ஒரு கற்பின் தோற்றமும் – மறைவும்
சமூகத்தில் நிகழ்ந்த எந்த ஒரு மாற்றமும் அது மட்டுமே தனித்து நிகழ்ந்து விடவில்லை. மாறாக, அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தும், ஒன்றின் மாற்றம் பிறவற்றைப் பாதித்தும், அந்தப் பிறவற்றின் மாற்றம் இந்த ஒன்றைப் பாதித்தும் எல்லாம் ஒன்றன்மீது ஒன்றான எதிரெதிர்த் தாக்கத்தின் விளைவாக நிகழ்ந்துள்ளன என்பது முக்கியம். எனவே ஒரு தெளிவுக்காக இவற்றை நாம் இங்கு தனித்தனியாக எடுத்து ஆராய்ந்தாலும் இவை அனைத்தையும் ஒரு சேர நிகழ்ந்த மாற்றமாகவே நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
காட்டாக, ஆடையின்றி அம்மணமாகத் திரிந்த மனிதன் ஆடையுடுத்தத் தொடங்கினான் என்று நாம் குறிப்பிடும் ஒரு சிறிய மாற்றம், பல ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கியது. இந்தப் பல்லாயிரம் ஆண்டுகளில் வெறும் ஆடையில் மட்டும் மாற்றம் ஏற்பட்டு விடவில்லை. மனிதன் தன் வேட்டைக்குப் பயன்படுத்திய கருவிகளில், இருப்பிடங்களில், பிறகு செய் தொழில்களில், ஒரு இடம் விட்டு இடம் பெயர்வதற்கான பயணங்களில் என இப்படி எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
சரி, இந்தப் புரிதலில் நாம் செய்திக்கு வருவோம். அம்மணமாய்த் திரிந்த மனிதன் ஏன் ஆடையுடுத்தத் தொடங்கினான்? இன்றைக்குச் சில இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், மனிதன் காடுகளிலும் குகைகளிலும் குழு குழுவாய், கூட்டம் கூட்டமாய்த் திரிந்து வாழ்ந்தான் என்று நாம் குறிப்பிடும் போது, அந்தக் குழு அல்லது கூட்டம் மிஞ்சிப் போனால், 20, 25 பேருக்கு மேலே இருக்காது. பரந்து விரிந்த இப்புவிக்கோளில் எங்கோ மிக அரிதாக மட்டுமே மனித உயிரிகள் வாழ்ந்த காலம் அது. அக்கால வாழ்க்கை என்பது மனிதன் காலையில் எழுந்ததும், விலங்குகளைப் போல உணவு தேடத் தொடங்குவதும், மாலைவரை இருட்டும் வரை உணவு தேடி அலைந்து திரிந்து, விலங்குகளை வேட்டையாடிக் கொன்று தின்று பசியாறி இரவு குகைக்கு வந்து சேர்ந்து விடுவதுமாகவே இருந்தது.
இப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் ஒன்று மனிதன் விலங்குகளைக் கொன்று புசிப்பான். அல்லது மிருகம் இவனைக் கொன்று தின்று பசியாறியிருக்கும். இதனால் காலையில் குகையை விட்டுப் புறப்படுகிற எண்ணிக்கை, மாலை, இரவு அப்படியே குகை திரும்புமா என்பது சந்தேகமே. இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறையில் மனித உயிரி என்பது மிகவும் மகத்தானதாக, குழுவுக்கு ஒரு புதிய மனிதன், புதிய உயிரி கிடைப்பது என்பதே பெரும் பேறாகக் கருதப்பட்டது. இப்போதைய குடும்ப நலத்திட்டம், கருக்கலைப்பு போன்ற நடவடிக்கைகளோடு ஒப்புநோக்க, இதற்கு முற்றிலும் மாறாக, மனித உயிரிகளின் வருகையை, எதிர்பார்ப்பை மிகுந்த தேவையோடு எதிர்பார்த்த காலம் அது.
இப்படி அக்காலத்தில் மனித உயிரிகள் மிகுந்த மதிப்பு மிக்கதாக, பெரும் வரவாகப் போற்றப்பட்டதால், இந்த உயிரிகளை உற்பத்தி செய்யும், பிறப்பிக்கும் மனித உறுப்புகளும் மதிப்பு மிக்கதாக, பத்திரமாய்ப் போற்றிப் பாதுகாக்கத் தக்கதாகக் கருதப்பட்டன. எனவே அதைப் பிற புறப்பாதிப்புகளுக்கு உள்ளாகாமலும், பிறர் கண்ணில் படாமலும் மூடி மறைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது.
அதோடு மட்டுமல்ல, மனிதனுடைய பொருளியல் தேவைகள் எதுவுமே அப்பொருளியல் பயன்பாட்டோடு நின்று விடுவதில்லை. மாறாக அவை மனத்தேவை சார்ந்தே நிறைவேற்றிக் கொள்ளப்படுகின்றன. அதேபோல எந்த ஒரு மனத்தேவையும் பொருளியல் சார்ந்தே எழுகின்றன. அல்லது பொருளியல் ஊடாகவே நிறைவேற்றிக் கொள்ளப்படுகின்றன. மனிதப் பயன்பாட்டிற்கான பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து நோக்கி யோசிக்க இதைப் புரிந்து கொள்ளலாம். இவ்வாறே பாலுறவும்.
