தப்பிப் பிழைப்பதற்குத் தாவரங்கள் என்னென்ன வியூகங்கள் வகுக்கின்றன!
[ இறைவன் அனைத்து உயிர்களுக்கும் சமமான பலத்தை அளித்து உள்ளான். பிற உயிர்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ளும் அறிவை கொடுத்துள்ளான்.
அவைகளை தாவரங்கள் முறையாக பயன்படுத்தி தன்னை அழிக்க வருபவன் இடத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்கின்றன.
ஆனால் மனிதன் தன்னுடைய வளர்ச்சி நன்மைக்காக தனக்கு எதிரியாக இல்லாதவனையும் அழிக்க நினைக்கிறான். இயற்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ளல் இன்னும் நிறையவே உள்ளது.
தான் பிறந்த இடத்திலேயே சாகும் வரை நின்று வாழும் திறன் படித்தவை தாவரங்கள் மட்டுமே! அழகான கருத்துக்கள்! மனிதன்மாதிரி மற்றவர்மீது ஆதிக்கம் செலுத்தும் போரல்ல தாவரங்களின் போர் … தற்காப்புக்கான அளவு மட்டுமே!]
அல்லேலோபதி என்றால் தெரியுமா?
அண்மையில் தாவரவியல் ஆய்வாளர் ஒருவருடன் கொல்லிமலைக் காடுகளில் நடக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. “அமைதி நிலவுதே, சாந்தம் பொங்குதே, முடிவிலா மோன நிலையை நாம் காணலாம்” என்று பாட ஆரம்பித்தேன்.
“அய்யா, இந்தக் காட்டுக்குள்ளே தீவிரமான யுத்தமொன்று நடந்துகொண்டிருக்கிறது தெரியாமல் பாடுகிறீர்! அந்த யுத்தத்தைப் பற்றி விவரித்தால் வியந்து போவீர்; அமைதியான காடுகளிலும், பூங்காக்களிலும் தப்பிப் பிழைப்பதற்காகத் தாவரங்கள் தமக்குள் தீவிரமாகப் போராடிக்கொண்டிருக்கின்றன. கத்தியின்றி ரத்தமின்றி – சத்தமுமின்றி – ஒரு யுத்தம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது” என்றார் அவர்.
“ஏன் அப்படி?” என்று கேட்டேன்.
“மற்ற உயிரினங்களை ஆபத்து நெருங்கும்போது அவை ஓடிவிடும் அல்லது பறந்துவிடும் அல்லது வளைக்குள் புகுந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ளும். அவற்றுக்குப் பசித்தால் அங்குமிங்கும் அலைந்து திரிந்து இரை தேடும். தாவரங்களோ தரையுடன் பிணைக்கப் பட்டு, இருந்த இடத்தைவிட்டு நகர முடியாதவை. ஆகவே, அவற்றால் முடிந்ததைச் செய்து உயிர் பிழைக்க முயல்கின்றன” என்றார்.
சாணக்கியனை விஞ்சும் தாவரங்கள்
எதிரிகளை விரட்டியடிக்கவும் நண்பர்களைக் கவர்ந் திழுக்கவும் தாவரங்கள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன! தங்களுக்குப் போட்டியாக இருக்கும் வேறு தாவரங்களைக்கூட விசேஷ வகை வேதிப்பொருட்களைப் பிரயோகித்து விரட்டுகின்றன அல்லது கொன்றுகூடவிடுகின்றன. இந்த வகையில் அவற்றின் சாமர்த்தியமும் சமயோசிதமும் சாதுரியமும் சாணக்கியனை விஞ்சக்கூடியவை. அவற்றைப் பற்றி ஆராயும் துறைதான் ‘அல்லேலோபதி’ (Allelopathy).
தாவரங்கள் மட்டுமே சுயம்பாகிகளாகச் சூரிய ஒளியைப் பயன்படுத்தித் தமக்குத் தேவைப்படும் உணவைத் தயாரித்துக்கொள்ளும் திறமை படைத்தவை. மற்ற எல்லா உயிரினங்களும் – கிருமி முதல் மனிதர் வரை – உணவுக்குத் தாவரங்களையே சார்ந்திருக் கின்றன. தாவரங்களை நேரடியாக உண்பவை தாவர உண்ணிகள்; தாவர உண்ணிகளை உண்பவை ஊனுண்ணிகள். இரண்டையும் வாய்ப்புக்கேற்ப உண்பவை அனைத்துண்ணிகள். ஆகவே, எல்லா உயிரினங்களுக்கும் உணவு தரும் அடிப்படையாகத் தாவரங்களே உள்ளன.
தாவர நஞ்சு
தாவரங்கள் தாம் தப்பிப் பிழைக்கவும், தம் இனத்தைப் பெருக்கிப் பரப்பவும் பல விதமான ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன. தற்காப்புக்காகத் தமது உடல்களில் முட்களையும், தடித்த பட்டைகளையும், பலவிதமான நஞ்சுகளையும் உருவாக்கிக்கொள்கின்றன. அந்த நஞ்சுகள் ஃபைட்டோடாக்சின் என்ற வகையைச் சார்ந்தவை. அரளிச் செடியின் சாறு கொடிய விஷம்.
