உண்மையான பகுத்தறிவாளராக வேண்டுமெனில் முஸ்லிமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்!
உலகில் அதிகம் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டுத்தப்பட்ட கொள்கை ஒன்று உண்டெனில் அது அனேகமாக இஸ்லாம் மார்க்கமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சமூக சிந்தனையாளர்களில் பலர் இறுதியில் உணர்ந்து கொண்ட தீர்வாக அவர்கள் கண்டு கொண்டது இஸ்லாம். மற்ற கொள்கைகளைப்போல் இஸ்லாம் மேலோட்டமானத் தீர்வுகளைச் சொல்லவில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை மட்டுமின்றி இவ்விரு நிலைகளுக்கும் முந்தைய பிந்தைய தேடல்களுக்கும் இஸ்லாத்தில் தெளிவான விளக்கமுண்டு.
ஆனந்த விகடனில் கார்டூனிஸ்டாக இருந்த மதன் எழுதிய, மானுடவியல் குறித்த ஒலிநூலைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. (யூடூபில் தேடினால் கிடைக்கும்). அதில் நாமறிந்த / கேள்விப்பட்ட / வாசித்த பல்வேறு தகவல்களைச் சொல்லியுள்ளார். ஏற்கனவே “வந்தார்கள் – வென்றார்கள்” என்ற மொகலாயர் வரலாற்றை விகடனில் எழுதிய அனுபவம் இருப்பதாலோ என்னவோ வரலாற்றுச் செய்தியை அறிவியல் ரீதியான தகவல்களுடன் கலந்து தொகுத்திருந்தார். இரண்டு மணிநேரம் கேட்கக்கூடிய சுவாரஸ்யமான தொகுப்பாக இருந்தது.
(நண்பர் “தோழர்கள்” நூருத்தீன் எழுதிய உத்தம சஹாபாக்களின் உன்னத சரித்திரத் தொகுப்பையும் இதுபோன்று ஒலி நூலாக வெளியிடும்படி முகநூல் பக்கத்தில் விருப்பம் தெரிவித்திருந்ததன் பின்னணி சமீபத்தி வாசித்த ஒலிநூட்களால் ஏற்பட்ட ஈர்ப்பும் ஒருவகையில் காரணம். இணையம், வலைப்பூ, முகநூல் என்று கவனம் திரும்பிய பிறகு நூல் வடிவில் வாசிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவரும் நிலையில் பிறர் வாசிக்கக் கேட்பது கூடுதல் வசதியாக இருக்கிறது.)
மதனின் ஒலிநூலை விளம்பரப்படுத்துவதல்ல என் நோக்கம். அதில் சொல்லப்பட்டிருந்த பலவிடயங்களுக்கு எங்கிருந்து ஆதாரம் கிடைக்கப்பெற்றார் என்று தெரியவில்லை. (அதாவது ஆதரமற்ற தகவல்கள்!) ஓரிரு அறிவியல், வரலாற்றுத் தொகுப்புகளை கற்பனை கலந்து தொகுத்திருக்கக்கூடும் என்றே நினைக்கிறேன். பேசப்பட்டுள்ள பலவிடயங்களுக்கு அவரால் சான்றுகளைத் தரவே முடியாது. மனித இனம் தோன்றுவதற்கு முந்தய பிரபஞ்சம், உலகம் குறித்த தகவல்களை எங்கிருந்து பெற்றார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்!
தொல்லியல் ஆய்வு முறையில் கார்பன் டேட்டிங் என்ற முறை அறிவியல் ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று. அதற்கு ஏதேனும் படிமங்கள் அடிப்படையாக இருந்தால்தான் அதையும் ஓரளவு கணிக்க முடியும். தகவல்களை வைத்துக்கொண்டு அறிவியல் ரீதியிலான ஆக்கங்களைத் தொகுப்பது நம்பகத்தன்மயைக் கேள்விக்குறியாக்கும் என்பதால் தகுந்த ஆதாரமுள்ள அதேசமயம் அறிவுக்கு ஒவ்வும் விடயங்களையே கையாள்வோம்.
இந்தப் பதிவில் மதனை ஏன் இழுத்தேன் என்றால், உண்மையில் மானுடவியல் குறித்த தகவல்களுக்கான அரிய தொகுப்பாக குர்ஆனில் ஏராளமான தகவல்கள் அடங்கியுள்ளதை திறந்த மனதுடன் அணுகினால் கிடைக்கும். இஸ்லாம் மக்களிடம் இன்று வரை எடுபட்டதற்கும் 1400 ஆண்டுகளாக முன்னெடுத்துச் சொல்லப்படுவதற்கும் இதுவே காரணம்.