இந்த வகையில், மனிதனுக்குப் பிறப்பு உறுப்புகள் இருப்பதன் நோக்கம் அதன் பொருளியல் பயன்பாடு என்பது மனித உற்பத்தி, சந்ததி உற்பத்திதான். என்றாலும் இது வெறும் பொருளியல் பயன்பாடு மட்டும்தான் என்றால், மனித உற்பத்தியில் மனிதனுக்குப் பெரிய நாட்டம் இருக்காது. பாலுறவு என்பது ஏதோ அலுவலக வேலை போல், கடனுக்கே என்று செய்வதுபோல் ஆகிவிடும்.
எனவேதான் இயற்கை அதில் ஒரு மன ஈடுபாட்டைக் கோரும் வகையில், கவர்ச்சியை வைத்து, பாலுறவையும், பிறப்பு உறுப்புகளையும் கவர்ச்சிக்குரியதாய் ஆக்கியது. அக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, கொள்ளும் பாலுறவின் வழி மனிதர்களை உற்பத்தி செய்யும் விதியை வகுத்தது. இதனால் மனிதன், மனித உற்பத்தியை ‘எழவே’ என்று இல்லாமல், தன் விருப்பத்துக்கும், ஈடுபாட்டிற்கும், வேட்கைக்கும் உரிய செயலாக ஆக்கியது.
ஆக, பாலுறவு என்பது மனிதனுடைய சந்ததி உற்பத்திக்குப் பயன்படும் அதே வேளை அது மனிதனது இயற்கையான தேவையாகவும், அச்சந்ததிகளை உற்பத்தி செய்யும் பிறப்பு உறுப்புகள் கவர்ச்சிக்குரியதாகவும் மனிதனை ஈர்ப்பதாகவும் அமைந்தன. இந்த நிலையில் அது பழுதடையாமல் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. இத்துடன் அது பிறரால் பார்க்கப்படாமல், மோகிக்கப்பட்டு துய்க்கப்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே என்பது மற்றொன்று. ஆக, இந்த இரண்டின் அடிப்படையிலேயே அவை மூடப்பட்டன என்பது தெளிவு.
மனித ஆடைகளின் வரலாற்றை நோக்க இதைப் புரிந்து கொள்ளலாம். ஆடையில்லாமல் அம்மணமாய்த் திரிந்த மனிதன் பிறப்பு உறுப்புகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தபோது முதலில் இலைகள் தழைகளாலும், மரப்பட்டைகளாலும் அதை மூடிக் கொண்டான். அதாவது மனிதன் தன் உடலில் முதலில் மூடிக்கொண்ட உறுப்பு பிறப்பு உறுப்பாகவே இருந்தது. இதிலும் பெண்ணுறுப்பு உடலோடு ஒட்டி இருப்பதும், ஆணுறுப்பு உடம்பை விட்டு வெளியே நீண்டிருப்பதுமான இயற்கையமைப்பு முதலில் ஆணுறுப்பையே மூடவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
எனவே, முதலில் ஆணுறுப்பு பிறகு பெண்ணுறுப்பு என மூடும் முயற்சியில் இந்தப் பழக்கத்தின் காலவோட்டத்தில் பெண்களின் மார்பகங்களையும் மூடவேண்டியது தேவையாகப்பட்டது. காரணம் பிறந்த ஒரு உயிரியைப் பேணிப் பாதுகாப்பதில், பாலூட்டி வளர்ப்பதில் இம்மார்பகங்கள் பெண்ணுக்கு இயற்கை வழங்கிய ஒரு மிகப்பெரும் கொடையாக அமைந்தன. இதனால் மனித பிறப்பு உறுப்புகளின் தேவை எந்த அளவுக்கு முக்கியத்துவம் உடையதோ, அதே அளவு முக்கியத்துவம் உடையதாக இம்மார்பகங்களும் ஆயின. அதே வேளை பிறப்பு உறுப்புகளில் ஏற்படும் கவர்ச்சியின் ஈர்ப்புக்கு சற்றும் குறையாத அளவில் மார்பகங்களிலும் கவர்ச்சியும் ஈர்ப்பும் ஏற்பட்டன. இதனால்தான் இவற்றையும் மூடிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, ஆடையுடுத்துதல் என்பதன் முதல் நடவடிக்கை என்பது பிறப்பு உறுப்புகளையும், பிறகு மார்பகங்களையும் மூடிக் கொள்ளுதல் என்பதாகத் தொடங்கப் பட்டது.
இப்போதும் திறந்த வெளிகளில் குளிக்கும் ஆண்கள் வெறும் கோவணம் அல்லது துண்டு மட்டுமே கட்டிக் கொண்டு குளிப்பதும், பெண்கள் துணியை மார்பு வரை ஏற்றிக்கட்டி மூடிக்கொண்டு குளிப்பதும், நீச்சலுடைப் பெண்கள் மார்புக்கச்சை, ஜட்டி மட்டும் அணிந்து நீந்துவதையும் நோக்க இதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆக, ஆடையின் பயன்கள் பலவாறாகச் சொல்லப்பட்டாலும், அதில் விதம் விதமான எண்ணற்ற பல வடிவமைப்புகள் இருந்தாலும் ஆடை அணிவதன் முக்கிய நோக்கம், அடிப்படைப் பிறப்பு உறுப்புகளைப் பாதுகாப்பதே. அப்புறம்தான் அது வெப்பத்திலிருந்தும் குளிரிலிருந்தும் மனிதனைப் பாதுகாக்கிறது, அது மனிதனுக்கு அழகு தருகிறது, தோற்றத்தை எடுப்பாகக் காட்டுகிறது, இதற்காகவே அது விதம் விதமான வடிவங்களில் வருகிறது என்பது எல்லாமும்.
