Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஆழ்கடல் சூரர்களும் ஊர்க் காதலர்களும்

Posted on September 30, 2014 by admin

ஆழ்கடல் சூரர்களும் ஊர்க் காதலர்களும்

ஊர்க் காதலர்கள்

காயல்பட்டினத்தைப் பற்றிக் கேள்விப்பட கேள்விப்பட ஆச்சரியம் அதிகமாகிக்கொண்டே போனது. சொந்த ஊர்க் காதல் நம்மூரில் விசேஷம் இல்லை. என்றாலும், காயல்பட்டினக்காரர்களின் ஊர்க் காதல் அசரடிக்கிறது.

காயல் கலாச்சாரம் தனிக் கலாச்சாரம்

“தமிழ்நாட்டுல உள்ள பாரம்பரிய முஸ்லிம்கள் ஊர்கள்ல ஒண்ணு காயல்பட்டினம். மத்தியக் கிழக்குலேர்ந்து கடல் வாணிபத்துக்காக வந்தவங்க மண உறவு கொண்டு தங்குன ஊருங்கள்ல ஒண்ணு இது.

காயல்பட்டினத்துக்குன்டு தனிக் கலாச்சாரம் உண்டு. தமிழ்க் கலாச்சாரமும் அரபுக் கலாச்சாரமும், கடலோடிகளோட வாணிபக் கலாச்சாரமும் ஒண்ணுகூடி உருவான கலாச்சாரம் இது. கடக்கரையை அலைவாய்க்கரைன்டு சொல்லுவோம்.

காலைச் சாப்பாடு முடிஞ்சுட்டுதாங்கிறதைப் பசியாறிட்டீங்களான்டு கேப்பம். பழைய சோத்தைப் பழஞ்சோறும்பம். ரசத்தைப் புளியானம்பம். இப்பிடிச் சீர்ப்பணியம், போனவம், வெல்லளியாரம், சர்க்கரைப்புளிப்புன்டு எங்களோட சீர் பலகாரங்கள்ல ஆரமிச்சு, நாங்க அன்டாடம் பயன்படுத்துற பல சொல்லுங்க பழந்தமிழ்ச் சொல்லுங்க.

இயல்பா எங்க மக்கள்கிட்ட இருக்கு. காலங்காலமா இங்கே காவல் நிலையம் கெடையாது. மதுக்கடை கெடையாது. வட்டி கெடையாது. வரதட்சிணையையும் ஒழிச்சுட்டோம். இங்கெ பொறந்தவங்களுக்கும் புகுந்தவங்களுக்கும் வேற எந்த ஊரும் ருசிக்காது” என்கிறார் கலாமி. ‘காயல்பட்டினம் வரலாறு’ நூலாசிரியர்.

“இது தாய்வழி சமூக மரப கடைப்பிடிக்குற ஊர். கல்யாணம் முடிச்சதும் மாப்பிள்ளதான் பெண் வீட்டுக்கு வாழப் போகணும். பெரும்பாலான ஆண்கள் கடல் தாண்டி வாணிபத்துல இருக்கிறவங்கங்கிறதால, இயல்பாவே எல்லா நிர்வாகமும் பெண்கள் கையிலதாம் இருக்கும்.

பெண்களுக்குச் சொத்துரிமையைப் பத்திப் பேசுற காலத்துக்கெல்லாம் முன்னாடியே, இங்கெ பெண் பிள்ளைங்களுக்குச் சொந்த வீட்டைச் சீதனமாக் கொடுக்குற வழக்கம் வந்துருச்சு. ஒவ்வொரு வீட்டையும் ஒட்டிப் பெண்கள் பயன்படுத்துறதுக்குன்னே ஒரு முடுக்கு இருக்கும். அது வழியாவே பூந்து ஊரோட எந்தப் பகுதிக்கும் போய்ட்டு வந்திரலாம்.

அந்தந்த வீட்டை ஒட்டியிருக்குற ஆண்களைத் தவிர, வேற ஆண்கள் இந்த முடுக்கைப் பயன்படுத்தக் கூடாது. ஆனா, பெண்கள் முடுக்கையும் பயன்படுத்தலாம்; வீதியையும் பயன்படுத்தலாம்” – காயல்பட்டினம் வீடுகளைப் பற்றிய சுவாரசியங்களை அடுக்குகிறார் ஷேக்ணா.

ரத்த உறவு நல்லிணக்கம்

“அந்தக் காலம் தொட்டே இங்கெ பொறந்த ஒவ்வொருத்தரும் தாயா, புள்ளயா பழகுற மரபைக் கடைப்பிடிச்சுக்கிட்டு இருக்கோம். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள்ங்கிற வேறுபாட்டுக்கெல்லாம் இங்கெ எடம் கொடுக்குறதில்ல. எங்களுக்குள்ள பால்குடி உறவு உண்டு.

தாய்ப்பால் இல்லாத எத்தனையோ முஸ்லிம் பிள்ளைங்களுக்குத் தன்னோட பால் தந்து ஊட்டின தலித் பெண்கள் இங்கெ உண்டு. அவங்களை இன்னொரு தாயா பாவிச்சு, பராமரிக்குற பிள்ளைங்களும் உண்டு.

