இஸ்லாமிய சிலதாரமணம்
‘பலதாரமணம்’ எனும் பதம் இஸ்லாத்தை பொருத்தமட்டில் பொருந்தாது. ‘சிலதாரமணம்’ எனச்சொல்வதே சாலச்சரி..!
ஓர் உதாரணத்துக்கு… ராமனின் அப்பா தசரதனின் ‘அறுபதாயிரதார மணமும்’, இஸ்லாமிய ‘நான்குதார மண’ அனுமதியையும் ஒரே தட்டில் வைத்து, எப்படி ‘பலதாரமணம்’ என்பது? ஆயிரத்திற்கும் நான்கிற்கும் ஒரு வித்தியாசமும் இல்லையா?
சரி…சரி… மற்ற மொழிகளில் இல்லாமல், ‘சில’வையும் ‘பல’வையும் பிரித்தரிவிக்கும் ஒரு வசதி நம் தமிழில் இருக்கும்போது, நாமும் அதை பயன்படுத்திக்கொள்வோமே? மேலும், ‘இஸ்லாமிய நான்குதார மணம்’ என்பது ஒரு அனுமதியே தவிர, இந்த ‘சிலதாரமணத்தை’ விட ‘ஒருதாரமணம்’ தான் இஸ்லாத்தில் ஆண்களுக்கு அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும் என்று இறைவனால் பரிந்துரைக்கப்பட்டு (4:3) குர்ஆனில் ஆண்களுக்கு அறிவுறுத்தப்படுகிறதே..!
பொதுவாக இவ்வுலகில், ஓர் அழகான, அறிவான, நற்குணங்கள் கொண்ட ஓர் அன்பான கணவன், தன் மனைவிக்கு பெற்றுத்தர வேண்டிய மகிழ்ச்சியை தர (மருத்துவ ரீதியாக) ‘இயலாதவன்’ எனில், உலகின் மற்ற பெண்களைப்போலவே மகப்பேறுக்கு ஆசைப்படும் அந்த மனைவி என்ன செய்வது? பொதுவாக அம்மனைவி இரண்டு முடிவுகள் எடுக்கலாம்.
ஒன்று, ‘இதுதான் விதி’ என்று காலம் முழுதும் தன் அன்புக்கனவனுடன் குழந்தைகள் பெறாமலேயே வாழ்தல். அல்லது, ‘விவாகரத்து’ செய்தல். இரண்டுக்கும் அப்பெண்ணுக்கு உரிமை உள்ளது அல்லவா? ஆனால், அக்கணவன் “ஓர் அழகான, அறிவான, நற்குணங்கள் கொண்ட ஓர் அன்பான கணவன்” என்பதால், அப்பெண்ணுக்கு இது ஒரு முடிவெடுக்க முடியாத இக்கட்டான ‘இருதலைக்கொள்ளி எறும்பு’ நிலை. ஆனாலும் அப்பெண், இப்போது வேறு ஒரு திருமணத்தை நாடி, விவாகரத்து முடிவு எடுக்கிறாள் எனில், அந்த(முதல்)கணவன் நிலை பரிதாபம்தான்..! மனைவி மேல் தவறொன்றும் இல்லை. இது அவள் உரிமை. ‘பெண்ணுரிமை’..!
இஸ்லாமிய பெண்ணுக்கும் இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது..! (பார்க்க: புகாரி, ஹதீஸ் – பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5276)
பொதுவாக இவ்வுலகில், ஓர் அழகான, அறிவான, நற்குணங்கள் கொண்ட ஓர் அன்பு மனைவி, தன் கணவனுக்கு பெற்றுத்தர வேண்டிய மகிழ்ச்சியை தர (மருத்துவ ரீதியாக) ‘இயலாதவள்’ எனில், உலகின் மற்ற ஆண்களைப்போலவே குழந்தைப்பேறுக்கு ஆசைப்படும் அந்த கணவன் என்ன செய்வது? பொதுவாக அக்கணவன் இரண்டு முடிவுகள் எடுக்கலாம்.
