மனம்விட்டு பேசுங்கள்
டாக்டர். ஆர். கார்த்திகேயன்
சில காலமாய் நடக்க ஆரம்பித்திருக்கிறேன். மூன்று வாரத்தில் ஐந்து நாட்கள் தான் என்றாலும் அலுவல் குறிப்பாக சில காலம் என்பது சாலப்பொருத்தமே.
நெஞ்சத்தை கிள்ளாதே படம் ரிலீஸ் ஆன போது சில நாட்கள் ஆசைப்பட்டதோடு சரி. வாக்கிங் வாய்க்கவில்லை. வெறும் டாக்கிங்தான் வாழ்க்கை என்றாகி விட்டது. ஜிம்மிற்கு வெட்கமில்லாமல் பதினைந்து முறை சேர்ந்ததுதான் மிச்சம். ஆசான் சஜீவனிடம் ஏரோபிக்ஸ் கற்று சில காலம் (இங்கு சில மாதங்கள் எனக் குறிப்பு கொள்க) பேயாட்டம் போட்டு ஓய்ந்தேன். யோகா புத்தகங்கள் வாங்கிய எண்ணிக்கையில் பாதி எண்ணிக்கை நாட்கள் கூட ஆசனம் செய்யவில்லை.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக நந்தனம் தெருக்களில் நான் நடக்க ஆரம்பித்ததுதான் இங்கு கதைக்களம். மனித விநோதங்களின் தீவிர வாசகன் என்ற முறையில் நடப்பது சில புதிய படிப்பினைகளைத் தந்தது.
எதிரில் நடப்பவர்களில் நான்கில் ஒருவராவது தீர்மானமாக தனக்குத் தானே பேசிக்கொள்கிறார்கள். ப்ளூ டூத்-செல் போன் இல்லாமல் என்பது முக்கிய செய்தி. முணுமுணுப்பு, மெலிதான கிண்டல் பேச்சு, ஆங்காரத்தோடு தர்க்கம், விரக்தி மொழி, யதார்த்த தனிப்பேச்சு என எத்தனை வகைகள்.
கல்லூரியில் படித்த ஷேக்ஸ்பியர் கதாபாத்திரங்கள் Soliloquy என்று தனக்குதானே பக்கம் பக்கமாகப் பேசும். இது இயல்பா, பிறழ்வா என்று யோசிப்பேன். சைக்கியாற்றிஸ்டுகள் இவர்களைப் பார்த்தால் Second Person Hallucination எனப் படுக்க வைத்து Anti – Psychotic மருந்துகள் கொடுத்திருப்பார்கள்.
பிறழ்வு இல்லாமல் தனக்குதானே பேசும் பலரை எனக்குத் தெரியும். இவர்கள் மிகுந்த மன நலத்துடன் மிக ஆரோக்கியமான உரையாடல்கள் கொள்வதையும் பார்த்திருக்கிறேன்.
பல மன நோய்களில் தனக்கு தானே பேசுவது ஒரு அறிகுறி என்பது உண்மைதான். ஆனால் தனக்குத் தானே பேசுவது மட்டுமே மன நோயாகி விடாது.
இன்றைய சமூக சூழ்நிலையில் தன் மனதை கொட்டிக் கவிழ்க்க இடமும் அவகாசமும் இல்லாமல் அவதிப்படுவர் எண்ணிக்கை அதிமாகிக் கொண்டு வருகிறது என்பதுதான் உண்மை.
கல்வி, தகுதி, திறன், அனுபவம் எதுவுமில்லாத பலர் உளவியல் ஆலோசகர்களாக மிக வெற்றிகரமாக செயல்படுவதைப் பார்க்கிறேன். ஒரு காலத்தில் போலி ஆலோசகர்களுக்கு எதிராக அதிகம் போராடியிருக்கிறேன். ஆனால் வெறும் சில ஆயிரம் உளவியல் ஆலோசகர்கள்தான் நம் நாட்டில் படித்து வெளியே வருகிறார்கள் ஆண்டு தோறும். அதுவும் அனைவரும் நகரங்களில் மட்டுமே பணி புரிகிறார்கள். இந்த நிலையில் தேவைக்கு ஏற்ற பணியாளர் இல்லாததுதான் நிஜமான பிரச்சினை.
எது அசல் எது போலி என்பதை நிலை நிறுத்துவதை விட அனைத்து களப்பணியாளர்களுக்கும் பயிற்சி கொடுப்பது தான் சரியான தீர்வு என்று பின்னர் உணர்ந்தேன். அதன் அடிப்படையில் தான் பள்ளி ஆசிரியர்களுக்கும் தொழிலக மேலாளர்களுக்கும் ஆலோசனைப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன்.
நம் குடும்ப அமைப்பில் சித்தப்பாக்களும் சித்திகளும் மாமாக்களும் அத்தைகளும் வீட்டுக்குள்ளேயே இருந்த காலத்தில் வெளி ஆலோசனை அவசியப்படவில்லை. மூன்றும் இரண்டுமாய் குடும்பம் சுருங்கிக்கிடக்கையில், அதுவும் பிரச்சினையே அவர்களுக்குள் எனும் பொழுது யாரிடம் எதைக் கொட்டிக் கவிழ்க்க?
