பில்கேட்சின் கருணைக்கு இந்திய பெண்கள் பலி!
பன்னாட்டு மருந்து கம்பெனிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நடத்தும் நெறிமுறைகளும், இரக்கமும் அற்ற மருத்துவ சோதனைகளால் ஏழை எளிய மக்கள் கொல்லப்படுவது இன்றும் நிற்கவில்லை.
கருப்பை வாய் புற்றுநோய்
ஆண்டுக்கு 5 லட்சம் பெண்களை பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோய்
கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் சோதனை தொடர்பாக அமெரிக்க நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் கடந்த 15 ஆண்டுகளில் 254 இந்திய பெண்கள் உயிரிழந்திருக்கும் தகவல் சமீபத்தில் அம்பலமாகியுள்ளது.
உலக அளவில் ஆண்டுக்கு 2 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் அதில் 85% பேர் மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்தவர்களென்றும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 இலட்சம் பெண்கள் புதிதாக இந்நோய் தாக்குதலுக்குள்ளாவதாகவும் அப்புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கருப்பை வாய் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய பல்வேறு மருத்துவ ஆய்வு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதிக செலவாகும் பழைய முறைகளுக்கு மாற்றாக குறைவான செலவிலான சோதனை முறை உருவாக்கினால் இதன் சந்தை அதிகரிக்கும் என பல்வேறு மருத்துவ கம்பெனிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மூன்றாம் உலக ஏழை நாடுகளின் மக்கள் மீது பல சோதனைகளை நடத்தி வருகின்றன.
இந்தியாவிலும் கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் முறையை அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் கழகமும், உலகப்புகழ் மென்பொருள் நிறுவன மைக்ரோ சாஃப்டின் பில் கேட்சும் அவரது மனைவியும் மூன்றாம் “உலக மக்களின் மீது கருணை கொண்டு அவர்களுக்கு சேவை செய்வதற்காகவே” நடத்தி வரும் மெலிண்டா – பில் கேட்ஸ் அறக்கட்டளையும் இணைந்து தமிழகத்தின் திண்டுக்கல், மகாராஷ்டிரத்தின் மும்பை குடிசைப் பகுதிகள், உஸ்மானாபாத் ஆகிய இடங்களில் ஏழை பெண்களிடம் கடந்த 15 ஆண்டுகளாக சோதித்து வருகின்றன.
இத்தகைய சோதனைகள் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் நடத்தப்படுவதன் நோக்கம் நோயினால் பாதிப்படையும் பெண்கள் மீதான அக்கறையோ அல்லது சேவை மனப்பான்மையோ, உண்மையான மருத்துவ நோக்கமோ இல்லை.
மேற்கத்திய நாடுகளில் ஒரு நோய்க்கான புதிய மருந்தோ, மருத்துவ முறையோ அல்லது புதிய சோதனை முறையோ சந்தைப்படுத்தும் முன் அவை நோயாளிகள் மீதான சோதனை உட்பட அனைத்து சோதனைகளும் செய்து பார்க்கப்பட்டு முறையான அங்கீகாரம் பெற்றப்பட்டிருக்க வேண்டும்.
மருந்துகள் மனிதர்களின் மீது சோதனை செய்யப்படுவதற்கு முன் ஆய்வகங்களில் விலங்கு, மனித செல்களில் பரிசோதிக்கப் பட்ட பிறகு எலிகள், குரங்குகள் போன்ற விலங்குகளின் மீது சோதித்தறியப்படுகின்றன.
பின்னர் மூன்று கட்டமாக அவை மனிதர்களின் மீது பரிசோதிக்கப் படுகின்றன. முதல் கட்டத்தில் 8 முதல் 10 ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு கொடுத்தும், இரண்டாவது கட்டத்தில் சுமார் 20 முதல் 100 நோயாளிகளுக்கு மட்டும் கொடுத்தும் பரிசோதித்து பார்க்கப்படுகின்றன. மூன்றாவது கட்டமாக பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு பரவலாக கொடுத்து பரிசோதிக்கப்படுகின்றன. பின்னர், மருந்து சந்தையில் விற்பனைக்கு வந்த பிறகு நோயாளிகளை கண்காணிப்பதன் மூலம் பாதுகாப்பு மற்றும் பக்க விளைவுகளுக்கான நான்காவது கட்ட பரிசோதனைகளும் சில சமயங்களில் நடத்தப்படுகின்றன.
