தியாகத் திருநாள் – வரலாற்று நினைவுகள்
கவிஞர் ப.அத்தாவுல்லாஹ்
பரந்து கிடந்தது அந்த பாலைப் பெருவெளி. கண்ணெட்டிய தூரம்வரை மண்கொட்டிக் கிடந்தது. அந்தப் பெருமகனாரும் அவர்தம் துணைவியாரும் அதில் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு பால்மணம் மாறாத அந்த பச்சிளம் பாலகர். இறைவன் இட்டுவைத்த இலக்கு நோக்கி அவர்களது பயணம் அமைந்திருந்தது.
தமது எந்த சொந்த விருப்பங்களுக்காகவும் தம்மை விலைப்படுத்திக் கொள்ளாத அந்த நேயர் குறிப்பிட்ட இடம் வந்ததும் தம் பயணம் நிறுத்தினார். அவர்களது தேவைக்காகக் கொஞ்சம் கனிகளையும் தோற்பை சுமந்த குடிநீரையும் கொடுத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தார்.
அவர்களைக் குடியமர்த்திய அந்தப் பெருவெளியில் அந்த மரத்திற்கு அருகில் இந்த உலகத்தின் மையப்புள்ளி, சற்றே உயர்ந்த மணல்மேடாய் தெரிந்தது. திரும்பி நடந்த அந்தப் பெருமகனாரை நோக்கி அவர் துணைவியார் வினவினார்.
‘எங்களை இங்கே விட்டுவிட்டுச் செல்லுமாறு இறைவன்தான் உங்களுக்குக் கட்டளையிட்டானா?’
‘ஆமாம்’
‘அப்படியானால் அவன் எங்களைக் கைவிட மாட்டான்’ – உறுதிபட எழுந்தது அன்னையின் குரல். அவர்களை விட்டுச்சென்ற அந்த இடத்தில் இரு மலைக்குன்றுகள் நின்றன. பக்கத்தில் அந்த மணல்மேடு இருந்தது. அந்த மணல்மேடு ஆதியிறை ஆலயம் ‘கஅபா’.
அந்தப் பெருமகனார் பெயர் இபுராஹீம் (அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்), அவர் துணைவியார் பெயர் ஹாஜரா (அலைஹிஸ்ஸலாம்) அந்தப் பாலகர் பெயர் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்).
திரும்பி நடந்த அந்தப் பெருமகனார் மலைக்குன்றுகளைக் கடந்ததும் தம் முகத்தை அந்த மணல்மேட்டின் பக்கம் திருப்பினார். இரு கரங்களையும் விரித்து இறைவனிடம் இறைஞ்சினார்.
‘இறைவனே! யாருமற்ற, விவசாயமுமில்லாத இந்த பாலைப் பள்ளத்தாக்கில் என் சந்ததிகளைக் குடியமர்த்தி இருக்கிறேன் – தொழுகையை நிலைநிறுத்துவதற்காக! மக்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கித் திருப்புவாயாக! இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!’
சில நாட்களில் கொண்டு வந்த உணவுப்பொருளும் குடிநீரும் தீர்ந்தது. அதனால் நீரைத் தேடவேண்டிய அவசியம் உண்டாயிற்று. குழந்தை பசியால் அழுதது. தாகத்தில், வெயிலின் வேகத்தில் அழுதது. அழுத குழந்தையின் தாகம் தீர்க்க நீரில்லை. அன்னையோ மிகக் கவலையுற்றார். பக்கத்தில் நின்றிருந்த இருமலைக் குன்றுகளையும் நோக்கினார். ஒருவேளை அங்கே ஏதேனும் நீரூற்று இருக்கக் கூடுமோ என ஐயுற்றார். முதலில் ஒரு மலைக்குன்றில் ஏறினார்கள். அதன் பெயர் ஸஃபா. அங்கே நீரில்லை. பிறகு அடுத்த மலையில் ஏறினார்கள். தேடினார்கள். அங்கும் நீரில்லை. அதன் பெயர் மர்வா. இரு குன்றுகளிலும் ஏறித் தேடியும் நீரில்லாமல் வாடினார்கள்.
