இல்லறம் காக்கப்பட இறைவன் போட்டுத் தரும் பாதுகாப்பு வளையங்கள்!
கணவன் மனைவி உறவை பலப்படுத்துவது எது? அவர்களுக்குள் காதல் உணர்வை நிலைத்திருக்கச் செய்வது எது? அது தான் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் “நம்பிக்கை” (trust)!
ஆனால் இந்த நம்பகத் தன்மையை உடைத்தெறிந்திடப் புறப்பட்டவன் தான் ஷைத்தான் – மனிதனின் பொது எதிரி! அவன் கங்கணம் கட்டினான். அல்லாஹ் அனுமதி கொடுத்தான்.
கணவன் மனைவியரைப் பிரித்து வைப்பது தான் மிகச் சிறந்த ஷைத்தானிய வேலை என்று தன் சகாக்களுக்கு “சான்றிதழ்” வழங்கினான். (பார்க்க: முஸ்லிம் 5419)
கணவன் மனைவி நல்லுறவை உடைத்தெறிவதற்கு ஷைத்தான் மேற்கொள்ளும் வழிமுறைகள் என்னென்ன?
கணவன் மனைவி நம்பகத்தன்மையை உடைப்பது; சந்தேக விதைகளை விதைப்பது; சந்தேக சூழலைத் தனக்குச் சாதகமாக்குவது. அதனைப் பரப்பி விடுவது; கணவன் மனைவியருக்குள் சண்டை மூட்டுவது; பெரிது படுத்தி வேடிக்கை பார்ப்பது;
இதனை நாம் நுணுக்கமாக ஆய்வு செய்திட வேண்டியுள்ளது: ஏனெனில் ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின் பற்ற வேண்டாம் என்பது இறை கட்டளை!
”ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்;” (24:21)
அடிச்சுவடு என்பது சின்ன சின்ன ஸ்டெப்!
அதாவது ஷைத்தான் நம்மை வழிகெடுக்கும் முறை – நம்மை சின்ன சின்ன “தவறுகளில்” விழ வைத்து – அப்படியே அவன் வழியில் நம்மை வழி கெடுத்து – இறுதியில் ஒரேயடியாக நம்மைப் பாவப் படுகுழியில் தள்ளி விட்டு வேடிக்கை பார்ப்பது தான்!
ஆனால் – அல்லாஹு தஆலா – தன் அடியார்களாகிய நமக்கெல்லாம் மிகத் தெளிவாகவும் மிக விரிவாகவும், மிக விளக்கமாகவும் வழி காட்டியிருக்கின்றான்.
எந்தெந்த வழிகளில் எல்லாம் அவன் வழி கெடுக்க வருவானோ அத்தனை வழிகளையும் அடைத்துக் கொள்ளச் சொல்லி வழிகாட்டியுள்ளான் அல்லாஹு தஆலா.
வல்லோன் அல்லாஹ்வின் விரிவான வழிகாட்டுதல்கள் என்னென்ன?
சுருக்கமாகப் பட்டியலிடுவோம் இங்கே.
