மறுமையே மனிதனுக்கு யதார்த்தமான வீடு
மறுமையே மனிதனுக்கு யதார்த்தமான வீடு(தங்குமிடம்) ஆகும் எனக் குர்ஆன் அறிவுறுத்துகிறது
புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட எதையுமே உணர்ந்துகொள்ளும் ஆற்றலற்றவன் மனிதன், எதிர்காலம், இவ்விதம் மனிதன் உணர்ந்து கொள்ள முடியாதவற்றுள் ஒன்று. அடுத்த சில வினாடிகளில் என்ன நேரும் என்று யாருமே அறிய முடியாது. இத்தகைய வரையறைக்குட்பட்ட புலனுணர்வுடைய மக்கள் எல்லாக் காலங்களிலும் வருங்கால நிகழ்வுகள் பற்றி அறிய ஆர்வமுடையவர்களாக இருக்கின்றார்கள்; குறிப்பாக மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை பற்றி அறிய மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.
மனிதர்கள் ஆர்வமுடன் அறிய விரும்புபவை ஆகிய இந்தப் பிரபஞ்சம், மானிட வர்க்கம், இறப்பு, நீதித் தீர்ப்பு நாள், நரகம், சுவர்க்கம், வருங்காலம் கடந்த காலம் மற்றும் மறுமை ஆகியவற்றிற்கெல்லாம் காரணகர்த்தாவாகிய அல்லாஹ் ஒருவனே அறிவிக்க வல்லவன். இந்தப் பிரபஞ்சத்தையும் உயிரினங்கள் அனைத்தையும் அல்லாஹ் “ஒன்றுமில்லாமை”யிலிருந்தே படைத்தான்; இன்னும் ஒவ்வொரு கணமும் படைத்துக்கொண்டே இருக்கின்றான்.
இப்பிரபஞ்சத்தில் ஓர் அம்சமாக விளங்கும் காலத்தையும் அல்லாஹ்வே திட்டமிட்டு வகுத்துள்ளான். காலத்திற்கு எல்லா படைப்பினங்களும் கட்டுப்பட்டாக வேண்டும். அல்லாஹ்வோ காலத்திற்கு கட்டுப்பட்டவன் அல்லன். காலததிற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவன் அல்லாஹ். காலத்தின் கட்டுப்பாடின்றியே அல்லாஹ் யாவற்றையும் பரிமாணத்தோடு படைத்தான். நாம் கடந்தவை என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை என்றும் கருதும் யாவற்றையும் முழுமையாக அறிந்த நிலையில் ஒரு நொடியில் படைத்தான்.
நம்முடைய புலனுக்கு எட்டாத பிற்காலம் உட்பட யாவுமே “மறையானவை” என்று குறிப்பிடப்படுகின்றன. “மறுமை”யும் கூட மனிதர்கள் இம்மையில் வாழும் காலம் வரை ‘மறைவான’வற்றில் ஒர் அம்சமாகவே விளங்கும்.
“மறுமையை” பற்றிக் குறிப்பிடும் குர்ஆன் அதைப் பற்றிய விவரங்களைத் தருகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தத்துவ ஞானிகள் பல்வேறு கலாச்சாரங்களில் காணப்படுகின்ற மூட நம்பிக்கைகளோடு இணைந்து, மறுமையைப் பற்றி பல அனுமானங்களைக் கூறுகின்றனர். இவ்வுலக வாழ்க்கையில் பற்றும் சொத்தும் செல்வமும் குவிப்பதில் ஆர்வமும், மக்களை உலகில் வசதி வாய்ப்புகளை அடையும் முயற்சியில் நின்றும் விடுபட விடுவதில்லை. தொல்லைகளும் இடர்ப்பாடுகளும் எதிர்படும் போது ஏமாற்றமடைந்து நம்பிக்கை இழப்பார்கள். இத்தகைய மன நிலையை குர்ஆன் கீழ் வருமாறு வர்ணிக்கிறது.