மீண்டும் குழந்தையின் நிலையறிய ஓடினார்கள். அங்கே கண்ட அந்த அதிசயக் காட்சியில் மனம் தேறினார்கள். தம் கண்களையே நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் நோக்கினார்கள். அங்கே குழந்தையின் காலடி உதைப்பில், வானவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர்களது காலடியிலிருந்து நீர் பீறிட்டுப் பாய்ந்து கொண்டிருந்தது. அதிசயித்த அன்னை, நீரை அள்ளியள்ளிப் பருகினார்கள். இறைவனின் அற்புதப் பேரதிசயத்தில் மனம் நிறைந்து உருகினார்கள். நீர்ப்பை நிறைந்திட நீரெடுத்துப் பெருக்கினார்கள். தம் கைகளால், பாலைமணல் கொண்டு சிறு கரை கட்டி, நீரை அணை கட்டினார்கள் – ‘ஜம் ஜம்’ – நில் நில் – என்று தம் வாயுரையால் பொங்கிப் பெருகிய நீரை கரைகட்டினார்கள்.
‘இறைவன், இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அன்னைக்குக் கருணை புரிவானாக! அன்று மட்டும் அன்னை ஹாஜரா ‘ஜம்-ஜம்’ ஊற்றுக்குக் கரை கட்டவில்லையெனில் அது பொங்கிப் பெருகி இந்த பூலோகமெல்லாம் நனைத்திருக்கும்.’ என்று பின்னாளில் பொருள் விளக்கம் தந்தார் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அவர்கள் தங்கியிருந்த அந்த பாலைப் பெருவெளிக்கு ‘மக்கா’ என்று பெயர். பூமியிலிருந்து சற்றே உயர்ந்து மணல் திட்டாய் காணப்பட்ட அந்த ஒளிப் புள்ளிதான் பூமிப்பந்தின் நடுப்புள்ளியாய் இலங்கும் ஆதியிறை ஆலயம் ‘கஅபா’. வானவர் அல்லது அக்குழந்தை, இருவேறு கருத்துக்கள், காலடியில் இருந்து பீறிட்டுக் கிளம்பிய அந்த நீரூற்றுதான் வற்றாத ஜீவனாய் இன்னும் ஊறிக் கொண்டிருக்கும் வசந்தத் தேனூற்று ‘ஜம்-ஜம்’. மக்காவுக்கு மாநிலத்தின் மார்பிடம் என்றொரு அடைமொழிப் பெயர் உண்டு. ஒருவேளை ‘ஜம்-ஜம்’ எனும் பால் அங்கு சுரந்து கொண்டிருக்கும் காரணமாயிருக்குமோ?
நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனின் பேரன்புக்குப் பாத்திரமான பெருந்தகையாளர். அவருக்கு இரு மனைவியரை அளித்து இறைவன் சிறப்புச் செய்தான். மூத்தவர் பெயர் ஸாரா அலைஹிஸ்ஸலாம். இளையவர் ஹாஜரா அலைஹிஸ்ஸலாம். அவர்கள் ஓர் அரச குலத்துப் புறா. இபுராஹீம் நபிகளோடு இணைந்து நடந்த நிலா, மூத்தவருக்கு இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், இளையவருக்கு இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மகவாகப் பிறந்தனர். இந்த இளையவர் வழி அநேக அற்புதங்களை இறைவன் நடத்திக் காட்டினான்.
இறைவன் கட்டளைப்படி மக்கா எனும் மணிநிலத்தில், தம் கண்ணின் மணிகளைக் கழற்றி வைத்துவிட்டு இபுராஹீம் நபிகள் சொந்த நாடு திரும்பினார்.
