இஸ்லாமிய சிலதாரமணம் – The misuse
திருக்குர்ஆன் என்பது, கிட்டத்தட்ட இருபத்து மூன்று ஆண்டுகள் சிறிது சிறிதாக மக்களை ஒரு சிறந்த சமூக வாழ்வியல் கோட்பாட்டின்பக்கம் நேர்வழிகாட்டி நெறிப்படுத்துவதின் பொருட்டு, இறைவனால் மக்களுக்கு தன் தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் அனுப்பப்பட்ட நல்லுபதேசம்தான் என்பதை நாம் நன்கு அறிவோம்.
முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு குர்ஆன் வசனங்களாய் அல்லாமல், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொற்கள், செயல்கள் மற்றும் பிற முஸ்லிம்களின் செயல்களுக்கு நபியால் வழங்கப்படும் அங்கீகாரம் அல்லது தடை’ ஆகிய இவற்றின் மூலமாக மக்களுக்கு இறைவன் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட தெளிவான விளக்கம் தான் நபிவழி-ஹதீஸ் என்பதிலும் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை.
ஆக, மேற்படி இரண்டுமே இறைவன் புறத்திலிருந்துதான் வந்தன அல்லவா? ஒன்று குர்ஆனாய், மற்றொன்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையாய்…!
ஹிஜ்ரத்துக்கு முன், அப்போது… மக்காவில் முஸ்லிம்கள் தம் உயிருக்கும் உறவுக்கும் உடமைக்கும் ஆபத்தான நிலையில்தான் வாழ்ந்தனர். வெளிப்படையாக தம்மை முஸ்லிம் என்று அறிவித்துக்கொண்டு பகிரங்கமாய் இஸ்லாமிய வாழ்க்கை வாழவெல்லாம் முடியாத ரொம்பவும் கஷ்டமான சூழல். எதிரிகள் பெரும்பான்மையாகவும் வலிமையாகவும் இருந்தனர். ஊரில் ஓரளவு மிதமான போக்கு கொண்ட நல்ல ஆண்களாய் பார்த்து ரகசியமாய் செய்யப்படும் இஸ்லாமிய பிரச்சாரம் கூட உயிரை பணயம் வைத்து பண்ண வேண்டி இருந்தது.
இப்படியான ஒரு சூழலில்தான் ஹிஜ்ரத்திற்கான இறைக்கட்டளை (குர்ஆன்-4:97) வந்தவுடன்… மக்காவாழ் முஸ்லிம்கள் தங்கள் சொந்தம், சொத்து, வீடுவாசல், நிலபுலன், ஊர் அனைத்தையும் துறந்து விட்டு (ஹிஜ்ரத்செய்து) மதினா சென்றனர். சுபஹானல்லாஹ்! இவர்களில் பெரும்பான்மை ஆண்கள். இளைஞர்கள். (காரணம்: குர்ஆன்-4:98).
மக்காவாழ் முஸ்லிம்(முஹாஜிர்)களை ஆவலுடன் எதிர்பார்த்து தினம் தினம் காத்திருந்து பெரும் ஆரவார மகிழ்ச்சியில் வரவேற்றனர் மதினாவாழ் முஸ்லிம்(அன்சாரி)கள். திடீரென்று மதினாவில் ‘வீசின கை வெறுங்கையுடன்’ பல முஸ்லிம்கள் வந்தால், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை எப்படி அமைத்துக்கொள்வது? தொழில் செய்ய முதல் இல்லை. அத்தனை பேருக்கும் ஒரேநேரத்தில் வேலைகிடைப்பது எல்லாம் எப்படி சாத்தியம்? அப்போதுதான் உலகப்புகழ்பெற்ற இஸ்லாமிய சகோதரத்துவம் நிறுவப்பட்டது. ஒவ்வொரு ‘முஹாஜிரும்’ (நாடு துறந்து சென்றவர்-எக்ஸ் மக்காவாசி) ஒவ்வொரு ‘அன்சாரிக்கும்'(உதவியாளர்-மதினாவாசி) சகோதரர் என்று இரண்டு இரண்டு பேராய் சீட்டுக்குலுக்களில் எடுத்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சேர்த்து விட்டார்கள்.