“நம்முடைய அருட்கொடையை மனிதன் நுகரச் செய்து அதன்பின் அதனை அவனிடமிருந்து பறிக்கப்பட்டால் அவன் நம்பிக்கை இழந்து நன்றிகெட்டவனாக ஆகிவிடுகின்றான். அவன் அனுபவித்த இடர்ப்பாடுகளை நீக்கி நம்முடைய அருட்கொடைகளை நுகரச் செய்தால் “என்னுடைய துன்பங்கள் நீங்கிவிட்டன” எனக் கூறி பெரும் மகிழ்ச்சியடைந்து பெருமை பாராட்டுகிறான். (அல்குர்ஆன் 11:9,10)
எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அனைத்து நிகழ்வுகளையும் குர்ஆனின் நெறிமுறைக்கு உகந்து விளங்கி, இறையுணர்வு நீங்காமல் மறுமையின் நினைவு மாறாமல் மனிதனின் நிரந்தர வீடாகிய மறுமையை அடையும் நோக்கோடு இறை நம்பிக்கையாளன் நிலை தவறாமல் முயலுகின்றான். “இவ்வுலகில் ஓர் அந்நியனைப் போல் அல்லது ஒரு பிரயாணியைப் போல் வாழ்வீராக” எனும் நபி மொழி (அல்புகாரி)க்கு ஏற்ப இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரமானது என்றும் நம்பி வாழ்வான். எனவேதான் இறை நம்பிக்கையாளர்கள் ஏராளமான நன்மைகளும் பேறுகளும் கிட்டும் போது வழி பிறழுவதுமில்லை; அவற்றை இழக்க நேரும்போது ஊக்கம் இழந்து சோர்வடைவதும் இல்லை. பேறுகளும் நன்மைகளும் அவை போன்று இழப்புகளும் எல்லாம் சோதனையே எனும் உண்மையை உணர்ந்தவர்களாக இறைற நம்பிக்கையாளர்கள் அல்லாஹ் விரும்பும் நேரும் நிகழ்வுகளை எல்லாம் கீழ்வரும் இறை வசனத்தை நினைவு கூர்ந்து ஏற்றுக் கொள்வார்கள்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மையும் தீமையும் அனுபவிக்கும் நிலைக்கு உள்ளாக்கி நாம் உங்களைச் சோதிப்போம். நீங்கள் நம்மிடமே மீள்வீர்கள். (அல்குர்ஆன் 21:35)
இதனை உணரும்போது, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கருணை குர்ஆன் மூலம் வெளிப்படுவதைத் தெளிவாக மனிதன் அறிந்து கொள்கிறான். குர்ஆனின் மூலமே மறுமையைப் பற்றிய மிகச் சரியான உண்மைகளை இறை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். உண்மையான மார்க்கமே மறுமையைப் பற்றிய யதார்த்தங்களை அறிவிக்கவல்லது.
உண்மையான மார்க்கமே மனிதனுக்கு இவ்வுலக வாழ்க்கையின் நிலையற்ற தற்காலிக நிலையையும், நிரந்தரமான மறுமை வாழ்க்கையையும் பற்றி அறிவிக்கிறது. மனிதனின் நற்செயல்களுக்கும் தீயச் செயல்களுக்கு ஏற்ப கூலி வழங்கப்படும் ஒரு நாளைப் பற்றிக் குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது. மரணவேளை, நீதித் தீர்ப்பு நாள், சுவர்க்கம் மற்றும் நரகம் பற்றிய தகவல் தரும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒரே மூலம் குர்ஆனே ஆகும். இறைவனின் இறுதி வெளிப்பாடாகிய குர்ஆன் பல வசனங்களில் மனிதனின் நிரந்தர வீடு மறுமையே என அறிவிக்கின்றது. அவற்றுள் ஒன்று:
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையுமே ஆகும். இறையுணர்வுடையவர்களுக்கு மறுமை வாழ்க்கையே மிக மேலானது. அறிவாற்றல் உடையோர் இதனை உணர்ந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 6:32)
இந்த இறைவசனத்தில் இந்தச் சோதனை வாழ்க்கையை விளங்கிக் கொள்ள முடியாத உணர்வற்ற ஒரு மனிதனின் மனப்போக்குத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இறை நம்பிக்கையாளர்கள் இளத்தகைய உணர்வற்ற மனப்போக்கைப் பற்றி எச்சரிக்கப்படுவதோடு, அவர்களின் இம்மை வாழ்க்கையின் யதார்த்த நோக்கத்தைக் குறித்துத் திரும்பத் திரும்ப நினைவூட்டப்படுகிறார்கள்.
அவர்களுள் சிலருக்கு அவர்கள் நுகரும் பொருட்டு நாம் அருளி இருப்பவற்றின் மீது நீங்கள் உங்கள் பார்வையைச் செலுத்தாதீர்கள். இவை யாவும் இவ்வுலக வாழ்க்கையின் பகட்டணிகலன்களே! இவை மூலம் அவர்களை நாம் சோதிக்கின்றோம். உங்கள் இறைவன் உங்களுக்கு அருளியுள்ளவை சிறந்தவை, நிலையானவை. (அல்குர்ஆன் 20:131)
ஆனாலும் இவ்வுண்மைகளை ஊன்றிக் கவனித்து உணர முடியாதவர்கள் இந்த உலக வாழ்க்கையில் வசதி வாய்ப்புகளில் மயங்கி விடுகின்றனர்.