ஹாஜரா (அலைஹிஸ்ஸலாம்) அன்னையாரும் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) இளஞ்சிசுவும் இறையின் காவலில் இருந்தனர். தமது இதயநேசர் வேண்டிய இறைஞ்சுதலை இறைவன் ஏற்றுக் கொள்ளாமலா இருப்பான்? மக்காவின் பாதையில் வழிநடந்து செல்லும் வழிப்பயணிகள் வழக்கமாக நடந்து செல்லுகின்ற அந்தப் பாட்டையில், ஒரு புதுமையைப் பார்த்தனர். நீரிருக்கும் இடம் மட்டுமே வட்டமிட்டுப் பறக்கும் தண்ணீர்ப்பறவை, ‘ஜம்-ஜம்’ ஊற்றுருகே வட்டமிடுவது கண்டு வியப்புற்றனர். இவ்வளவு காலமாக இந்தப் பாதையில் வருகிறோம். இதுவரை இங்கே நீர் இருந்ததில்லையே என்று தமக்குள் வினா விடுத்துக் கொண்டனர். அந்த அதிசயம் என்னவென்று காண வந்திருந்தவர்களில் ஓரிருவரை அனுப்பி வைத்தனர். அவர்கள் கண்டு வந்து சொன்ன நீரூற்றுபற்றி அறிந்து மகிழ்வுற்றனர். அன்னை ஹாஜராவிடம் தாங்களும் அங்கு வந்து தங்கி வாழ அனுமதி கேட்டனர். மக்களுடன் சேர்ந்து வாழ விரும்புவதில் ஆர்வம் கொண்ட அன்னையார் அனுமதி அளித்தார். ஆயினும் நீரூற்றில் அவர்களுக்கு எந்தப் பங்கும் தரமுடியாது என்றும் எடுத்துரைத்தார். அந்நீரை பயன்படுத்திக் கொள்வதில் தடையில்லை என்று உறுதிமொழியும் உடன் தந்தார். பிறகென்ன?
நீரிருக்கும் இடம் ஊரிருக்கும். ‘ஜம்-ஜம்’ நீர் வந்தபிறகு மக்காவில் ஊர் வந்தது. அங்கு முதலில் வந்து குடியேறியவர்கள் ‘ஜர்ஹ{ம்’ இனத்தார் என வரலாற்று ஆசிரியர்கள் வடித்து வைத்திருக்கின்றனர்.
இளவல் நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாலிபராய் வளர்ந்தார். அழகும், இளமையும், பொலிவும் புதுமையும் பெற்று மிளிர்ந்தார். தக்க வயது வந்ததம் குடியேறிய குலத்தாரிடம் பெண் முடித்தார். இறை நாட்டப்படி மீண்டும் நபி இபுராஹீம் அவர்கள் மக்கா வந்தார். அவர் வந்த வேளை, இளையவர் இல்லத்தில் இல்லை. அவர்களது மனைவி மட்டும் இருந்தார். அவர்களிடம், அவர்களது நிலைபற்றிக் கேட்க அவர்கள் சிரமத்தில் இருப்பதாக பதில் தந்தார். இபுராஹீம் நபிகளாரோ அவரிடத்து இளையவர் வந்தால் தமது ‘ஸலாம்’ உரைக்கும்படி கூறி, ‘வீட்டு நிலைப்படியை மாற்றி வருக’ எனக் கூறுமாறு கூறிச் சென்றார்.
நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இல்லத்தில் நுழைந்தபோது தமது தந்தையார் இறைத்தூதர் இபுராஹீம் நபிகள் அவர்கள் வந்து சென்றது அறிந்து, உள்ளுணர்வில் அது பற்றி வினவினார். அவரது மனைவியாரும் நடந்தது பற்றி எடுத்துரைத்தார். ‘வீட்டு நிலைப்படி என்பது நீதான். உன்னை மணவிடுதலை செய்து விடுகிறேன். அப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள்’ என்று கூறி அம்மங்கையை அவரது இல்லத்துக்கு அனுப்பி வைத்தார். மீண்டும் அதே குலத்திலிருந்து இன்னொரு பெண்ணை மணமுடித்தார்.
இறை நாடியவரை பொறுத்திருந்த நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீண்டும் மக்கா வந்தார். அப்போதும் நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இல்லத்திலே இல்லை. துணைவியார் இருந்தார்கள். வந்த முதியவரை முகமலர்ந்து வரவேற்றார்கள். நன்கு உபசரித்தார்கள். இறைச்சியும் நீரும் கொண்டு தந்து அன்பளித்தார்கள். தங்கள் வாழ்க்கை நிலை இறையருளால் மிக நல்ல நிலையில் இருப்பதாக ஒப்பித்தார்கள். அவர்களிடம் ‘இஸ்மாயில் வந்தால் என் ஸலாம் கூறுங்கள். வீட்டு நிலைப்படியைப் பேணி நிலைப்படுத்துங்கள் என்று கூறுக’ எனக் கூறிச் சென்றார்கள்.