தங்களின் இப்புதிய முஹாஜிர் சகோதரருக்கு தங்கள் வீடு, சொத்து, தோட்டம் என அனைத்திலும் சரிபாதியை தர முன்வந்தனர் அன்சாரிகள்! திடீர் ஆண்கள் மிகுதியால், அன்சாரிகள் தங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தால் அவர்களில் ஒருவரை அழகியமுறையில் (மனைவியின் விருப்பத்திற்குட்பட்டு) விவாகரத்து செய்து முஹாஜிர்களுக்கு மணமுடித்துத்தர முன்வந்தனர்..! சுபஹானல்லாஹ்..! உலக வரலாற்றில் இதுபோன்றதொரு “அகதிகள் அடைக்கல மற்றும் மறுவாழ்வு நிகழ்ச்சியை” உலகின் வேறு எங்கேனும் கேள்விப்பட்டிருக்கிறோமா? முஹாஜிர்களின் தியாகமான ஹிஜ்ரத் செய்தது ஈடினையற்றது என்றால், அன்சாரிகளின் இந்த தியாக உள்ளத்துடன் சகோதரத்துவம் பேணலும் ஈடினையற்றது.
நிற்க. இனி நாம் தலைப்பிற்குள் நுழைவோம்.
இங்கே நாம் முக்கியமாய் கவனிக்க வேண்டியது யாதெனில், மேற்படி சம்பவம் அல்லாஹ்வாலோ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாலோ தடுக்கப்படாததால், ஆண்கள் மிகுந்து பெண்கள் குறையும்போது ஏற்கனவே ஒன்றுக்கு மேல் திருமணம் புரிந்தவர்கள் மற்ற திருமணம் ஆகாத ஆண்களின் திருமணத்திற்காக வேண்டி தம் மனைவியை விவாகரத்து செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது தேவை ஏற்படின் ‘இஸ்லாமிய சிலதாரமணம்’ என்பது தேவையின் தீவிரத்தை பொருட்டு 4, 3, 2 என்று சரிந்து ‘ஒருதாரமணத்தில்’ வந்து நிற்கலாம்… எனும் சட்டம் இதனுள்ளே புதையுண்டு கிடைக்கிறது.
பின்னாளில், இஸ்லாம் அசுர வேகமாக பரவி, எந்த பயமுமின்றி தினம் தினம் எண்ணற்ற மக்கள் இஸ்லாத்தை தழுவ ஆரம்பித்த பின்னர், கலவரமடைந்த அதன் எதிரிகள் பலர், மதினா நோக்கி தொடர்ந்த பற்பல படையெடுப்புகளின் விளைவால் நிகழ்ந்த போர்களில் முஸ்லிம்கள் வென்றாலும் கணிசமான முஸ்லிம்கள் ஷஹீதாக்கப்பட, திடீரென அனாதைகளான அவர்களின் மனனவிகள் மற்றும் குழந்தைகள், அவர்களின் சொத்துக்கள், வியாபாரங்கள், தொழில்கள் இவற்றை எல்லாம் காத்து நிர்வகிக்கவேண்டியவர் யார்?
மேலும், அப்போது கைதுசெய்து சிறையிட்டு சாப்பாடுபோட சிறைச்சாலையோ, நிரம்பி வழியும் அரசு கஜானாவோ இல்லாத நிலையில், போரில் தோற்று கைதியாக்கப்பட்ட பெண்களை எப்படி, யார் வேலைவாங்கி சொறுபோட்டு நிர்வகிப்பது? முன்னர் பார்த்த அதே அன்சாரி/முஹாஜிர் பாலிசிதான்… கொஞ்சம் வித்தியாசமாக, இக்கேள்விகளுக்கான விடையாகத்தான் சென்றபதிவில் நான் குறிப்பிட்ட குர்ஆனின் வசனத்தை பார்க்கிறோம். இப்போது மீண்டும் ஒருமுறை முழுமையாக படிப்போமா! குர்ஆனில் 4:2 முதல் 4:6 வரை அனைத்தையும்?
