மத நடைமுறைகள் விடயத்தில் அவர்களும் நாமும்
முஸ்லிமல்லாதவர்களில் சிலர் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் மிக மிகத் தவறான கருத்துக்கள் ஊட்டப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்நிலை எவ்வளவு தூரம் அவர்கள் மத்தியில் பரவியிருக்கிறது என்பதை எங்களால் ஊகிக்க முடியாதிருக்கிறது.
முன்பெல்லாம் இஸ்லாம் பற்றி எழும் சந்தேகங்களை அவர்கள் எம்மிடம் கேள்விகளாகக் கேட்பார்கள். நாம் எங்களால் முடிந்த பதில்களைக் கூறினால் அவர்கள் திருப்தியடைகிறார்களோ இல்லையோ அமைதியாக இருந்து விடுவார்கள். எனினும், இன்றைய நிலை அவ்வாறில்லை. முஸ்லிம்களது ஒவ்வொரு நடைமுறைக்கும் அவர்கள் ஒரு விளக்கம் சொல்கிறார்கள்.
படுமோசமான எண்ணங்கள் அவர்களது உள்ளங்களில் தூவப்பட்டிருப்பதை அந்த விளக்கங்கள் உணர்த்துகின்றன. எத்தகைய உண்மையுமில்லாத அந்த விளக்கங்களை அவர்கள் நம்பியிருக்கிறார்கள் என்பது எமக்கு ஆச்சரியத்தை தருகின்றது. அவர்களுக்கு மத்தியில் இருக்கும் சில படித்த மக்கள் கூட அவற்றை முழுமையாக நம்பியிருப்பது போன்றே எமக்கு தோன்றுகின்றது.
அவர்கள் கூறும் அதிசயமான விளக்கங்களுக்கு சில உதாரணங்கள் வருமாறு:
முஸ்லிம்கள் நோன்பு நோற்பது பற்றி அவர்கள் கூறும் விளக்கம்: முஸ்லிம்கள் சாப்பாட்டுப் பிரியர்கள். பதினொரு மாதங்களாக உண்டு கொழுத்திருக்கும் அவர்கள் தங்களது எடையைக் குறைத்துக் கொள்வதற்காக ஒரு மாத காலம் தொடர்ச்சியாக நோன்பு நோற்கின்றனர்.
சிறுநீர் கழித்து விட்டு சுத்தம் செய்வது பற்றிய விளக்கம்: முஸ்லிம்கள் அதிகம் இறைச்சி உண்கிறார்கள். அதனால் அவர்களது உடல்களிலிருந்து வெளியேறும் கழிவுகள் துர்நாற்றமுடையவையாக இருக்கின்றன. அந்த நாற்றம் பிறருக்குத் தெரியவராமல் இருப்பதற்குத்தான் அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்கிறார்கள். மேலும் அதிகமாக நறுமணம் பூசிக் கொள்கிறார்கள்.
இவ்வாறு முஸ்லிம்களின் நடைமுறைகள் ஒவ்வொன்றிற்கும் அவர்கள் புதுப்புது விளக்கங்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். முஸ்லிமல்லாத அனைவரும் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று நாம் கூறவில்லை. இருப்பினும், இது போன்ற நச்சுக் கருத்துக்கள் அவர்களிடையே பரவிச் சென்றால் நாளடைவில் மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு முற்றிலும் பாதிக்கப்பட்டுவிடும். இவ்வாறு அங்கலாய்த்தவர்கள் ஒரு வைபவத்திற்கு வருகை தந்திருந்த படித்த மூத்த எமது சகோதரர்களில் சிலர். அவர்கள் அண்மைய நடப்புகள் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தவேளை சுட்டிக்காட்டிய விடயங்களே இவை. முஸ்லிம்களின் உயிர், உடைமைகளுக்கு மட்டுமல்ல, அவர்களது கோட்பாடுகள், நடைமுறைகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கம் நல்லுள்ளங்களுக்கு மத்தியில் தூவப்பட்டிருப்பதையே இவை உணர்த்துகின்றன.
