கணவர் தன் தாயின் சமையலைப் புகழ்கிறாரா? பொறாமையில் பொசுங்க வேண்டாம், மருமகளே!
[ கணவரின் உடன் பிறந்தவர்களையும் பெற்றோரையும் உறவுப்பெயர்களிட்டு உரிமையுடன் அழையுங்கள். அன்பைக் கொட்டுங்கள், பதிலுக்குக் அன்புமழை பூமழையாகக் கொட்டும்
கணவர் தன் தாயின் சமையலைப் புகழ்கிறாரா? பொறாமையில் பொசுங்க வேண்டாம், காதிலே புகை வர விட வேண்டாம். அப்படியா, நான் அவங்ககிட்டே கத்துக்கிறேன், அதே போலச் செய்ய முயற்சி பண்ணறேன். இதில் தவறில்லையே. அதே போல் மாமியார் செய்யும் சிறு நல்ல செயல்களையும் வாயாரவும் மனதாரவும் புகழுங்கள்,
நாத்தனாரின் ஆடை, அணிகலனைப் பாராட்டுங்கள். இன்முகத்துடன் பேசிப் பழகுங்கள்.உங்களுக்கு வெளியில் சாப்பிட ஆசையாக இருக்கும் போது மாமனார், மாமியாரையும் அழையுங்கள், வர மறுத்தால் அவர்களுக்குப் பிடித்த உணவுப்பொருள் வாங்கிக் கொடுங்கள், பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை நாட்களின் போது அவரவர் தேவைகளை அறிந்து பரிசுப்பொருட்கள் கொடுத்து அசத்துங்கள். இப்படிப்பட்ட மருமகளை யாருக்குப் பிடிக்காது?!]
மருமகள்களுக்குச் சில ஆலோசனைகள்
முதலில் கணவர் மனதில் இடம் பிடிக்க வேண்டுமானால் அவர் உங்கள் குடும்பத்தினரை மதிக்க வேண்டுமானால் நீங்கள் கணவரின் பெற்றோரையும் உடன் பிறந்தாரையும் மதித்து அன்பு காட்ட வேண்டும். அன்பு காட்டுவது போல பாசாங்கு செய்யக் கூடாது, ஆத்மார்த்தமான உண்மையான அன்பாக இருக்க வேண்டும்,
பகலில் நடக்கும் வீட்டு விஷயங்களை மாமியார், நாத்தனார் அது சொன்னாங்க, இது சொன்னாங்க என்று உழைத்துக் களைத்து வரும் கணவரிடம் புலம்பிப் பெரிதுபடுத்தக் கூடாது. அதே போல் நீங்களும் வேலைக்குப் போய் விட்டு வரும் வேளையில் அவர்கள் படுத்தினால் கூடப் பெரிதுபடுத்தாமல் கண்டும் காணாமல் விட்டு விடுங்கள், இது உங்கள் குடும்ப மன அமைதிக்காக, நாளாக நாளாகத் தங்கள் சண்டைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று தெரிந்தால் அவர்களே அமைதியாகி விடுவார்கள். ஒரு கை ஓசை பிரச்சினையில்லை தானே.
குறிப்பாக, மருமகளின் பெற்றோர்களிடம் குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகள் போகக் கூடாது, அது தீராத பெரிய பிரச்சினையாக இருந்தாலொழிய.. நான்கு சுவற்றிற்குள் கணவர்- மனைவி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும், தீரவில்லையா ஆறப் போடுங்கள், உங்களவர் எங்கும் ஓடிப் போக மாட்டார், அதற்குள் பக்கத்து வீட்டிலோ தாய் வீட்டிலோ புலம்பி ஆறுதல் தேட முயற்சிக்க வேண்டாம். உங்களவரை விட்டுக் கொடுக்கவே கூடாது. அப்படிப் புலம்ப ஆசையாக இருந்தால் கணவர் சார்ந்த உறவுகளிடம் பக்குவமாக(விட்டுக் கொடுக்காமல் கவனமாக வார்த்தைகளைக் கையாள வேண்டும்) எடுத்துச் சொல்லலாம்.
மருமகளின் பெற்றோர்களை விட ஏன்டா? இப்படி படுத்தறே? என்று கணவரை அவர் சார்ந்த உறவுகள் கேட்கும் உரிமை அதிகம், கணவருக்கும் தன் தவறுகள் விளங்கும். நீங்கள் கத்திப் பேசி சாதிக்க முடியாத பெரிய விஷயங்களைக் கூட உங்கள் புகுந்த வீட்டினரால் சாதிக்க முடிந்தால் அது உங்களுக்குக் கிடைத்த வெற்றி தானே. கணவரின் உறவுகளையும் உணர்வுகளையும் மதியுங்கள், கொண்டாடுங்கள். அவரது தாய் பத்து மாதங்கள் சுமந்து பெற்று நல்ல முறையில் வளர்த்துப் படிக்கச் செய்து ஆளாக்கித் தந்திருக்கா விட்டால் உங்களுக்கு எப்படி அவர் கிடைத்திருப்பார்?