ஆக, மேற்படி சம்பவங்களில் மற்றும் வசனங்களில் நாம் கவனிக்க வேண்டியது யாதெனில்; அனாதைகள், விதவைப்பெண்கள் மிகுந்து ஆண்கள் குறையும் போது, ஏற்கனவே பெண்களை/குழந்தைகளை நிர்வகித்து காப்பாற்றும் பொறுப்பு ஆண்கள் மேல் சுமத்தப்பட்டிருப்பதால்… அதனால், சூழலுக்கு தகுந்தபடி ‘இஸ்லாமிய சிலதாரமணம்’ என்பது அறிவுறுத்தப்பட்டு, மேலும் தேவையின் தீவிரத்தை பொருத்து அது… 2,3,4 என்று அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியலாம்.
இங்குதான் கவனிக்கப்படவேண்டிய மிக முக்கிய அம்சம் உள்ளது. பொதுவாக… மனித மனம், இரண்டாம் திருமணம் என்றாலே, அந்த முதல் பெண்ணின் மனதுக்குள்ளே புகுந்து கொண்டு, “ஐயோ… உன் வாழ்வை ஒருத்தி பங்கு போட சக்களத்தி ஒருத்தி வந்துவிட்டாளே” என்றே சிந்திக்கிறது. ஒருபோதும்… கைம்பெண்ணான அந்த அபலையின் மனதில் நின்று சிந்திப்பதே இல்லை! அந்த சிந்தனை தமது இளம் கணவனை விபத்து, போர், நோய், இவற்றுக்கு பலி கொடுத்து, ஒற்றைக் கைக்குழந்தையுடன் 25 வயது இளமையுடன் வாழ்வே திடீரென சூனியமாகி, வேலை-வருமானம் ஏதுமின்றி தனிமையில் நிற்கும் அப்பெண்ணின் மனநிலையில் நின்றுதான் நாம் சிந்திக்க வேண்டும்! நாம் சிந்திக்கிறோமோ இல்லையோ… அப்பெண்ணின் நிலை தனக்கு வந்தால், நாம் என்ன நினைப்போம் என்று கணவனை இழக்காத ஒவ்வொரு மனைவியும் நினைக்க வேண்டும். அப்படி நினைத்தால், இரண்டாம் திருமணம் மூலம் தம் கணவரை ஒரு கைம்பெண்ணுக்கு பகிர எந்த முதல் மனைவியும் மறுக்க மாட்டார்!
மேலும், ஆண் தன்னுடைய குழந்தைகள் மற்றும் தாம் பொறுப்பேற்றுக் கொண்ட அனாதை குழந்தைகளிடையே உணவு, உடை இவற்றுக்காக செலவழிப்பதில், அன்புசெலுத்துவதில் நியாயமாக நடக்கவேண்டும். அக்குழந்தைகளின் விதவைத்தாயார் வீட்டிற்கு தினப்படி உதவிக்காக அடிக்கடி போய்வருதல் ஒரு காப்பாளர் என்ற முறையில் அவசியப்படுவதால், அப்போதும் அவர்களிடத்தில் இஸ்லாமிய கண்ணியம் பேணி நடந்து கொள்ளவேண்டும்.
அனாதைக் குழந்தைகளில் வயதுவந்த பெண்கள் இருந்தால், அவர்களிடத்தும் இஸ்லாமிய கண்ணியம் பேணி நடக்கவேண்டும். இந்த பெண்களின் சொத்துக்களுக்காக இவர்களை மற்றவருக்கு திருமணம் செய்து தராமல் தாமே முடக்கி வைத்துக்கொள்வது கூடாது. (புகாரி-ஹதீஸ்: அத்தியாயம்-67, 5140) இவர்களின் சொத்துக்கள் தம் சொத்துக்களுடன் கலந்து சாப்பிட்டு விடக்கூடாது. அல்லது, தம்மால் இதெல்லாம் முடியாது என்று ஆண் பயந்தால், அவர்களின் தாயார்களையும் 2,3,4-ம் தாரம் என்று அனுமதியளிக்கப்படுகிறது. திருமணத்தின் பின்னர் இப்போது அவ்வனாதை குழந்தைகள் மீது தன் குழந்தைபோன்ற அக்கறை ஏற்பட்டுவிடலாம். அந்த விதவை பெண்ணுக்கும் மறுமணம் செய்தாயிற்று.
