விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி?
தமிழ்ப் படங்களில், கதாநாயகிகள் ‘வயதுக்கு வருவதாக’ அமைக்கப்படும் காட்சி களைப் பார்க்கும்போது, இயக்குநருக்கு உண்மையிலே இந்த விஷயம் தெரியாதா அல்லது ஒரு பெண்ணிடமாவது கேட்டு இந்த மாதிரி காட்சிகளை எடுக்க மாட்டார்களா என்றும் தோன்றும். திரைப்படத்தில் காட்டுவதைப் போல் நட்டநடு சாலையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கதாநாயகி கத்துவது, வலி வந்தவுடன் நாயகனின் முகம் அவள் நினைவுக்கு வருவது எல்லாம் உண்மையில் எங்கும் நடப்பதில்லை.
பெரும்பாலான பெண்கள், பருவ வயதை நெருங்கியவுடனே, வயதுக்கு வந்தவுடனே உடம்பில் என்ன மாற்றம் ஏற்படும் என்பதைத் தெரிந்துகொள்வார்கள். அம்மா, அக்கா, அத்தை, பாட்டி, தோழிகள் என்று யார்மூலமாவது அந்த விஷயம் அவர்களுக்கு அறிமுகமாகியிருக்கும்.
பெண்கள் தாங்கள் வயதுக்கு வந்த செய்தியை முதலில் தனது அம்மாவிடம் சொல்லக் கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. நிகழ்வு நடந்தவுடன் பயம், வலி, பதற்றம், அவமானம் எல்லாம் கலந்த உணர்வுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டுவரும். இதைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்துவைத்திருப்பவர்கள் எப்படியாவது சமாளித்துவிடுவார்கள். ஒன்றும் தெரியாதவர் களுக்கு ஏற்படும் உணர்வு விவரிக்க முடியாதது.
என் பள்ளித் தோழி ஒருத்தி, தான் பூப்படைந்த போது, தனக்கு ரத்தப் புற்றுநோய் வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டாள். அழுது ஆர்ப் பாட்டம் செய்ததில், அவரது உறவினர்கள் தலைசுற்றிக் கீழே விழாத குறைதான். பின்னர் தான், நடந்தது என்ன என்பதை உணர்ந்து ஆசுவாசப்பட்டனர்.
இது ஒரு பக்கம் இருக்க, ‘சானிட்டரி நாப்கின்’ விளம்பரங்களைப் பார்த்தாலே டி.வியை உடைத்தால் என்ன தப்பு என்றுதான் தோன்றும். (பெரும்பாலான விளம்பரங்கள் இந்த உணர் வைத்தான் ஏற்படுத்துகின்றன).
மாதவிடாய் நாட்களில், “நீங்கள் ஆசைப்படுவது போல் ஆடலாம், ஓடலாம்” என்று சொல்லி ஏணியில் ஏறுவதுபோல், எதன் மீதாவது ஏறிக் குதித்து ஓடுவதுபோல் காட்டுகின்றனர். உண்மையில் மாதவிடாய் நாட்களில் ‘ஓய்வு’ தவிர வேற எதுவும் தோன்றாது.
வயிற்று வலி, இடுப்பு வலி, ஒரு சிலருக்கு மார்பகம் வீங்கிப்போவது என்று பல வலிகளை அந்த மூன்று நாட்களில் பெண்கள் சந்திக்கின்றனர். இன்னும் சிலருக்குச் சோர்வு முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கும். தவிர, மனரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம். இவற்றையெல்லாம் முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, மாதவிடாய் என்றால் ரத்தப்போக்கு மட்டும்தான் என்பதுபோல் காட்டுவது சலிப்பாக இருக்கிறது. எந்தப் பதற்றமும் இல்லாமல், ஓய்வு எடுப்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம் என்பதுகூடவா விளம்பரத் தயாரிப்பாளர்களுக்குத் தெரியவில்லை?
மற்ற விளம்பரங்களைப் போல் இந்த விளம்பரங்களும் ஒன்றைத்தான் உணர்த்துகின்றன: விளம்பரத்தில் வரும் பெண்கள், விளம்பரத்தில் மட்டும் தான் இருக்கின்றனர்.
-ஆர்த்தி வேந்தன்
– தி இந்து