மனிதன், பாலுறவு உறுப்புகளை இப்படி மூடத் தொடங்கிய காலத்தில் சமூகத்தின் பிற தளங்களிலும் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டன. அல்லது சமூகத்தின் பிற தளங்களில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் பாலுறவு உறுப்புகள் தளத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தின.
குழுவோடு சேர்ந்து இரை தேடித் திரிந்து கிடைத்ததை உண்டு வாழ்ந்த மனிதன், காலப்போக்கில் தன் வேட்டைக் கருவிகளில், அதாவது மனிதனுக்கு உணவு தேடிப் பெற துணைபுரியும் உற்பத்திக் கருவிகளில் அதன் திறனில் ஏற்பட்ட மாற்றம், அவன் தனியாக உணவு தேட வாய்ப்பளித்தது. கருவிகளின் ஆற்றலுக்கும் அதை இயக்குவதில் அவனுக்குள்ள தனித் திறனுக்கும் ஏற்ப அது உணவுப் பொருளை ஈட்டித் தந்தது.
இது, இது வரைக்கும் மனிதன், இது நாம் வேட்டையாடிய, அதாவது நம் குழு வேட்டையாடிய பொருள், நம் குழு பறித்த காய்கள், குழு தோண்டிய கிழங்குகள், குழு ஈட்டிய பொருள்கள் என்று குறிப்பிட்டு வந்த நிலைமாறி, இது நான் வேட்டையாடிய மிருகம், இது நான் பிடித்த மீன், நான் பறித்த காய், கிழங்கு, நான் சாகுபடி செய்த தானியம் என்பதாகப் பேசும் நிலையை ஏற்படுத்தியது.
அதாவது குழு உணர்வோடு குழுவின் செயல்பாடாக இருந்த பலவும் பிறகு, தான், தனது என்கிற உணர்வோடு கூடிய தனித்த செயல்பாடாக மாறின. சுருக்கமாகக் குழு உடைமை, பொது உடைமை என்கிற நிலை மாறி, தனியுடைமை என்கிற நிலை ஏற்பட்டது. இப்படி மனிதனுக்கு தான், தனக்கு என்கிற தனியுடைமை உணர்வு ஏற்பட்டதானது, பாலுறவுத் தளத்திலும் இதே தனியுடைமை உணர்வை ஊட்டியது.
குழு மணம், இணை மணம் என்கிற கட்டங்களைக் கடந்து கொண்டிருந்த மனித சமூகம், இந்தத் தனியுடைமை, தான் என்கிற உணர்வின் தோற்றத்துடனேயே ஒரு தார, ஒரு கணவ முறையைப் புகுத்தியது. அதாவது மனிதனுக்கு உற்பத்திப் பொருள்கள் எப்படி, தான், தனது என்று ஆகியதோ, அதேபோல மனித உற்பத்திப் பொருள்களும் பெண்ணுடலும் தான், தனது என்கிற உடைமை உணர்வுக்கு ஆளாக்கியது.
வில்லும் அம்பும் கொண்டு தன் தனித்திறனால் ஒரு பறவையைக் கொன்று வீழ்த்தும் மனிதன் எப்படி அப்பறவையின்பால் சொந்தம் கொண்டாடுவானோ, அதேபோல, தான் பாலுறவு கொண்டு தன்னால் கருவுற்று ஒரு பெண் ஈன்றெடுக்கும் குழந்தை மீதும் மனிதன் சொந்தம் கொண்டாடத் தொடங்கினான்.
விளைவாக அதைத் தன் பராமரிப்பில், கண்காணிப்பில் வைத்து, தனக்குத் தெரிந்த வித்தைகளை அதற்குக் கற்றுக்கொடுத்து, ஆளாக்கி, தான் அரும்பாடு பட்டு சேகரித்த பொருள்களை அதற்குத் தந்து, நிலைப் படுத்தினான். இந்தச் செயல்பாட்டிற்கு அந்தக் குழந்தையை ஈன்ற பெண்ணின் துணை அவனுக்குத் தேவைப்பட்டது. அவளைப் பொதுவில் விடாமல், தன்னோடே வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் நேர்ந்தது. இப்படி அவளைத் தன்னோடே வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் உருவானதுதான் குடும்பம்.
அதாவது கூட்டம் கூட்டமாகவும், குழுக் குழுவாகவும் வாழ்ந்த மனிதன், பொதுவில் எல்லோரும் உழைத்துக் கிடைத்ததை அனைவரும் உண்டு வாழ்ந்த மனிதன், உற்பத்திக் கருவிகளிலும், தனித் திறன்களிலும் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகத் தனியாக உழைத்து, தனியாக உணவு தேடி, தனியாக மனித உற்பத்தியில் ஈடுபட்டு, அம்மனிதர்களையும் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டான். விளைவாகக் குழு அமைப்பு தகர்ந்து, குடும்பம் என்கிற அமைப்பு தோன்ற மனிதன் இக்குடும்ப அமைப்பாக வாழத் தலைப்பட்டான்.