இப்போது அடுத்த சிக்கல் ஆரம்பிக்கிறது. அதாவது தம் மனைவிகளிடேயே உணவு, உடை இவற்றுக்காக செலவழிப்பதில், அன்புகாட்டுவதில், இல்லறம் நடத்துவதில் என… அனைவரிடத்திலும் ஒரேமாதிரி நியாயமாக நடக்கவேண்டும். தம்மால் இது முடியாது என்று ஆண் பயந்தால், ஒருதாரமணமே சிறந்தது. இதனை இப்போது முழுசாய் குர்ஆன் மொழியாக்கமாய் கீழே அளிக்கிறேன்.
[ 4:3. அநாதைகளிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப்பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.” ]
முக்கியமான ஒரு திருமணச்சட்டம் கொண்ட இவ்வசனம் இஸ்லாத்தின் ஆரம்ப மக்கா நாட்களில் அருளப்பட்டதா அல்லது போர்க்களங்கள் கண்ட பின்னர் விதவைகள் அனாதைகள் அடிமைகள் அதிகரித்தபின்னர் மதினா நாட்களில் அருளப்பட்டதா? ஆக, அப்போதைய சூழலை நன்றாக விளங்கி சிந்திக்கும் வேளையில், ‘நான்கு வரையிலான இஸ்லாமிய சிலதாரமணம்’ என்பது… பெண்கள் மற்றும் குழந்தைகள் திடீரென்று போர் அல்லது விபத்து போன்ற காரணங்களால் தம் குடும்பத்தலைவனை இழந்து அனாதரவாய் போய்விடாமல் இருக்கவேண்டி… ஆண்கள் மீது ஒரு உயர்ந்த லட்சிய நோக்கோடு மிகப்பெரிய பொறுப்பாகத்தான் சுமத்தப்பட்டிருக்கிறதே தவிர, சில விபரமறிந்த முஸ்லிம்களே இப்போது கூறுவது போல… நிச்சயமாக இந்த குர்ஆன் 4:3 அனுமதியானது… ஆண்களின் சிற்றின்ப மோகத்தினை தணிப்பதற்கான வடிகாலாக கூறப்பட்டதாக தெரியவில்லை என்பது நம் தாழ்மையான கருத்து.
சிற்றின்பத்திற்காக ஒரு ஆண் ஏற்கனவே ஒரு மனைவி இருக்க அடுத்தடுத்த திருமணத்தை நாடினான் எனில், அதற்கு அவன் இந்த வசனத்தை கேடயமாக தூக்கினான் எனில், முந்தைய மனைவிமார்கள் நிச்சயம் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில், அந்த மனைவிகளுக்குத்தான் அது நன்கு தெரியும், ‘அவன் புதிய இளமையான அழகான கன்னிப்பெண்ணை மணக்கிறானா அல்லது அனாதைகளுக்கும் விதவைகளுக்கும் ஆதரவு அளிக்கிறானா’ என்று!
சரி.. இப்போது இந்த மனைவிகள் அல்லது மனைவி என்ன செய்வார்? எதிர்ப்பார். ஒத்துக்கொள்ளவில்லை எனில் சண்டை நடக்கும். குடும்ப அமைதி குலையும். பஞ்சாயத்து நடக்கும். வெறுத்துப்போய் கடைசியில் விவாகரத்தில் போய் முடியும். இப்போது தன் முந்தைய மனைவியையும் தன் பிள்ளைகளோடு சேர்த்து நடுத்தெருவில் அனாதைகளாக்கிவிட்டு இவன் இனி எந்த அனாதைகளை ஆதரிக்கப்போகின்றானாம்?! இதிலென்ன நீதி?! இதென்ன அடாவடித்தனம்?! மேலும், இஸ்லாமிய அடிப்படையில் கூட இது நடைமுறை சாத்தியமற்றது.
மேற்படி இறைவசனம் (4:3), இப்போது… இறைவனை மறந்து, இஸ்லாத்திலிருந்து தடம்புரண்டு, மறுமைப்பயமின்றி, ‘முஸ்லிம்கள்’ என்று தம்மைக்கூறிக்கொண்டு சுகபோக வாழ்க்கையில் வாழும் ஆண்களால் MISUSE செய்யப்படுகிறது. இறைவசனத்தை உண்மைக்கு மாறாய் தன் உலக இன்பத்திற்காக திரிக்கும் காரியம். இது மிகப்பெரிய பாவம் என்கிறோம்.
