யூதரான காவல் துறை உயர் அதிகாரி இஸ்லாத்தை ஏற்றார்!
‘ஒரு சராசரி அமெரிக்கன் எவ்வாறு தனது வாழ்வை நகர்த்துவானோ அது போலவே எனது வாழ்வும் நகர்ந்தது. தொடக்க காலத்திலிருந்தே நேர்மையாக வாழ பழக்கப்பட்டவன். ஒரு முக்கிய காவல் துறை அதிகாரியாக இருந்தாலும் எனது தேவைகளுக்கான பணத்தை கொடுத்து விட்டே எனது பணிகளை முடிப்பேன். நேர்மையாக வாழ்வை நடத்திட முடிந்த வரை முயற்சிப்பேன்.
எனது நண்பன் நஜீர் மூலமாகத்தான் எனக்கு இஸ்லாம் அறிமுகமானது. 1980 களில் அவனோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவனது நடவடிக்கைகள் அவன் என்னோடு பழகிய விதம் அனைத்தும் எனக்கு சில நேரம் ஆச்சரியத்தை வர வழைத்தது. நஜீரைப் போல மேலும் சில இஸ்லாமிய நண்பர்கள் எனக்கு கிடைத்தனர். அவர்களோடு எனது நேரம் செல்வது எனக்கு சற்று சிரமமாகவே இருந்தது. அவர்களின் கலாசாரத்தை புரிந்து கொள்வதும் சிரமமாக இருந்தது. யூத குடும்பத்தை சேர்ந்த ஒரு வித அதிகார மமதையில் வாழ்ந்து பழக்கப்பட்ட எனக்கு நஜீரின் எளிமையும் அவன் என்னோடு நடந்து கொண்ட விதமும் எனக்குள் சிறிது சிறிதாக மாற்றங்களை ஏற்படுத்தியது. இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை இது எனக்குள் தூண்டியது.
ஒரு வருடத்திற்கும் மேலாக நான் நஜீரை தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தேன். ரவுடிகள், படித்த மக்கள் போன்ற சகலரிடத்திலும் அவன் பேசும் போது அவன் பயன் படுத்தும் வார்த்தைகள். அந்த வார்த்தைகளில் உள்ள நளினங்கள் எல்லாமே என்னை மிகவும் கவர்ந்தது.
‘ஏன் நீ மாத்திரம் இவ்வாறு பல சிரமங்களை ஏற்படுத்திக் கொள்கிறாய். இவ்வாறு வாழ உன்னால் எப்படி முடிகிறது?’ என்று கேட்டேன். அமெரிக்க வாழ்வு முறை எந்த அளவு ஆடம்பரமானது என்பதை தெரிந்ததனால் இதனைக் கேட்டேன்.
‘இஸ்லாம் விதித்த சில கட்டுப்பாடுகள் என்னை இத்தகைய வாழ்வு முறைக்கு மாற்றியது. ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும் போகப் போக இந்த வாழ்வு முறையே என்னுள் அமைதியைக் கொண்டு வந்தது. இந்த வாழ்வு முறையினால் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்’ என்றான்.
அதன் பிறகு, தான் தற்போது வாழும் வாழ்வு முறை குர்ஆனிலிருந்து எவ்வாறு பெறப்பட்டது என்பதை ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் என்னிடம் பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தான். ஒரு புத்தகம் ஒருவனை இந்த அளவு மாற்றி விட முடியுமா? என்று எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. இந்த நிகழ்வுகள் குர்ஆன் என்ற அந்த வேதத்தின் மீது ஒரு இனம் புரியாத மதிப்பை என்னுள் உண்டாக்கியது.
ஒரு வாழ்வு முறையை ஆய்வு செய்வும் மாணவனாக எனது இஸ்லாமிய தேடல் தொடங்கியது. இந்த நிலையிலும் அரை மனத்தோடுதான் இஸ்லாத்தை அணுகினேன். இந்த நேரத்தில்தான் செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்றது. இதற்கு காரணம் முஸ்லிம்கள் என்ற செய்தி பரப்பப் பட்டதால் எனது தேடல் திடீரென்று நின்று போனது. இதன் பிறகு தவறான வழியில் செல்கிறோமோ என்று எனது உள் மனது கவலையில் ஆழ்ந்தது. ஒரு சூபர்வைசரான எனக்கு இந்த நேரத்தில் அரசிடமிருந்து பல எச்சரிக்கைகள் வந்தது. இஸ்லாமியர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டேன். இந்த சம்பவங்களால் இஸ்லாம் பற்றிய எனது தேடல் சில காலத்துக்கு நின்று போனது.
2004 ஆம் ஆண்டு இந்த களேபரங்களெல்லாம் மறந்தவுடன் திரும்பவும் இஸ்லாமிய எண்ணங்கள் எனக்குள் தோன்ற ஆரம்பித்து. திரும்பவும் நண்பன் நஜீரைத் தொடர்பு கொண்டேன். அவனும் சளிக்காமல் எனது கேள்விகளுக்கு தொடர்ந்து விடைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தான். இந்த முறை குர்ஆனைப் பின்பற்றினால் வாழ்வு முறை எப்படி எல்லாம் மாறும் என்பதனையும் எடுத்துக் கூறினா ன். இஸ்லாத்தை ஏற்றவுடன் எனது வாழ்வு முறை எவ்வாறு இருக்கும் என்பதனையும் விளக்கினான்.