இன்றைய நோக்கில் பிறக்கிற பிள்ளைகள் பெற்றோர்களுக்குத் தானே சொந்தம், சம்பாதிக்கிற சொத்து குடும்பத்துக்குத்தானே சொந்தம் என்பது நியாயமாகப் பட்டாலும், அன்று கூட்டம் கூட்டமாகவும், குழு குழுவாகவும் பொதுவில் உழைத்து பொதுவில் உண்டு வாழ்ந்த மனித சமூகம் எப்படித் தனியுடைமை வழி குடும்ப அமைப்பு தோன்ற அக்கட்டமைப்புக்கு ஏற்ப வாழத் தொடங்கியது, வாழ்க்கையை அமைத்துக் கொண்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
காரணம் இந்தக் குடும்ப அமைப்பின்வழி தோன்றியதுதான் பெண்ணுக்கு வலியுறுத்தப்படும் ‘கற்பும்’ அதையொட்டிய பெண்ணடிமைத்தனமும். அதாவது ஒரு காலத்தில் மொத்த குழுவுக்குமே தலைமையேற்றும், அதற்குப் பின்னும் ஆணுக்கு எந்த விதத்திலும் குறைவுபடாமலும் நிகரான நிலையில் நிகரான உரிமைகளோடு வாழ்ந்து வந்த பெண், அதாவது குழு மணம், இணை மணம் காலங்களில் எந்தவித பாலுறவுக் கட்டுப்பாடும் இல்லாமல், சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் உலவி வந்த பெண், தனியுடைமை, ஒருதார – ஒரு கணவ முறை தோன்ற அவளுக்குக் கற்பு என்னும் கோட்பாடு வலியுறுத்தப்பட்டு குடும்பம் என்கிற கட்டமைப்புக்குள் சிறை வைக்கப்பட்டாள்.
ஒரு பெண்ணோடு பாலுறவு கொண்டு உற்பத்தி செய்யப்படும் மனித உயிரியைத் தனது உடைமையாகக் கருதிய மனிதன், அந்த உயிரியைக் கருக்கொண்டு தாங்கி வளர்த்து வரும் பெண்ணையும் ஓர் உற்பத்திக் கருவியாகக் கருதி அவள் மீதும் சொந்தம் கொண்டாடத் தொடங்கினான். அவள் புனிதமானவளாக, கட்டுப்பாடுள்ளவளாக இருக்கவேண்டும். அவளோடு தான் மட்டுமே உறவு கொள்ள வேண்டும். வேறு யாரும் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதித்தான். ஆனால், தான் மட்டும் யாரோடும் உறவு கொள்ளலாம் என்று தனக்கான சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொண்டான்.
இப்படி ஆண் தன்னல நோக்கில், தனியுடைமை உணர்வில் பெண்ணின்மீது விதித்த பாலுறவுக் கட்டுப்பாட்டின் விளைவாகத் தோன்றியதே ‘கற்பு’ என்னும் கோட்பாடு. இதுதான் பெண்ணை அனைத்து வகையிலும் அடிமைப்படுத்தும் கோட்பாடாகவும் அமைந்தது.
எனில், இந்தக் கற்புக் கோட்பாடோ, அடிமைத்தனமோ ஆணுக்கு நேராமல் ஏன் பெண்ணுக்கு மட்டும் நேர்ந்தது என்பது ஒரு முக்கியமான கேள்வி. எனவே அந்தக் கேள்விக்கான விடையைத் தெரிந்துகொண்டு மேலே செல்வோம்.
பெண்ணடிமை நோக்கு
மனிதன் கூட்டம் கூட்டமாக, குழுக் குழுவாக வாழ்ந்த காலங்களில் அக்குழுவுக்குப் பெண்ணே தலைமை தாங்கி வழி நடத்திச் சென்றாள் என்று பார்த்தோமில்லையா? இந்நிலை, பெண் தலைமைப் பொறுப்பு ஏற்கும் நிலை, இக்குழுக்களின் இணைவில் தோன்றிய கண சமூகத்திலும் அப்படியே நீடித்தது.
இக்கண சமூகத்திலும் பெண்களே தலைமைப் பொறுப்பில் இருந்தார்கள். மண உறவில் ஆண்களே கொடுக்கப்படுபவர்களாகவும், எடுத்துக் கொள்ளப்படுபவர்களாகவும் இருந்தார்கள். அதாவது ஒவ்வொரு பெண்ணும் அவளது கணத்துக்குள்ளேயே இருந்தாள் என்று பார்த்தோமில்லையா, இதன்படி ஆண்தான் கண மாறுதலுக்கு ஆளானான். அதனால் இப்போதும் பெண்ணே தலைமைப் பொறுப்பில் இருந்தாள். ஆனால் பெண்ணுக்கே இயற்கை இயல்பாய் விதித்திருந்த கருவுறுதல், குழந்தை பெறுதல் என்கிற கடப்பாடுகளையொட்டியும், மனிதன் உணவு தேடும், பிற வாழ்க்கைத் தேவைகளைத் தேடும் உற்பத்திக் கருவிகளில் ஏற்பட்ட மாற்றங்களை யொட்டியும், படிப்படியாக ஆணே முதன்மைப்படும் வாய்ப்பு நேர, பெண் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டாள்.
அதாவது தொடக்கத்தில், குழுவுக்கு உணவு தேடவும், பிற வாழ்க்கைத் தேவைகளைத் திரட்டவும் ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் இரு பாலரும் கூட்டாய் உழைத்து, கூட்டாய் நிறைவேற்றி வந்த நிலை மாறி, தற்போது குடும்ப அமைப்பு தோன்ற இதில் ஆண் இயல்பாய் பெரும் பங்கு வகிக்க வேண்டிய நிலை உருவாகியது.