மேற்கத்திய நாடுகளில் மருந்துச் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும் தன்னார்வலர்களுக்கு ஆய்வு நிறுவனங்கள் பெரும் தொகையை தரவேண்டியுள்ளது. மட்டுமின்றி அந்நாடுகளில் நோயாளிகளுக்கு தெரியப்படுத்தாமல் அவர்கள் மீது மருத்துவ சோதனைகளை நடத்த முடியாது. மேலும், அம்மருந்துகள் பாதகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தினால், அங்கே பல இலட்சம் டாலர் இழப்பீடு தரவேண்டியிருக்கும்.
இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலோ ஏழைகள், நடைபாதைவாசிகள், குடிசை வாழ் மக்கள், பழங்குடி மக்கள் ஆகியோரிடம், “ரத்த மாதிரி எடுக்கிறோம், நோய் இருக்கிறதா என்று சோதனை செய்கிறோம், இலவச மருத்துவ சிகிச்சை கொடுக்கிறோம்” என பொய்களை கூறி மக்களை ஏமாற்றி என்ன மருந்து, என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதையும் அவர்களுக்கு தெரியப்படுத்தாமல் அவர்கள் மீது மருத்துவ பரிசோதனைகளை நடத்திக்கொள்ள முடிகிறது. இங்கு இழப்பீடு பிரச்சினையும் இல்லை.
மூன்றாம் உலக நாடுகளில் ஒப்பீட்டளவில் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமென்பதால் இந்நாடுகளில் அவர்களுடைய சோதனைக்கான மாதிரிகள் (Samples) எளிதாக கிடைப்பர். அதனால் தான் மருந்து கம்பெனிகள் இந்நாடுகளின் ஏழை பெண்களின் மீது இச்சோதனைகளை நடத்துகின்றன.
மருந்தக சோதனைகளின் களம்
பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் சோதனை எலிகளாக இந்திய மக்கள்.
இலவச மருத்துவ சோதனை, சிகிச்சை என்று மக்களை ஏமாற்றி வஞ்சிக்க பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உலகம் முழுவதும் களமிறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாத் (PATH) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏழை மக்களை வஞ்சித்து மருத்துவ சோதனையை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் 2005-ம் ஆண்டு பன்னாட்டு கம்பெனிகளின் லாப வெறிக்காக உலக வர்த்தக கழகத்தின் நிர்பந்தத்தினால், மருந்து சோதனைகளை நடத்துவதற்கு ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட்டதால் ஏழை அடித்தட்டு மக்களை பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் சோதனை எலிகளாக்கும் ஒப்பந்த ஆய்வு அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் காளான்கள் போலப் பெருகியிருக்கின்றன.
இவற்றுக்கு போர்டு பவுண்டேசன், கேட்ஸ் பவுண்டேசன் போன்ற அமெரிக்க கார்ப்பரேட் அறக்கட்டளைகள் நிதியளிக்கின்றன.
மென்பொருள் துறையில் ஏகபோகத்தை பயன்படுத்தி பல பில்லியன்கள் சம்பாதித்த மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் கம்பெனி முதலாளி பில் கேட்ஸ் 2006-ம் ஆண்டு பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை அமைத்து முழுநேர “தர்மகர்த்தாவாக” மாறினார். பங்குச் சந்தை, பிற ஊக வணிக சந்தைகளில் சூதாட்டங்களின் மூலம் பல பில்லியன் டாலர் சொத்து சேர்த்திருக்கும் வாரன் பஃப்பெட் தனது சொத்தில் கணிசமான தொகையை கேட்ஸ் அறக்கட்டளைக்கு கொடையளித்திருக்கிறார்.
