ஆர்.எஸ்.எஸ். புத்தகங்களில் பொய் மூட்டைகள்!
சீதாராம் யெச்சூரி எம்.பி.
சமூக ஒடுக்குமுறை என்பது சாதிய ஒடுக்குமுறையையும் (caste oppression) பாலின ஒடுக்குமுறையையும் (gender oppression) உள்ளடக்கிய ஒன்று. இவற்றை ஆர்எஸ்எஸ் தங்களுடைய இந்து ராஷ்ட்ரத்தை நிறுவிடும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே மேற்கொண்டு வருகிறது.
அதன் சமீபத்திய நிகழ்வுதான் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில், பிகானீர் -ஜெய்பூரில் உள்ள அரசுப் பள்ளிக்கூடம் ஒன்றில், உயர்சாதி ஆசிரியருக்காக வைத்திருந்த மண்பானையிலிருந்து தண்ணீர் குடித்தார்கள் என்று காரணம் காட்டி பதினொரு தலித் மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பதாகும். நம் நாட்டில் சாதிய மற்றும் சமூக ஒடுக்குமுறை இப்போதும் மிகவும் உச்சத்தில் இருப்பதையே இந்நிகழ்வு வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு ஒரு பக்கத்தில் தலித் மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அதே சமயத்தில், ஆர்எஸ்எஸ் இயக் கத்தின் தலைவர் தலித்துகள் இவ்வாறு ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருப்பதற்குத் தாங்கள் காரணம் அல்ல என்பதைக் காட்டும் விதத்தில் மூன்று புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்.
அந்தப் புத்தகங்கள் மூன்றிலும், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பல இதர ஒடுக்கப்பட்ட குழுவினர் மீது ஒடுக்குமுறை ஏவப்படுவதற்குத் தாங்கள் காரணம் அல்ல என்றும், மத்தியக் காலத்தில் அயல்நாடுகளிலிருந்து படையெடுத்து வந்த முஸ்லிம் கள்தான் காரணம் என்றும் அந்தப் புத்தகங்களுக்கு அணிந்துரை அளித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். (தி இந்துஸ்தான் டைம்ஸ், செப்டம்பர் 22, 2014).
தங்கள் இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழும் பாஜக மத்திய அரசாங்கத்தில் அமர்ந்திருப்பதால் தைரியம் அடைந்துள்ள ஆர்எஸ்எஸ் இந்தியாவில் உள்ள அனைத்துக் குழு வினரையும் ஒன்றாக்கி, ஒரே நூலின் கீழ், ஒரே இந்து அடையாளத்தின் கீழ் கொண்டுவந்து, அதனை சட்டப்படி செல்லத்தக்கதாக மாற்றவும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு, மாபெரும் நம் நாட்டின் பல நூறு ஆண்டுகால வரலாறு, அவர்கள் விடும் சரடுகளுக்கு ஏற்ப, திருத்தி எழு தப்பட்டாக வேண்டியது அவசிய மாகும்.
தற்போதைய நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, அவர்கள் கருத்தாக்கமான இந்து ராஷ்ட்ரமாக மாற்றி அமைப்பதற்கு, இது அவசியமாகும். பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா வில் இருந்துவரும் பலதரப்பட்ட கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், பழக்க வழக்கங்கள், மொழிகள் கொண்டவர்களை இந்துயிசம் என்னும் ஒரே குடையின்கீழ் அடைத்திட அவர்கள் முயற்சிக்கிறார்கள். இரண்டாவதாக, ஓர் அயலக எதிரியை (இந்துக்களுக்கு அயலாக உள்ளவரை அதாவது முஸ்லிம்களை,) உருவாக்க வேண்டியது அவர்களுக்குத் தேவை. தங்கள் குறிக்கோளை எய்துவதற்காக இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட் டுள்ளார்கள்.
வரலாற்றை மாற்றி எழுதும் முயற் சியில் ஈடுபட்டுள்ள ஆர்எஸ்எஸ் தன்னுடைய சமீபத்திய நடவடிக்கையாக, இந்து சுவடிகளின்படி சூத்திரர்கள் எப்போதுமே தீண்டத் தகாதவர்களாக இருந்ததில்லை, என்று கூறியிருக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குருமார்கள் அமைப்பில் இரண்டாவது குருமாராக இருக்கும், பையாஜி ஜோஷி, இவ்வாறு கூறியிருக்கிறார்.
