இறைவன் ஒரு வசனத்தை மாற்றினால்!
”நாம் ஒரு வசனத்தை மாற்றினால் அல்லது மறக்கச் செய்தால் அதை விடச் சிறந்ததையோ அதற்கு நிகரானதையோ கொண்டு வருவோம். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?” (திருக்குர்ஆன், 002:106)
திருக்குர்ஆனில் சில வசனத்தை மாற்றினால் அதற்குப் பகரமாக சிறந்த வேறு வசனத்தையோ அல்லது அதற்கு நிகரான வசனத்தையோ நாம் கொண்டு வருவோம் என இறைவன் கூறுகின்றான். முன்னர் அறிவித்த சட்டத்தை பின்னாளில் இறைவன் மாற்றியிருக்கின்றான் என்பதே இதன் கருத்து. அதாவது, இறைவன் அருளிய ஒரு சட்டத்தை முதல் நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு அவசியம் கருதி இறைவனே மாற்றியமைக்கின்றான்.
முன்பு அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யவும், தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கவும் இவ்வாறுச் சட்டங்களை மாற்றும் வசனத்தையே ”நாம் ஒரு வசனத்தை மாற்றினால்” என்று குறிப்பிடப்படுகிறது. இறைவன் அனைத்தையும் அறிந்தவன் என்றால் ஏன் இப்படி அடிக்கடி சட்டங்களை மாற்ற வேண்டும்? இது இறைவனின் தன்மைக்கு பங்கம் விளைவிக்காதா? என்றக் கேள்வி இங்கு நியாயமாகத் தோன்றினாலும், ஒரு சட்டம் இயற்றும் போது இச்சட்டம் பின்னாளில் மாற்றப்படும் என்பதையும் இறைவன் அறிந்திருப்பான். சூழ்நிலைக்குத் தக்கவாறு சட்டங்களை இயற்றுவதும் – மாற்றுவதும் இறைவனின் ஞானத்தில் எவ்வித களங்கத்தையும் ஏற்படுத்திவிடாது.
முதல் மனிதரும், முதல் நபியுமான ஆதம், ஹவ்வா தம்பதியரின் பிள்ளைகளுக்கு, உடன் பிறந்த சகோதரன், சகோதரியை மணமுடிக்க இறைவன் அனுமதித்தான். இங்கு சகோதரன் சகோதரியை மணக்க அனுமதிக்கவில்லையெனில் மனித இனம் அத்தோடு முடிந்திருக்கும். அதனால் அனுமதித்து, பின்னர் மனித இனம் பெருகியதும் உடன் பிறந்த சகோதரன், சகோதரியை மணந்து கொள்வதைத் தடை செய்து விட்டான். இவ்வாறு சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரு சட்டத்தை அனுமதிப்பதும், தடை செய்வதும் இறைவனின் தனித்தன்மைக்கு எதிரானதல்ல.
தகவல் சம்பந்தப்பட்ட கடந்த கால வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறும் வசனங்களில் முன்னர் அறிவித்ததற்கு மாற்றமாக பின்னர் அறிவித்தால் அது முரண்பாடுடையதாக இருக்கும். கடந்த கால நிகழ்ச்சிகளை மாற்றுவதாக 002:106வது வசனத்தின் பொருள் இல்லை. எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை மாற்றுவதாகவும் பொருள் இல்லை. நீ இதைச் செய்தால் பரிசு தருவேன், இதைச் செய்தால் தண்டிப்பேன் என்ற வாக்குறுதியிலும் மாற்றம் செய்வதாகவும், விஞ்ஞான ரீதியான வசனங்களில் முதலில் ஒன்றைக் கூறிய பின் அதை மாற்றுவதாகவும் இவ்வசனத்தின் கருத்து இல்லை.
நடைமுறையிலிருக்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது பற்றியே இவ்வசனம் பேசுகிறது. ஆரம்பத்தில் தொழுகையின் முன்னோக்கும் திசையாக பைத்துல் முகத்தஸ் இருந்தது. பின்னர் காபாவை நோக்கித் தொழும்படி சட்டம் மாற்றப்பட்டது.
அறப்போரில் சகிப்புத்தன்மையுடைய இருபது பேருக்கு இருநூறு பேரென எதிரிகளைச் சந்திக்க வேண்டும் (008:065) என்ற சட்டம் இருந்து, பின்னர் சகிப்புத்தன்மையுடைய நூறு பேர்களிலிருந்தால் எதிரிகளில் இருநூறு பேர்களை வெல்ல முடியும் (008:065) என மாற்றப்பட்டது.
சட்டம் இயற்றுவதும், இயற்றிய சட்டத்தை மாற்றுவதும் இறைவனின் தனியதிகாரத்துக்குட்பட்டது. ”அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?” என்று அறிவிக்கின்றான் மேலும்,
”ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் நீர் இட்டுக் கட்டுபவர் என்று என்று கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன். மாறாக அதிகமானோர் அறியமாட்டார்கள்” (திருக்குர்ஆன், 016:101)
source: http://abumuhai.blogspot.in/