காரணம், ஆண்களுக்கு நிகராக உழைத்து வந்த பெண்கள் கருவுற்ற காலங்களில், முழுக் காலமும் இல்லாவிடிலும் குழந்தைப் பேறு காலங்களில் தன் இருப்பிடத்திலேயே தங்க வேண்டியிருந்தது. அதேபோலக் குழந்தையை ஈன்ற பிறகும், அதன் பராமரிப்புக்காகவும் தொடக்க சில நாட்கள் இருப்பிடத்திலேயே இருக்க வேண்டியதாயிற்று.
இப்போதும் கிராமப்புறங்களில் உள்ள கருவுற்ற பெண்கள், நிறைமாதம் வரை குடும்ப மற்றும் விவசாயப் பணிகள் அனைத்திலும் ஈடுபடுவதும், அதேபோலக் குழந்தையை ஈன்ற பிறகும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு வந்து மரத்தில் தூளி கட்டிப்போட்டு உறங்க வைத்து, பிற பணிகளைப் பார்ப்பதும் இயல்பாயுள்ளதுபோல அப்போதும் இருந்திருக்கும். என்றாலும், இக்காலங்களில் சாதாரண காலங்களில் உள்ளதுபோல் மற்றவர்கள் செய்யும் கடினமான பணிகளைப் பெண்களால் செய்ய இயலாது, செய்யக்கூடாது என்பது முக்கியம்.
எனவே, இயற்கை விதித்த இந்தக் கட்டுப்பாடு முதலில் பெண்களை முழுமையாக உற்பத்திப் பணிகளில் ஈடுபட இயலாது தடுக்க, ஆண்கள் அப்பணிகளை மேற்கொண்டு அதன்மீது ஆதிக்கம் செலுத்த, இதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்து ஏற்பட்ட உற்பத்திக் கருவி மாற்றங்களில் பெண் பங்கு கொண்டு பயிற்சி திறன் பெறமுடியாது போக, ஆண் மட்டும் மேலும் மேலும் முன்னேற, இவ்வாறே பெண் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்க இயலாது பின்தங்கும் நிலை ஏற்பட்டது.
இப்போதும் பெரும்பாலும் ஆண் செய்யும் அனைத்துப் பணிகளையும் பெண்களால் செய்ய இயலும், செய்கிறார்கள் என்கிற போதிலும், அன்று அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கு நிகராகப் பணியாற்ற பெண்களுக்குப் பயிற்சி, வாய்ப்பு கிட்ட வாய்ப்பற்ற சூழல், புதிது புதிதாகக் கண்டு பிடிக்கப்படும் உற்பத்திக் கருவிகளிலெல்லாம் ஆணே பயிற்சி பெற்று ஆணே முதன்மையானவனாக விளங்கினான். தொடக்கத்தில் இயல்பாய் எழுந்த இந்த வாய்ப்பு காலப்போக்கில் படிப்படியாக நிலைபெற இதுவே, இறுகிய, கெட்டி தட்டிப்போன ஒரு கருத்தாக்கமாகவும் மாறியது. இதனால் பெண்கள் பல பணிகளைச் செய்ய விரும்பியும், அவர்களுக்குச் செய்யத் திறன் இருந்தும், அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.
எனவே, பெண்களுக்கு வீட்டோடு இருந்து செய்யும் வேலைகளே குறிப்பாக, சமைத்தல், குழந்தைகளை வளர்த்தல் மற்றும் வீட்டோடு இருந்து ஈடுபடும் உற்பத்தித் தொழில்களான கூடை முடைதல், பாய் நெய்தல், கால்நடைகளைப் பேணுதல், உணவுப் பொருள்களைப் பதப்படுத்துதல், இல்லப் பணிகளைப் பராமரித்தல் முதலான இதர பணிகளே ஒதுக்கப்பட்டன.
இப்பணிகள் அனைத்துமே உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதானாலும், இவற்றுள் பல உற்பத்தியில் நேரடியாகப் பெரும்பங்கு வகிக்கும் பிற தொழில்களின் அளவுக்கு மதிக்கப்படாததால், குடும்பத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகம் உழைத்தும், அதிகமான நேரம் பணி செய்தும் அவர்களது உழைப்புக்கு உரிய மதிப்பில்லாமல் போகும் நிலை, அதாவது ஆணே உயர்வானவன், உயர்வான பணி புரிபவன், பெண் எவ்வளவு உழைத்தாலும் அவள் தாழ்வானவள், தாழ்வான பணிபுரிபவளே என்கிற நிலை ஏற்பட்டது.
சமூகத்தின் பிற்பட்ட மற்றும் கடைநிலை மக்கள் பிரிவில் உள்ள பெண்களுக்காவது, இதுபோன்ற சிறு தொழில்கள் செய்யவும், உற்பத்தியில் ஓரளவு பங்கு வகிப்பதற்கும் ஆன வாய்ப்பு கிட்டியது. ஆனால் சமூகத்தில் பொருளியல் ரீதியிலும் சாதிய ரீதியிலும் மேம்பட்டவர்கள் எனத் தோன்றிய பாகுபாடு, மிக வசதி படைத்த மற்றும் உயர் சாதி வீட்டுப் பெண்களை உற்பத்தியில் எந்தவிதப் பங்கும் அற்றவர்களாக அவர்களைத் தனிமைப்படுத்தியது. இதனால் சமூகச் செயற்பாட்டில் கடைநிலைப் பெண்களுக்கு உள்ள பங்களிப்போ, சுதந்திரமோ கூட சிறிதும் இல்லாமல், மேல்தட்டுப் பெண்கள் அதிகமான கட்டுப்பாட்டிற்கும், கெடுபிடிகளுக்கும் உள்ளாக்கப் பட்டார்கள்.
