இஸ்லாத்தின் பெயரில் இன்னுமொரு அமெரிக்க கூலிப்படை!
துருக்கியில் அன்றைய ஒட்டோமான் பேரரசின் இஸ்லாமிய மதரீதியான கிலாஃபத் அரசாட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, இப்போது மீண்டும் அத்தகைய கிலாஃபத் அரசாட்சி நிறுவப்பட்டுள்ளதாக “ஐ.எஸ்.” எனும் சன்னி மார்க்க இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தினர் அண்மையில் அறிவித்துள்ளனர். இராக் மற்றும் சிரியாவில் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை இணைத்துத் தனி நாடாக அறிவித்து, இதனை இஸ்லாமிய அரசு (கிலாஃபத்) என்று பிரகடனப்படுத்தியுள்ளனர்.
ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதி இப்புதிய அரசின் தலைவராக தன்னையே நியமித்துக் கொண்டு, இப்புதிய கிலாஃபத் அரசானது வடசிரியாவின் அலெப்போ நகரிலிருந்து இராக்கின் தியாலா மாகாணம் வரை பரவியிருக்கும் என்றும், உலகெங்குமுள்ள சன்னி மார்க்க முஸ்லிம்கள் இந்தப் புனித ஆட்சிக்கு ஆதரவளிக்குமாறும், இப்புனித நாட்டில் வந்து குடியேறுமாறும் அறைகூவல் விடுத்துள்ளார்..
மேற்காசியாவில், குறிப்பாக இராக்கில் அதிருப்தியிலும் விரக்தியிலுமுள்ள சன்னி முஸ்லிம் மக்களை இந்த இயக்கத்தினர் தமக்கு ஆதரவாகக் கவர்ந்திழுப்பதில் கணிசமான வெற்றியைச் சாதித்துள்ளனர். இஸ்ரேலின் இனவெறி பயங்கரவாதத் தாக்குதலாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கத் தாக்குதலாலும், இராக்கிலும் ஆப்கானிலும் நடந்துள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பாலும், இப்பிராந்திய மக்களிடம் நிலவும் ஆத்திரத்தையும் நம்பிக்கையின்மையையும் சாதகமாக்கிக் கொண்டு இந்த இயக்கத்தினர் அண்மைக்காலமாக பிரபலமடைந்து வருகின்றனர்.
இராக்கின் அமெரிக்க பொம்மை அரசப் படைகளுக்கு எதிராகவும், சிரிய அரசப் படைகளுக்கு எதிராகவும் நடத்திவரும் தாக்குதல்களையும், பிற சிறுபான்மை மத, இனக்குழுவினர் மீதான படுகொலைகளையும், அமெரிக்கப் பத்திரிகையாளரைப் பகிரங்கமாகக் கழுத்தறுத்துப் படுகொலை செய்துள்ளதையும் வீடியோ படம் எடுத்து இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் இவ்வியக்கத்தினர் பரப்பிவருகின்றனர். இவற்றின் மூலம், தங்களை உண்மையான இஸ்லாமிய விடுதலை இயக்கமாகச் சித்தரித்துக் கொண்டு தங்களை யாராலும் வெல்ல முடியாது என்ற பிரச்சாரத்துடன் இணையத்தின் மூலமாக சன்னி முஸ்லிம்களை இவ்வியக்கத்தினர் ஈர்க்கின்றனர்.
இவற்றைக் கண்டு சில சன்னி முஸ்லிம்கள், இது நம்ம ஆளு என்று இந்த இயக்கத்தினரை ஆதரிப்பதோடு, ஏதோ ஒரு வகையில் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையிலான அரசாட்சி உலகில் உதயமாகியிருப்பதைப் புதிய நம்பிக்கையாகவும் பார்க்கின்றனர். இஸ்லாம்தான் ஒரே தீர்வு என்று இந்தியாவிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் சில சன்னி முஸ்லிம் இளைஞர்கள் இந்த ஐ.எஸ்.படையில் இணைந்துள்ளதோடு, தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் 26 இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற முத்திரை பதித்த டி-சர்டுகள் அணிந்து புகைப்படம் எடுத்து அதனை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுத் தமது ஆதரவைக் காட்டியுள்ளனர்.
