காதலை நம்பி ஏமாறாதீர்கள்
கணவன்– மனைவி இருவரும் சாப்ட்வேர் துறையில் பணிபுரிந்தார்கள். காதலித்தார்கள். திருமணத்தை பற்றி இருவருமே சிந்திக்காமல் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார்கள். அவளது பெற்றோர், ‘எப்போது தான் திருமணம் செய்துகொள்வாய்? இன்னும் தாமதிக்க என்ன காரணம்?’ என்று நச்சரிக்க தொடங்கிய பின்பு அவனிடம், ‘திருமணம் செய்துகொள்ளலாம்’ என்றாள். அவனுக்கு விருப்பம் இல்லை.
முதலில், ‘நீ வேறு யாரையாவது திருமணம் செய்துகொள்’ என்றான். அவள் பிடிவாதம் பிடிக்கவே சம்மதித்தான். காதலர்களான அவர்கள் தம்பதிகளாயினர். திருமணம் நடக்கும்போது அவள் வயது 30. அவனுக்கு 35.
திருமணமான புதிதில் இருந்தே ‘கல்யாண வாழ்க்கையில் அப்படி என்ன புதுமை இருக்கிறது? முன்பு எப்படி வாழ்ந்தோமோ, அப்படித்தானே இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! கல்யாணம் என்ற பெயரில் இருவரும் லட்சக்கணக்கில் பணத்தை நாசமாக்கிவிட்டோம்..’ என்று எரிச்சல்பட்டுக்கொண்டே இருந்தான்.
அவள் தாய்மைக்கு ஏங்கினாள். அவனோ, ‘குழந்தை பெற்றுக்கொண்டால் அது தேவையற்ற புதிய தொந்தரவை உருவாக்கிவிடும்’ என்றான். ஆனால் அவள் குழந்தை பெற்றுக்கொள்வதில் உறுதியாக இருந்ததால், ஆர்வமே இல்லாமல் ‘உன் இஷ்டம்’ என்றான்.
அவள் தாய்மை அடைந்தாள். அப்போதிருந்தே அவன் போக்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. ஏழாவது மாதத்தில் இருந்து அவளால் வேலைக்கு செல்ல முடியவில்லை. டாக்டரும் ‘பெரும்பாலும் சிசேரியன்தான் செய்ய வேண்டியதிருக்கும்’ என்றார்.
பிரசவம் முடிந்து, உடம்பையும், குழந்தையையும் கவனிக்க சில மாதங்கள் தொடர்ச்சியாக லீவு போட வேண்டியிருக்கும். அதனால் அவள் ஓராண்டு லீவு கேட்க, நிறுவனமோ ‘இப்போது வேலையை ராஜினாமா செய்துவிடுங்கள். பின்பு தேவைப்படும்போது சேர்த்துக்கொள்கிறோம்’ என்றது. அவள் வேலையை ராஜினாமா செய்தாள். கணவருக்கு அதில் விருப்பமே இல்லை.
மனைவியை தாய் வீட்டிற்கு பிரசவத்திற்கு அனுப்பிவிட்டு, அவன் தனது நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டு வேலைக்கு போய்விட்டான். முதலில் ஆறு மாதம் என்றவன், பின்பு ஒரு வருடம் என்றான்.
அவள் தாய் வீட்டில் குழந்தையை பெற்றெடுத்தாள். அவன் பார்க்க வரவில்லை. மாதங்கள் கடந்தன. வருடங்கள் ஆயின. இப்போது அவன் ஐந்து வயது சிறுவன். அப்பா இதுவரை வந்து, மகனை பார்க்கவில்லை.
முதலில் அவள் பிரிவை நினைத்து கணவனிடம் வருந்தியபோது, ‘மூன்று மாதத்தில் வந்துவிடுவேன்.. ஆறு மாதத்தில் வந்துவிடுவேன்’ என்று ஆறுதல் சொன்னவன், ‘நீங்க இப்படியே சொல்லிக்கிட்டு இருக்கீங்களே எப்போதான் வருவீங்க?’ என்று அதட்டிக்கேட்டபோது, ‘என்னை ஏன் கட்டாயப்படுத்துறே! எனக்கு ஆண்– பெண் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் விருப்பம் இல்லை. அதனால்தான் காதலோடு நிறுத்திக்கொள்வோம் என்றேன்.
நீ கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்தினாய். உன் ஆசைக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேன். குழந்தையும் பெத்துக்கவேண்டாம் என்றேன். ஆனால் நான் சொன்னதை கேட்காமல் அதையும் செய்துவிட்டாய். உனக்கு குடும்ப வாழ்க்கை பிடித்திருக் கிறது. எனக்கு இப்படி தனியாக வாழும் வாழ்க்கைதான் பிடிச்சிருக்கு! உனக்கு கட்டாயம் ஆண் துணை வேண்டும் என்றால் நீ மறுமணம் செய்துகொள்ள நான் தடையாக இருக்கமாட்டேன். ஆனால் என்னை கட்டாயப்படுத்தி மீண்டும் குடும்பத்தில் இணைக்காதே! என்னால் பொறுப்புள்ள கணவனாக இருக்க முடியாது. என்னை இப்படியே விட்டுவிடு..’ என்று கூறிவிட்டான்.
நாம் என்ன சொல்லவர்றோம்னா..! ஆண்களில் பெரும்பாலானவர்கள் காதலிக்க ஆசைப்படுகிறார்கள். நீண்ட கால காதலிலே அவர்களுக்கு தேவையானது கிடைத்து விடும்போது கல்யாணம், குழந்தை போன்றவைகளை அவர்கள் விரும்புவதில்லை. கட்டாயப்படுத்தினால் திருமணம், தாய்மைக்கு பின்பு காணாமல் போய்விடுகிறார்கள். அப்படிப்பட்ட ஆண்களிடம் நீங்க மாட்டிக்க கூடாதுங்க!
source: http://www.dailythanthi.com/