ஒன்று, ‘இதுதான் விதி’ என்று காலம் முழுதும் தன் அன்புமனைவியுடன் தனக்கான குழந்தைகள் பெறாமலேயே வாழ்தல். அல்லது, ‘விவாகரத்து’ செய்தல். இரண்டுக்கும் அந்த ஆணுக்கு உரிமை உள்ளது அல்லவா? ஆனால், அம்மனைவி “ஓர் அழகான, அறிவான, நற்குணங்கள் கொண்ட ஓர் அன்பான மனைவி” என்பதால் அக்கணவனுக்கு இது ஒரு முடிவெடுக்க முடியாத இக்கட்டான ‘இருதலைக்கொள்ளி எறும்பு’ நிலை.
இப்போது வேறு ஒரு திருமணத்தை நாடி, விவாகரத்து முடிவு எடுக்கிறான் எனில், அந்த(முதல்)மனைவி நிலை பரிதாபம்தான்..! கணவன் மேல் தவறொன்றும் இல்லை. இது அவன் உரிமை. ‘ஆணுரிமை’..!
இஸ்லாமிய ஆணுக்கும் இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால்……அதுமட்டுமல்ல..!
இஸ்லாத்தில்… இவ்விடத்தில்…. அவ்விருவருக்கும்…. மேலும் ஓர் அருமையான அழகான சமமான வாய்ப்புள்ளது..!
அதாவது, அக்கணவன்… தன் ஆசை மனைவியையும் விவாகரத்து கொடுத்து நடுத்தெருவில் நிற்கவைக்க வேண்டியதில்லை…. அதேநேரம் தன் உரிமையையும் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை..!!
அது என்ன?
அதுதான்… இரண்டாவது திருமணம்..!!!
இப்போது சொல்லுங்கள்… மேற்படி தன் கணவனின் இரண்டாவது திருமணம் ஆனது, இந்நிலையில் உள்ள இந்தப்பெண்ணுக்கு தன் உரிமை பறிக்கப்பட்டது போல தோன்றுமா? அல்லது தன் உரிமை பாதுகாக்கப்பட்டது போல தோன்றுமா?
சொல்லப்போனால், இது மறைமுகமாக முதல் மனைவிக்கு தன் கணவன் மூலமாக உணவு, உடை, உறைவிடம், அன்பு, அரவணைப்பு மற்றும் அவசிய தேவைகளுக்கான பணம் அனைத்தும் காலத்துக்கும் உறுதிப்படுத்தப்பட்ட மிகச்சரியான பாதுகாப்பு அல்லவா?
இப்படியான ஒரு நிலையில் உள்ள ஒரு பெண்ணுக்கு, தனக்கெதிராக விவாகரத்து நடந்து விடாமல், தன் கணவனின் இரண்டாம் திருமணம் நடப்பது என்பது எப்படி ஒரு பாதுகாப்பளித்திருக்கிறது பார்த்தீர்களா?
மேலும் சொல்லப்போனால், இது ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகை போன்று முதலில் தோன்றினாலும், கொஞ்சம் ஆழமாய் சிந்திக்கும்போது முதல் மனைவியான அந்த பெண்ணைக்காக்கும் பெண்ணுரிமை அல்லவா இது?
நம் நாட்டில் முஸ்லிமல்லாத இதே போன்ற நிலையிலிருக்கும் மற்ற மதத்து பெண்ணுக்கு/ஆணுக்கு சட்டத்தில் என்ன பதில்? அது சிறந்ததா? இது சிறந்ததா?
நன்றாக சிந்தியுங்கள்….
அந்த கணவனின் உரிமையைக்காக்க வேண்டி அந்த மனைவியை விவாகரத்து செய்ய வைத்து நிற்கதியாக்குவது சரியா….?
அல்லது
விவாகரத்துக்கு வேலையின்றி அந்த மனைவியின் நலனையும் கருத்தில் கொண்டு, அதேநேரம் ஆணுக்கும் மனநிறைவு அளிக்கும்படி மேலும் ஒரு திருமணத்திற்கு அனுமதி அளிப்பது சரியா?
இது சரி என்றால், இந்த சரியைத்தானே இஸ்லாம் ஆண்களுக்கு அனுமதித்திருக்கிறது?
இந்த ‘சரி’ எப்படி ‘தவறு’ என்று பரப்பப்படுகிறது?
இதற்கு வேறு ஒரு வியாக்கியானம் சொல்வர். அதாவது… ‘இதேபோல பெண் நன்றாக இருந்து… ஆண் ‘இயலாதவன்’ எனில், அந்த பெண் இரண்டாம் கணவனை திருமணம் செய்ய சட்டம் மறுக்கிறதே! இது சமநீதி இல்லையே..?” என்று..!
ஓ… தாரளமாக இரண்டாம் திருமணம் செய்யலாம்..! அந்த ‘இயலாத’ கணவனை விவாகரத்து செய்து விட்டு… வேறொரு கணவனை மணக்கலாம். இதைத்தான் சமநீதி இல்லை என்கின்றனர்..! இவர்கள் புரியாமல் பேசுகின்றனர்..!
பள்ளியில் எங்கள் வாத்தியார் பாய்ஸ் பேசினால் பெஞ்சு மேலே ஏறி நிக்க சொல்வார்! பெண் பேசினால் சும்மா எழுந்து தரையில் நின்றால் போதும்! இது பெண்ணுக்கான சலுகையா அல்லது பெஞ்சு மேலே ஏறி நிற்கும் சமவுரிமை பறிப்பாக பார்ப்பதா?
மறுமணம் செய்ய பெண்ணுக்கு முழு உரிமை உண்டு! மேலே, ஆண் விஷயத்தில் பார்த்தது போல, ‘இயலாத மனைவி’யையும் கூடவே வைத்து காப்பாற்றும் எக்ஸ்ட்ரா லோடு ஆணுக்கு சாட்டப்பட்டது போல, பெண்ணுக்கான விஷயத்தில் சாட்டப்படவில்லை. இது சலுகை! சம உரிமை பறிப்பு அல்ல.
ஆண், தனியே உழைத்து தனது வாழ்வியலுக்கு சம்பாரிப்பவன் என்பதால்… அவனுடைய விவாகரத்துக்கு பிறகான வாழ்க்கை பற்றி பெண் அக்கறைப்பட வேண்டிய அவசியம் இஸ்லாத்தில் இல்லை! அதனால் பெண்ணுக்கு ஒரே நேரத்தில் இரு கணவனை கட்டிக்கொண்டு அல்லல் படும் கொடுமையை “ஆணின் உரிமை” என்று முட்டாள்த்தனமாக பெண்ணின் மீது இஸ்லாம் சுமத்தவில்லை..! இப்படி பெண்ணுக்காக இஸ்லாம் அதிக சலுகைகள் தந்து இருப்பது இதுபோன்று இன்னும் ஏராளம்! ஆனால், அவை ஏதோ சமவுரிமை மறுப்பு போல மதியின்றி திரிக்கப்படுகின்றன! கோளாறு இறைவனின் சட்டத்தில் இல்லை! இஸ்லாமோஃபோபியாக்காரர்களின் மனதில் உள்ளது!
.
முக்கியமான பின்குறிப்பு :
மேற்படி இறைவசனம் (4:3), இப்போது… இறைவனை மறந்து, இஸ்லாத்திலிருந்து தடம்புரண்டு, மறுமைப்பயமின்றி, ‘முஸ்லிம்கள்’ என்று தம்மைக் கூறிக்கொண்டு சுகபோக வாழ்க்கையில் வாழும் ஆண்களால் MISUSE செய்யப்படுகிறது.
இறைவசனத்தை உண்மைக்கு மாறாய் தன் உலக இன்பத்திற்காக திரிக்கும் காரியம். இது மிகப்பெரிய பாவம். இதனை விரிவாக, இறைவன் நாடினால் பின்னர் அலசுவோம். (” என்ன…? சிலதாரமணம் என்று சொல்லிவிட்டு, நைசாக ‘இருதாரமணம் ‘(?!) என்றாக்கி நழுவுகிறீரே…” என்போருக்கும் அதில் விஷயம் இருக்கும்…)
source: http://pinnoottavaathi.blogspot.com/2010/12/blog-post_17.html#more