‘தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம்’ TNTJ செயற்குழுவின் முக்கியத் தீர்மானம்
தீவிரவாதச் செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் அனைத்துச் சமுதாயத்திலும் உள்ளனர். அது போல் இஸ்லாமிய சமுதாயத்திலும் சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரின் இது போன்ற செயல்களை அதிகமான ஊடகங்கள் தனிப்பட்ட பயங்கரவாதிகளின் செயலாகக் கருதாமல் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் ஆதரவுடனும் அவர்களின் ஒத்துழைப்புடனும் நடத்தப்படுவதாக சித்தரிக்கின்றனர்.
இதன் காரணமாக ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமும் தீவிரவாத சமுதாயமாக, முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாக பொது மக்கள் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பயங்கரவாத நிகழ்வின் போதும் எல்லா முஸ்லிம் இயக்கங்களும் அதை வன்மையாகக் கண்டித்து அறிக்கைகள் விடுகின்றனர்.
பள்ளிவாசல்களில் இதைக் கண்டித்து உரைகள் ஆற்றப்படுகின்றன. முஸ்லிம் சமுதாயத்தின் பிரமுகர்கள் இதற்காகக் கவலைப்படுகின்றனர். ஆனாலும் முஸ்லிம் சமுதாயமும் அதன் தலைவர்களும் இது போன்ற செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறார்கள் என்ற உண்மை, ஊடகங்களால் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதில்லை.
முஸ்லிம்களுக்கு வீடுகள் வாடகைக்கு கிடைப்பதையும், முஸ்லிம்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை மறுக்கப்படுவதையும் சமுதாயம் சந்தித்து வருகிறது. தனியார் பள்ளிக் கூடங்களில் முஸ்லிம் என்ற காரணத்துக்காகவே கல்வி மறுக்கப்படுகிறது. பொது இடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான முகச்சுளிப்பையும் வெறுப்பையும் வெளிப்படுத்தும் மக்களையும், வார்த்தைகளால் வேதனைப்படுத்தும் மக்களையும் முஸ்லிம் சமுதாயம் சந்தித்து வருகிறது. பேருந்து, ரயில் பயணங்களில் கூட இது போன்ற நிலையை முஸ்லிம்கள் சந்தித்து வருகின்றனர். முஸ்லிம் பெண்களும் கூட இதில் விதிவிலக்கில்லை.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பலருக்கு அரசு வழக்கறிஞர்கள் தான் நியமிக்கப்பட்டனர். சமுதாயம் அவர்களுக்கு உதவ மறுத்ததால் அரசாங்கமே வழக்கறிஞர்களை இலவசமாகச் செய்து கொடுத்ததை இதற்கு உதாரணமாக கூறலாம்.
தீவிரவாதச் செயல்களால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது எனும் போது அது போன்ற செயல்களை முஸ்லிம்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பது கூட முஸ்லிமல்லாத மக்களுக்குப் புரியவைக்கப்படவில்லை.
இஸ்லாம் மார்க்கத்தில் ஆயுதம் தாங்கி நடத்தப்படும் ஜிஹாத் எனும் புனிதப் போர் தனி நபர்கள் செய்வதல்ல. ஒரு இஸ்லாமிய அரசாங்கம் தன் மீது போர் தினிக்கப்படும் போது நாட்டு மக்களைக் காப்பதற்காக நடத்தும் போரே ஜிஹாத் எனும் போராகும் என்ற உண்மை மறைக்கப்பட்டு சில மூடர்கள் செய்யும் பயங்கரவாதச் செயல்கள் இஸ்லாம் மார்க்கத்தின் செயலாகவும் பார்க்கப்படுகிறது. இதனாலும் முஸ்லிம்கள் உடலளவிலும் மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் இஸ்லாமிய மார்க்கமும், ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமும் இந்த தீவிர வாதச் செயல்களுக்கு எதிரானவர்களாகவே உள்ளனர்.
இஸ்லாம் என்பது அன்பு மார்க்கம். அது மனித உயிர்கள் மட்டுமல்லாமல் உயிருள்ள அனைத்து ஜீவன்களுக்கும் கருணை காட்ட வேண்டும் என்று போதிக்கும் கருணை மார்க்கம், ஒரு உயிரை வாழ வைத்தவன் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போன்றவன். ஒரு உயிரை அநியாயமாக கொலை செய்வது ஒட்டு மொத்த உலக மக்களையும் கொலை செய்வதைப் போன்றதாகும் என்று திருக்குர்ஆன் மூலம் போதிக்கும் பக்தி மார்க்கம்தான் இஸ்லாம்.
இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை என்பதையும், முஸ்லிம்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் என்பதையும் முஸ்லிம் அல்லாத சமுதாய மக்களுக்குக் கொண்டு செல்லும் கடமை ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்துக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கடமையை நிறைவேற்றும் முகமாக கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், மற்றும் கண்காட்சிகள் வாயிலாக தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என இச்செயற்குழு தீர்மானித்துள்ளது.
இன்ஷா அல்லாஹ் வரும் அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை ஒருமாத காலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும், அனைத்து கிளைகளும் இந்த தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தும் எனவும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது. ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் இதில் பங்கெடுத்து முஸ்லிம்கள் தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள் என்பதையும், இஸ்லாம் மார்க்கமும் தீவிரவாதத்தை எதிர்க்கிறது என்பதையும் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் பிற சமுதாய மக்களுக்குப் புரியவைக்க வெண்டும் எனவும் இச்செயற்குழு முஸ்லிம் சமுதாயத்தைக் கேட்டுக் கொள்கிறது.
-மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் மௌலவி ஃபக்கீர் முகம்மது அல்தாஃபி TNTJ
நன்றி: தவ்ஹீத் ஜமாஅத்