ஒரு கடைநிலை ஆணுக்குத் தன் மனைவிமேல் உள்ள கட்டுப்பாட்டை விடவும், ஒரு மேல்தட்டு ஆணுக்கு தன் மனைவிமேல் உள்ள அதிகாரம், கட்டுப்பாடு கூடுதலாக இருந்தது. இதனால் கற்பு, தூய்மை, பிற ஆடவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்தல், பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கச் செய்தல் ஆகியவை மேல்தட்டுப் பெண்களுக்குக் கூடுதல் ஒழுக்க நெறிகளாகப் போதிக்கப்பட்டு அவை அதிகம் வலியுறுத்தப்பட்டன.
இதற்கு முக்கியமான சில பின்னணிகள் உண்டு. காரணம் பெண் தூய்மை, கற்பு, அடிமைத்தனம் என்பது சமூகத்தின் எல்லா மக்கள் பிரிவினுள்ளும் ஒரே மாதிரியாக ஒரே அளவில் தோன்றிவிடவில்லை. மாறாக இது மேல் தட்டுப் பிரிவினரிடையேயே கூடுதலாகவும், அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தோன்றியது. காரணம் சொத்துடைமையையும், சாதிப் புனிதத்தையும் காத்துக் கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கே அதிகமாக இருந்தது.
இப்போதும் கூட அடித்தட்டுக் கடைநிலை உழைக்கும் பெண்களுக்கும், மேல்தட்டு, மேல்சாதிப் பெண்களுக்கும், சமூக உற்பத்தியில் நிலவும் பங்களிப்பை, அவரவர் குடும்பங்களில் அவர்களது இருப்பை, நிலவும் சுதந்திரத்தை, பிற ஆண்களோடு பழகக் கிடைக்கும் வாய்ப்பை ஊன்றி நோக்க இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளலாம். நகர்ப் புறங்களில் நிலவும் நவீன வாழ்க்கை முறை அல்லது இந்த வாழ்க்கை முறையின் தாக்கம் சில கிராமக் குடும்பங்களில் ஓரளவு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கலாம். எனில் இன்னமும் பெரும்பாலான குடும்பங்களில் இதே போக்கு நீடிப்பதை அல்லது கடைப்பிடிக்கப்பட்டு வருவதை இன்றும் காணலாம்.
ஆக, இவ்வாறு பெண்ணுக்கு இயற்கையாய் அமைந்த சில உடல் சார்ந்த கடப்பாடுகளை வைத்து ஆண் பெண்ணை அடிமைப்படுத்தினான். இந்த அடிமைத்தனம், கடப்பாடு அடித்தட்டு மக்களை விடவும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதி மக்களை விடவும், மேல்தட்டு, மேல் சாதி மக்களிடம் கூடுதலாக இருந்தது – இருக்கிறது என்பது கண்கூடு.
அதாவது, மேல்தட்டு, மேல் சாதி வர்க்கப் பிரிவினர் தங்கள் புனிதத்தை ஆதிக்கத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற முனைப்பு காரணமாகவே இவர்களிடையே கற்பு நெறி கூடுதலாக வலியுறுத்தப்பட்டது. அது சார்ந்த கெடுபிடிகளும், கட்டுத் திட்டங்களும் கூடுதலாயின. இதையொட்டி பெண்ணின் புனிதமே எல்லா நிலையிலும் மையப்படுத்தப்பட்டது. அதாவது பெண் புனிதமான வளாயிருந்தால்தான் ஆதிக்கம் பாதுகாக்கப்படும். பெண் புனிதமற்றுப் போனால் ஆதிக்கம் சரிந்துவிடும் என்பதான கருத்து கட்டமைக்கப்பட்டது. இப்படிப் பெண்ணின் கற்பு நெறி சார்ந்து அவளது ஒழுக்க நெறி சார்ந்து மேல்தட்டுப் புனிதமும், மேல்சாதிப் புனிதமும் ஆதிக்கமும் காக்கப்படுவதான கருத்தாக்கம் பிறகு அனைத்துத் தட்டுப் பிரிவு, அனைத்துச் சாதி மக்களையும் பீடித்தது. இதனால் இன்றும் எந்தச் சண்டை சச்சரவுகளிலும், எந்தச் சிக்கலிலும் அந்தந்தப் பிரிவு மற்றும் சாதிப் பெண்களை நேரடியாக இல்லாவிட்டாலும் கருத்தளவில் இழுத்து வசைபாடுவது என்பது இயல்பான நடைமுறையாகிப் போயுள்ளது.
இப்போதும்கூட கிராமப்புறங்களில் அல்லது புறநகர்ப் பகுதிகளில் மக்களிடையே ஏற்படும் சாதாரணச் சண்டைகளில் பேசப்படும் வசவுச் சொற்களைச் சற்று ஊன்றிக் கவனிக்க, சண்டையின் காரணம் அதுபாட்டுக்கு அது ஒருபுறம் இருந்தாலும், கருத்தளவில் இழுக்கப்படுவதும், வசைச் சொற்களுக்கு ஆளாக்கப்படுவதும் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பது தெரிய வரும். ‘உன் ஆத்தாளையும், பொண்டாட்டியையும் போட்டுக்னு …. இவம்போவ அவம் போவ’, ‘தேவடியா மவனே’, ‘கம்மினாட்டி முண்ட’ என இதுபோன்ற வசவுச் சொற்கள் பெண்களை மையப்படுத்திச் சரளமாக வெளிப்பட, எதிர்த் தரப்பைச் சார்ந்த பெண்களைக் கடைநிலை வர்க்க, அல்லது கீழ்ச்சாதி மக்களிடம் போவதாக வேறு சாபமிடுவார்கள். இழிவு படுத்துவார்கள்.
