உயிரியல் பூங்காவில் உயிர் போன பரிதாபம்! (உண்மைச் சம்பவம் ஒரு பார்வை)
அண்மையில் நம் நாட்டின் வடகோடியில் நடந்த அந்த துயர சம்பவம் மறுகணமே சமூக வலைதளங்கள் மூலமாக தென்கோடி வரை பரவி அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியதை யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.
ஆம் .தலைநகர் தில்லி உயிரியல் பூங்காவில் நடந்த நெஞ்சை பதறவைத்து மனதை உறையச் செய்த ஒரு சோக நிகழ்வுதான் அது. கல்நெஞ்சம் படைத்தவர்களின் கண்களைக்கூட கலங்கிடச் செய்யும் அந்தக் காணொளிக்காட்சி. முகப்புத்தகத்தில் (FACEBOOK) அன்றே பதியப்பட்டிருந்த அந்தக் காட்சியைப் பார்த்தவர்களின் முகம் வாடியதோடு மனம் கனத்துத்தான் போயிருக்கும்.
உயிரியல் பூங்காவின் தடுப்பு எல்லையைத் தாண்டி புகைப்படம் எடுக்கச் சென்ற அந்த இளைஞன் கால்தவறி உள்ளே விழுந்து விடுகிறார்.. செய்வதறியாது திகைப்புடன் நிற்கும் அவனது அருகில் வெள்ளைப் புலி ஒன்று நேருக்கு நேராய் வந்து நிற்கிறது.அப்போது அவனது மனநிலை என்னவாக இருந்திருக்கும்.? நாம் இந்தப் புலியிடமிருந்து மீட்கப்பட்டு பிழைத்துக் கொள்வோமா அல்லது இந்தப் புலிக்கு இரையாகி இறக்கப் போகிறோமா? என்கிற நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த இளைஞன் வாழ்வா? சாவா? எனத்தெரியாமல் மனதுடன் எப்படியெல்லாம் போராடியிருப்பானோ?! யாருக்குத் தெரியும்.?! மனதை நெகிழவைக்கும் இப்படியொரு திகில் சம்பவம் வேறு யாருக்கும் நிகழ்ந்திடாத நிகழக்கூடாத ஒரு திகைப்பூட்டும் சம்பவமாகும்.
அந்த இளைஞன் எத்தனையோ முறை கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டும் அந்த ஐந்தறிவு மிருகத்திற்கு கருனைகாட்டத்தெரியாமல் தனது மூர்க்கத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவர எண்ணிவிட்டது.
வெளியில் சென்று வேட்டையாடிப் பழக்கமில்லாத அந்த வெள்ளைப் புலிக்கு இது புது அனுபவம் என்பதாலோ என்னவோ தன்னை தயார்படுத்திக் கொள்ள பத்து நிமிடத்திற்கும் மேலாக நேரத்தைக் கடத்திக் கொண்டு மோப்பம் பிடித்து பார்த்துக் கொண்டே இறுதியில் ஒரு கோழிக்குஞ்சை பருந்து கவ்விச் செல்வது போல அந்த இளைஞனின் கழுத்துப் பகுதியை கவ்வி இழுத்துச் சென்ற கொடூரக் காட்சி கொடுமையிலும் கொடுமையான ஒரு நிகழ்ச்சி என்று பொதுமக்களால் புலம்பத்தான் முடிந்தது.
இதில் வேதனைப்படக்கூடியது என்னவென்றால் வேடிக்கை பார்க்கவும் படம் பிடிக்கவும் காட்டிய அக்கறையும், ஆர்வமும் வெள்ளைப் புலிக்கு சிறிது நேரத்தில் இரையாகப் போகும் அந்த பரிதாபத்திற்கு இளைஞனை காப்பாற்ற அங்கு கூடி நின்றவர்கள் காட்டவில்லை என்று தான் நினைக்கும்படி இருந்தது.