“எங்களை மிகவும் கண்ணியமாக நடத்தினர்; எங்கள் மீது ஐ.எஸ். இயக்கத்தினரின் விரல்கள்கூடப் படவில்லை” என்று இராக்கிலிருந்து மீண்டு வந்த இந்தியச் செவிலியர்கள் அளித்த பேட்டியைக் குறிப்பிட்டு, இஸ்லாத்தின் நெறிப்படி நடப்பவர்கள்தான் பெண்களைக் கண்ணியமாக நடத்துவார்கள் என்றும், ஐ.எஸ். இயக்கத்தினர் இஸ்லாமிய மார்க்க நெறிப்படி நடக்கும் புனிதப் போராளிகள் என்றும் சில சன்னி மார்க்க முஸ்லிம்கள் இந்த இயக்கத்தினரை ஆதரிக்கின்றனர்.
இஸ்லாமிய நெறிப்படி நடப்பதாக ஐ.எஸ். இயக்கத்தினர் விளம்பரப்படுத்திக் கொண்ட போதிலும், இந்த இயக்கம் மேற்காசிய முஸ்லிம் மக்களின் விடுதலைக்கான, முன்னேற்றத்துக்கான இயக்கமே அல்ல. கடந்த இருபது ஆண்டுகளாக முஜாஹிதீன்கள், தாலிபான்கள், அல்கய்தாக்கள் எனப் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் உருவாகியுள்ள போதிலும், தாங்கள்தான் உண்மையான இஸ்லாமிய நெறிப்படி நடப்பவர்கள் என்று அவை கூறிக் கொண்ட போதிலும், ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி செய்த போதிலும் இத்தகைய இயக்கங்களால் ஏகாதிபத்தியத்தையோ, காலனியாதிக்கத்தையோ வீழ்த்த முடியவில்லை. இக்குறுங்குழுவாத சன்னி மார்க்கப் பயங்கரவாத இயக்கங்கள் அமெரிக்காவை எதிர்ப்பதைப் போலக் காட்டிக் கொண்டாலும், பல நாடுகளில் அமெரிக்காவின் கூலிப்படையாகவே இயங்கியுள்ளன.
1970-களில் எகிப்து, சிரியா, இராக் ஆகிய நாடுகள் அரபு தேசியவாத முழக்கத்துடன் பெயரளவிலான ஏகாதிபத்திய எதிர்ப்பைக் காட்டின. ஆனால் இஸ்லாமிய சர்வதேசியம் பற்றிப் பேசும் இத்தகைய இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களோ, ஏகாதிபத்தியங்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டுச் சேர்ந்து தமது நிலையை வலுப்படுத்திக் கொண்டு, கூட்டுக் கொள்ளையில் ஈடுபடுவதோடு, பெயரளவுக்குக் கூட ஜனநாயகமே இல்லாமல் அப்பட்டமான கொடுங்கோன்மையைத்தான் நிலைநாட்டின. ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்ட தேசியத்தைக் கட்டியமைப்பதற்கான நோக்கமோ, அதற்கான அரசியல்-பொருளாதாரத் திட்டமோ, நடைமுறையோ இந்த இயக்கங்களிடம் இல்லை என்பதோடு, துருக்கியின் கமால்பாட்சாவும், எகிப்தின் நாசரும், இராக்கின் சதாமும் மேற்கொண்ட பெயரளவிலான சமூக சீர்திருத்தங்களைக்கூட இத்தகைய இயக்கங்கள் கீழறுத்துப் போட்டன. இவற்றின் விளைவாக, நாகரிகத்தால் முன்னேறிய மேற்காசிய சமூகம், பல நூற்றாண்டுகள் பின்னுக்கு இழுக்கப்பட்டு இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்ட அவலம்தான் நடந்துள்ளது.