முஸ்லிமல்லாதவர்கள் பற்றிய எமது கவலை இதற்கு நேர்மாறானது. அவர்கள் மது அருந்தக் கூடாது. அவர்களது குடும்ப மற்றும் இரத்த உறவுகளிடையே சண்டைகளோ சச்சரவுகளோ வரக்கூடாது. அவர்களது துன்பங்கள், துயரங்கள் துடைக்கப்பட வேண்டும். வறுமை, பசி, பிணி என்பன அவர்களது வாழ்விலிருந்து அகற்றப்பட வேண்டும். அவர்களது உரிமைகள், உடைமைகளுக்கு நீதியிழைக்கப்படக்கூடாது. அவர்களது உழைப்புக்கு தகுந்த ஊதியம் வழங்கப்பட வேண்டும். அவர்களது வாழ்க்கையைச் தடம் புரளச் செய்யும் அனைத்து சீர்கேடுகளும் களையப்பட வேண்டும். மொத்தத்தில் அவர்கள் சுபிட்சமாக வாழ வேண்டும். அவர்களது விடயத்தில் நாம் கொண்டுள்ள விருப்பம் இது. எனினும், எமது விடயத்தில் அவர்கள்..?
முஸ்லிமல்லாதவர்கள் ஏற்றிருக்கின்ற மதம், கொள்கை, கோட்பாடுகள், நடைமுறைகள் என்பன தொடர்பில் இஸ்லாத்திற்கு தெளிவானதொரு நிலைப்பாடு இருக்கிறது. அந்த நிலைப்பாடு முஸ்லிமல்லாதவர்கள் விடயத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு புரிய வைத்திருக்கிறது. அந்தப் புரிதலின் விளைவுதான் அவர்களின் விடயத்தில் நாம் கொண்டுள்ள கரிசனையாகும். அந்தப் புரிதல் பல முக்கியம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது.
1. “நாம் ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களது நடைமுறைகளை அலங்கரித்துக் காட்டியிருக்கிறோம்” என 6: 108 ஆம் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். இதன் பிரகாரம் ஒவ்வொரு சமூகமும் தனது கோட்பாடுகள், நடைமுறைகள் என்பவற்றில் கொண்டுள்ள பற்றை ஒரு யதார்த்தம் எனக் கருத வேண்டும் என இஸ்லாம் எடுத்துரைக்கிறது.
2. சமூகத்தின் நடைமுறைகள் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டப்பட்டிருப்பதால் அவர்களது நடைமுறைகளை இழிந்துரைக்க வேண்டாம். அவர்கள் அழைக்கும் தெய்வங்களை ஏச வேண்டாம் என அதே வசனத்தில் (6:108) அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இது அந்த இஸ்லாமியப் பார்வையின் அடுத்த அம்சம்.
3. அத்தோடு மற்றுமொரு அம்சத்தை 2:256 ஆவது வசனத்தினூடாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. இஸ்லாத்தை மற்றொருவருக்கு பலவந்தமாக திணிக்க முடியாது என்பதே அதுவாகும். தத்தமது அறிவின் மூலம் ஒருவர் சுயமாக இஸ்லாத்தை விளங்கி ஏற்றுக் கொள்வதனையே அல்லாஹ் விரும்புகிறான். அஞ்சியோ அல்லது பொருளாசை காரணமாகவோ இஸ்லாத்தை ஒருவர் ஏற்றுக் கொள்வதை அல்லாஹ் விரும்புவதில்லை.
4. அடுத்த அம்சம் மனிதர்கள் எதனை விளங்கினார்கள், எதனை ஏற்றுக் கொண்டார்கள், எவற்றை நிராகரித்தார்கள்? போன்ற இன்னோரன்ன விடயங்கள் குறித்து இறுதித் தீர்ப்பு வழங்கும் ஒரு நாள் இருக்கிறது. அன்றைய தினம் மனிதர்களிடையே இருந்த சர்ச்சைகளையெல்லாம் அல்லாஹ் தீர்த்து வைப்பான். (2:113) உலகில் அத்தகைய சர்ச்சைகளைத் தீர்க்க மனிதர்களால் முடியாது. உலகில் ஒன்றை மட்டும் எம்மால் செய்ய முடியும்.
மனிதனது அறிவு, ஆராய்ச்சி என்பவற்றிற்குப் புலப்படும் விதமாக நல்லவற்றையும் கெட்டவற்றையும் வேறுபடுத்திக்காட்டலாம். விஞ்ஞான ரீதியாகஸ ஆக்கபூர்வமாக ஒன்றை விமர்சிக்கலாம். மனித சமூகம் அங்கீகரிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி நன்மை, தீமைகளைப் புரிய வைக்கலாம்.
இந்த வழிமுறைகளுக்கப்பால் சென்று மற்றொரு சமூகத்தின் கோட்பாடுகளையோ நடைமுறைகளையோ இழிவுபடுத்துவதற்கு இஸ்லாம் இடம் தரவில்லை.