உலக அளவில் விவசாயம், மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் $33.5 பில்லியன் (சுமார் ரூ 1.66 லட்சம் கோடி) மதிப்பிலான தரும காரியங்களை நடத்தி வரும் கேட்ஸ் அறக்கட்டளை விவசாயம் தொடர்பான கொடைக்கு மான்சான்டோ, தடுப்பூசிகள் கொடைக்கு கிளாக்சோ ஸ்மித்கிளைன், கல்வி கொடைக்கு பியர்சன் எஜூகேஷன் என்று ஒவ்வொரு துறையிலும் பொருத்தமான கார்ப்பரேட் கூட்டாளியை சேர்த்துக் கொண்டு செயல்படுகிறது.
இத்தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போதுமான நிதியின்றி இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்குச் சில வசதிகளைச் செய்து தந்து, தங்கள் சோதனைக்கு மருத்துவமனை நிர்வாகத்தை இணங்கச் செய்வதன் மூலமும் மருத்துவம் பார்க்க வசதியின்றி அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்களை சுலபமாக சோதனைக்குட்படுத்துகின்றன.
தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக் கொள்ளும் மக்களும் கூட இத்தகைய மருந்துச் சோதனைகளிலிருந்து தப்புவதில்லை. மருந்து நிறுவனங்கள் பணமும், புகழும் தருவதாகச் சொல்லி மருத்துவர்களை சோதனையின் வலைப்பின்னலில் இழுத்துப் போடுகின்றன. மருத்துவர்கள் ஒரு புதிய மருந்து வந்திருப்பதாகவும், அதைப் பயன்படுத்தினால் நோய் குணமாக வாய்ப்பிருக்கிறது என்றும் கூறி நோயாளிகளை இணங்கச் செய்கின்றனர் அல்லது நோயாளிகளுக்கு தெரியாமலேயே அவர்களை சோதனைக்குட்படுத்துகின்றனர்.
clinical-trialsஇப்பின்னணியில் நமது நாடு பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் ஆய்வுக் கூடமாக்கப்பட்டு நம் மக்கள் சோதனைச்சாலை எலிகளாக்கப் பட்டுள்ளனர். இத்தகைய ஆய்வுகள் மூலம் உருவாக்கப்படும் மருந்துகளும், மருத்துவ முறைகளும் பல லட்சம் ரூபாய் விலை வைக்கப்பட்டு மேற்கத்திய நாடுகளில் சந்தைப்படுத்தப்படுகின்றன. அவற்றின் பலன்கள் இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு மறுக்கப்படுகின்றன.
உதாரணமாக மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் அபாயங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் மரபணு சோதனை முறைக்கு மைரியட் ஜெனிடிக்ஸ் நிறுவனம் வடிவுரிமை வாங்கி வைத்துள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அந்த மருத்துவப் பரிசோதனையை செய்து கொண்டதில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கு சாத்தியக்கூறுகள் 87 சதவிகிதம் இருப்பதாகத் தெரிய வந்ததையடுத்து, உடனடியாக மார்பகங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் முடிவுக்கு வந்தார்.
ஆனால் ஏஞ்சலினாவுக்கு கிடைத்த வாய்ப்பு அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் கிடைக்கப் போவதில்லை. மைரியட் ஜெனிடிக்ஸ் நிறுவனம் மரபணு சோதனையை செய்து கொள்ள அந்நிறுவனம் ஒருவருக்கு 3,500 டாலர் (சுமார் ரூ. 2 லட்சம்) கட்டணமும் அச்சோதனையில் இருந்த சில குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதை பிற்சேர்க்கை சோதனையாக்கி அதற்கு தனியாக 700 டாலர் (ரூ. 42 ஆயிரம்) கட்டணமும் வசூலிக்கிறது.