நஜீரின் சகோதரன் ரியாஸூம் இந்த விஷயத்தில் எனக்கு மிகவும் உதவினான். இஸ்லாம் சம்பந்தப்பட்ட மிகப் பெரும் புத்தகக் கடலையே இரு சகோதரர்களும் என் முன் கொட்டினர். அனைத்தையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதம் குர்ஆனின் விளக்கங்கள் என்னுள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின். எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது என்ற ஒரு மனிதரால் இது போன்ற வார்த்தைகளை சொல்லவே முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். அறிவியல், விஞ்ஞானம், பூகோள அறிவு இப்படி ஒட்டு மொத்த அறிவையும் குத்தகை எடுத்த ஒருவரால்தான் இப்படி ஒரு ஆக்கத்தை தர முடியும் என்ற முடிவுக்கு வந்தேன். இத்தனை ஆய்வுகளுக்குப் பிறகு முஹம்மது ஒரு இறைத் தூதர்தான் என்ற முடிவுக்கு வந்தேன்.
நாளாக நாளாக இந்த நம்பிக்கை அதிகரித்ததேயொழிய குறைந்த பாடில்லை. இதன் பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரு இரவில் படுக்கைக்கு செல்லும் போது ‘எனக்கு ஒரு தெளிவைத் தருவாய் இறைவா’ என்று கூறிக் கொண்டே தூங்கிப் போனேன். தூக்கத்திலிருந்து விழித்தவுடன் இனம் புரியாத ஒரு உணர்வு என்னுள் ஏற்பட்டது. இறை மார்க்கமான இஸ்லாம் என்னை ஆட் கொண்டு விட்டதை உணர்ந்தேன். நண்பன் நஜீரிடம் கூறி என்னை மசூதிக்கு அழைத்துச் செல்ல கோரினேன். ஒரு வெள்ளிக் கிழமை தொழுகைக்கு எனது நண்பன் என்னை மசூதிக்கு அழைத்துச் சென்றான். அந்த பள்ளியின் இமாம் (தலைவர்) எனக்கு இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கையான கலிமாவை அரபியிலும் ஆங்கிலத்திலும் சொல்லச் சொன்னார். அந்த உறுதி மொழியைச் சொன்னவுடன் இனம் புரியாத ஆனந்தம் என்னுள் ஏற்பட்டது. நான் முஸ்லிமாக மாறினேன். உடன் குழுமியிருந்த இஸ்லாமியர் அனைவரும் என்னை ஆரத் தழுவி தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்.
அதே மிடுக்கு: அதே வேலை: அதே கவுரவம்: ஆனால் தற்போது ஒரு அமெரிக்க முஸ்லிமாக எனது பயணம் தொடர்கிறது. நஜீர் மற்றும் ரியாஸ் போன்ற சிறந்த நண்பர்கள் உங்களுக்கும் கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன்.
-வில்லியம்
தகவல் உதவி
தீன் ஷோ, சவுதி கெஜட்,
14-08-2014
இந்த யூதரின் பயணத்தில் நமக்கும் படிப்பினை இருக்கிறது. அவரது வாழ்க்கையை மாற்றியது அவரது நண்பர் நஜீர். குர்ஆன் காட்டும் அமைதி வழியில் தனது வாழ்வை அமைத்துக் கொண்டதாலேயே யூதரைக் கூட இஸ்லாத்தை ஏற்க வைத்தது. நாங்களே உயர்ந்த இனம்: அறிவில் நாங்களே சிறந்தவர்கள் என்ற மமதையில் வாழும் யூதனையும் மாற்றியது அவரது நண்பனின் நடவடிக்கைகள்தான். நஜீரைப் போல மென்மையான அணுகு முறையை நம்மில் எத்தைனை பேர் கை கொள்கிறோம். குர்ஆனும் ‘அழகிய முறையில் உபதேசிப்பீராக’ என்று அறிவுறுத்துகிறது. பலர் எந்த நேரமும் சண்டையிடும் மூடிலேயே இருக்கின்றனர். தீவிரவாத எண்ணங்களை வலிந்து புகுத்துகின்றனர். இதனால் நடுநிலையாக இருக்கும் பலரையும் இந்துத்வாவாதிகளின் பக்கம் கொண்டு சேர்க்கிறோம் என்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை.
சகோதரர்கள் நஜீரும் ரியாஸூம் எந்த அணுகு முறையை வில்லியம்சிடம் கையாண்டார்களோ அத்தகைய மென்மைப் போக்கை கடைபிடித்து ‘இஸ்லாம் என்றால் தீவிரவாதம்’ என்ற எண்ணத்தை களைய நாம் முயற்சிப்போமாக.
“இறைவனின் அன்பின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாகவும் கனிவாகவும் நடந்து கொள்கிறீர்; சொல்லில் நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் பிழைகளை அலட்சியப்படுத்தி விடுவீராக!” (குர்ஆன் 3:159)