உதிரங்கள் கொதிக்க உடல்கள் கலந்த உறவாக மட்டுமல்லாமல் உணர்வுகள் ஒன்றாகி உள்ளங்கள் ஒன்றாகி ஆன்மாக்கள் சங்கமித்த உறவாக நினைத்துப் பாருங்கள். உங்களிலிருந்து அவரைத் தனியே பிரித்துப் பார்க்காமல் நீங்கள் தான் அவர், அவர் தான் நீங்கள் என்று உணர்ந்து வாழ்ந்து பாருங்கள். அள்ள அள்ளக் குறையாத காதலை வழங்குங்கள்.
அந்தச் சம்சார சங்கீதத்தில் இனிமைகள் இசையாகும். நீ பெரிதா? நான் பெரிதா என்ற அகந்தையோ எத்தனை முறை அனுசரித்தேன், விட்டுக் கொடுத்தேன் என்ற வாதங்களோ அர்த்தமற்றவை.. மனுஷர் உங்களைக் கண்டு புலியோ சிங்கமோ என்று பயப்படக் கூடாது, குட்டி போட்ட பூனையாய்ச் சுற்றி வர வேண்டும். எந்தச் சூழலிலும் உங்களவரை எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்.
கணவரின் உடன் பிறந்தவர்களையும் பெற்றோரையும் உறவுப்பெயர்களிட்டு உரிமையுடன் அழையுங்கள். அன்பைக் கொட்டுங்கள், பதிலுக்குக் அன்புமழை பூமழையாகக் கொட்டும்
கணவர் தன் தாயின் சமையலைப் புகழ்கிறாரா? பொறாமையில் பொசுங்க வேண்டாம், காதிலே புகை வர விட வேண்டாம். அப்படியா, நான் அவங்ககிட்டே கத்துக்கிறேன், அதே போலச் செய்ய முயற்சி பண்ணறேன். இதில் தவறில்லையே. அதே போல் மாமியார் செய்யும் சிறு நல்ல செயல்களையும் வாயாரவும் மனதாரவும் புகழுங்கள்,
நாத்தனாரின் ஆடை, அணிகலனைப் பாராட்டுங்கள். இன்முகத்துடன் பேசிப் பழகுங்கள்.உங்களுக்கு வெளியில் சாப்பிட ஆசையாக இருக்கும் போது மாமனார், மாமியாரையும் அழையுங்கள், வர மறுத்தால் அவர்களுக்குப் பிடித்த உணவுப்பொருள் வாங்கிக் கொடுங்கள், பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை நாட்களின் போது அவரவர் தேவைகளை அறிந்து பரிசுப்பொருட்கள் கொடுத்து அசத்துங்கள். இப்படிப்பட்ட மருமகளை யாருக்குப் பிடிக்காது?!
நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ உங்களைப் பார்த்து வளரும் நாளைய தலைமுறையும் அவ்வாறே வளரும். நீங்கள் எப்படி உங்கள் புகுந்த வீட்டில் பழகுகிறீர்களோ அதே போல ஏன் அதற்கு ஒரு படி மேலே உங்கள் கணவர் உங்கள் சொந்தங்களை மதித்துப் பாராட்டுவார். இப்படி செய் என்று சொல்வதை விட நம்மை முன்மாதிரிகளாக்கிக் காட்டுவோமே.
பணப்பிரச்சினை, உடல், மனப்பிரச்சினை, வெளிப்பிரச்சினை என்று ஆயிரம் பிரச்சினைகளுடன் அலுத்து வரும் கணவருக்கு இன்முகத்துடன் பிடித்தது செய்து கொடுத்துப் பாசமாகப் பழகிப் பாருங்கள், பிரச்சினையா? அப்படினா என்னது என்று கேட்பீர்கள். விட்டுக் கொடுத்தார் கெட்டுப் போனதில்லை. கெட்டுப் போனவர் விட்டுக் கொடுத்ததில்லை.
கணவரோ அவர் குடும்பத்தினரோ என்றோ ஒரு நாள் பேசிய சுடுசொற்களை மனதில் வைத்துப் புழுங்கி உங்கள் நிம்மதியையும் குடும்பத்தினர் நிம்மதியையும் குலைக்காதீர்கள். பொறுமையும் அன்பும் புரிதலும் இருப்பவர்களுக்குச் சொர்க்கமே இல்லமாகும். இல்லமே சொர்க்கமாகும்.
source: தினமலர்