முகநூல் பகிர்வொன்றில் நடிகர் கமலஹாசனை மேற்கோள் காட்டி, “அவசர சிகிச்சையின்போது யாரும் இந்து ரத்தம், கிறிஸ்தவ ரத்தம், முஸ்லிம் ரத்தம் என்று கேட்பதில்லை. மனித இனம் நலம் பெறுவதற்கும் சிலநேரம் மதத்தை ஒதுக்கி வைக்க முடியுமெனில் ஏன் வாழ்நாளெல்லாம் அதை ஒதுக்கி வைத்து நலமடைய முடியாது? என்று வியாக்கியானம் பேசியிருந்தார். அப்பகிர்வில் பதில் கருத்திட முடியவில்லை என்பதால், ஐயா கமலஹாசன், இஸ்லாம் என்பது வாழ்க்கை நெறி/மனித வாழ்வை வழிநடத்தும் தத்துவம். இதை ரத்ததோடு ஒப்பிடுவது சரியல்ல. வாதத்திற்காக ஒப்பீட்டளவில் இது சரியென்றாலும் ரத்தத்திலும் ஏன் இத்தனை பிரிவுகள் உள? எல்லா ரத்தமும் எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்வீர்களா? என்று கருத்திட்டிருந்தேன்.
அறிவுஜீவிகள், பகுத்தறிவாளர்கள் என்று சொல்லப்படுபவர்களில் பலருக்கு தங்கள் கருத்திலுள்ள அபத்தம் சில நேரங்களில் பிடிபடாது. நம்பிக்கையை மறுப்பதுதான் பகுத்தறிவு என்பதும் ஒருவகையான மூட நம்பிக்கையே. ஏனெனில் ஒரு விசயத்தை மறுப்பது அறிவார்ந்ததாக இருக்குமெனில், அதை இருப்பிலுள்ள இன்னொரு சிறந்த ஒன்றால் தான் மறுக்க வேண்டும். கடவுள் இருக்கிறார் என்பது பலரின் நம்பிக்கை. இல்லை என்பது அத்தகைய நம்பிக்கைக்கு எதிரான நிலையன்றி அறிவுப்பூர்வமான நிலைப்பாடல்ல.
நான் அணிந்துள்ள சட்டை சரியல்ல என்று சொல்பவர் அதைவிடச் சிறந்த சட்டையை அணிந்திருக்க வேண்டும். சட்டையே அணியாத அல்லது கிழிந்த சட்டையுடன் இருப்பவர் என் சட்டையைக் குறைசொன்னால் எவ்வாறு நகைப்புக்குரியதோ அதுபோன்றே அரைகுறை கடவுள் மறுப்பும். பெரியார் ஈ.வெ.ரா எதிர்த்த கடவுள் /மதநம்பிக்கை ஆகியவை இஸ்லாம் குறித்ததல்ல. அவர் பிறந்த சமூகத்தினர் கடவுளாக நம்பியவற்றையே அவர் கேள்விக்கு உட்படுத்தினார்.இஸ்லாம் குறித்து நல்ல அபிப்ராயமே பெரியார் கொண்டிருந்ததை நாத்திகர்களே ஒப்புக் கொள்வர்.
உண்மையில் பகுத்தறிவாளர்களாக தங்களை நம்புபவர்கள் போற்ற வேண்டிய கொள்கை இஸ்லாமே. ஏனெனில், இஸ்லாமும் கடவுள் இல்லை என்றே சொல்கிறது!! அதாவது மனிதன் கடவுளை படைக்க முடியாது; மனிதர்களால் படைக்கப்பட்டவை கடவுளாக முடியாது என்பதே இஸ்லாத்தின் கொள்கை. கூடுதலாக அல்லாஹ் மட்டுமே கடவுள் என்று சொல்கிறது. அது சரியா / தவறா என்பதை இஸ்லாத்தை திறந்த மனதுடன் அணுகினால் சாத்தியப்படும்.
ஆக, கடவுள் மறுப்பு என்பது பகுத்தறிவல்ல; உண்மையை அறிவுப்பூர்வமாகப் பகுத்தறிய முன்வராத நிலையே தற்போதுள்ள நாத்திகம்! உண்மையான பகுத்தறிவாளராக வேண்டுமெனில் முஸ்லிமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்!
-அதிரைக்காரன், N.ஜமாலுதீன்
source: http://adirainirubar.blogspot.in/2014/10/blog-post_15.html