பஸ் பயணத்தில் இப்படியும் நடக்கலாம்… எச்சரிக்கை!
அது இரவு நேரத்தில் செல்லும் விரைவு பஸ். பல வருடங்களாக அந்த ஒரே பஸ், குறிப்பிட்ட நேரத்தில் அந்த மார்க்கமாக சென்று கொண்டிருப்பதால், அந்த பஸ் ரொம்பவே தள்ளாடிவிட்டது. இழுத்து இழுத்து அது செல்வதால் விவரம் தெரிந்த பயணிகள் அதில் ஏறமாட்டார்கள். அநேகமாக நாலைந்து பயணிகள் ஏறுவார்கள். ஏறியதும் ஆளுக்கொரு சீட்டில் கால் நீட்டி படுத்துவிடுவார்கள்.
அன்று இரவு பத்து மணி இருக்கும். மழை இதோ இப்போதே வந்துவிடுவேன் என்பதுபோல் மிரட்டிக்கொண்டிருந்தது. 60 வயதைக் கடந்த முதியவர், அந்த பஸ்சில் ஏறினார். முன் பகுதி இருக்கைகளில் நாலைந்து பேர் இருந்தும், படுத்தும் தூங்கிக்கொண்டிருக்க இவர் பின்பகுதியில் போய் அமர்ந்துகொண்டார்.
பஸ் 10, 15 கிலோமீட்டர் கடந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது. மூன்று ஆண்கள் ஒரு பெண்ணை ஏற்றிவிட்டார்கள். அவளுக்கு 30 வயதிருக்கும். நாகரிக தோற்றம். அங்கும் இங்கும் பார்த்தவள் முகத்தை சுழித்தாள். அந்த முதியவரை பார்த்ததும் முகம் மலர்ந்தாள். பாதுகாப்பு தேடுபவள்போல் அவர் அருகில் வந்து அமர்ந்தாள். அவருக்கும் தூக்கம் வரும் வரை பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்த சந்தோஷம். கண்டக்டர் வந்தார். சற்று தூரத்தில் உள்ள ஊர் ஒன்றுக்கு டிக்கெட் எடுத்தாள்.
முதியவரிடம் பேசிக்கொண்டே வந்தாள். அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். தனது நண்பர் ஒருவர் கிராமத்தில் இறந்துவிட்டார். இறுதிக் காரியம் முடித்துவிட்டு திரும்பி வருகிறேன் என்றார். கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில் அவர் தன்னைப் பற்றிய முழு விவரங்களையும் அவளிடம் தெரிவித்து விட்டார். அந்த அளவுக்கு பக்குவமாக கேள்விகளைப் போட்டு பதில்களை வாங்கிக் கொண்டிருந்தாள்.
அவருக்கு தூக்கம் வருவது போலிருந்தது. அவளுக்கு ஒன்றிரண்டு முறை போன் வந்துகொண்டிருந்தது. அதை எடுத்து பேசாமல் அவள் மெசேஜ் மட்டும் கொடுத்துக்கொண்டிருந்தாள். பஸ் அப்போதுதான் திணறி திணறி இருட்டான பகுதிக்குள் புகுந்து சற்று வேகமெடுத்திருந்தது.
திடீரென்று அவள் புடவை முந்தானையை சரிய விட்டாள். ஜாக்கெட்டின் முதல் பட்டன் பகுதியை இழுத்து கிழித்தாள். முதியவர் அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருக்க, அவரோடு நெருக்கமாக அமர்ந்தாள். ‘உங்களை பற்றிய முழுவிவரமும் எனக்கு தெரியும். சமூகத்தில் மரியாதையான ஆள் நீங்க. என் உடை இப்படி ஆவதற்கு நீங்கதான் காரணம் என்று இப்பவே என்னால் கூச்சல்போட்டு பஸ்சை நிறுத்த முடியும். பஸ் போலீஸ் நிலையத்திற்கு போகும். உங்க மானம், மரியாதை எல்லாம் காற்றில் பறந்திடும்..’ என்று மிரட்டும் தொனியில் பேசினாள்.