முன்னர்போலவே – இறை உதிப்புணர்வால் – இல்லம் வந்த இஸ்மாயில்(அலை) அவர்கள் தமது மனைவியாரிடம் வினவ, அவர்களோ நடந்தவை அனைத்தையும் எடுத்துச் சொன்னார்கள். தந்தையார் கூற்றுப்படி அந்த மாதரசியைத் தங்களுடனேயே தங்க வைத்துக் கொண்டார்கள், தக்க வைத்துக் கொண்டார்கள். அன்னை ஹாஜரா இறையடி சேர்ந்திருந்தார்கள. காலம் கடந்து சென்றது. மீண்டும் இருவரும் இணையும் காலம் நெருங்கி வந்தது. ‘ஜம்-ஜம்’ ஊற்றருகே நின்றிருந்த பெரிய மரத்தின் நிழலில் இளையவர் அமர்ந்து அம்பொன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தார். மீண்டும் பெருமகனார் அங்கே வந்தார்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு இருவரும் சந்தித்தார்கள். நெடுநாட்களுக்குப் பிறகு பாசமுள்ள இறைத் தூதர்களாகிய தந்தையும் மகனும் சந்தித்தால் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படி நடந்து கொண்டார்கள். இறைத்தூதர்களாக இலங்கியவர்கள் அவர்கள். இறை கட்டளைகளையே வாழ்வாக்கிக் கொண்டவர்கள் அவர்கள். இறை கட்டளைக்கு இம்மியும் மாறு செய்யாதவர்கள் அவர்கள். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அதில் மண்டிக் கிடந்தது. உள்ளன்பும் உவகையும் பின்னிக் கிடந்தது. கனிவும் கருணையும் தேங்கிக் கிடந்தது.
பின்னர் நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது மகனாரை நோக்கிக் கூறலானார்கள், ‘இஸ்மாயிலே! இறைவன் எனக்கு ஒரு செயலைச் செய்யச் சொல்லிக் கட்டளையிட்டிருக்கிறான். நீ அதில் எனக்கு உதவ முடியுமா?’ என்பதாகக் கேட்டார்கள். ‘இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நீங்கள் நிறைவேற்றுங்கள். நிச்சயம் நான் அதில் உங்களுக்கு உதவுகிறேன்’ என்று பதிலளித்தார்கள்.
அப்போது இபுராஹீம் நபி அவர்கள் சுற்றியிருந்த இடங்களில் சற்று உயரமாக, சற்றே மேலோங்கியிருந்த மணற்திட்டைக் காட்டிச் சொல்லலானார்கள், ‘இங்கே நான் இறையில்லத்தைப் புதுப்பித்துக் கட்டி எழுப்ப வேண்டும்’. நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கற்களைக் கொண்டு வந்து தரவும் அவர்கள் கட்டவும் தொடங்கினார்கள். ஓரளவு உயரம் வந்தபொழுது ‘மகாமே இபுராஹீம்’ என்று சொல்லப்படும் அந்த கல்லைக் கொண்டுவந்து வைத்தார்கள். நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதன்மேல் ஏறிநின்று கொண்டு கட்டலானார்கள்.
இதற்கு முன்னால் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதாவது இபுராஹீம் நபியவர்கள் கனவொன்று கண்டார்கள். தமது அருமை மகனை அறுத்துப் பலியிடக் கனவு கண்டார்கள். இறைவன் தூதராக இயங்கிய அந்தப் பெருமகனாரிடம், மற்றோரிடம் இல்லாத இனிய பண்பொன்று மிளிர்ந்தது. அது கனவாயினும் அல்லது இறையறிவிப்பாயினும் எதுவாயிருப்பினும் எந்தக் கேள்வியும் கேட்காமல் உடனடியாக நிறைவேற்றி விடுவதுதான் அது. கனவு கண்டபிறகு மகனைச் சந்தித்ததும், அவரிடம் இதுகுறித்து வினவினார்கள். ‘அருமை மகனே! உன்னை அறுத்து பலியிடுவதாகக் கனவொன்று கண்டேன். உன் விருப்பம் எதுவோ?’. தந்தை இபுராஹீம் நபியின் அடிச்சுவட்டைப் பின்பற்றியொழுகும் அந்த அற்புதர் இஸ்மாயில் நபிகள், ‘இறைவன் விருப்பம் அதுவேயாயின் உங்களுக்கு, உங்கள் ஆசைக்கு அடிபணியும் பிள்ளையாகவே என்னைக் காண்பீர்கள்’ என்றார்கள். இறைவன் கட்டளையல்லவா? எனவே அப்படி வந்தது பதில். இப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ என்றெல்லாம் விபரீதமாகத் தங்கள் புத்தியை தீட்டாமல் மகனைப் பலியிட கத்தியைத் தீட்டியவர் அந்தக் காருண்யர்!
