இடைத்தேர்தல் முடிவு உணர்த்தும் பாடம் என்ன?
90 நாள்கள் மத்தியில் ஆட்சியில் அமர்ந்த பா.ஜ.க. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பெருத்த அடியை வாங்கியிருக்கிறது. நேற்று வெளிவந்த தேர்தல் முடிவுகள் இதனை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டன! இதற்கு முன்னதாக உத்தரகாண்டில் நடைபெற்ற நான்கு சட்டப் பேரவை இடைத்தேர்தலிலும்கூட நான்கு இடங்களிலும் பா.ஜ.க. மோசமான தோல்வியைத் தழுவிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு மாநிலங் களில் நடைபெற்றுள்ள இடைத்தேர்தலின் முடிவுகள் நேற்று வெளிவந்துள்ளன.
பிகார் மாநிலத்தில் மொத்தம் பத்து இடங்களில் ஆறு இடங்களில் பி.ஜே.பி. தோல்வி. கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற மூன்று சட்டமன்ற இடங்களில் இரு இடங் களில் பி.ஜே.பி. தோல்வி. கருநாடகாவில் பி.ஜே.பி.யின் கோட்டை என்று வீராப்புப் பேசிய பெல்லாரி தொகுதியில் 33142 வாக்குகள் வித்தியாசத்தில் கடும் தோல்விப் பள்ளத் தாக்கில் தலைக்குப்புற வீழ்ந்துவிட்டது. பி.ஜே.பி.யிடமி ருந்து இந்தத் தொகுதியைக் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
வெற்றி பெற்ற ஒரே இடத்தில்கூட பி.ஜே.பி. வேட் பாளர் (எடியூரப்பாவின் மகன்) குறைந்த வாக்கு வித்தியா சத்தில் தான் வெற்றி பெற முடிந்துள்ளது. பி.ஜே.பி.யின் அகில இந்தித் துணைத் தலைவராக ஆக்கப்பட்டுள்ள வரும், முன்னாள் கருநாடக மாநில முன்னாள் முதலமைச் சருமான எடியூரப்பா கருநாடக மாநிலத்தில் தங்களுக்குக் கிடைத்த தோல்வியை சங்கடத்துடன் ஒப்புக்கொண்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் பி.ஜே.பி.யுடன் கூட்டணி கட்சியான ஆளும் சிரோன்மணி அகாலிதள வேட்பாளர் படுதோல்வி அடைந்துள்ளார். வாக்குகள் வித்தியாசம் 23 ஆயிரம்! பி.ஜே.பி. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
பி.ஜே.பி. மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு இந்த 90 நாள்களுக்குள் நடைபெற்ற இடைத்தேர்தலில் பி.ஜே.பி. மரண அடி வாங்கியிருக்கிறது என்பது உறுதியாகி விட்டது.
இதற்குக் காரணம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். மத்திய அரசு வெறும் வாய்ச் சவடால் காட்டி வரும் அளவுக்கு நாட்டு வளர்ச்சியை நோக்கி செல்வதற் கான எந்தவித அறிகுறியும் அதனிடம் காணப்படவில்லை.
காங்கிரஸ்மீது அதிருப்தி அடைந்த மக்கள் பி.ஜே.பி.க்கு வாக்களித்தார்கள். ஆனால், பி.ஜே.பி. ஆட்சியோ முந்தைய காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பாதையிலேயே பயணம் செய்து கொண்டு இருக்கிறது. பொருளாதாரக் கொள்கையாக இருந்தாலும் சரி, வெளியுறவுத் துறைக் கொள்கையாக இருந்தாலும் சரி காங்கிரசுக்கும், பி.ஜே.பி.,க்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை என்பதால், வெகுமக்கள் இன்றைய பி.ஜே.பி. ஆட்சியின்மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆயுள் காப்பீட்டுத் துறையிலும், பாதுகாப்புத் துறை யிலும்கூட 49 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு வழி செய்யப் பட்டு விட்டது. பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பது சம்பந்தப்பட்ட நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்ற காங்கிரஸ் நிலையே இப்பொழுதும் தொடர்கிறது. விலைவாசிகள் விண்ணைத் தொடுகின்றன.
90 நாள்களில் இந்தியா முழுமையும் மதக் கலவரங்கள் கொம்பு முளைத்துக் கிளம்பிவிட்டன. பி.ஜே.பி.யை பின்னணியிலிருந்து ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸின் குரல்தான் ஆட்சிக் கொள்கையாக ஓங்கி ஒலிக்கிறது.
மதச்சார்பற்ற நாடு இந்தியா என்ற அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக இந்தியா இந்து நாடு என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் அப்பட்டமாகப் பேசுகிறார்.
இதுகுறித்து பி.ஜே.பி. தரப்பிலோ, ஆட்சி தரப்பிலோ எந்தவிதமான மறுப்பும் கசியவில்லை. (அப்படிக் கசிந்தால் அடுத்த நொடியே ஆட்சி ஆட்டம் கண்டுவிடும் என்பது தெரிந்ததே!).
இந்திய அரசமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றிருக்க, கிடந்தது கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதுபோல, சமஸ்கிருத வாரம் கொண்டாடவேண்டும் என்று சொல்லு வதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா அஜண்டாவின் வெளிப்பாடே!
90 நாள்களுக்குள் பி.ஜே.பி.யின் முகமூடி கழன்று வீழ்ந்துவிட்டது. முகச்சாயம் முழு அளவில் கரைந்து போனது.
தேர்தல் முடிவு குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் அவர்கள் மருத்துவமனையிலிருந்து மிகச் சரியாகவே கூறியுள்ளார். பி.ஜே.பி.,க்கு வாக்களித்த மக்கள் தங்கள் தவறினை உணர்ந்து கொள்ளத் தயாராகிவிட்டனர்.
இந்த இடத்தில் ஒன்று மிக முக்கியம். மத்தியில் பி.ஜே.பி. தலைமையிலான அரசு நாட்டை இந்துத்துவா நாடாக மாற்றும் அபாயகரமான வேலையில் இறங்கிவிட்டது. மதச் சார்பற்ற தன்மைக்கு மரணக் குழியை வெட்டுகிறது. இந்தப் பேராபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றிட மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரளவேண்டும்.
பிகாரில் லாலுபிரசாத்தும், நிதிஷ்குமாரும் இணைந்தது ஒரு திசை விளக்காகும். இதில் முலாயம்சிங் போன்றோ ரும், மாயாவதியும் இணைந்தால், மதவாத பிற்போக்கு சக்தி களுக்கு இங்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்கலாம்!
சிறுசிறு கருத்து வேற்றுமைகளையெல்லாம் தூர வைத்துவிட்டு, ஒட்டுமொத்த சமுதாய நலன் எனும் பொறுப்புணர்ச்சியோடு முதன்மையானப் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுப்பதே புத்திசாலித்தனமும், பொறுப் பானதுமாகும்!
Read more: http://viduthalai.in/page-2/86544.html#ixzz3BVqtQllS