இந்த வகையில் ஏனைய சமூகங்களில் கோட்பாடுகள், நடைமுறைகள் போன்றவற்றை இழிவுபடுத்தும் ஈனச் செயலில் பொதுவாக முஸ்லிம்கள் ஈடுபடுவதில்லை. விதிவிலக்காக சிலர் ஈடுபடுகிறார்கள் எனின், அவர்கள் மேலே நாம் பார்த்த அந்த இஸ்லாமியப் பார்வையை புரியாதவர்கள் அல்லது தீவிரவாதத்திற்குத் துணை போகின்றவர்கள்.
இந்த ரீதியில் பார்க்கும்போது ஏனைய மதங்கள் விடயத்தில் இஸ்லாத்தின் சகிப்புத்தன்மை மிகத் தெளிவானது வெளிப்படையானது. இந்த சகிப்புத் தன்மையை இஸ்லாத்தில் மட்டுமல்ல, முஸ்லிம்களது வாழ்விலும் தெளிவாகப்பார்க்க முடிகிறது. இலங்கை முஸ்லிம்கள் இந்த சகிப்புத்தன்மைக்கு முன்னுதாரணமாக இந்த மண்ணில் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து காட்டியுமிருக்கிறார்கள். அவர்கள் பிற மதங்களின் கோட்பாடுகள் மற்றும் நடை முறைகளை இழிவுபடுத்தி அந்த மதங்களைப் பின்பற்றுவோரின் மனங்களைப் புண்படுத்தவில்லை.
மத சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம்கள் எந்தளவு நடந்து கொண்டபோதிலும் தீய நோக்கம் கொண்ட சக்திகளுக்கு அது ஒரு பொருட்டல்ல. அவர்கள் இஸ்லாத்தின் மீதும் தன் கோட்பாடுகள், நடைமுறைகள் மீதும் காழ்ப்புணர்வு கொண்டவர்களாகவே இருப்பர். பொய்களையும் அவதூறுகளையும் இட்டுக்கட்டுவதிலும் தப்பபிப்பிராயங்களையும் உண்மைக்கு மாற்றமான செய்திகளையும் பரவச் செய்வதிலுமே அவர்கள் முனைப்பாக இருப்பர்.
தீய சக்திகளின் இந்தப் போக்கைப் பார்த்து முஸ்லிம்கள் பதற்றமடைய வேண்டியதில்லை. அவர்கள் எங்களது நடைமுறைகளை இழிவுபடுத்தும் அதே பாணியில் அவர்களது நடைமுறைகளை நாம் இழிவுபடுத்த முனை யவும் கூடாது.
எங்களுக்கு முன்னாலுள்ள கடமைகள் வேறு. இஸ்லாத்தின் கண்ணியத்தையும் அழகையும் அறிவுபூர்வமாக முன்வைப்பதற்கும் அதன்படி வாழ்வதற்கும் நாம் முன்பை விட எம்மை அதிகமாகத் தயார்படுத்த வேண்டும். தீய சக்திகளின் அவலட்சணங்கள் அதிகரிக்க அதிகரிக்க எமது வாழ்க்கையின் நல்ல பக்கங்கள் மேலும் மேலும் பிரகாசிக்க வேண்டும். இவ்வாறானதொரு திசையில் முஸ்லிம்கள் பயணித்தால் அவர்களது பொறுமைக்கும் நன் முயற்சிகளுக்கும் அல்லாஹ் சிறந்த பிரதிபலன்களைத் தருவான்.
முஸ்லிம்கள் அல்லாஹ்வை நம்பியிருப்பது கூட எம்மை எதிர்க்கும் தீய சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறது. அவர்களில் சிலர் கேட்கிறார்கள் உங்களது அல்லாஹ் ஏன் மௌனமாக இருக்கிறான்? இஸ்ரேலியர்களை கெட்டவர்களாக இருந்தால் அவர்களை அழித்து காஸா மக்களை ஏன் அவன் காப்பாற்றவில்லை? உண்மையில் நாம் அல்லாஹ் என்று கூறும்போதும் அந்தத் தீய சக்திகள் அதனை ஏளனமாகவே பார்க்கின்றன. முஸ்லிம்கள் கல்லையோ மண்ணையோ வணங்கியிருந்தால் அது அவர்களுக்கு ஒரு விவகாரமாக இருந்திருக்காது. உயிரற்ற கல்லையும் மண்ணையும் விட அனைத்துக்கும் உயிர் வழங்கி உணவளித்துப் பாதுகாக்கும் அல்லாஹ்வை நாம் ஏற்றிருப்பதே அவர்களுக்குப் பிரச்சினை.