இவர்களுக்கு நம் இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அழகிய முன்மாதிரி இல்லையா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தன் இளமையான வாலிப(25)வயதில், 40 வயது விதவையை மணந்தார்கள். அவர் அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தன் 65-ஆம் வயதில் மரணிக்கும் வரை அவர்களுடனேயே – ஒரு மனைவியுடனேயே – அடுத்த சுமார் 25 வருடங்கள் வாழ்ந்தார்கள். இதனை ஏன் யாரும் தமக்கு முன்மாதிரியாக்குவதில்லை?
முதல் மனைவியின் இறப்புக்குப்பின்னர் தன் 50-ஆம் வயதில், மீண்டும் தம்மைவிட 5 வயது அதிகமான ஒரு விதவையையே [அன்னை சவ்தா ரளியல்லாஹு அன்ஹா] மணந்தார்கள். 3 வருடம் கழித்து ஹிஜ்ரத். அதன்பிறகு ஒருவருடம் கழித்துத்தான் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் மதினாவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குடும்பவாழ்வை துவங்கினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணந்த ஒரே கன்னிப்பெண் இவர் மட்டும்தான். அப்போது தன் வயோதிகத்தின் காரணமாய், தன் முறையையும், ‘புதுப்பெண்’ அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமே விட்டுக்கொடுத்தார்கள், அன்னை சவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள். (ஒருவேளை இத்திருமணம் மட்டும் நடந்திருக்காவிட்டால், ‘விதவை/விவாகரத்தான பெண்களை மணமுடித்தல் மட்டுமே நபிவழி என்றும் அதைத்தான் நாங்கள் என்றென்றும் பின்பற்றுவோம்(?!)’ என்று மேற்படி “MISUSE மன்னர்கள்” எவரேனும் சொல்வார்களா என்ன?) பின்னர், ஏற்கனவே ஒன்றன்பின் ஒன்றாக மூன்று கணவர்களை மணந்து அவர்கள் மூவருமே இறந்ததால் மூன்று முறை விதவையான ஜெய்னப் பின்த் ஹுசைமா ரளியல்லாஹு அன்ஹா அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வயதை ஒத்தவர். அவர்களை மணந்தார்கள். இதிலெல்லாம் சிலதாரமணத்துக்கு அழகிய முன்மாதிரி இல்லையா?
மற்ற ஏனைய மனைவிகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணந்ததுக்கு காரணம், மேற்படி குர்ஆன் வசனம்தான் என்று தனியாக சொல்லவும் வேண்டுமா? (வளர்ப்பு மகன் சைத்/ஜைனப் பின்த் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா இவர்கள் விவகாரத்தில் வேறு ஒரு வசனம்). முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே நீதமாக நடக்க பயந்தால் வேறு யார் நீதமாக நடப்பது? ‘எப்படி நீதமாக நடப்பது’ என்று நாம் அறிந்துகொள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மற்றவர்களுக்கு அழகிய முன்மாதிரியாகத்தானே அல்லாஹ் அனுப்பினான்?வேறு யார் வழிகாட்டுவது?
ஆனால், நான்கிற்கு மேல் மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும் நான்கிற்கு அதிகமாக ஏன் மணம் புரிந்தார்கள்?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்ற எல்லாரை விடவும் அதிகமாக ஒருநாளைக்கு ஆறுவேளை (நள்ளிரவுக்கு பின்னர் தொழும் தஹஜ்ஜத் தொழுகை நபிக்கு மட்டும் ஃபர்ள் – 73:2,3,4) கடமையாக தொழுதார்கள். ஒவ்வொரு தொழுகைக்கும் முன்னும்/பின்னும் நிறைய தொழுதார்கள். கால்கள் வீங்க நீண்ட நேரம் தொழுதார்கள்.
ஒவ்வொரு வாரத்துக்கு இரண்டுநாள், ஒவ்வொரு மாசத்துக்கு மூன்றுநாள் என மற்ற எல்லாரை விடவும் அதிகமாக நோன்பு நோற்றார்கள்.
மற்ற எல்லாரை விடவும் அதிக இறையச்சம் கொண்டு, வறுமையாக எளிமையாக நற்குணங்கள் மிக்கவராக இருந்தார்கள்.
