அருள் மறந்தவர்கள் நாம்…
படைத்தவன் தனது படைப்பினங்களுடன் எப்போதும் இரக்கமானவன்தான். படைக்கப்பட்ட மனிதன் ஒரு கணமேனும் படைத்தவனது அருள் பார்வையிலிருந்து விலகுவது கிடையாது. அவன் எப்போதும் ‘ரஹ்மான்’ எப்போதுமே ‘ரஹீம்’ மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்துப் படைப்பினங்களுக்கும். அனைத்தையும் மனிதனுக்காகப் படைத்தான் அவன், மனிதன் நன்றியுடையவனாக இருக்க வேண்டும் என்பதற்காக.
வானம், பூமி, மலைகள் என்ற அனைத்துப் படைப்பினங்களுடனும் ஒப்பிடுகையில் மனிதன் பலத்தில், பருமனில், ஜீவியகாலத்தில் அனைத்திலும் குறைந்தவன் . என்றாலும் அம்மனிதன்தான் மிகச்சிறந்தபடைப்பு என்கிறான் படைத்தவன் அல்லாஹ். “ நாம் மனிதர்களை மற்ற படைப்பினங்களை விடவும் சிறப்பாக்கினோம்” (சூரா இஸ்ரா: 70)
நன்றி செலுத்துவதில், கட்டுப்படுவதில், நேர்மையாக நடப்பதில், விசுவாசமாக இருப்பதில் என அனைத்திலும் மனிதன் தரம் குறைந்தவன், பலவீனன். இதற்கு மாற்றமாக மாறு செய்வதில், நன்றிகெட்ட முறையில் நடப்பதில், ஒழுங்கீனத்தில், பேச்சு மாறுவதில் என அனைத்திலும் மனிதன் முதலிடம். என்றாலும் முழு மனித சமூகத்தையும் நாம் கண்ணியப்படுத்தியுள்ளோம் என்று கூறுகிறான் உலக இரட்சகன். “ நாம் ஆதமின் மக்களை கண்ணியப்படுத்தியுள்ளோம்” (சூராஇஸ்ரா: 70)
பாவங்கள், தவறுகள் செய்வதில் மனிதன் அதிகரித்தவன். அது மனிதனுடன் தொடர்பானவையாக இருக்கலாம். அல்லாஹ்வுடன் தொடர்பானவையாக இருக்கலாம் எதிலும் மனிதன் சளைத்தவன் கிடையாது. என்றாலும் பாவ மன்னிப்பு உயிர் மனிதனது தொண்டைக் குழியை அடையும் வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் நபிமொழி கூறுகிறது அதனையும் விட சுவனம், அதன் இன்பங்கள் அனைத்தும் அவனுக்காகத் தான் என்று கூறகிறது படைத்தவனது வேதம்.
ஆயுள் முழுவதும் இறை நிராகரிப்பில் தனது வாழ்வினைக் கழித்தவன் உயிர் பிரியும் தருவாயில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் சுவனம் அவனுக்கு உறுதி என்கிறது படைத்தவனது இறுதித் தூதரின் வாக்கு, அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும்
மனிதன் செய்யும் பாவங்கள் ஒற்றையாகத்தான் எழுதப்படும், நன்மைகள் பல மடங்காக்கப்படும் என்கிறது திருமறை.
இரவினை மிகக்கீழ்த்தரமான பாவங்களில் கழித்தவன் காலையில் மிக சந்தோஷமாக (சுகதேகியாக) விழிக்கிறான். காலையை ஆரம்பிக்கிறான் படைத்தவனை விளங்காவிட்டாலும். அவன் அளித்த வாழ்க்கை சந்தர்ப்பத்தை உணராவிட்டாலும். தான் பாவம் செய்தது அந்த படைப்பாளன் அல்லாஹ் அளித்த அருள்களான கை, கால்….. போன்றவற்றைக் கொண்டுதான் என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாவிட்டாலும். பலரையும் கொன்றவனும் உலகில் மிக அழகாக வாழ்கிறான், செல்வங்களைப் பெருக்குகிறான் … இறைவன் அவனுக்குக் கொடுத்திருக்கும் காலக்கெடுவினைபுரியாமல்
மனிதன் உலகில் மற்ற மனிதனுக்கு ஏதும் தவறுகளை செய்துவிடும் போது பாதிக்கப்பட்டவன் அந்த அநியாயக்காரனுக்கு உடனடியாக தண்டனை கிடைத்து விட வேண்டும் என்றுதான் எண்ணுவான், அப்படித் தான் பிரார்த்திப்பான்… இது மனித இயல்பு… எம்மைப் படைத்தவனுக்கு நாம் எப்போதும் சரியாகத் தான் நடக்கிறோம் என்று நம்மில் யாருக்கும் தைரியமாக சொல்ல முடியுமா? “மனிதன் அவனைப் படைத்தவனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்” (சூரா ஸல்ஸலா – 6)
நாம் செய்யும் பாவங்களுக்கும் எம்மைப் படைத்தவன் எம்மை உடனுக்குடன் தண்டிப்பதாக இருந்தால்…….! அல்லாஹு அக்பர்! ஆனால் “எனதுஅருள்அனைத்தையும்விடவிசாலித்தது” (அஃராப்: 156) என்று கூறுகிறான் அருளாளன்.
ஒன்று மாத்திரம் நிச்சயம் மறுமையில் படைத்த அல்லாஹ்வினது அருளும் உடனுக்குடன் நடைமுறையாகும், தண்டனையும் மிகவிரைவாக செயற்படும் .“நிச்சயமாக உமது இரட்சகனது பிடி மிகக் கடுமையானது” (சூரா புரூஜ் : 12)
இறைவா! நீ எப்போதும் அருளாளன் தான்… மனிதர்களாகிய நாம் தான் உனது அருளை மறந்தவர்கள். எம்மை மன்னித்து ஏற்றுக் கொள்வாயாக.
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.இம்தியாஸ் (நளீமி)
சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் – மலேசியா
source: http://www.samooganeethi.org/