கிண்டலாக எமது மத உணர்வைச் சீண்டிப்பார்க்கும் அவர்களது இந்த நாகரிகம் பற்றி என்ன சொல்ல இருக்கிறது? அவர்கள் அழைக்கும் தெய்வங்களை ஏச வேண்டாம் என்று அல்குர்ஆன் குறிப்பிடுகின்றபோது அதனை விட உயர்ந்த ஒரு நாகரிகத்தை அவர்கள் எமக்குக் கற்றுத் தரவில்லை.
அல்லாஹ்வை அவர்கள் பழிவாங்கத் துடிக்கும் ஒரு மனிதனைப் போல் கற்பனை செய்கிறார்கள் போலும். முஸ்லிம்களைத் துன்புறுத்தினால் உடனே கோபம் கொண்டு துன்புறுத்தியவர்களைப் பழிவாங்கிவிடுவான் என அவர்கள் அல்லாஹ்வை மட்டிடுகிறார்கள்.
அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டிய முதல் அம்சமே பிழைத்து விட்டது என்பதைத் தான் அவர்களது இந்தக் கூற்று புலப்படுத்துகிறது. அவர்கள் நினைப்பது போல அல்லாஹ் முஸ்லிம்களுடைய இரட்சகன் அல்ல. அல்குர்ஆன் அல்லாஹ்வை மனிதர்களின் இரட்சகன், வானம் பூமியின் இரட்சகன் என்றே குறிப்பிடுகின்றது. அவனது வானத்தின் கீழ், அவன் விரித்த பூமியின் மீது அவன் படைத்த மனிதர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவன் நுணுக்கமாக அவதானித்துக் கொண்டிருக்கிறான். அவன் பார்வையிலிருந்து எவரும் தப்ப முடியாது.
இரண்டாவது அம்சம்: உலகை சன்மானமோ தண்டனையோ வழங்கப்படும் இடமாக அவன் அமைக்கவில்லை. மாறாக, சன்மானத்திற்கும் தண்டனைகளுக்கும் இட்டுச் செல்லும் ஒரு செயற்களமாகவே அல்லாஹ் உலகை ஏற்பாடு செய்திருக்கிறான். “பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டிற்குமிடைப்பட்ட வாழ்க்கை அழகிய முறையில் செயற்படுவோரை சோதித்தறிவதற்கே” என (67:2) அல்லாஹ் கூறுகின்றான்.
எனவே, இங்கு வசப்பட்டு அல்லாஹ் எவரையும் தண்டித்துவிட மாட்டான்.
மூன்றாவது அம்சம்: உலகம் ஒரு சோதனைக் கூடமாகும். அதில் ஆட்சியாளர்கள் முதல் ஆளப்படுபவர்கள் வரை அனைவரும் சோதிக்கப்படுகிறார்கள். தங்களது வாழ்க்கை மூலமாக ஒவ்வொருவரும் தத்தமது சோதனையை எதிர் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வார்த்தைகள் (50:18) மற்றும் நடத்தைகள் (82:11,12) யாவும் தப்பாமல் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நான்காவது அம்சம்: பரீட்சையை முடிப்பதற்காக ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கப்பட்ட அவகாசத்தை அல்லாஹ் முழுமையாக கொடுத்து விடுகிறான். அந்த அவகாசத்தை அவன் பறித்துக் கொள்வதில்லை. கெட்டவர்களைத் தண்டித்து விட்டால் அவர்களது அவகாசம் பறிக்கப்படுகிறது. அப்போது பரீட்சை அர்த்தமற்றதாகி விடுகிறது. எனவே, அவர்களது பரீட்சை முடியும் வரை அவர்களை விட்டு வைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.
ஐந்தாவது அம்சம்: “மனிதர்கள் யாரும் தங்களுக்கு தரப் பட்ட அவகாசத்தை முடித்துக் கொண்டு அவனிடமிருந்து தப்பிச் சென்றுவிட முடியாது.” (55:33) மரணத்தின்பின்னால் அவர்கள் அனைவரும் தங்களது இரட்சகனிடமே ஒன்று சேர வேண்டும்.
ஆறாவது அம்சம்: “மரணத்தின் பின்னர் மனிதர்கள் அனைவரும் எழுப்பப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள். அதற்கான நாள் ஒன்றும் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அன்று எமது வானமும் எமது பூமியும் நாங்கள் இன்று காண்பது போலிருக்க மாட்டாது.”(14: 48)
அன்று நல்லவர்களுக்கு சுவனமும் தீயவர்களுக்கு நரகமும் பரிசாக அல்லது தண்டனையாக வழங்கப்பட இருக்கிறது.