சதாம் உசேனின் சர்வாதிகார ஆட்சியில்கூட ஷியா, சன்னி எனும் இஸ்லாமிய மதப்பிரிவினருக்கிடையே மோதல்கள் இருந்ததில்லை. அவரது ஆட்சியில் பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருந்ததில்லை. ஆனால், பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்த காரணத்துக்காக சிறுமி மாலாலாவைச் சுட்ட கொடூரத்தைச் செய்த தாலிபான்கள், இதனை இஸ்லாத்தின் பெயரால் நியாயப்படுத்தினர். அபின் பயிரிட்டு போதை வியாபாரமும், அந்தந்த வட்டாரத்தில் யுத்தப் பிரபுக்கள் ஷாரியத் சட்டப்படி தன்னிச்சையாக நாட்டாமை செலுத்துவதுமாகவே ஆப்கானில் தாலிபான்களது ஆட்சி நடந்தது.
தங்களை இஸ்லாத்தின் மார்க்க நெறிப்படி நடப்பவர்களாகக் காட்டிக் கொண்ட தாலிபான்களும், அவர்களைவிட இன்னும் தீவிரமாக இஸ்லாத்தை செயல்படுத்துவதாகக் காட்டிக் கொண்டு பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்ட அல் கய்தாக்களும் சன்னி மார்க்க இஸ்லாமிய ஆயுதக் குழுக்களைக்கூட ஐக்கியப்படுத்த முடியாமல் போனதோடு, தங்களுக்குள்ளேயே பிளவுபட்டு மோதிக் கொண்டார்கள். இவற்றுக்குப் பிறகு அல் கய்தாவைவிட இன்னும் மூர்க்கமாக இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதாகக் காட்டிக் கொண்டு இப்போது புதிதாக ஐ.எஸ். என்ற சன்னி மார்க்க இயக்கம் முளைத்துள்ளது. இந்த ஐ.எஸ். இயக்கத்தின் பின்னணிதான் என்ன?
இராக்கின் அண்டை நாடான சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் நோக்கத்தோடு, இராக்கின் வடபகுதியில் இயங்கிவந்த அல் பாக்தாதி என்பவர் தலைமையிலான “இராக்கிய அல்கய்தா” என்ற சன்னி மார்க்க ஆயுதக்குழுவை ஆதரித்து வளர்த்த அமெரிக்கா, இவர்களை விடுதலைப் போராளிகளாகச் சித்தரித்து ஜோர்டானில் ராணுவப் பயிற்சி அளித்து தனது கூலிப்படையாகப் பயன்படுத்திக் கொண்டது. இக்குழுவுக்கு சவூதி அரேபியா, கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து தாராளமாக நிதியும், அமெரிக்காவிடமிருந்து அதிநவீன ஆயுதங்களும் வாரிவழங்கப்பட்டன.
சிரியாவில் அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்டு அதிபர் ஆசாத் அரசுக்கு எதிரான தாக்குதல்களை நடத்திவந்த “அல் நுஸ்ரா”, “எஃப்.எஸ்.ஏ.” முதலான சன்னி மார்க்க ஆயுதக் குழுக்களுடன் இணைந்தும், இதர குழுக்களை அணிதிரட்டியும் அல் பாக்தாதி தலைமையில் உருவானதுதான் “இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு சிரியா (ஐ.எஸ்.ஐ.எஸ்.)” எனப்படும் இயக்கமாகும். சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடுத்துவந்த இந்த இயக்கத்தினர் ஆயுதக் கொள்ளைகளிலும் வங்கிக் கொள்ளைகளிலும் ஈடுபட்டதோடு, சிரிய நாட்டின் அருங்காட்சியகத்திலிருந்த அரிய கலைப்பொருட்களைக் களவாடி விற்றும், தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் கட்டாய வரிவசூல் செய்தும் பணபலமும் ஆயுத பலமும் கொண்ட பயங்கரவாத இயக்கமாக வளர்ந்தனர். “ஐ.எஸ்.ஐ.எஸ்.” என்ற பெயரில் இயங்கி வந்த இப்பயங்கரவாத இயக்கம்தான் இப்போது “ஐ.எஸ்.” (இஸ்லாமிக் ஸ்டேட்) என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு, புதிய கிலாஃபத் அரசை நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளதோடு, அதன் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதி, தன்னையே இந்த அரசின் கலீஃபாவாக நியமித்துக் கொண்டுள்ளார்.