பக்கத்திலே ‘மினா’ வெறும் மைதானம். அங்கே அழைத்துச் செல்கிறார்கள அருமை மைந்தனை. பளபளப்பாகத் தீட்டப்பட்ட கத்தி கைகளில். தந்தையார் ஆணைக்குத் தலை தாழ்த்தி தரும் தனயன். பக்கத்திலே பாறையொன்று. இறைவன் இட்டது முடிக்கும் நல்ல நெறிப்பெற்றியர் மகனது கழுத்தில் கத்தியை வைத்து அழுத்துகிறார்கள். அவர்களது வீரத்திற்கும் முறுக்கேறிய வலிமைக்குமாக இணங்கி அறுபட வேண்டிய உயிர் முடிச்சு இன்னும் இன்னும் விறைத்து நிற்கிறது. கழுத்தில் கத்தி வைக்கின்ற போதெல்லாம் அறுந்து போகவில்லை கழுத்து. மாறாக, கத்தி குரல்வளை விட்டும் நழுவிப் போகிறது. என்ன அதிசயம்! என்ன அதிசயம்! வலிமை போயிற்றே! கரம் வலுவிழந்து போனதோ? முதுமையில் கரங்கள் தளர்ந்து போனதோ? இறiவா என்ன இது வேதனை? நீ காட்டித்தந்த கனவினை நனவாக்க முடியாமல் போகுமோ என்றெல்லாம் இறைபக்தியில் கனிந்த அந்தப் பெருமகனாரின் மனம் உருகுகிறது. கத்தி கூர்மைப்படவில்லையோ என்று சோதிக்கும் முகத்தான பக்கத்தில் நின்றிருந்த பாறைக் குன்றின்மேல் ஓங்கி அடிக்கிறார்கள். பாறை பிளந்து விடுகிறது. அப்போது வானின்றும் கொழுத்த ஆடொன்று இறங்கி வருகிறது. அதோடு இறைச் செய்தியும் வருகிறது. அதன்படி அந்த ஆட்டை மட்டும் அறுத்து பலியிடுகிறார்கள். இறைச் சோதனையில் வென்று காட்டுகிறார்கள்!
அதற்குப் பிறகுதான் கஅபா புனித ஆதியிறையாலயம் புதுப்பித்துக் கட்டப்பட்டது. அதற்கு முன்னாலும் கஅபா இருந்தது. வெள்ளப்பெருக்கு, பலத்த காற்று, இன்ன பிற இயற்கையின் சீற்றங்களால் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுப் போயிற்று. இறைவேதம் அல் குர்ஆன், கஅபா இறையாலயத்தை, உலகத்தின் முதல் தோன்றிய ஆதியிறை ஆலயமாகச் சிறப்பித்துப் பேசும். வரலாற்று ஆய்வாளர்கள் கருத்துப்படி இதுவரை ஏறத்தாழ பன்னிரு முறைகள் கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்டிருக்கிறது. அதன் முக்கிய அடித்தளமாக இபுராஹீம் நபிகள் கட்டிய அவர்களால் கட்டப்பட்ட அந்த சுற்றுச் சுவரே அடிப்படையாக அமைந்தது.
இரு நபிமார்களும் இறையில்லத்தைக் கட்டி முடித்தனர். பின்னர் இறையிடம் இறைஞ்சினர்! ‘இறைவனே! இந்த புனிதப் பணியை எம்மிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே நன்கு அறிந்தவனாகவும் செவியேற்பவனாகவும் இருக்கிறாய்! என்று திரும்பத் திரும்பக் கூறியபடி அவ்வாலயத்தைச் சுற்றி வட்டமிட்டு நடந்தனர்.