மகாத்மா மேல எங்களுக்கு இருக்குற மரியாதையைக் காட்ட, அவருக்கு ஒரு வளைவு கட்டினம். கால்பந்துன்னா எங்க ஊர்க்காரங்களுக்கு உசுரு. எங்க பிள்ளைங்களுக்கு வெளயாட்டு கத்துக் கொடுத்த கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பீட்டர் இறந்தப்போ, விளையாட்டரங்கம் கட்டி அதுக்கு அவரொட பேரையே வெச்சோம். இங்கெ இருக்குற சமய நல்லிணக்கத்துக்கு உயிரோட நிக்கிற சாட்சியம் அது” – சந்தோஷத் தகவல்களைப் பரிமாறுகிறார் தமிழன் முத்து இஸ்மாயில்.

“ஆர்எஸ்எஸ், பிஜேபிகாரங்ககூட இங்கெ எங்கெகூட ஒண்ணோட மண்ணாதாம் கெடப்பாங்க. நீங்க பண்டாரம் அண்ணனைக் கேட்டுப் பாருங்க. இந்த ஊர்ல இந்து அமைப்புங்களோட பெரிய பிரதிநிதி அவருதான்” என்கிறார்கள்.

பார்த்த மாத்திரத்தில் கட்டியணைத்து வரவேற் கும் பண்டாரம், டீ சொல்கிறார். “ஆயிரம் அரசியல் செய்யலாம், எல்லாமே சக மனுசன் நல்லா இருக்கணும்கிற அக்கறயிலதாம் முடியணும்.இங்கெ சாதி, மத வேத்துமைக் கெல்லாம் எடமே கொடுக்குறதில்ல சார்” என்கிறார் பண்டாரம். டீக்கடை சபாவில் அஞ்சல் துறை ஊழியர் சந்திர சேகரும் சேர்ந்துகொள்கிறார்.

“பெருமைக்குச் சொல்லல. சார், எங்க சமூகத்தைச் சேர்ந்தவங்க பலரை அவங்க தூக்கி விட்ருக்காங்க. பல கல்யாணங்களுக்குத் தாலி எடுத்துக் கொடுத்துருக்காங்க. பழக்கம் வழக்கமுன்னா சும்மா இல்ல, எங்கள்ல அவங்க ஒருத்தர், அவங்கள்ல நாங்க ஒருத்தர்…”

திசையெட்டும் ஒற்றுமைக் குரல்

காயல்பட்டினக்காரர்கள் உலகெங்கும் பரவிக் கிடக்கிறார்கள். எங்கெல்லாம் பத்துப் பேருக்கு மேல் சேர்கிறார்களோ, அங்கெல்லாம் உடனே உருவாகிவிடுகிறது காயல் நல மன்றம். இலங்கை, அரபு அமீரகம், ஹாங்காங், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், வட அமெரிக்கா என்று செல்லும் இடங்களிலும் மன்றங்கள் தொடங்கி, ஊர் உறவைப் பேணுகிறார்கள். ஊருக்கு உதவுகிறார்கள்.

“எந்த ஊர் போனாலும், எங்காளுங்களுக்கு ஊர் பாசம் போவாது. ஊருல என்ன நடக்குதுன்னு விடிஞ்ச உடனே தெரியணும். இந்தச் சின்ன ஊரோட சேதியைப் பரப்ப ஒன்பது இணையப் பத்திரிகைங்க இயங்குதுன்னு சொன்னா நம்புவீங்களா?” என்று வரிசையாகக் காயல்பட்டினம் இணையப் பத்திரி கைகளைப் பட்டியலிடும் சாலிஹ், காயல்பட்டினம் டாட் காம் இணையப் பத்திரிகையை நடத்துபவர்.

“ஊரவுட்டு எங்கெ போனாலும் ஊர் மேல அக்கற கொறயுறது இல்ல. நூறு வருஷத்துக்கு முன்னாடியே இங்கெ தங்களோட சொந்த காசப் போட்டு பள்ளிக்கூடம் கட்டிக் கற்பிச்சாங்க எங்க ஊர் முன்னோருங்க. அந்தப் பாரம்பரியம் இன்னைக்கும் தொடருது. கல்விக்கு, மருத்துவத்துக்கு, சுற்றுச்சூழலுக்கு, விளையாட்டுக்குன்னு ஒவ்வொரு விஷயத்துக்கும் உதவ ஒவ்வொரு சங்கம் இருக்கு.

எந்த ஊருல இருந்தாலும் எங்க வருமானத்துல ஒரு பகுதியக் கொடுத்துருவோம். மத்தவங்க கஷ்டப்படுறத வேடிக்க பாக்குறதில்ல. மன வளர்ச்சி குறைவான குழந்தைங்களப் பராமரிக்கக்கூட இந்தச் சின்ன ஊர்ல ‘துளிர்’னு ஒரு சிறப்புப் பள்ளிக்கூடம் உண்டு. எல்லாமே சக மனுஷம் மேல உள்ள அக்கறதாம்” என்று சொல்லும் புஹாரி, இலங்கையில் வாணிபம் செய்பவர்.

சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷமும் அதுதானே?

என்றென்றும் அன்புடன்,

நூர்தீன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb