தன்மையாய் பேசு! தலைவனாக மாறு!
“ஒருநாள் வேளச்சேரியில் என்னோட கார் பிரேக்டவுன் ஆகி விட்டது. ரஜினி ஸ்டைல்ல ஒரு ஆட்டோ வந்து நின்னுது. ஒரு அறுபது வயசுக்காரர் என்னிடம் வந்து, “ஆட்டோவா சார் , எங்க போகணும்? ” என்றார். நான், “சைதாபேட்டை போகணும்”என்றேன். அவர் உடனே “கண்டிப்பா போவலாம்.
கவலைபடாத சார். தேர் மாதிரி சார் நம்ம வண்டி. சும்மா ஜிவ்வுன்னு போகும்.. வாங்க” என்று வெத்தலை பாக்கு வைத்தார்.
60 ரூபாய் ஆட்டோ
“அறுபது ருபாய் கொடுங்க. பேரம் பேசாதீங்க!. ஆள் வேற டிப் டாப்பா இருக்கீங்க” ன்னு சொல்லி வைத்தார். எனக்கு ஒன்பது மணிக்கு மீட்டிங். 60 இல்ல, 600 கூட கொடுக்கத் தயாரா இருந்தேன். மறு பேச்சே பேசாமே அவர் ஆட்டோல ஏறிட்டேன். உட்காந்ததுதான் தாமதம். செம ஸ்பீட் எடுத்தார் அவர். என் தாத்தா பாட்டி எல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சாங்க.
“பேரா எப்படா என்னை பாக்க வரப்போறன்னு” அவுங்க கேக்கற மாதிரி இருந்தது. தண்ணி குடிச்சி ஆசுவாசப்படுத்திகிட்டேன். அவரோட முதுகைத் தட்டி “எனக்கு அர்ஜென்ட் இல்ல, பொறுமையா ஓட்டுங்கன்னு சொன்னேன். போகும் வழியில் அவர் என்கிட்ட பேசினதை ஒரு புக்காவே போடலாம்.
“சார் ஆட்டோல ஏறிடறாங்க. வேகமா போ. வேக போ ன்னு எங்களை படுத்தறாங்க. நாங்க என்ன ப்ளேனா ஓட்றோம். மொபைல்ல பத்து லட்சம், இருபது லட்சம்ன்னு பேரம் பேசறாங்க. ஆனா “நாப்பது ரூபாதான் தருவேன்” ன்னு எங்ககிட்ட முரண்டு பிடிப்பாங்க சார்.” என்று பேசி அர்ஜுனன் மாதிரி சரம் சரமா அம்படிச்சார் அவர்.
அவர் பேசின எல்லா வார்த்தைக்கும் என் பதில் “தப்பில்ல, ஆமாங்க,” அவ்ளதான். அவர் கருத்துகளை ஆமோதிப்பது போல் முதுகில் அன்பாக தட்டி கொடுத்தேன். ஆனா அனைத்து வார்த்தைகளும் இருவரிடமும் மனசிலேந்து வந்தவை.
கிளைமாக்ஸ்
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி என்னோட மன நிலை என்னன்னா 60 ரூபாய்க்கு பதிலா 600 தந்திருப்பேன். அந்த ஆட்டோக்காரர் மன நிலை “நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு இருக்கார். நிறையவே கேக்கலாம்” ன்னு நினைச்சிருப்பார். இந்த ரெண்டு பர்சனாலிட்டிகளுக்குமான போராட்டம்தான் இந்த பத்து நிமிஷமாக நடந்தது.
இப்பதான் கிளைமாக்ஸ். நூறு ருபாய் கொடுத்தேன். அவர் அம்பது ருபாய் எடுத்து திருப்பிக் கொடுத்தார். “என்னங்க அறுபது ருபாய் கேட்டிங்க இப்போ அம்பது ருபாய்தான் எடுத்துகிட்டிங்க.” என்றேன். உடனே அவர் “சார் நான் பத்து ருபாய் எக்ஸ்ட்ரா வாங்கறது சும்மா டென்ஷன் பண்றவங்ககிட்ட.. ஆனா நீங்க தன்மையா பேசினிங்க. உங்ககிட்ட பத்து ருபாய் வாங்கினா செரிக்காது” அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டார்.
மாறும் பர்சனாலிட்டிகள்
எவ்ளோ கேட்டாலும் எரிச்சல் இல்லாம கொடுக்க தயாரா இருக்கிற ஒரு பர்சனாலிட்டி. கஸ்டமருக்கு தகுந்த மாதிரி ரேட் போடற இன்னொரு பர்சனாலிட்டி . நான் அவர் மேலே காட்டின அன்பால, அவர் நெகிழ்ந்து போய் தன்னுடைய பர்சனாலிட்டி யை மாற்றிகிட்டு நியாயமான காசை வாங்கிட்டாரு.
அதுக்கப்புறம் நானும் அவரும் நண்பர்களா ஆகிட்டோம்.. எமர்ஜென்சின்னா அவர் ஆட்டோல போறேன். நம்முடன் சேர்ந்த உறவுகள் நாம் செய்யும் நல்ல செயலுக்காய் நம்முடனே தானாக வளரும். நாம் நல்ல நோக்கத்தோடு எந்த ஒரு காரியம் செய்தாலும் அதற்கு பிரதிபலனாக நமக்கே நல்லது நடக்கும்.
ஆளுமையும் வாழ்வும்
நாம் செய்யும் செயல் நமக்கும், அடுத்தவருக்கும் பரஸ்பரம் நல்லதாக இருந்தால் நாம் ஒரு நல்ல ஆளுமைத்திறன் உள்ளவராக வளர்ந்து விட்டோம் என்று அர்த்தம். அவரவர்களின் பர்சனாலிட்டி எப்படியோ அப்படியே அவர்களின் வாழ்க்கை அமைகிறது . அதனால்தான் மென் திறன்களில் முக்கியமானதாக பர்சனாலிட்டி டெவலப்மென்ட். எனும் ஆளுமை வளர்ச்சி. இருக்கிறது. இதை நாம் வளர்த்துக் கொண்டுவிட்டால் நம் வாழ்க்கை பூப்பாதையாக மாறி விடும்.
-டாக்டர் வி. விஜய் ஆனந்த்
source: http://www.vkalathur.com/?p=23580#sthash.WQvxphsA.At2j3uT0.dpuf