இது கொள்ளையா, இல்லை மோசடியா?!
என் மகனுக்கு உடல்நிலை சரியில்லை. காய்ச்சல், சளி, இருமல் வாந்தி என்று கடந்த ஆறு நாட்களாக அதே நிலை. மருத்துவரிடம் அழைத்து சென்றோம். என்ன என்றார். மேற்கூறியவைகளை சொன்னேன். மருந்து சீட்டில் இடமிருக்கும் வரை மருந்து மாத்திரைகளை எழுதினார். மொத்தமும் ஐந்து திரவ நிலை மருந்து, ஆறு மாத்திரை. சளி, இருமல், தலைவலி, ஜுரம், வாந்தி, குளிர்ஜுரம், மயக்கம், உடல் வலி, தவிர ஆண்டிபயாடிக்கிற்கு என்று தனித் தனியாக…..
இரண்டு நாட்களானது. அதே நிலை. மீண்டும் அவரிடமே அழைத்துச் சென்றோம். முன்பைவிட இன்னும் இரண்டொரு மாத்திரைகளை சேர்த்தெழுதி சரியாகிவிடும் போய் ‘வாருங்கள்’ என்றார். வேறு வழியில்லாமல் குழந்தையின் வாயில் போட்டு இடித்து தள்ளினோம். ஆனாலும் விட்டபாடில்லை. மீண்டும் இரண்டாவது நாள் அதே மருத்துவரின் முன்பு….
அவரும் சளைக்கவில்லை. நீயா, நானா. ஆனதை பார்க்கலாம் என்று இந்த முறை மருந்து சீட்டில் இடமே விட்டுவைக்காமல் எழுதினார். சளிக்கு மட்டுமே நான்கு கம்பெனி மாத்திரை. இருமலுக்கு இரண்டு கம்பெனி மாத்திரை, இரண்டு திரவ நிலை மருந்து புட்டி. காய்ச்சலுக்கு நான்கு வகை மாத்திரை தவிர ஒரு திரவ நிலை மருந்து. பிறகு குளிர் காய்ச்சலுக்கென்று மூன்று வகையான வேறு வேறு நிறுவன மாத்திரை. அடுத்து தலைவலிக்கு இரண்டு மாத்திரை. வாந்திக்கு ஒரு மருந்து. உடல் வலிக்கு ஒரு மருந்து….
இவ்வளவையும் கொடுக்க வேண்டுமா என்றேன். ஏதாவது குறைக்கலாமே சார் என்றேன். இது என்ன வியாபாரமா. கூட்டி குறைக்க. உடம்பு சம்பந்தப்பட்டது, இதுவரைக்கும் குறையவில்லையே. அதான். இந்த முறை சரியாகவில்லை என்றால் வாங்க பார்க்கலாம். எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை எழுதலாம் என்று நோகாமல் சொன்னார். பேசாமல் திரும்பி வந்து மருந்து கடையில் சீட்டை நீட்டினேன்.ஒரு பை நிறைய வாரி போட்டுக்கொடுத்ததார்.
அரசு குழைந்தைகள் மருத்துவமனையில் உச்ச பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். இப்போது பிரபல தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆலோசகராகவும் இருப்பவர். என்ன சொல்ல முடியும்….
வீட்டிற்கு வந்தேன். இவ்வளவையும் கொடுத்தாக வேண்டுமா என்ற தீவிர யோசனை. மாடியில் இருந்த துளசி கற்பூர இலைகளில் கொஞ்சம் பறித்தேன். ஏற்கனவே வைத்திருந்த நிலவேம்பு பொடியை கொஞ்சம் சேர்த்து கூடவே ஐந்து மிளகு போட்டு நீரில் கொதிக்க வைத்து ஆற்றி கொஞ்சம் கொடுத்தேன். நேற்று இரவு இது நடந்தது. இருமல் இன்றி நிம்மதியாக உறங்கினான். காய்ச்சலும் குறைந்திருந்தது. இன்று காலை மதியமும் அப்படியே கொடுத்தேன். எல்லாமும் விட்டு விலகியபடி இருந்தது..இதோ இந்த இரவு தொட்டுத் தடவி பார்க்கிறேன். ஒன்றுமில்லை. நிம்மதியாக உறங்குகிறான்.
உறக்கம் வராமல் யோசித்தபடி இருக்கின்றேன். இந்த மருந்து மாத்திரைகளும், அவர்களுக்குள்ளான ‘கம்பெனி போட்டிகளும்’ எப்போது வந்தது. சேவை என்பது போய் கொள்ளை, போட்டி மோசடி என்பது எப்போது, எப்படி வந்தது. நாமெல்லாம் நோய் நொடியில்லாமல்தானே கிராமங்களில் இருந்தோம். அப்படியே வந்தாலும் நம்மை சுற்றியிருந்த தழைகளிலும், மூலிகை செடிகளும் மட்டுமல்ல. மண்ணும்கூட மருந்தாகி இருந்ததே. அதி உச்சமாக போனால் ஆரம்ப சுகாதார நிலைய மருதுதவமனையில் த/அ என்ற மாத்திரையே போதுமானதாகிப்போனதே. அந்த வாழ்க்கை எங்கே போனதென்று யோசித்தபடியே இருக்கின்றேன்.
களவு போனது. களவாடிப்போனார்கள்.
-பா. ஏகலைவன்