திட்டமிட்டு செய்யும் துரோகம், பண்பாட்டுச் சிதைவு!
[ திரைப்படங்களில் எண்ணற்ற புரட்சி(!) செய்பவர்கள் நிஜ வாழ்க்கையில் ஏன் அரசுக்கு ‘காக்கா’ பிடிப்பவர்களாகவே இருக்கின்றனர், ‘கற்பு’, தமிழ் பண்பாடு என்று வகுப்பெடுக்கும் இவர்கள் ஏன் சக நடிகையின் உடலை எந்த தார்மீக அறமுமின்றி கையாள்கிறார்கள் என்று மக்கள் இவர்களை நோக்கி கேள்விகள் எழுப்ப வேண்டும்.
மனித மனமானது உணர்ச்சி மிகுந்த புலன்களால் ஆனது என்று சொல்லவும் தேவையில்லை, அது ஒவ்வொரு புலன்களின் வாயிலாக கற்கிறது, உணர்கிறது, செயல்படுகிறது. ஒலி ஒளி என்பது மிகுந்த சக்தி வாய்ந்த ஓர் ஊடகம் அதன் வாயிலாக ஏற்றிவைக்கப்படும் கருத்துக்கள் விளைவுகள் கொண்டவை என்பதற்கு மாற்று கருத்து இருந்துவிட முடியாது.
ஆண்மை பெண்மை பற்றி இவர்கள் பரப்பும் கருத்துரைகள் சமூக முன்னேற்றத்தில், சிந்தனை வளர்ச்சிப் பாதையில் முடக்காக இருக்கிறது. பெண் விடுதலைப் பாதையில் பெருத்த முட்டுக்கட்டையாக இருப்பது திரைப்படங்களே, பெண்களைப் பாலியல் பண்டமாய் பயன்படுத்தி மேலும் மேலும் பாலியல் வக்கிரங்களை விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள், அது பெண்களுக்கெதிரான வன்முறையாய் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக்கொண்டேயிருக்கிறது.
‘தமிழ்’ பண்பாட்டின் படி ஒரு பெண் முழுக்கப் போர்த்தியவளாகவல்லவா இருக்க வேண்டும்? மேலே ஓர் அங்குலமும், கீழே ஓர் அங்குலமும் மட்டுமே உடையாக கொடுத்து பெண்களின் உடலைக் காட்சிப்பொருளாக்கும் முதலாளிகளை எதிர்த்து பொதுநல அமைப்புகள் இதுவரை என்ன செய்திருக்கின்றன?]
திட்டமிட்டு செய்யும் துரோகம், பண்பாட்டுச் சிதைவு!
பண்பாடு என்பதற்குள் என்றும் சுருக்கப்படுவது பெண்ணின் நடத்தையே, அதனால் தான் பெண்கள் சற்று சுதந்திரமாக செயல்பட்டால் உடனே பண்பாடு கெட்டுவிட்டது எனும் குற்றச்சாட்டுகள் எழுகிறது.
பண்பாட்டுச் சிதைவு பற்றிக் கவலையுற்று போர் கொடி தூக்கும் பிரிவினர் நாட்டின் ‘சமதர்மத்தை’க் குலைக்கும் பலவேறு சீர்கேடுகள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
‘தமிழ்’ பண்பாட்டின் படி ஒரு பெண் முழுக்கப் போர்த்தியவளாகவல்லவா இருக்க வேண்டும்? மேலே ஓர் அங்குலமும், கீழே ஓர் அங்குலமும் மட்டுமே உடையாக கொடுத்து பெண்களின் உடலைக் காட்சிப்பொருளாக்கும் முதலாளிகளை எதிர்த்து பொதுநல அமைப்புகள் இதுவரை என்ன செய்திருக்கின்றன?
பெண்கள் தங்கள் உடல்ழகை வெளிக்காட்டத் தயாராய் இருக்கிறார்கள் அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம் எனும் ஒரு விளக்கம் வரலாம். இதிற்கு நேரடியாக பதில் சொல்வதை விட வெகுஜனத் திரைப்படங்களில் பெண்களுக்கான் பாத்திரம் என்னவாக இருக்கிறது என்று நோக்குவோமானால் ‘காதலி’ ‘சகோதரி’ ‘மனைவி’ இன்னபிற குடும்ப உறவுகள்.
இதில் அவள் காதலியாக இருக்கும் வரை ’வீரம்’ நிறைந்த கதாநாயக ஆணின் பின்னால் அலைவது, அல்லது அவனை இவள் பின்னால் அலைய விடுவது, கணவுகள் காண்பது அல்லது ‘வில்லனின்’ கணவில் தோன்றி நடனமாடுவது, ‘பணத்திற்காக ஆடும் நடன மாது’ வாக இடையை முன்னுக்குத் தூக்கி தூக்கி உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் அசைவுகளை காமிராவின் நுணியில், அதாவது பார்ப்பவரின் முகத்துக்கு நேரே காண்பித்து ஆடுவது என்ற அளவில் தான் இருக்கிறது.