யார் இந்து என்று இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூறுவதைப் போலத்தான், யார் முஸ்லிம் என்பதை இந்த ஐ.எஸ். இயக்கத்தினரும் வரையறுக்கின்றனர். ஷியா, சன்னி, சுஃபி என வேறுபட்ட இஸ்லாமிய மார்க்கங்கள் இருந்த போதிலும், வாஹாபி சன்னி மார்க்கம் மட்டும்தான் உண்மையான இஸ்லாமிய மார்க்கம் என்று கூறி, இதர இஸ்லாமிய மார்க்கத்தினரின் மசூதிகள் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தி அவற்றைத் தரைமட்டமாக்கியுள்ளனர். குர்து மொழி பேசும் யேசிடி எனும் பழங்குடியினக் குழுவினரது வழிபாட்டு முறையை பேய் வழிபாடு என்று சாடும் ஐ.எஸ். இயக்கத்தினர், இராக்கின் சிறுபான்மையினரான இப்பழங்குடி இனத்தவர் மீது தாக்குதல் தொடுத்து அவர்களைத் தமது ஆதிக்கத்திலுள்ள பிராந்தியத்திலிருந்து விரட்டியடித்து வருகின்றனர். மெக்காவின் காஃபாவில் உள்ள கருப்புக் கல்லை அகற்றாவிடில், அம்மசூதியைத் தகர்க்கப்போவதாக சௌதி அரேபியாவுக்கு எதிராகச் சவடால் அடித்து, தங்களை இஸ்லாத்துக்கு அத்தாரிட்டியாகக் காட்டிக் கொள்கின்றனர். யேசிடி, ஷாபக், சால்டியன் கிறித்துவர்கள், சிரிய கிறித்துவர்கள் முதலான மத, இனச் சிறுபான்மையினரும் ஷியா பிரிவு முஸ்லிம்களும் சன்னி மார்க்க இஸ்லாமிய
மதத்துக்கு மாற வேண்டும், அல்லது ஜெஷியா வரி கொடுக்க வேண்டுமென இத்தீவிரவாதிகள் எச்சரித்து, அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர். இதனால் சிறுபான்மையின மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டுவருவதோடு, எஞ்சியோர் அகதிகளாக இராக்கிலிருந்து தப்பியோடுகின்றனர்.
இந்தியாவில் காலனிய ஆட்சிக் காலத்தில் இந்துவெறியர்களின் ஆசானாகிய சாவர்க்கர் இந்துத்துவ தேசியத்தை முன்வைத்து அணிதிரட்டியதைப் போலவே, இஸ்லாமிய சர்வதேசியம் எனும் கற்பனாவாத பிற்போக்கு முழக்கத்துடன், கிலாபத் எனப்படும் இஸ்லாமியத் தாயகத்தை உருவாக்கப் போவதாகக் கூறிக்கொண்டு இந்த சன்னி மார்க்கப் பிற்போக்குச் சக்திகள் சமூகத்தை இருண்ட காலத்துக்கு இழுத்துச் செல்கின்றன. மறுபுறம், இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் காட்டி அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தனது மேலாதிக்கத் தாக்குதலுக்கு நியாயம் கற்பித்துக் கொள்கின்றன.