அடித்தட்டில் இட நெருக்கடியால் முண்டியடித்து வாழ்தல் ஒரு பாதுகாப்பு உணர்வை உத்தரவாதமாகக் கொடுக்கிறது. ஆண்களுக்கு இன்னமும் டீக்கடை பெஞ்சு சமூகம் உள்ளது. பஸ் நெரிசலில் அந்நியர்களிடம் கூட வாழ்க்கையின் விரக்தியை வெளிபடுத்த முடிகிறது. குற்ற உணர்வு இல்லாமல் கெட்ட வார்த்தை பேச முடிகிறது.
மேல் தட்டு மக்களிடம் இந்த வெறுமையை போக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் செலவிட செல்வமும் வழிமுறைகளும் உள்ளன.
இடைப்பட்ட மத்திய தட்டு தான் தன் குரல் வளையை தானே நசுக்கிக் கொண்டு தனியாக மௌன ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது.
நிறைய மனிதர்கள் சுற்றி இருந்தும், பேச நிறைய விஷயங்கள் இருந்தும், யாரிடமும் எதுவும் சொல்ல முடியாத நிலை.
சில ஆண்டுகள் முன் என் எதிர் ஃப்ளாட்டில் ஒருவர் மாரடைப்பால் காலமானார். நாங்கள் வெகு சிலர் அருகில் இருந்தோம். சில மணி நேரத்தில் ஹாலில் பிணத்தை கிடத்திவிட்டு மகனும் மருமகளும் போனில் அடுத்து என்ன செய்ய என்று தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்க, ஒரு அழுகை சத்தம் கூட இல்லாமல் ஒரு எழவு வீட்டை முதன் முறையாகப் பார்த்தேன். நாலு உறவினருக்கும் குறைவாக வந்து எடுத்து சென்றார்கள். அமெரிக்காவில இருந்து மகள் வரவில்லை.
மின் தகனம் முடித்து வந்தவர்கள் எதுவும் பேசாமல் காபி குடித்துக் கொண்டு இருந்தது நான் மறக்க நினைக்கும் ஒரு கொடிய நினைவு.
சோகத்தை பகிர முடியாத சோகம் கொடுமையானது!
சோகத்தை கட்டணம் தந்து சொல்ல ஒரு பெருங்கூட்டம் தயாராக உள்ளது. சோகத்தை சுகமாக மாற்றுகிறேன் என்று சொல்லும் ஒரு ஆன்மீக சந்தை உள்ளது. மதமும் நம்பிக்கைகள் வேறுபட்டிருந்தாலும் இவர்கள் அனைவரின் செயல்பாடுகளும் ஒன்றே. இன்னொரு சந்தை மருந்துச் சந்தை. இந்த ஊட்டச்சத்துப் பாலைக் குடிக்காவிட்டால் போஷாக்கு இல்லை என்பது போல மெல்ல மெல்ல இந்த மருந்துதான் துன்பம் தீர்க்கும் மருந்து என சினிமா நடிகர்களை விட்டு விற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மனசு விட்டுப் அழுதலும் வாய் விட்டு சிரித்தாலும் மனிதனின் ஆதாரத் தேவைகள். அதற்கு ஆரோக்கியமான வழிகளை அமைத்துத்தருவது அவசியம்.
பணியிடங்களில் உளவியல் ஆலோசகர்களின் உதவியைக் கோருகின்றன பல தொழில் நுட்ப நிறுவனங்கள். இது காலத்தின் கட்டாயம்.
2022ல் பணியிடம் பற்றி எனக்கொரு கற்பனை:
ஆலோசகர்: வாருங்கள் நண்பரே.. என்ன பிரச்சினை?
பணியாளார்: ——–
ஆலோசகர்: சொல்லுங்கள் …நான் எப்படி உதவ முடியும்?
பணியாளார்: ——–
ஆலோசகர்: என்ன செய்ய வேண்டும் உங்களுக்கு?
பணியாளார்: அழ முடியவில்லை. ரொம்ப நாளா…
ஆலோசகர்: ஓ…உங்க குடும்பம்? மனைவி? மக்கள்?
பணியாளார்: யாருமில்ல..
ஆலோசகர்: உங்க வேலை..
பணியாளார்: இப்பத் தான் போச்சு…
ஆலோசகர்: அப்ப எனக்கு ஃபீஸ்…?
பணியாளார்: கிரெடிட் கார்ட் இருக்கு…வேற எதுவும் இல்ல… வேற எதுவும் இல்ல.. (பின் குலுங்கி குலுங்கி அழுகிறார்).
ஆலோசகர்: ரிலாக்ஸ் ரிலாக்ஸ்…!
பணியாளார்: (மூக்கை சிந்தியவாறு) ரொம்ப தேங்க்ஸ்…இப்பத்தான் நிம்மதியா இருக்கு. அழுதது வாட் எ ரிலீஃப்? (கண்களை திடைத்தவாறு) கிரேட்! எவ்வளவு டாலர் சொல்லுங்க, ஸ்வைப் பண்றேன்!!!
டாக்டர். ஆர். கார்த்திகேயன்
source: http://tamil.thehindu.com