கதாநாயகியாக நடிப்பதற்கு நடிப்புத் திறமையை விட உடல் வனப்பு, நிறம், எந்தளவுக்கு சதைக் கண்காட்சிக்கு ஒத்துழைப்பார் என்ற அடிப்படையில் தான் ஒரு பெண்ணுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. அல்லாதவர் சிறு வேடங்களில், அல்லது நடனப் பெண்ணாக வேண்டியது தான். இச்சூழலில் உடல் மட்டுமே ஒரு பெண்ணுக்கான முதலீடாக்கப்படுகிறது.
பணம், புகழ், கை சொடுக்குக்கு வேலையாள், உயர்தர வாழ்க்கை என்று கிடைக்கப்பெறும் ஒரு துரையாக சினிமா இருப்பதால், மனித மனம் அதில் எளிதில் விலை போகிறது. குறிப்பாக பெண் ஒரு முறை நடிகையாகி விட்டால் ஆணாதிக்க மனோபாவம் அவளை தினம் தினம் கற்பனையில் வல்லுறவு செய்துவிடுகிறது.
பொது இடத்தில் பார்த்தால் கூட அவளை ஒரு பாலியல் பண்டமாகவே கருதி, இரட்டை அர்த்த ஏளனங்கள், பாலியல் தொல்லைகள் கொடுத்து அச்சுறுத்துகிறது. நடிகர் நடிகைகளைக் கொண்டாடும் ‘பொது’ மனநிலையானது, அவர்கள் தெருவில் வருவதை விசித்திரமாகப் பார்த்து மொய்த்து விடுகின்றது,
பெண் என்றால் கண்டிப்பாக பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றது (நிறைய சம்பவங்களைச் சொல்லலாம்). பணம், ஆசை, ‘கலைத் தாகம்’ இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக நடிக்க வந்து விட்ட பெண் அடுத்து அதை உதறிவிட்டு மற்ற பெண்களைப் போல் சாதாரண வாழ்க்கை வாழ இந்த ஆணாதிக்க முதலாளித்துவ சமுதாயம் விடுவதில்லை.
இன்று பெரும்பாலான பத்திரிகைகள் பெண்களின் கவர்ச்சிப் படங்களை நம்பித்தான் நடக்கின்றன. இப்புத்தகங்களை எதிர்த்து ‘கலாச்சார காவலர்கள்’ கோஷங்களை எழுப்புவதில்லை, ஆனால் ஒரு பெண் கவிஞர் உடல் மொழி சார்ந்து எழுதிவிட்டால் போதும் கிளம்பிவிடுகிறார்கள்.
இது போன்று எண்ணற்றப் பத்திரிகைகள் மொழி பேதமில்லாமல் உலகளாவிய அளவில் பெண் உடலை வைத்து பிழைப்பு நடத்துகின்றன. இப்படி ஒவ்வொரு செயலும் பெண் ஆணுக்கு ‘இன்றியமையாதவளாய்’ இருக்கிறாள் என்பதையே வலியுறுத்துகிறது.
திரைபடங்களின் தரம், அதன் முரண்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுதப்படவேண்டும். திரை நாயக நாயகிகள் ஒரு விஷயத்தை அல்லது கதையை பரப்புரை செய்வதற்கான ஒரு ஊடகம் அவ்வளவுதான் எனும் புரிதலை வளர்க்க வேண்டும்.
ஒருவர் கூலி வேலை செய்வது போல், அலுவலக பணி செய்வது போல் திரைத் துறையினரும் ஓர் பணி செய்கிறார்கள், அவர்களைக் கொண்டாடுவதற்கும், வழிபடுவதற்கும், அதிசய பிறவி போல் மெச்சுவதற்கான மனநிலை எவ்வாறு உருவாகிறது, அவர்களால் சமுதாயத்தில் என்ன பயன் இருந்திருக்கிறது, என்ன வகையான மாற்றங்களை இவர்கள் சமூகத்தில் விதைத்திருக்கிறார்கள் என்ற உரையாடல்கள் மக்கள் மத்தியில் எழுப்பப் படவேண்டும்.
திரைப்படங்களில் எண்ணற்ற புரட்சி செய்யும் இவர்கள் நிஜ வாழ்க்கையில் ஏன் அரசுக்கு ‘காக்கா’ பிடிப்பவர்களாகவே இருக்கின்றனர், ‘கற்பு’, தமிழ் பண்பாடு என்று வகுப்பெடுக்கும் இவர்கள் ஏன் சக நடிகையின் உடலை எந்த தார்மீக அறமுமின்றி கையாள்கிறார்கள் என்று மக்கள் இவர்களை நோக்கி கேள்விகள் எழுப்ப வேண்டும்.
