எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு: ஆண் ஊழியர்கள் பணியில் இருப்பதால் சிக்கல் என புகார்
எக்ஸ்-ரே எடுக்கும் அறைகளில் ஆண் ஊழியர்களே அதிகம் பணியாற்றுவதால், பெண் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒரு பெண், சென்னையில் ஒரு மருத்துவமனையில் அலறி யடித்து ஓடிவந்த சம்பவம் இப்பிரச் சினையின் தீவிரத்தை படம் பிடித்துக் காட்டுவதாய் உள்ளது.
சென்னை ராஜா அண்ணா மலைபுரம், எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர், சிகிச்சைக் காக வந்தார். அங்கு இருந்த ஆண் ஊழியர் எக்ஸ்-ரே எடுப்பதற்காக ஆடைகளைக் கழற்றச் சொல்லியிருக்கிறார். அதற்கு அவர் மறுத்தாலும், பின்னர் கட்டாயத்தால் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. அதன்பிறகு, அந்த ஊழியர் தவறான முறையில் தொட்டதால் அந்த பெண் அச்சத்தில் வெளியே ஓடிவந்தார்.
அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், மயிலாப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேலூரை சேர்ந்த ஊழியர் கார்த்திகேயனை (37) கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆண் ஊழியர்கள் அதிகம்
தமிழகத்தில் பெரும்பாலான எக்ஸ்-ரே மையங்களில் ஆண் களே பணிபுரிகின்றனர். அங்கு பெண்கள் தயக்கத்துடனே செல்ல வேண்டியுள்ளது. சில தவறான சம்பவங்கள் நடைபெற்றபோதி லும், பிரச்சினையைத் தவிர்ப் பதற்காக, பெண்கள் வெளியே சொல்லாமல் விட்டுவிடும் நிலை உள்ளது.
தற்போது இசிஜி, எக்ஸ்-ரே, எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், கருப்பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனை செய்யும் இடங்களில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
பாதுகாப்பு இல்லை
எக்ஸ்-ரே எடுக்க வரும் பெண்கள் தங்கள் உடைகளை சிறிது களைய வேண்டியுள்ளது. எக்ஸ்-ரே அறையில் ஆண் ஊழியர் பணியாற்றுவதால், பெண்கள் தங்களுடைய உடைகளை களைய தயக்கம் காட்டுகின்றனர். ஆனாலும் வேறு வழியில்லாததால் பெண்கள் அவர்கள் சொல்வதை செய்கின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர் தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை ஒரு சில பெண்களை தவிர, பெரும்பாலான பெண்கள் வெளியில் சொல்வதில்லை. இதனால் எக்ஸ்-ரே அறைக்கு வரும் பெண் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகவே இருக்கிறது.
பெண்களுக்கு ஆர்வம் இல்லை
எக்ஸ்-ரே பிரிவில் பெண் நிபுணர்கள் குறைவாக இருப்பது தொடர்பாக அரசு டாக்டர்கள் கூறியதாவது:
எக்ஸ்-ரே, இசிஜி போன்ற தொழில்நுட்ப படிப்பை மாண வர்கள்தான் அதிக அளவில் படிக்கின்றனர். மாணவிகள் படிக்க விருப்பம் காட்டுவதில்லை. அதனால்தான் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள எக்ஸ்-ரே அறைகளில் ஆண் ஊழியர்கள் அதிகமாக பணியாற்றுகின்றனர். சில மருத்துவ மனைகளில் மட்டும் பெண்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர் என்றார்.
பெண் உதவியாளர்
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி கூறியதாவது:
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெண் நோயாளியை, ஆண் டாக்டரோ தொழில்நுட்ப வல்லுநரோ பரிசோதனை செய்தால், அந்த இடத்தில் ஒரு பெண் உதவியாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும். பெண் உதவியாளர் இல்லாமல், பெண் நோயாளியை பரிசோதனை செய்யக்கூடாது. இதற்கான மருத்துவ நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பெண் நோயாளியை பரிசோதனை செய்யும் போது, பெண் உதவி யாளர் கூடவே இருப்பார் என்றார்.
பெண்கள் தைரியமாக படிக்க வரலாம்
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு எக்ஸ்-ரே போன்ற தொழில்நுட்ப படிப்புகளை படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது மாணவிகள் அதிக அளவில் படிக்க வருகின்றனர். தொழில்நுட்ப படிப்புகளில் வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கிறது. புதிதாக பல தொழில்நுட்ப படிப்புகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. எக்ஸ்-ரே அறைகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் ஆபத்து ஏற்படுமோ என மாணவிகள் பயப்பட வேண்டாம். கதிர்வீச்சு தாக்காமல் பாதுகாப்பாக பணியாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-சி.கண்ணன்
-தி இந்து