அவர் கெட்ட கனவு கண்டவர்போல் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வெலவெலத்து போனார். அந்த இரவு நேரத்திலும் வியர்த்தது.
‘மரியாதையாக கையில் கிடக்கிற வாட்சையும், மோதிரத்தையும் கழற்றி கொடுங்க..’ என்றவள், அவரது சட்டை காலரை நீக்கி கழுத்தை பார்த்தாள். பளிச்சென்ற தங்க சங்கிலியும் கிடந்தது. ‘எல்லாத்தையும் கொடுத்திடுங்க. நான் அடுத்த பஸ் ஸ்டாப்பில் சைலண்டாக இறங்கி போயிடுறேன்..’ என்றாள்.
‘தராவிட்டால் என்ன பண்ணுவே?’ பயத்துடன் வாய் குழற கேட்டார்.
அடுத்த ஊர் இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்திடும். அங்கே என்னை எதிர்பார்த்து என் ஆட்கள் நிற்கிறார்கள். இப்பவே நான் கூச்சலை ஆரம்பித்து, அந்த நிறுத்தம் வரும் வரை தொடருவேன். அங்கே பஸ்சில் ஏறும் அவர்கள், உம்மை நையப்பு டைத்துவிடுவார்கள். தட்டிக்கேட்கக்கூட நாதி இருக்காது. கிழவன் பஸ்சில் இளம் பெண்ணிடம் தப்பாக நடந்துகொண்டான் என்றால் ஊரே நம்பும். உடம்பை புண்ணாக்க போகிறாயா?’ என்று அவள் ஒருமையில் பேசி, தான் கைதேர்ந்த திருடி என்பதை அவருக்கு புரியவைத்தாள்.
அவர் அப்படியே குத்துக்கல் போல் இருக்க, அவளே மோதிரம், தங்க சங்கிலி, வாட்ச் எல்லாவற்றையும் கழற்றிக்கொண்டாள்.
அமைதியாக இருந்த அவர் கூச்சல் போட்டு எல்லோரையும் எழுப்பிவிடலாமா? என்று யோசித்தபோது அவள், ‘கண்டக்டர் ஸ்டாப் வந்துடுச்சி’ என்று கத்தினாள்.
பஸ் மெல்ல மெல்ல குலுங்கி நிற்க முயற்சிக்க, தூரத்து வெளிச்சத்தில் ரோட்டில் மூன்று தடியன்கள் நின்றிருந்தனர். அவர்கள் அருகில் ஒரு காரும் நின்றிருந்தது. ‘சத்தம் போட முயற்சிக்காதே. மூன்று பேரும் பஸ்சில் ஏறி உன்னை பந்தாடிவிடுவார்கள். நீ கிழித்த ஜாக்கெட் அப்படியே இருக்கிறது பார்த்தாயா!’ என்றாள்.
பஸ் நின்றது. வேகமாக இறங்கிய அவள், அந்த தடியர்களிடம் இவரை அடையாளங்காட்டினாள். அவர்கள் சைகையால் ‘வாயை பொத்திக்கொண்டு செல்’ என்று சைகையால் மிரட்டினார்கள். அவள் தடியர்களோடு காரில் ஏறினாள். இவர் இருந்த பஸ்சும் கிளம்பியது.
அவர்கள் திட்டமிட்டு காரில் வந்து, அவளை பயன்படுத்தி வழிப்பறி செய்திருக்கிறார்கள். காரியம் முடிந்ததும், அதே காரில் முந்திச் சென்று காத்திருந்து, அவளை ஏற்றிச்சென்றுவிட்டார்கள்.
இப்படி எல்லாம்கூட நடக்குதுங்கிறதை நீங்களும் தெரிஞ்சுக்குங்க!