அகழ்ப்போரில் மற்ற எல்லாரும் பசியால் ஒரு கல்லைக்கட்டிக்கொண்டு அகழ் வெட்டி கஷ்டப்பட்டால், நம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வயிற்றில் மட்டும் அதேபோன்ற இரண்டு கற்கள் அல்லவா இருந்தன..?
இப்படிப்பட்ட நம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அதேபோல் தானே…. மற்ற எல்லாரைவிடவும் நான்கைவிட (அல்லாஹ்வின் 33:50 அனுமதியுடன்) அதிக விதவைகளையும் அனாதைகளையும் அதிக திருமணங்கள் மூலம் ஆதரித்தார்கள்..! ஆனால், மேற்படி வசனத்தில் அல்லாஹ் தந்த நபிக்கு மட்டுமேயான மற்றொரு சிறப்பான சலுகையை அவர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளவே இல்லை. (அவசியம் பார்க்க: ஹதீஸ்கள்: புகாரி -5087, 5113, 5120) அதாவது, 55வயதுக்கு பின்னர் மற்ற எல்லாரை விடவும் மிக மிக அதிக பொறுப்புகளை தம் தலை மேல் அல்லவா இழுத்துப்போட்டு சுமந்தார்கள், முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்…!
இஸ்லாத்தில் ‘திருமணம்’ புரிவது அல்லது மறுமணம் செய்வித்தல் என்பது கடமை என்று இந்த 24:32 வசனம் மூலம் இறைவன் சொல்கிறான். வசனம் 4:3 தவிர குர்அனிலும் சரி, நபி மொழிகளிலும் சரி… //’திருமணங்கள்’ செய்து வையுங்கள்// என்று பன்மையாக பார்க்கவே முடியவில்லை. எல்லா இடங்களிலும் ‘திருமணம்’ என்று ஒருமையிலேயே வருகிறது. அப்படியும் ஒருவேளை திருமணம் புரிய சக்தியுள்ள வேறு ஆண்கள், அனாதரவாய் மிகுந்து நிற்கும் விதவை பெண்களுக்கு கிடைக்க வில்லை எனில்… சக்தியுள்ள நீதமாய் நடக்கும் ஆண்கள்- ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பினும் சரியே- இந்த 4:3 இறைக்கட்டளையை பின்பற்ற என்ன தயக்கம்?
இப்போது ஒரு இஸ்லாமிய அரசு செய்ய வேண்டிய ‘ஜிஹாத்’தை தனிமனிதன் செய்கிறான். ஒரு தனிமனிதன் தமக்குள் செய்ய வேண்டியதை, “அனாதை ஆசிரமம்/ஆதரவற்றோர் இல்லம்” என அரசு அல்லது ஏதாவது ஒரு அமைப்பு செய்கிறது. முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அரசில் இப்படியா நடந்தது?
இப்போது நம்முன் நிற்கும் கேள்வி:-
இந்த 4:3 வசனத்தில் மட்டும் விதவைகள் & அனாதைகளை முன்னிறுத்தி விபச்சாரம், பிச்சை, திருட்டு, பட்டினிச்சாவு, தற்கொலை, குழந்தைத்தொழிலாளர் உருவாதல் போன்ற சீர்கேட்டிலிடுந்து சமூகம் பாதுகாப்பு பெறவேண்டி., “இஸ்லாமிய நான்கு தாரமணம்” என்ற இறைவனின் இந்த அனுமதியானது, ஆண்கள் மேல் விதவைகளின் & அனாதைகளின் நன்மைகள் நாடி ஆர்வமூட்டப்பட்டு சுமத்தப்பட்ட பெரிய பொறுப்பா? அல்லது ஆண்களின் காம இச்சைக்கென்றே பிரத்தியேகமாக அனுமதிக்கப்பட்ட சிறப்பு சிற்றின்ப சலுகையா?
பதில்; பிந்தியது மட்டும் என்றால் அதுதான் MISUSE…!
யா அல்லாஹ்! இஸ்லாத்தை பரிபூரணமாய் விளங்கிட வேண்டி சிந்திக்கும் அனைத்து மக்களுக்கும் அதிக விளக்கம் அளித்து நேர்வழிகாட்டி, அவர்கள் மறுமைக்காக இவ்வுலகில் வாழ அருள்புரிவாயாக!
source: http://pinnoottavaathi.blogspot.com/2010/12/misuse.html