இபுராஹீம் நபி இன்னும் இறைஞ்சினார்கள்! ‘இறைவனே! எங்கள் பணியை ஏற்றுக் கொள்வாயாக! இஸ்லாமியராகவே எங்களை உன்னூலில் நூற்றுக் கொள்வாயாக! எங்கள் சந்ததியைப் பெருக்கு! உனை வணங்கும் கூட்டத்தாரை அதில் ஆக்கு. அவர்களில் இருந்தே ஒரு உன்னதத் தூதரை உண்டாக்கு. அவர்களுக்கு உனது வேதத்தையும் ஞானத்தையும் பரிசாக்கு!’
இந்தப் பிரார்த்தனையின் பயன் நமக்கு ஈருலக இரட்சகராம் அண்ணல் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளப்பட்டார்கள். அனைத்துலகுக்கும் ஓர் அருட்கொடையாக அகிலத்தின் அழகான முன்மாதிரியாக!
இதைத்தான் பெருமானார் பின்னாளில் இப்படிப் பேசினார்கள். ‘நான் என் தந்தை இபுராஹீமின் பிரார்த்தனையாக இருக்கிறேன்!’
நபிகள் பெருமானாரின் தலைமுறை வரிசை இபுராஹீம் நபிகளாரைத் தொடும். இபுராஹீம் நபிகள் இஸ்மாயில் நபிகளின் இரண்டாம் துணைவியாரிடம் அவர் கொண்டுவந்து கொடுத்த இறைச்சியிலும், நீரிலும் இறiவா நீ அபிவிருத்தி செய்வாயாக என்று பிரார்த்தித்தார்கள். அதனால்தான் இவ்விரு உணவும் கனிவகைகளில் பிரார்த்தித்த கனிவகைகளும் இந்த மக்கா மாநகரில் மட்டும் இன்றும் அதிகமதிகம் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. இறைச்சியும் நீரும் தினமும் உண்டாலும் அது மக்கா மக்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக மற்றவர்களுக்கு அனுதினமும் ஒத்துக் கொள்வதுமில்லை. உலகின் எந்த பாகத்திலும் கிடைக்காத கனிவர்க்கங்கள் எல்லாம் இன்று மக்காவில் மட்டும் அதிகமாகக் கிடைக்கிறது. ஆய்வாளர்களை அது ஆச்சர்யப்பட வைக்கிறது. இறைத்தூதரின் வேண்டுதலையும் இறைவன் அவர்களுக்களித்த உயர்சிறப்பையும் உற்று நோக்குவோர் இதனை இறைவன் பேரற்புதமாகவும் பெருந்தகை வேண்டுதலின் பெரும் பயனாகவுமே போற்றி ஏற்பர். உண்மையும் அதுதான். அந்தப் பெருமகனாரின் நினைவை தியாகத்தைப் போற்றும் வகையிலேதான் இந்த தியாகத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
எவ்வளவு பெரிய சோதனையில் அவர்கள் சிக்கித் தவித்தார்கள் என்பது அந்தச் சூழலிலிருந்து ஆய்வோருக்குத்தான் தெரியும். பால் மணம் மாறாத பச்சிளம் பாலகரைப் பாலைக்காட்டில் கொண்டுவிடும் பண்பாகட்டும், அரச குலத்து இளமனைவியை இறைவனின் அடைக்கலத்தில் விட்டுவிடும் தன்மையாகட்டும், கனவுதான் என்றாலும் பெற்றெடுத்த பிள்ளையை பலிகொடுக்கத் துணிந்த வீரமாகட்டும், பெரியவரின் கட்டளையேற்று மணல்மேடாய்க் கிடந்த இறையாலயத்தைப் புதுப்பித்துக் கட்டிய பொலிவாகட்டும், இறைகட்டளை எதுவென்றாலும் முகமன் கூறி வரவேற்று அடிபணிந்து காட்டிய பெருந்திறல் பண்பாகட்டும், அத்தனையும் அந்த வல்லவனிடமே ஒப்புவித்து, ஓர் அடிமையாய் தம்மை அர்ப்பணித்தளித்த ஓங்குயர் நிலையாகட்டும், இதயப் பிரார்த்தனையில் நம் ஈருலகும் வெற்றிபெற வைக்கும் நபிகள் நாயகத்தின் மூதாதையர் எனும் உயர்குலச் சிறப்பிலாகட்டும், எண்ண எண்ண எண்ணமெலாம் இனிக்கும் அந்த இனிய பெருந்தகையாளரின் இயல்பையும் திறத்தையும் எவர்தான் முழுதுமாக இயம்பவியலும்?