மத்தியக் காலத்தில் இஸ் லாமியர்களின் அட்டூழியங்கள்தான் தீண்டத்தகாதவர்கள், தலித்துகள் மற்றும் இந்திய முஸ்லிம்கள் உரு வானதற்குக் காரணம் என்றும் கூறுகிறார். இதே தொனியை எதி ரொலித்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மற்றொரு மூத்த தலைவர், இஸ்லாமியர் காலம் தொடங்கிய காலத்தில், பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் எதிராக அட்டூழியங்கள் நடைபெற்றதன் விளைவாகத்தான், ஒடுக்கப்பட்ட சாதிகளும், கீழ் சாதி களும் தோன்றின என்றும் தலித்துகள் என்போர் துருக்கியர், முஸ்லிம்கள் மற்றும்மொகலாயர் சகாப்தத்தில் சிருஷ்டிக்கப்பட்டனர் என்றும் எழுதி இருக்கிறார்.
இந்திய வரலாற்றை இவ்வாறு திரித்து எழுதும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் அமைப்பு ஒன்று சமீபத்தில் ரகசியக் கூட்டம் ஒன்று நடத்தியதாகவும் அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்றாசிரியர்கள் பங்கேற்று, தற்போதுள்ள பாடத் திட்டங்களில், இந்துக்கள் அனை வரையும் ஒருமுகப்படுத்தும் தங்கள் குறிக்கோளை எய்திடுவதற்காக சாதி அல்லது கீழ் சாதி ஆகியவற்றிற்கும் அப்பால் இந்து அடையாளத்தை நிலைநிறுத்தக்கூடிய விதத்தில், மாற்றங்களைக் கொண்டுவருவது தொடர்பாக விவாதித்தார்கள் என்றும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன.
சாதிய அமைப்பும் அதனையொட்டி நடை பெற்று வரும் சமூக அட்டூழியங்களும் புராதன இந்து சமூகத்தில் எப் போதுமே நடந்ததில்லை என்பது போலவும், முஸ்லிம்கள் படை யெடுத்து வந்தபின்னர்தான் சமூகத்தில் இவை உருவாயின என்று கூறுவதும் இதுவரை எழுதப்பட்டுள்ள வர லாற்றையும், காலங்காலமாக வாய் மொழி வழியாகக் கூறி வரும் வள மான அனுபவங்களையும் முழுமை யாகத் திரிக்கும் செயலாகும்.
உண்மையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூலவேர்கள், `இந்து சட்டத்தின் (‘Hindu code’) மத ரீதியான ஒப்புதலுடன் அமைக்கப் பட்டு, அவை ஆர்எஸ்எஸ் இயக்கத் தினரால் மிகவும் புனிதமாகப் போற்றப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மாதவ சதாசிவ கோல்வால்கரால் சரி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளாகும்.
1939 இல் நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம் (We or Our Nationhood defined (1939,) என்று கோல்வால்கர் எழுதிய தன் புத்த கத்தில், கோல்வால்கர் மனுவை உலகின் முதலாவதும், மாபெரும் சட்ட வல்லுநருமாவார் என்று போற்றிப் பாராட்டியிருப்பதுடன், அவர்தான் தன்னுடைய மனு தர்மத்தில், உலகில் உள்ள அனைத்து மக்களும் இந்துஸ்தானுக்குச் சென்று அந்நாட்டிலுள்ள `முதலில் பிறந்த பிராமணர்களின் புனிதக் காலில் விழுந்து வணங்கி, தங்களுடைய கடமைகள் என்ன என்பதைக் கற்றுத் தெளிய வேண்டும், என்றும் கட்ட ளையிட்டிருக்கிறார். (கோல்வால்கர், 1939, பக். 55-56).