இப்படிக் கருத்தளவில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவது மட்டுமல்ல, இனக் கலவரம், மதக் கலவரம் போன்ற சந்தர்ப்பங்களிலும் இலக்கு வைக்கப்படுவது பெண்கள்தாம். பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துதல், பாலியல் ரீதியாக இம்சைகள், தொல்லைகள் தருதல் என இங்கும் பெண்களே குறி வைக்கப்படுகிறார்கள். அதாவது அவர்களது தூய்மையைக் குலைக்கும், நடவடிக்கையாக இதைப் பெண்கள் மீது ஏவுகிறார்கள், செயல்படுத்துகிறார்கள்.
இது, இன்று நேற்று நிலவிய வழக்கமாக இல்லை. கண சமூகங்கள் இணைந்து குலங்கள் தோன்றி, குலங்களுக்குள் குடும்ப அமைப்புகள் தோன்றி, பெண்ணுக்குப் புனிதம், கற்பு கற்பிக்கப்பட்ட நாள் தொடங்கி, குலங்களுக்குள் மோதல் ஏற்பட்டாலும் சரி, இனங்களுக்குள் மோதல் ஏற்பட்டாலும் சரி, தற்போதைய பிற கலவரங்களானாலும் சரி, முதல் இலக்கு தாக்குதல் பெண்கள்தான். அவர்களது ‘கற்புதான்’. சில ஆண்டுகளுக்கு முந்தைய செர்பிய குரோஷிய இனப்போர், சமீபத்திய ஈழ விடுதலைப் போர் எங்கும் இப்படிப்பட்ட கொடுஞ்செயல்களைக் காணலாம்.
இவ்வாறு எல்லா நிலையிலும் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டது போலவே, பாலுறவு சார்ந்த செயல்பாடுகளும் இழிவுபடுத்தப்பட்டன. இதற்குப் பல காரணங்கள் இருந்தன.
முதலாவதாக, பிறப்பு உறுப்புகளைப் பாதுகாக்கும் நோக்கில் அதை மூடுவது, பத்திரப்படுத்துவது என்று தொடங்கிய கருத்து பின்னாளில், அது திறந்து கிடப்பது இழிவு என்னும் எண்ணத்தை ஏற்படுத்தியது. எனவே, அதை மூடி வைப்பது புனிதமானது எனப் போற்றப்பட்டது. இதையொட்டியே பிறப்புறுப்புகள் சார்ந்த பார்வைகளும் அதன் செயல்பாடுகளும் அது சார்ந்த வார்த்தைகளும் கெட்ட வார்த்தைகளாக, வசவுச் சொற்களாக ஆக்கப்பட்டன. இப்போதும் பெண்களோ, ஆண்களோ தங்கள் எதிர்த் தரப்பை வசைபாட இழிவுபடுத்த தங்கள் பிறப்புறுப்பு சார்ந்த செயல்பாடுகளைக் குறிப்பிட்டு சண்டையிடுவதை நோக்க இதைப் புரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு மேல்தட்டு, மேல்சாதி மக்கள் தங்கள் புனிதம் காக்க தம் பெண்களுக்கு விதித்த கற்பு நெறிக் கோட்பாடு, இதன் வழி பாலுறவு சார்ந்த நடவடிக்கைகளில் மக்கள் அதிகம் நாட்டம் கொள்ளாதிருக்க, அந்நடவடிக்கைகளையே இழிவானதாக நோக்க, மறுபுறம் தங்கள் புனிதம் காக்க பிற பகுதி மக்களுக்கு வலியுறுத்தியது. அதாவது மேல்தட்டு, மேல்சாதி மக்கள் தங்கள் காம இச்சைக்காகவும், உடல் சுகத்துக்காகவும் ஒருபுறம் விரும்பியவாறு இன்பம் துய்த்துக் கொண்டே வெளியில் பாலுறவு நடவடிக்கைகளே இழிவானது போன்ற ஒரு கருத்தைப் போதித்தனர்.
பின்னாளில் தோன்றிய மதங்களும் இந்த ஆதிக்க நலன் காக்கும் நோக்கில், எல்லாம் வல்ல இறைவனின் திருப்பாதங்களை அடைவதே, பேரண்டத்தில் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் அவனில் கரைந்து விடுவதே பேரின்பம் எனவும், அல்லாத ஆண், பெண் பாலுறவெல்லாம் சிற்றின்பம் எனவும் போதித்தது. அதாவது, செல்வந்தர்களும், மேல்சாதி, மேல்தட்டு மக்களும், மடாதிபதிகளும் இரகசியமாக எதைப் பேரின்பமாகத் துய்த்து மகிழ்ந்தார்களோ அதை வெளியில் சிற்றின்பம் என இழிவுபடுத்தி மக்கள் அதில் அதிக நாட்டம் செலுத்தாதவாறு போதித்தார்கள். இதனால் சிற்றின்பம் சார்ந்த உறுப்புகள், செயல்பாடுகள் அனைத்துமே இழிவானதாகக் கருத வைக்கப்பட்டன.