மனித மனமானது உணர்ச்சி மிகுந்த புலன்களால் ஆனது என்று சொல்லவும் தேவையில்லை, அது ஒவ்வொரு புலன்களின் வாயிலாக கற்கிறது, உணர்கிறது, செயல்படுகிறது. ஒலி ஒளி என்பது மிகுந்த சக்தி வாய்ந்த ஓர் ஊடகம் அதன் வாயிலாக ஏற்றிவைக்கப்படும் கருத்துக்கள் விளைவுகள் கொண்டவை என்பதற்கு மாற்று கருத்து இருந்துவிட முடியாது.
ஆண்மை பெண்மை பற்றி இவர்கள் பரப்பும் கருத்துரைகள் சமூக முன்னேற்றத்தில், சிந்தனை வளர்ச்சிப் பாதையில் முடக்காக இருக்கிறது. பெண் விடுதலைப் பாதையில் பெருத்த முட்டுக்கட்டையாக இருப்பது திரைப்படங்களே, பெண்களைப் பாலியல் பண்டமாய் பயன்படுத்தி மேலும் மேலும் பாலியல் வக்கிரங்களை விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள், அது பெண்களுக்கெதிரான வன்முறையாய் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக்கொண்டேயிருக்கிறது.
திரைப்பட, காட்சி ஊடக மாயையிலிருந்து மக்களை மீட்பதே சமூக சிந்தனையாளர்களுக்கு, சீர்திருத்தவாதிகளுக்கு இருக்கும் முதனமை சவாலாக கருதுகிறேன். உலகமயமாக்கலின் விளைவால், இச்சவால் மிக கடுமையானதாக நீண்டுகொண்டேயிருக்கிறது.
சமீபத்தில் காயல்பட்டினம் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு பார்க்க நேர்ந்தது. இசுலாமியப் பெரும்பான்மை நிறைந்த இவ்வூரில் பல அசாத்திய விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. முக்கியமாக இவ்வூரில் திரையரங்குகள் இல்லை. விளையாட்டுக்கு மட்டுமே இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பள்ளி முடிந்து வரும் பிள்ளைகள், இளைஞர்கள் என்று எல்லோரும் எச்ச நேரங்களை கால்பந்து விளையாட்டில் கழிக்கிறார்கள், கூடி உண்கிறார்கள், கூட்டுத் திருமணங்கள் பொது சமூகக் கூடத்தில்தான் நடக்கிறது.
காயல்பட்டினம் கால் பந்து போட்டி உலகப் புகழ் வாய்ந்தது. அத்தோடு அவ்வூரில் காவல் நிலையம் இல்லை. இசுலாமிய மார்கத்தின்படி ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுத்து திருமணம் செய்வதோடு, ஆண்களே புகுந்த வீட்டிற்கு செல்கின்றனர். இதற்கு காரணமாய் இருக்கும் நிகழ்ச்சி வருந்தத்தக்கதாயினும், அதனைத் தொடர்ந்து அவர்கள் எடுத்திருக்கும் முடிவானது, தாய் வழிச் சமூகத்தின் சாயலைக் கொண்டிருக்கிறது.
ஒரு முறை கர்பிணிப் பெண் ஒருவர் மாமியாரால் நிறைமாதமாக இருக்க்ம் பொழுது தண்ணீர் துறைக்கு சென்று நீர் எடுத்துவர விரட்டப்படுகிறார். அவர் கணவர் வீட்டில் தான் இருந்திருக்கிறார், இருந்தாலும் மாமியார் அவரை அனுப்பவில்லை. தண்ணீர் எடுத்து வரும் வழியில் அப்பெண் மயங்கி விழுந்து இருக்கிறார் (அவர் இறந்து விட்டாரா என்பது சரியாக நிணைவில் இல்லை). இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாமியார் வீட்டில் ஒரு பெண் இருக்கப்போய் தானே இத்தகையக் கொடுமைகளை அனுபவிக்கின்றாள் அம்மா வீட்டில் இருந்தாள் அவளுக்கு பாதுகாபு என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
ஊர் பராமரிப்பு, முன்னேற்றம் ஆகியவை இவர்களது தொடர் சிந்தனைகளாக இருப்பதற்கு இவ்வூரில் பொழுதைத் தின்னகூடிய திரையரங்கு இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
‘புறக்கணிப்பு’ ஒன்றே நமது ஆயுதம். அவ்வாயுதம் அதிகார வர்க்கத்தை அச்சுறுத்தக்கூடியது. மக்கள் சக்தியின் மகத்துவத்தை வலியுறுத்தக் கூடியது. புறக்கணிப்பு சிந்தனைகளை, அவசியத்தை மக்களிடம் கொண்டு சென்று சுயமரியாதையை வளர்ப்பது நம்முன் இருக்கும் தலையாயக் கடமை.
source: http://saavinudhadugal.blogspot.in/2011/09/blog-post_29.html