பிராமணன் தலை யிலிருந்து பிறந்தவன், சத்திரியன் (அரசன்) கைகளிலிருந்து பிறந்தவன், வைசியன் தொடைகளிலிருந்து பிறந்தவன், சூத்திரன் கால்களிலிருந்து பிறந்தவன். இதன் பொருள் மக்கள் இவ்வாறு நான்கு மடிப்புகளாக ஆக்கப்பட்டி ருக்கிறார்கள் என்பதே, அதாவது இந்து மக்கள் நம் கடவுள். இப்போது மனுஸ்மிருதி என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
சூத்திரனுக்கு மிகவும் சிறந்த இயற்கையாய் அமைந்த செயல் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்வதுதான் என்று பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. இதைத் தவிர அவன் வேறு எதைச்செய்தாலும் அவனுக்குப் பலனளிக்காது.“ (123, அத்தியாயம் 10)பின்னர் மனுஸ்மிருதி சமூகத்தில் சாதியற்றவர்கள் என்றும் தீண்டத் தகாதவர்கள் என்றும் குறிப்பிடப் படுபவர்களை வரையறுப்பதைத் தொடர்கிறார். அவர்களுக்கு சமூகத்தில் எந்த இடமும் எப்போதும் கிடையாது என்று கூறும் அவர், அவர்களது இழி செயல்பாடுகள் குறித்தும் வரையறுக்கிறார்.
சகித்துக் கொள்ள முடியாத சாதியக் கட்டமைப்பு கோல்வால்கரின் நூலிலும் இன்றைய காவிப் படை யினரிடத்திலும் எதிரொலிப்பதைக் காணலாம். ஏனெனில் மனுஸ்மிரு தியும் `ஆரியர் சமூக அமைப்பின் அடிப்படையில் அமைந்த ஒன்றுதான். ஆரியர் அல்லாதவர்களுக்குள்ள முரட்டுத்தனம், கொடூரமானவனாக இருத்தல் மற்றும் சடங்குகளைப் புரியும்போது வழக்கமாகத் தோல் வியுறுதல் அனைத்தும் இந்த உலகில் அவர்கள் கறைபட்ட கருப்பையி லிருந்து பிறந்தவர்கள் என்பதைத் தெளிவாய்க் காட்டும். (58, அத்தியாயம் 10).
ஆயினும் தாங்கள் விரும்பும் `இந்து ராஷ்ட்ரம் நிறுவப்படவேண் டுமாயின், அதற்கு ஆரியர்கள் இந்த நிலத்தின் பூர்வகுடியினர்தான் என்றும், அவர்கள் வேறெங்கிருந்தும் வந்தேறியவர்கள் அல்ல என்றும் மறுக்கவியலாத அளவிற்கு மெய்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
நம்பிக்கையின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் அனைத்து வரலாற்றுச் சான்றுகளையும் தள்ளுபடி செய்து விடுகிறது. வரலாற்றாசிரியர் ரொமிலா தாபர், சமஸ்கிருத வேதத்தின் மொழி யியல் சாட்சியமானது ஈரானிலிருந்து ஓர் இந்தோ-அய்ரோப்பிய மொழி இந்தியாவிற்குள் வந்தது, ஆனால் அது இந்தியா ஆரியர்களின் தாய்நாடு என்னும் கற்பிதத்தினை ஆதரித்திட வில்லை, (செமினார் 400, டிசம்பர் 1992) என்று நிறுவியிருக்கிறார்.
இவ்வாறு ஆர்எஸ்எஸ் கூட்டத்தினர், வரலாற்றிற்கு மேல் புராணத்தையும், தத்துவஞானத்திற்கு மேல் மத நம்பிக்கையையும் வைத்து, `நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இத்தகைய கேடுகெட்ட சமூக அமைப்புதான் இன்றைய இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து அநீதிகளை இழைத்து வருகிறது. நீதிக்கான போராட்டத்தைத் தொடங்கிட இந்த சமூக நிலைமை தூக்கி எறியப்பட்டாக வேண்டும்.
இந்திய வரலாற்றை மாற்றி எழுதிக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ்/ பாஜக நிகழ்ச்சி நிரலானது, யார் யார் எல்லாம் இந்துக்கள் கிடையாது என்று அவர்கள் கருதுகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் அடிப்படை மனித உரிமைகளை மறுக்க வகை செய்வதுடன், இத்தகைய ஏற்றுக் கொள்ள முடியாத சமூக ஒடுக்கு முறையும் தொடர்ந்து நீடித்திருக்கக் கூடிய விதத்தில் வரையப்பட்டு வருகிறது.
நன்றி: தீக்கதிர், 1.10.2014
Read more: http://viduthalai.in/page-2/88515.html#ixzz3EuWZHKrj