அவர்களைப்பற்றி எத்தனை ஆயிரம் நூற்கள் எழுதினாலும் அவர்களின் கால் துகளில் பட்டுத்தெறித்த தூசிக்குக்கூட இணையாகாது. அந்தப் பெருமகனாரின் நினைவாகத்தான் இந்தப் பெருநாள் – தியாகத் திருநாள்.
‘இறைவா! மனிதர்களில் சிலரை இவர்களை நோக்கித் திருப்புவாயாக!’ என்று அந்த இறைத்தூதர் இறைஞ்சினார்கள். இன்று ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களின் இதயமும் புனித கஅபாவின் பக்கம் வாழ்வில் ஒருமுறை ஒவ்வொரு முஸ்லிமுக்கும். புனித ஹஜ் கடமையாக்கப்பட்டிருக்கிறது.
பெற்ற மகனை பலிகொடுக்கத் துணிந்த அந்த வீரச்செயலைப் போற்றி, ஆடு அல்லது மாடு அல்லது ஒட்டகம் அறுத்துப் பலியிடுதல் கடனாக்கப்பட்டிருக்கிறது. இரத்தமும் சதையும் எதுவும் இறைவன் விருப்பமல்ல. எனினும் இபுராஹீம் நபிகள் செய்யத் துணிந்த அந்த தியாகத்தைப் பாராட்டும் வகையில் இது ஹஜ்ஜுக் கடமையின் ஓர் அங்கமாக இறைவனாலும் இறைத் தூதராலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. பொங்கிப் பெருகும் ‘ஜம்-ஜம்’ நீ ஆண்டுகள் ஆயிரங்களைக் கடந்தும் இன்னும் பொங்கியபடியே இருக்கிறது. அதன் புதுமையும் பழம்பெருமையும் இஸ்லாமிய உலகு மட்டுமின்றி, அனைத்துலகும் தொட்டும் தொடர்ந்தும் பொங்கியபடியே இருக்கிறது.
‘இறைவா! இந்த இறைச்சியிலும் நீரிலும் அபிவிருத்தி அளிப்பாயாக!’ என்று வேண்டினார்கள். அது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அன்னை ஹாஜராவை விட்டுப் பிரிகையில் ‘கனிவகைகளை வழங்குவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். உலகின் எந்த பாகத்திலும் கிடைக்கும் அத்தனை கனிவகைகளிலும் மக்கம் கனிந்து கிடக்கிறது.
உலகம் அனைத்தும் மானுடம் அனைத்தும் ஓர்குலம். ஒன்றே குலம், ஒருவனே தேவன். அவனே இறைவன். அவனது அடிமைகள் நாம் எனும் ‘தல்பியா’ எனும் சங்கநாதம் மக்கம் தொட்டு ஒலிக்கிறது. அதன் பழமையும் பெருமையும் மானுட சமுதாயம் போற்றும் உரிமையும் கடமையும் சமதர்மச் சமுதாயச் சோலையாக, சரிநிகர் சமானமாக அனைவரையும் ‘வெள்ளாடை’ தரித்த புனிதர்களாகக் காட்டும் புண்ணியத் திருவிழா ஆரம்பமாயிற்று. அண்ணலின் ஆதிகுலத் தோன்றல் நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தந்தையார் நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், துணைவியார் ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அம்மையார் நினைவுகளில் மக்கம் பூத்துக் கிடக்கிறது. உலக முழுவதும் அதன் வழித்தடம் பார்த்து நடக்கிறது. இனி உலகம் உள்ளளவும் இந்த வரலாறு ‘ஜம்-ஜம்’ நீர்போல் வந்து கொண்டேயிருக்கும் கஅபா இறையாலயம் அந்த கண்ணியனின் புகழ்மொழியில் நனைந்து கொண்டேயிருக்கும்!
கவிஞர் ப. அத்தாவுல்லாஹ்