பஸ் பயணிகளின் தீராத சோகம்!
பஸ் கட்டணத்தைத் தமிழக அரசு சீரமைத்த பின்னர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்திலிருந்து கட்டாயம் மீளத் தொடங்கியிருக்கும். இருப்பினும், பயணிகளின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.
விபத்துகள், ஆபத்துகளில் சிக்கும் பயணிகளுக்கு உதவிட பஸ்களில் முதலுதவிப் பெட்டி வைக்கப்பட வேண்டும் என்பது அரசு ஆணை. இருப்பினும், பெரும்பாலான பஸ்களில் முதலுதவிப் பெட்டிகள் அறவே இல்லை.
பஸ்களில் குடிநீர் பிடித்து வைக்கப்படுவதில்லை; பயணிகள் பஸ் நிலைய வளாகக் கடைகளில் சில மடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்படும் குடிநீர் போத்தல்களையும், குளிர்பானங்களையும் வாங்கி அருந்த நேர்கிறது.
பஸ்களில் உள்ள இருக்கைகளில் 2 பேர் வசதியாக அமர்ந்து பயணிக்க முடியாமல் குறுகலாக இருக்கிறது. 3 மணி நேரத்துக்குப் பிறகு அமரமுடியாதபடி இருக்கை சூடேறி “மூலாதாரத்தையே’ பொசுக்குகிறது.
பக்கத்தில் இருக்கும் கண்ணாடியும் ரப்பர் பீடிங்கும் ஊடலில் ஈடுபட்டு, அவசரத்துக்கு திறக்கவோ மூடவோ முடியாமல் மனைவிமார்கள் முன்னிலையில் கணவன்மார்களைத் தலைகுனிய வைக்கிறது.
பஸ்களின் தரைப் பகுதியில் பலகைகள் பெயர்ந்தும் ஆணிகள் நீட்டிக்கொண்டும் பயணிகளையும் அவர்களுடைய லக்கேஜுகளையும் பதம் பார்க்கின்றன. சில பஸ்களில் புட்ஃபோர்டுகள் என்று அழைக்கப்படும் படிகள் சரிந்தும் உடைந்தும் பக்கவாட்டுத் தகரம் கிழிந்தும் காணப்படுகின்றன. இவை பயணிகளின் வேட்டி, சட்டைகளை மட்டும் அல்லாமல் கை, கால்களையும் கிழிக்கின்றன.
தொலைதூரப் பயணங்களில் பயணிகள் நல்ல உணவுக்காக அல்லல்படுகின்றனர். அரசியல் செல்வாக்கு மிக்கப் பிரமுகர்களால் நடத்தப்படும் உணவகங்களில், அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் கட்டாயத்தின்பேரில், பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.
தரமும் இல்லாமல் விலையும் கூடுதலாக இருக்கும் இந்த உணவகங்களுக்கு மக்களைக் கொண்டுபோய்த் தள்ளும் சேவையை எந்த ஆட்சி வந்தாலும் தவறாமல் செய்கின்றனர் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள். பயணிகள் சங்கம் மூலம் நீதிமன்றங்களில் பொதுநல வழக்கு தொடுத்தால்தான் இதற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று தோன்றுகிறது. போக்குவரத்துத்துறை செயலாளரோ போக்குவரத்து அமைச்சரோ இந்தக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவார்கள் என்று தோன்றவில்லை.
போக்குவரத்துக் கழகமே ஹோட்டல் நடத்தலாம் என்று யோசனை கூறலாம் என்றால் அந்தச் சாப்பாடு, சிற்றுண்டிகளும் 3 விதமாகப் பிரிக்கப்பட்டு “”சாதாரணம்”, “”சொகுசு”, “”வயிற்றில் நில்லாதது” என்று தயாரித்துவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. பஸ் சேவையை ஒழுங்காக நடத்தினாலே போதும்.
பஸ்களில் டயர் பஞ்சர் ஏற்பட்டால்கூட அதை சரி செய்யத் தேவையான கருவிகள் பஸ்களில் வைக்கப்படுவதில்லை. பழுதுகள் பெரியதாக இருந்தால் பல மணிநேர தவம்தான்! அருகேயுள்ள பணிமனைகளில் இருந்து பழுதுகளை நீக்க ஊழியர்கள் வரும் வரை, பயணிகள் கொளுத்தும் வெயிலிலோ, கொட்டும் மழையிலோ பரிதவிக்க வேண்டும்.
பயணிகளை வேறு பஸ்களில் ஏற்றிவிட ஊழியர்கள் நிறுத்தினால், பல பஸ்கள் நிற்பதில்லை. கோட்டம் வேறு, மண்டலம் வேறு என்று காரணம் கூறப்படுகிறது. எல்லாமே தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பஸ்கள்தானே? இதில், ஏன் ஜாதிப்பிரிவினை?
பழைய பஸ்களுக்கு வண்ணச் சாயம் பூசப்பட்டு, புதிய பஸ்களாகவே வலம் வருகின்றன. இவற்றைச் சீரமைப்பதிலோ, அன்றாடம் பராமரிப்பதிலோ நிர்வாகம் சரிவர அக்கறை காட்டுவதில்லை. தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்களது பஸ்களைப் பராமரிக்கும் அளவுக்கு, அரசு நிர்வாகமும் மாற வேண்டும். அதுகூட வேண்டாம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இணையாகவாவது சேவை இருக்கலாம் அல்லவா?
சென்னையிலிருந்து பெங்களூருக்கு தமிழக அரசு விரைவு பஸ்களிலும் கர்நாடக பஸ்களிலும் பயணிப்பவர்களைக் கேட்டால் தர வித்தியாசம் குறித்துச் சொல்வார்கள்.
தமிழகத்தின் தொலைதூர பஸ்களில், பயணிகள் பார்ப்பதற்காகத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டன. ஆனால், சரியாகப் பராமரிக்கப்படாததால் பல பஸ்களில் இயங்காமல், காட்சிப் பொருளாகவே உள்ளன.
சில பஸ்களில் எழுதப்பட்டிருக்கும் அந்தந்த பணிமனைகளின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
பஸ் நிலைய வளாகங்களில் சுகாதாரமற்ற நிலையில் உள்ள கழிவறைகளில் பயணிகள் சிறுநீர் கழிக்கக் கூட அல்லல்படும் நிலையுள்ளது.
source : தினமணி