இந்த இரண்டாம் கட்ட சோதனை கட்டணத்தை உள்ளடக்கியிராத மருத்துவக் காப்பீட்டை வைத்திருந்த பெண்களுக்கு இச்சோதனைகளை செய்து கொள்ளும் வாய்ப்பை மறுத்துள்ளது மைரியட் ஜெனிடிக்ஸ் நிறுவனம். அமெரிக்காவிலேயே ஏழைகளுக்கு அச்சோதனை வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
“பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் கடும் உழைப்பால் புதிய புதிய மருந்துகளை கண்டுபிடித்து சந்தைக்கு கொண்டு வருகின்றன. அதற்கு அறிவு, திறமை இவற்றோடு பெரும் தொகையையும் செலவழிக்கின்றன. அப்படியிருக்கையில் அவர்களுடைய உழைப்பை குறைந்த விலைக்கு கொடு என்று எப்படி கேட்பீர்கள்?” என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
அவர்களுடைய கடும் உழைப்பின் இலட்சணம் என்ன? மருத்துவம் பார்க்க இயலாத வாழ்நிலையிலுள்ள மக்களின் மீது சோதனை நடத்தி அவர்களை பலியிடுவதன் மூலம் தான் தமது மருந்துகளை சந்தைப்படுத்தும் அங்கீகாரத்தை மருந்து நிறுவனங்கள் பெறுகின்றன. அவற்றை முதலில் மேற்கத்திய நாடுகளில் பணக்காரர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. ஏழைகளுக்கோ சோதனையில் தம்மை ஈடுபடுத்தி கொள்ளும் கடமையை தவிர பலனை பெறும் உரிமை இல்லை.
clinical-trials-3மருத்துவ சோதனைகளால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவது, உயிரிழப்பது குறித்த அறம், நெறிமுறைகள் சார்ந்த கேள்வி எழுப்பப்படும் போது அம்மக்களின் மருத்துவம் பார்க்க இயலாத வாழ்நிலையை காட்டி நியாயப்படுத்தவும் நிறுவனங்கள் தயங்குவதில்லை. சிலஇடங்களில் சிலருக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் இலவச மருந்துகளை கொடுத்து தமது கைகளிலிருக்கும் ரத்தக்கறையை கழுவிக்கொண்டு பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தரவேண்டிய பொறுப்பிலிருந்தும் வஞ்சகமாக தப்பித்துக் கொள்கின்றன.
இந்த பாசிச முறையைத் தான் சுதந்திர சந்தைப் பொருளாதாரம் சாதித்திருக்கிறது. இதற்கு சேவை செய்வதற்காக தான் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளனவே அன்றி மக்கள் சேவைக்காக அல்ல.
கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் புதிய முறையை சோதிப்பதற்காக மொத்தம் 2.24 லட்சம் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் 1.38 லட்சம் பெண்களுக்கு எவ்வித நோய் சோதனையும் நடத்தாமல் வெறுமனே கண்காணித்து வைத்திருந்ததால், நோய் கண்டறியப்படாமல் முற்றி 254 பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய்க்கு பலியாகி உள்ளனர். அதாவது முன்கூட்டியே நோயைக் கண்டறியாமல் விட்டு வைப்பதால் ஏற்படும் உயிரிழப்பு விகிதத்தை கணக்கிடுவதற்காக 254 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கத்திய நாடுகளில் கருப்பை வாய் புற்றுநோயை கண்டறிவதற்கு பயன்படுத்தப்படும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட எளிய சோதனைகளை செய்யாமல் வைத்திருந்து 1.38 லட்சம் பெண்களில் எத்தனை பேர் சாகிறார்கள் என்று பார்த்திருக்கின்றனர். இந்தியாவில் இத்தகைய சோதனைகள் பரவலாக நடைமுறையில் இல்லை எனினும், தெரிந்தே லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களின் இறப்பை கண்காணித்து வந்த இந்த நிறுவனங்கள் மற்றும் ஆய்வாளர்களின் வக்கிரத்துக்கு அவர்களது லாப வெறியைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
இச்சோதனையை மேற்கத்திய நாடுகளில் நடத்தியிருந்தால் இதில் பங்குபெறுபவர்களுக்கு தலா 100 டாலர் வீதம் கொடுப்பதாக இருந்தாலும் ரூ 144 கோடி கட்டணமாக செலுத்த வேண்டியிருந்திருக்கும். அது மட்டுமின்றி உயிரிழப்பவர்களுக்கு குறைந்த பட்சம் 1 இலட்சம் டாலர்கள் இழப்பீடு தருவதாக கொண்டாலும், 254 பேர் உயிரிழந்ததற்கு ரூ 152 கோடிக்கும் மேல் இழப்பீடு செலுத்த வேண்டியிருந்திருக்கும். ஆக இச்சோதனையை இந்தியாவில் நடத்தியதின் மூலம் சுமார் ரூ 296 கோடிக்கும் மேல் மிச்சம் பிடித்திருக்கிறது அமெரிக்க புற்றுநோய்க் கழகம்.