காப்பாற்ற யோசிக்காத அல்லது யோசிக்கத் தெரியாத அந்தப் பொது மக்களின் கண்களுக்கு அந்தப் புலியும் இளைஞனும் காட்சிப் பொருளாகத்தான் தெரிந்திரிக்கிரார்கள். இத்தனை மனிதக் கூட்டங்களுக்கு மத்தியில் ஒற்றைப்புலி தனது பலத்தை நிரூபித்து விட்டுச் சென்று விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
அனைவரது கண்ணுக்குமுன் நடந்த இந்தக் கொடூர சம்பவத்திற்கு யாரைத்தான் குறைசொல்வது? அதிகாரிகளின் அலட்சியப் போக்கா? பாதுகாவலர்களின் பாராமுகமா? அந்த இளைஞனின் அத்து மீறிய செயலா? பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இன்மையா? இப்படி அனைத்து தரப்பிலும் சிந்திக்க வேண்டியுள்ளது.பத்து நிமிடத்திற்க்குமேலாக நேரம் எடுத்துக் கொண்ட அந்த வெள்ளைப் புலியிடமிருந்து பாதுகாவலர்கள் முயற்ச்சித்தால் காப்பாற்றி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
மரணத்தை அணைத்துக்கொண்ட அந்த இளைஞன் மீண்டும் திரும்பி வரப் போவதில்லை ஆனால் மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையை தந்து விட்டு சென்று இருக்கிறார்.அந்த இளைஞனின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போமாக.!! மனித மாமிசத்தையும், மனிதக் குருதியின் சுவையையும் அறிந்துகொண்ட இந்த வெள்ளைப் புலியை என்ன செய்யப் போகிறார்களோ ..!?
.
ஆக நடந்து முடிந்த இந்த சம்பவத்தை படிப்பினையாக எடுத்துக்கொண்டுசுற்றுலா தளத்திற்க்குச் செல்பவர்கள் வனவிலங்கு வசிக்கக் கூடிய இடத்திற்க்குச் செல்பவர்கள் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள். தடை செய்யப்பட்ட இடத்திற்கு தடையை மீறிச் செல்ல முயற்ச்சிகாதீர்கள். நண்பர்களுக்கு மத்தியில் தான் தைரியசாலி என பெயரெடுக்க நமது விலைமதிக்க முடியாத உயிரையும் உடலையும் அலட்ச்சியப்போக்கால் விலங்குகளுக்கு உணவாக்கி விடாதீர்கள்.
அதுமட்டுமல்லாமல் முதல்முறையாக எந்த ஒரு இடத்திற்க்குச் சென்றாலும் அங்கு உள்ள நதியில் குளிக்கநினைத்தாலோ, ,மலைப்பாங்கான இடத்திற்க்குச் செல்ல நினைத்தாலோ, வனப்பகுதிப் பக்கம் போக நினைத்தாலோ, மணல்வெளியில் நடக்க நினைத்தாலோ, அங்குள்ள நிலைமைகளை சூழ்நிலைகளை நன்கு அறிந்து கொண்டு அங்குள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பதே பாதுகாப்பாக இருக்கும். காரணம் சில நதிகள் ஆழம் மிகுந்ததாகவும் முதலைகளின் இருப்பிடமாகவும் இருக்கக்கூடும்,
சில மலைப்பாங்கான இடங்களில் பாம்பு,தேள் பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் இருக்கக் கூடும், அதுபோல வனப்பகுதிகளில் காட்டில் வாழும் கொடிய மிருகங்களின் நடமாட்டம் இருக்கக்கூடும். மணல் வெளிப்பகுதிகளில் சதுப்புநிலம் , புதைகுழி போன்றவைகள் இருக்கக் கூடும். ஆகவே நாம் அனைத்திலும் கவனத்தைக் கடைப்பிடித்து நடந்து கொள்வது மிக அவசியமானதாக இருக்கிறது.
– அதிரை மெய்சா
source: http://nijampage.blogspot.in/2014/10/blog-post_7.html