ஒன்றே அதற்கான வழியாகும். அடிமைகளை ஒழிக்கவும் அடிமைத் தளையிலிருந்து மனித இனத்தை விடுவிக்கவும் இஸ்லாம் பல வழிகளைக் காட்டியுள்ளது; எல்லாவற்றுக்கும் மேலாக, சுதந்திர மனிதனை அடிமையாக்குவதற்கும் விற்பதற்கும் தடை விதிக்கிறது.
திருடன், கடன்காரன் யாராக இருந்தாலும் அவனை அடிமையாக்க அனுமதியில்லை.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன:
முதல் வகை:
இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும்: ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண்பேசி ‘மஹ்ர்’ (மணக்கொடை) கொடுத்து மணந்துகொள்வார்.
இரண்டாம் வகைத் திருமணம்:
ஒருவர் தம் மனைவியிடம், ‘நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி (அவர் மூலம் கருத்தரித்துக்கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொள்!’ என்று கூறிவிட்டு, அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளைவிட்டு அந்தக் கணவர் விலகி இருப்பார். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகின்றவரை கணவர் அவளை ஒருபோதும் தீண்டமாட்டார். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாளெனத் தெரியவந்தால், விரும்பும்போது அவளுடைய கணவர் அவளுடன் உடலுறவு கொள்வார்.
குலச் சிறப்புமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற (அற்ப) ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்துவந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ளாஉ’ (விரும்பிப்பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.
மூன்றாம் வகைத் திருமணம்:
பத்துப்பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்துப் பிரசவமாகி சில நாட்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச்சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்றுகூடுவார்கள்.
அப்போது அவர்களிடம், ‘‘நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்துவிட்டது’’ என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) ‘‘இவன் உங்கள் மகன், இன்னாரே!’’ என்று தான் விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதை மறுக்க முடியாது.
நான்காம் வகைத் திருமணம் :
நிறைய மக்கள் (ஓரிடத்தில்) ஒன்றுகூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்கமாட்டாள்.
இந்தப் பெண்கள் விலைமாதர்கள் ஆவர். அவர்கள் தங்களது வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டுவைத்திருந்தனர். எனவே, அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்து குழந்தை பிறந்தால், அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்றுகூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை- பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்துவருவார்கள்.
தாம் (தந்தையெனக்) கருதிய ஒருவனுடன் அந்தக் குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு ‘அவருடைய மகன்’ என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டுவந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்க முடியாது.
சத்திய (மார்க்க)த்துடன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டபோது, இன்று மக்களின் வழக்கிலுள்ள (முதல் வகைத்) திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள். (புகாரீ – 5127)
அரபி மூலம்: அல்முஜ்தமா அரபி வார இதழ்
source: http://khanbaqavi.blogspot.in/2012/09/blog-post_3333.html