மிசில்டோ செடியின் பழங்கள் ஒரு மாட்டைக்கூடக் கொல்லும் அளவுக்கு நச்சுத்தன்மை கொண்டவை. பல செடிகளை உரசினாலே ஒவ்வாமை தோன்றி உடலில் தடிப்பும் அரிப்பும் ஏற்படும். பார்த்தீனியச் செடியின் மகரந்தத் துகள்கள் ஆஸ்துமாவை ஒத்த நோய்க்குறிகளை உண்டாக்குகின்றன. ஆடுதின்னாப் பாளை என்ற பெயரில் பல செடிகள் உள்ளன. ஆடு, மாடுகள் அவற்றை முகர்ந்து பார்த்துவிட்டு விலகிப் போய்விடும்.
தாவரங்கள், தம்முடன் போட்டியிடும் தாவரங் களை அழிக்கக் களைக்கொல்லிகள் போன்ற வேதிப்பொருட்களைத் தமது வேர்ப் பிரதேசங்களில் பரப்பிவிடுகின்றன. ஆலமரம் போன்றவை அடர்ந்த நிழலை உண்டாக்கி, வேறு செடிகள் எதுவும் வளராமல் தடுக்கின்றன. சில தாவரங்கள் தமது இலைகளைத் தின்ன முயலும் பூச்சிகளை விரட்டப் பூச்சிக்கொல்லிகள் போன்ற வேதிப்பொருட்களை உருவாக்கிக்கொள்கின்றன.
வேப்ப மரம் தனது வேர் முதல் இலைகள் வரை கசப்புத் தன்மையைப் பரப்பிக்கொள்கிறது என்றாலும், தனது காய்கள் கனியாக மாறும்போது அவற்றை இனிப்பாக்குகிறது. பறவைகள் அவற்றை விரும்பி விழுங்கித் தமது எச்சத்தின் மூலம் விதைகளை வேற்றிடங்களில் போட்டு வேம்பின் இனப் பெருக்கத்துக்கு உதவுகின்றன.
எதிரிகளை ஒடுக்கும் வியூகங்கள்
ஒரு தாவரம், தனக்கு இடையூறு செய்யும் எதிரிகளைக் கொன்றுதான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டு மென்பதில்லை. பெரும்பாலானவை எதிரிகளைப் பலவீனப்படுத்துவதோடு நிறுத்திக்கொள்கின்றன. புகையிலைச் செடி உற்பத்திசெய்யும் நிகோடின் என்ற வேதிப்பொருளின் வாசனை பட்டாலே வண்டுகள் செயலிழந்துபோகும். ஓக், பைன் போன்ற மரங்களின் இலைகளில் டானின் என்ற வகை வேதிப்பொருட்கள் உள்ளன. அவற்றைத் தின்னும் பிராணிகளின் வயிற்றில் டானிக் அமிலமாக அந்த வேதிப்பொருட்கள் மாற்ற மடைந்து, செரிமானக் கோளாறுகளை உண்டாக்கிவிடும்.
பூச்சிகளும் ஓக் மரத்து இலைகளை மட்டுமே தின்னுமானால் அவற்றின் செரிமானத் திறன் குறைந்து தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் வலுவிழந்துவிடும். சில தாவரங்கள் தம்மைத் தின்னும் பூச்சிகளின் மைய நரம்பு மண்டலத்தைச் செயலிழக்கச் செய்கின்றன. கஞ்சா, கசகசா, அமானிடா காளான் போன்றவற்றை உண்டால் போதையுண்டாகும். ஊமத்தங்காயைத் தின்றால் புத்தி பேதலிக்கும்.
நண்பர்களும் தேவை
தாவரங்கள் தமது எதிரிகளைத் தடுத்து நிறுத்தினால் மட்டும் போதாது. தமது இனப்பெருக்கத்துக்கு உதவுகிற நட்புள்ள தரகர்களும் அவற்றுக்குத் தேவை. அத்தகைய தரகர்களின் கவனத்தைக் கவர்வதற்காகப் பல கோடி ஆண்டுகள் பரிணாம முயற்சிகளின் மூலம் தாவரங்கள் பலவித வண்ண மலர்களையும் நறுமணங்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. பல மலர்களின் நறுமணங்கள் பூச்சிகளின் கலவி உந்தலைத் தூண்டும் வேதிப்பொருட்களின் நறுமணத்தை ஒத்திருக்கின்றன.