கடந்த 20 ஆண்டுகளாக முஜாஹிதீன்கள், தாலிபான்கள், அல் கய்தாக்கள் எனப் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் உருவாகியுள்ள போதிலும், இத்தகைய இயக்கங்களால் ஏகாதிபத்தியத்தையோ, காலனியாதிக்கத்தையோ வீழ்த்த முடியவில்லை. இக்குறுங்குழுவாத சன்ன மார்க்க இயக்கங்கள் பல நாடுகளில் அமெரிக்காவின் கூலிப்படையாகவே இயங்கியுள்ளன.
இப்படித்தான் கடந்த ஆண்டில் வட ஆப்பிரிக்காவிலுள்ள மாலி நாட்டிலும், அதற்கு முன்னர் ஆப்கானிலும் நடந்தது. அமெரிக்க ஆதரவு பெற்ற மாலி நாட்டின் சர்வாதிகார அரசிடமிருந்து விடுதலை கோரி மாலியின் வடபகுதியிலுள்ள அசாவத் பிராந்தியத்தில் தூவாரக் இனக்குழுவினர் நீண்ட காலமாகப் போராடி வந்த நிலையில், அல்கய்தாவுடன் தொடர்புடைய இப்பகுதியிலுள்ள சன்னி மார்க்க இஸ்லாமிய தீவிரவாதிகள் இவர்களுடன் சேர்ந்து கொண்டு மாலி ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களைத் தொடுத்து, 2013-ல் அசாவத் பிராந்தியத்தைத் தனிநாடாக அறிவித்தனர். இதர சன்னி தீவிரவாதக் குழுக்களை இணைத்துக் கொண்டு “இஸ்லாமிய மெஹ்ரப் அல்கய்தா குழு” என்ற பெயரில் திரண்ட இப்பயங்கரவாதிகள், இப்பகுதியில் சுஃபி மார்க்கத்தைப் பின்பற்றும் இஸ்லாமிய மக்களிடம் வாஹாபி சன்னி மார்க்கத்தைத் திணித்து ஷாரியத் சட்டத்தை ஏவி ஒடுக்கத் தொடங்கினர். இச்சன்னி மார்க்கப் பயங்கரவாதிகள் இராக்கிய ஐ.எஸ். இயக்கத்தினரைப் போலத் தனியொரு கிலாஃபத் ஆட்சியையும் கலீஃபாவையும் அறிவிக்கவில்லையே தவிர, இந்த நோக்கத்தோடுதான் இயங்கினர். இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள், லிபியாவில் கடாபியின் ஆட்சியைக் கவிழ்க்க சி.ஐ.ஏ.வினால் பயன்படுத்திக்
கொள்ளப்பட்டவர்கள். இப்பிற்போக்குச் சக்திகளை வளர்த்துவிட்டு பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள், மாலியின் ஒருபகுதியை இப்பயங்கரவாதக் குழுவினர் தனிநாடாக அறிவித்ததும், இஸ்லாமிய தீவிரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்து அந்நாட்டைத் தனது மேலாதிக்கத்தின் கீழ் இருத்தி வைத்துள்ளன.
இதேபோலத்தான் இப்போது இஸ்லாமிய தீவிரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் ஐ.எஸ். இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் மீது அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ஆளில்லா போர் விமானங்கள் மூலம் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தி வருகின்றன. குர்து இனக்குழுக்கள், ஷியா பிரிவு முஸ்லிம்கள் மற்றும் இராக்கிய பொம்மை அரசுப்படைகளுக்கு ஆயுதங்களை வழங்கி போர் வியூகங்களை வகுத்து வழிகாட்டும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள், இதனைப் பயங்கரவாதத்துக்கு எதிரான அவசியமான நடவடிக்கையாகச் சித்தரித்து, மேற்காசியப் பிராந்தியத்தில் தமது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன.
– குமார்
source: http://www.vinavu.com/