பன்னாட்டு கம்பெனிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஏழை மக்களின் உயிரை கிள்ளுக்கீரையாக நினைத்து பலி கொடுப்பது இதுவே முதல் முறை அல்ல.
2009-ம் ஆண்டு கேட்ஸ் அறக்கட்டளையின் 3.6 மில்லியன் டாலர் நிதியுதவியுடன் பாத் (PATH) தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆந்திர பிரதேசம் மற்றும் குஜராத்தில் கார்டாசில் என்ற கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை சோதிக்கும் திட்டத்தை ஆரம்பித்தது.
24,777 சிறுமிகளிடம் அவர்களுடைய பெற்றோர்களுடைய முறையான அனுமதியைப் பெறாமல், சோதனை என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிவிக்காமல் ஏமாற்றி நடத்தப்பட்ட சோதனையில் 7 சிறுமிகள் கொல்லப்பட்டனர். இதில் ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தின் பழங்குடி மாணவிகளுக்கான உறைவிடப் பள்ளியில் மட்டும் மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர்.
பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களின் நலன்களை உறுதி செய்ய கொஞ்சம் பணத்தை வீசி எறிந்து உயிரையே உறிஞ்சுவது தான் கேட்ஸ் அறக்கட்டளையின் பின்னே உள்ள அறம்.
டெல்லி எய்ம்ஸ் (AIMS) மருத்துவமனையில் 4,142 குழந்தைகளிடம் ரத்த அழுத்த நோய் மருந்து உள்ளிட்ட 42 வகை மருந்துகளை செலுத்தி சோதனைளை நடத்தியதில் 49 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
2005 முதல் 2012 வரை மருத்துவ சோதனைகளால் 3,458 பேர் கொல்லப்பட்டு 14,320 க்கும் மேற்பட்டோர் கடுமையான பாதிப்படைந்துள்ளனர்.
அதை அடுத்து மருத்துவ சோதனைகள் தொடர்பாக ஸ்வாஸ்த்ய அதிகார் மன்ச் என்ற தன்னார்வ அமைப்பு 2012-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் அக்டோபர் 2013-ல் மருத்துவ ஆராய்ச்சி விதிமுறைகளையும் ஹெல்சின்கி வழிமுறைகளையும் பின்பற்றாத 160-க்கும் மேற்பட்ட மருத்துவ சோதனைகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் மருத்துவ சோதனைகளில் உயிரிழந்தோருக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் இழப்பீடு வழங்காத பிரச்சனையில், ஆனந்த் ராய் என்பவர் தொடுத்த பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகளுக்குப் பதிலளிக்குமாறு நோட்டீசு அனுப்பியது. அவை வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கின்றன.
புதிய மருந்து ஆலோசனை குழுக்கள் (NDAC), தொழில்நுட்ப குழுக்கள், மற்றும் மேல் கமிட்டிகள் அதற்கும் மேல் உச்ச நீதிமன்றம் என இத்தனை கண்காணிப்புகள் இருந்தும் நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்ட மருத்துவ சோதனைகள் சட்ட விரோதமாக தொடர்ந்து கொண்டிருக்க, படுகொலைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதில் குற்றவாளிகள் யாரென்பது அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கும் நன்றாகவே தெரிந்திருந்தும் அவற்றை தொடரும் நிறுவனங்களின் மேல் எந்த பெயரளவிலான விசாரணை கூட மேற்கொள்ளப் படவில்லை.
பில்கேட்சின் கருணை இப்படித்தான் இந்தியாவின் ஏழை பெண்களை பலிவாங்குகிறது. இருப்பினும் இவருக்கும், இவரது நிறுவனத்திற்கும் இந்தியாவில் படித்த ரசிகர்கள் பலர் உண்டு என்பதால் கேட்ஸ் பவுண்டேசன் தனது படுகொலையை தொடர்ந்து செய்து வரும். எப்போது நிறுத்தப் போகிறோம்?
– மார்ட்டின்
source: http://www.vinavu.com/2014/05/05/mnc-drug-companies-use-indian-women-as-lab-rats/