அந்த வேதிப்பொருட்களுக்கு பெரமோன்கள் என்று பெயர். பெண் பூச்சிகளும் ஆண் பூச்சிகளும் ஒன்றையொன்று கலவிக்கு அழைக்க பெரமோன்களைக் காற்றில் பரப்பும். தனது இணை, மலருக்குள்ளிருந்து அழைப்பு விடுப்பதாக எண்ணி, பூச்சி உள்ளே நுழையும். அவ்வாறு வரும் பூச்சிகளை ஏமாற்றாமல் மலர்கள் தேனை வழங்கி அவற்றின் உடலில் தமது மகரந்தத் துகள்களைப் பூசி வழியனுப்பிவைக்கின்றன.
நறுமணம் மட்டும் என்றில்லாமல் சில பூச்சியினங்களுக்குப் பிடித்தமான மல நாற்றம், அழுகிய மாமிச நாற்றம் ஆகியவற்றை வெளியிடும் மலர்களும் இருக்கின்றன. இம் மலர்களை நாடிவரும் பூச்சிகள் தாவரங்களின் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன.
மனிதர்களும் பிராணிகளும் பழங்களைத் தின்றுவிட்டு, விதைகளைப் பெரும்பாலும் தாய்த் தாவரங்களிலிருந்து தொலைவில் கொண்டுபோய்ப் போடுகின்றன. அதன் காரணமாகச் சந்ததிச் செடிகள் தாய்த் தாவரத்துடன் வெயிலுக்கும் ஈரத்துக்கும் ஊட்டச்சத்துகளுக்கும் போட்டியிடும் நிலை தவிர்க்கப்படுகிறது.
பிராணிகள் பழத்தோடு விதையையும் சேர்த்து விழுங்கிவிட்டாலும் விதை அவற்றின் வயிற்றில் ஜீரணமாகிவிடாமல் ஓடு காப்பாற்றுகிறது. பெரும்பாலான விதைகள் சேதப் படாமல் மலத்துடன் வெளியே வந்துவிடும். மலத்துடன் தரையில் விழும் விதைகளுக்கு அந்த மலமே உரமாகி உதவுகிறது.
ஆப்பிள், ஆப்ரிகாட், பீச் போன்றவற்றின் விதை களில் சயனைடு போன்ற தாவர நச்சுகள் உள்ளன. அவற்றைப் பறவைகளும் இதர பிராணிகளும் உண்ணுவதில்லை. விதைகள் தரையில் விழுந்தபின் கிருமி களும் பூஞ்சைகளும் அவற்றைப் பிடிக்க முடியும். ஆனால், பல தாவரங்களின் விதைகளில் வலுமிக்க கிருமிக் கொல்லிகளும் பூஞ்சைக்கொல்லிகளும் உள்ளன. அவை கிருமிகள் மற்றும் பூஞ்சைகளின் செல்சுவர்களைச் சிதைத்து அழித்துவிடும். மருத்துவ ஆய்வர்கள் அத்தகைய கிருமிக்கொல்லிகளைப் பிரித்தெடுத்து நோய் தீர்க்கும் மருந்துகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
காட்டுத்தீ
காட்டுத்தீ அல்லது பிறவகை விபத்துகளின் காரணமாகத் தாவரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிடுமானால், தரையில் ஒரு குறிப்பிட்ட வரிசையில் தாவரங்கள் மீண்டும் தோன்றுகின்றன. முதலில் பயனற்ற களைகள் தோன்றும். அவற்றின் வேதிப்பொருட்கள் அங்கு வேறு தாவரங்களைத் தோன்ற விடாமல் தடுக்கும். சில ஆண்டுகளுக்குப் பிறகு புல் வகைகள் தோன்றித் தமது வேதிப்பொருட்கள் மூலம் களைகளை அழிக்கும். 40, 50 ஆண்டுகளுக்குப் பிறகே மரங்கள் தோன்ற முடிகிறது. அவை கிளைபரப்பி விரிந்து தரையிலுள்ள புற்களுக்கும் சிறு செடிகளுக்கும் வெயில் கிடைக்காமல் தடுத்து அழித்துவிடும்.
வனங்களில் ஒருபுறம் இனப் போர் நடந்து கொண்டிருந்தாலும் கூடவே, கூட்டுறவும் நிகழ்கின்றது. சிவப்பு ஆல்டர், வில்லோ போன்ற மரங்கள் தம்மைப் புழுக்களும் கம்பளிப்பூச்சிகளும் தாக்க முனையும் போது, எச்சரிக்கை வேதிப்பொருட்களைக் காற்றில் பரப்புகின்றன. காற்று மூலமாக அந்த வேதிப்பொருட்கள் மற்ற ஆல்டர் மற்றும் வில்லோ மரங்களைச் சென்றடையும்
போது அவை எச்சரிக்கை அடைந்து, தமது இலைகளில் கூடுதலான அளவில் டானின்களை நிரப்பிக்கொள்கின்றன. அதன்பின் புழுக்களுக்கும் பூச்சிகளுக்கும் அந்த இலைகளைத் தின்னும் ஆசையே விட்டுப்போகும்.
– கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).
-தி இந்து