ஒருபுறம் மனித உற்பத்திக்கு வித்தான புணர்ச்சி உறுப்புகளைக் குறியீடாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட லிங்கத்தைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு வந்த மதம்தான் பாலுறவைச் சிற்றின்பம் எனப் போதித்தது. இவ்வாறே ஒவ்வொரு மதத்திலும் ஆதிக்க சக்திகளால் இது இழிவுபடுத்தப்பட்டிருக்கலாம். விவரம் நுணுகிப் பார்த்தால் புரியும்.
அது மட்டுமல்ல, பாலுறவைப் புனிதமானதாகவும், நுட்பமும், உன்னதமும், பரவசமும் மிக்கதாகவும் சித்தரித்த, இதனடிப்படையில் காமசூத்ராவைப் படைத்த, கோவில் சிற்பங்களிலெல்லாம் பாலுறவுக் காட்சிகளை வடித்த அதே மதங்கள்தான் மறபுறம் பாலுறவைச் சிற்றின்பம் என இழிவுபடுத்தின. இவ்வாறெல்லாம் பாலுறவு சார்ந்த மதிப்பீடுகள் உருவாக்கப்பட்டதற்கும், அது சார்ந்த நடவடிக்கைகள் சிறுமைப்படுத்தப்பட்டதற்கும் இவர்கள் இதைச் சிற்றின்பம் என்று இழிவுபடுத்தியதற்குமான ஒரே நோக்கம் வெளிப்படையாகச் சொல்வதானால், மக்கள் இதில் மோகமுற்றுத் தங்கள் வீட்டுப் பெண்கள்மீது கைவைத்து விடக் கூடாது என்பதும், தங்கள் வீட்டுப் பெண்கள், அடித்தட்டு உழைக்கும் ஆண்கள்பால் மோகமுற்றுக் கைமாறிப் போய்விடக்கூடாது என்பதும் தான்.
ஆக, பாலுறவில் கற்புக் கோட்பாடு வலியுறுத்தப்படுவது, அது சிற்றின்பம் என இழிவுபடுத்தப்படுவது, பாலுறவு உறுப்புகளை அதன் செயல்பாடுகளைப் பற்றிக் குறிப்பிடுவது அநாகரிகமானது, கீழ்த்தரமானது என்கிற கருத்தாக்கங்கள் இவ்வாறே ஆதிக்க நலன் சார்ந்து கட்டமைக்கப்பட்டன என்பதும், அதாவது இக்கருத்தாக்கங்களின் பின்னே ஆதிக்க நலன்கள் ஒளிந்திருந்து அவையே இவற்றைப் பாதுகாத்து வருகின்றன என்பதும் கவனத்துக்குரியது.
கொஞ்சம் அறிவியல் நோக்கில், இப்படி யோசித்துப் பார்ப்போம். மனித உடம்பில் கை, கால்கள், விரல்கள், வயிறு, இடுப்பு, முகம், தாடை, கன்னம் இருப்பதுபோல் பிறப்புறுப்பும் ஒரு உறுப்பு. ஆனால் அதைமட்டும் சொல்லக்கூடாது. அது ஆண் உறுப்பானாலும் சரி, பெண் உறுப்பானாலும் சரி, அதை உச்சரிக்கக்கூடாது. அது கெட்ட வார்த்தை என்று சொன்னால் என்ன அர்த்தம்? அவை என்ன கெட்ட பொருளா? கேடு விளை விப்பவையா? அந்தப் பொருள் மட்டும் இல்லையானால் மனிதன் என்ன ஆவான்? மனித குலம் என்ன ஆகும்? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
அதேபோல மனித உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் பல செயல்பாடுகள் இருப்பதுபோல, பிறப்புறுப்புகளுக்கும் பல செயல்பாடுகள் இருக்கின்றன. இதில் பிற உறுப்புகளின் எல்லாச் செயல்பாட்டையும், அதாவது கண்ணால் பார்க்கிறான், காதால் கேட்கிறான், மூக்கால் நுகர்கிறான், மூச்சு விடுகிறான், வாயால் சாப்பிடுகிறான் என்றெல்லாம் சொல்லலாம். ஆனால் பிறப்பு உறுப்பின் செயல்பாட்டை மட்டும் வெளிப்படையாகச் சொல்லக் கூடாது. அது கெட்டவார்த்தை, கெட்ட செயல் என்றால் என்ன அர்த்தம்? அது அநாகரிகமானது என்றால் அந்தச் செயலை ஏன் செய்ய வேண்டும்? அந்தச் செயலையே செய்யாவிட்டால் மனிதன் என்ன ஆவான்? மனிதகுலம் என்ன ஆகும்?
ஆனால், மனித குலத்தை வாழவைக்கும், தழைக்கச் செய்யும் மனித உற்பத்தியைத் தரும் இந்த உன்னதமான உறுப்புகளும் அதன் செயல்பாடுகளும்தான் ஆதிக்க நலன் சார்ந்து, இப்படி இழிவானதாகவும் கேவலமானதாகவும் ஆக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட கருத்தாக்கங்களுக்கு ஏதாவது அறிவியல்பூர்வமான அடிப்படை உண்டா? நியாயம் உண்டா? எதுவுமில்லை. அப்படியிருக்க, பின் இது ஏன் இப்படி ஆகியது? இதை அடுத்து ஆராய்வோம்.
source: http://computorday.blogspot.in/2012/04/blog-post_5846.html