ஏழாவது அம்சம்: “அந்த நாளை சந்தித்த பிறகு தனது தவறை உணரும் மனிதன் மீண்டும் உலகம் சென்று தன்னைத் திருத்திக் கொள்ள அவகாசம் தருமாறு தனது இரட்சகனிடம் கேட்பான். எனினும், அந்த அவகாசம் அவனுக்கு வழங்கப்படமாட்டாது.” (23:100)
இவற்றையெல்லாம் அறிந்திராத நிலையில்தான் “உங்களது அல்லாஹ்விடம் செல்லுங்கள். அவனால் முடியுமாக இருந்தால் உங்களைக் காப்பாற்றுமாறு கூறுங்கள் ”என அவர்கள் கிண்டல் செய்கிறார்கள்.
உலகில் ஒரு சமூகம் நீதியிழைக்கலாம் மற்றொரு சமூகம் அழிந்து போகலாம். அழிந்து போவது நல்ல சமூகமாகக்கூட இருக்கலாம். எனினும், அவர்களைக் காப்பாற்ற அல்லாஹ் வரவேண்டியதில்லை. காப்பாற்றப்பட வேண்டியவர்களைக் காப்பாற்றி, தண்டிக்கப்பட வேண்டியவர்களைத் தண்டிப்பதற்கு ஒரு நாளை அவன் ஏற்கனவே சித்தப்படுத்திவிட்டான்.
எனினும் உலகில் நல்லவர்களுக்கு ஒரு சன்மானத்தையும் கெட்டவர்களுக்கு ஒரு தண்டனையையும் அல்லாஹ் வைத்திருக்கிறான். அதனை நல்லவர்களும் கெட்டவர்களும் உலகில் பெற்றே தீருவார்கள்.
o நல்லவர்களுக்கு உலகில் கிடைக்கும் சன்மானம்: மன நிறைவு, அமைதி.
o தீயவர்களுக்கு உலகில் கிடைக்கும் தண்டனை: சஞ்சலங்கள், ஆற்றாமைகள், குரோதங்கள், பகைமைகள் மற்றும் நெருக்கடிகள் நிறைந்த உள்ளம்.
கெட்டவர்கள் அதிகாரம் செல்வம் என எதனைக் குவித்து வைத்திருந்தாலும் நிம்மதியை இழந்தவர்களாகவே வாழ்ந்திருப்பார்கள். கெட்டவர்களின் உள்ளங்கள் அவர்களை அமைதியக வாழ விடவே மாட்டாது.
நல்லவர்கள் உலகில் சிலபோது நஷ்டமடைவார்கள். எனினும், உள்ளத்தால் அவர்கள் பலம் பெற்றிருப்பார்கள். கெட்டவர்கள் அனைத்தையும் தம்மிடம் வைத்துக் கொண்டு பயத்தோடு வாழ்கின்றவேளை நல்லவர்கள் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனோ பலத்தை இழந்திருக்க மாட்டார்கள்.
இந்த வாழ்க்கைப் பாடங்களையெல்லாம் கற்று செயல்படுகின்ற முஸ்லிம்கள் பிற சமயத்தவர்களது விடயங்களில் மென்மையும் சகிப்புத்தன்மையும் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவற்றை விளங்காமல் Tit fot Tat என்ற மனப்பாங்குடன் செயற்படுபவர்கள் கடும் போக்கைக் கடைபிடிக்கின்றனர்.
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை 99.9% வீதமானவர்கள் முதல் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். நாங்கள் பிற மத சகோதரர்களுடன் தொடர்ந்தும் இந்த நிலைப்பாட்டையே கடைபிடிக்க வேண்டும். அவர்களுள் சிலர் எங்களது மத உணர்வுகளைச் சீண்டியதற்காக நாம் பதற்றமடைய வேண்டியதில்லை அது எமது வழிமுறையுமல்ல.
உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தீய சக்திகளின் சதிகளுக்குத் துணை போகாமல் அறிவுபூர்வமாக செயல்பட்டு நாட்டையும் சமூகத்தையும் நல்வழியில் இட்டுச் செல்ல வேண்டிய கடமைப்பாட்டை முஸ்லிம்கள் அதிகமதிகம் உணர வேண்டிய காலமிது.
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,
அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
source: http://usthazhajjulakbar.org