1. பருவம் அடைந்ததும் – தாமதிக்காமல் திருமணம் செய்து வைத்து விடுதல்
2. திருமணம் தாமதமானால் கற்பைப் பாதுகாத்துக் கொள்தல்
3. தூய்மையான துணையைத் தேர்வு செய்தல்
4. திருமணத்தை எளிமையாக்குதல்
5. கணவன் மனைவியரின் திருப்திகரமான பாலுறவுக்கு (sex life) ஊக்கம் அளித்தல்; அதனை உறுதி செய்தல்
6. மகிழ்ச்சிகரமான இல்லற வாழ்வுக்கு எளிமையான வழிகாட்டுதல்கள் (முத்தம்; விளையாட்டு, சேர்ந்து குளித்தல்; சேர்ந்து உண்ணுதல்; வேலைகளைப் பகிர்ந்து கொள்தல்; மென்மையைக் கடைபிடித்தல், நேரம் ஒதுக்குதல்)
7. வாழ்க்கைத் துணையை மதித்தல்; கண்ணியமாக நடத்துதல்; நகைச்சுவை உணர்வு; மன்னிக்கும் மனப்பான்மை; உணர்வுகளை மதித்தல்; தனிமையில் மட்டும் கண்டித்தல்; இரக்கம் காட்டுதல்
8. கண்ணியமாக பேசுதல்; திட்டுவதைத் தவிர்த்தல்; வாக்குறுதிகளைக் காப்பாற்றுதல்; தவறுகளை ஒத்துக் கொள்தல்; கருத்து வேறுபாடுகளை அழகான முறையில் தீர்த்துக் கொள்தல்
9. கண்ணியமான ஆடை (ஹிஜாப்) அணிதல்; அலங்காரத்தை மறைத்துக் கொள்தல்
10. ஆணும் பெண்ணும் தங்கள் கண் பார்வையைத் தாழ்த்திக் கொள்தல்
11. (அன்னியரான) ஆண் – பெண் தனிமையைத் தவிர்த்தல் / பயணத்தைத் தவிர்த்தல்
12. ஒருவர் வீட்டுக்குள் நுழைவதில் கட்டுப்பாடுகளைக் கடைபிடித்தல்; எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்தல்
13. நடந்து செல்லும்போதும் கட்டுப்பாடு
14. அன்னியருடன் பேசும்போதும் கட்டுப்பாடு
15. சந்தேகமான சூழ்நிலைகளைத் தவிர்த்துக் கொள்தல்
16. கற்புள்ள பெண்கள் மீது அவதூறு பரப்பினால் கடுமையான தண்டனை
17. நம்பிக்கை மோசடி செய்த பெண்ணுக்கு கணவனே – இறைச்சாபமிட்டுப் பிரித்து விடுதல் எனும் கடுமையான சட்டம்
18. விபச்சாரத்துக்கு கடுமையான தண்டனை
இல்லறம் பாதுகாக்கப்பட இறைவன் போட்டுத் தந்திருக்கும் இந்தப் பாதுகாப்பு வளையங்களைப் பேணிக்கொள்தல் மிக அவசியம்!
source: -சுன்னத்தான இல்லறம்
”எனக்கு எவ்வித பயமுமில்லை” – இல்லறம் ஈமானோடு வளமாகட்டும்
ஒருவருக்கு புதிதாக திருமணம் நடந்தது. அவர் தனது அழகான மனைவியோடு கடல் வழியாக படகொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்நேரத்தில் வானம் முழங்கியது. மின்னலும் மின்னியது. கடலலைகள் பெரு அலைகளாக மாறி மாறி வந்தன. அந்நேரத்தில் மனைவி பயந்து கொண்டாள்.
எவ்விதமான பயத்தையும் உணராமல் அமைதியாய் புன்னகையோடு கணவன் தனதருகில் அமர்ந்திருப்பதை உணர்ந்தாள்.
கணவனைப் பார்த்து மனைவி கேட்டாள் “உங்களுக்கு பயம் இல்லையா” என்று. கணவன் எதுவுமே கூறாமல் மௌனமாக இருந்தபடி அருகிலிருந்த கத்தியொன்றை எடுத்து அவள் கழுத்தருகில் வைத்தான். ஆனால் அதற்கு அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.
மனைவியைப் பார்த்து கணவன் கேட்டான் “இந்த கூரிய ஆயுதமான கத்தியை உன் கழுத்தில் வைத்திருக்கிறேன், நீ எதற்காக சிரிக்கிறாய்?” என்று.
அதற்கு மனைவி சொன்னால் ” கத்தி கூர்மையானதுதான், ஆனால் அந்தக்கத்தியை வைத்திருக்கும் என் கணவர் மிகவும் அன்புக்குரியவர்” என்று புன்னகையோடு பதிலளித்தாள்.
கனவனும் புன்னகையோடு “இந்த கடலலைகளும், இடியும், மின்னலும் பயங்கரமானவைதான், ஆபத்தானவைதான். ஆனால் அவற்றை தன் வசம் வைத்திருக்கும் இறைவன், என் அன்புக்குரியவன். அதனால் எனக்கு எவ்வித பயமுமில்லை என்றான்…!