“ஸஜ்தா” என்னும் சிரம் பணிதல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே
தொழுகை என்னும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இறை வணக்கத்தின் ஓர் அங்கமாகிய ஸஜ்தா என்னும் சிரம் பணிதலைச் சிலர் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்குச் செய்கின்றனர். அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்து வணங்குங்கள். (திருக்குர்ஆன் 53:62)
இரவில் அவனுக்கு ஸஜ்தாச் செய்வீராக! நீண்ட இரவு அவனைத் துதிப்பீராக! (திருக் குர்ஆன் 76:28)
ஸஜ்தா என்னும் சிர வணக்கம் தனக்கு மட்டுமே உரியது, என்று அல்லாஹ் உரிமை கொண்டாடும் போது, பெரியார்களுக்கும், மகான்களுக்கும், இறந்து போன நல்லடியார்களின் கப்ருகளுக்கும், ஸஜ்தாச் செய்கின்றனரே! இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?
மார்க்கம் அறியாத பாமர மக்கள் சிலர் தங்கள் ஆன்மீக வழிகாட்டிகளாகக் கருதும் ஷெய்கு மார்களுக்கு மரியாதை செய்வதாக நினைத்துக் கொண்டு அறியாமையால் அவர்களின் கால்களில் விழுந்து வணங்குகின்றனர்.
ஸஜ்தா என்னும் சிர வணக்கம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதை அந்தப் பாமர மக்கள் அறியாதிருக்கலாம். தங்கள் மரியாதையை வெளிப்படுத்த இதுவும் ஒரு வழி என்று கருதி அந்த மக்கள் இச் செயலைச் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அந்த ஷெய்கு மார்களுக்கு புத்தி எங்கே போனது?
அறியாமையால் தங்கள் கால்களில் விழும் மக்களைத் தடுத்து நிறுத்தாமல் அகம்பாவத்துடன் ரசித்துக் கெண்டிருப்போர், நாளை மறுமையில் தாங்கள் இது குறித்து விசாரிக்கப் படுவோம் என்பதை எப்படி மறந்தார்கள்?பெற்றோரிடமும், பெரியார்களிடமும், அடக்கத்தையும் பணிவையும் கடைப்பிடிக்க வேண்டும். இயலாத முதியோரை கண்ணியப் படுத்த வேண்டும். ஆனால் அவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.
முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமக்குச் சிரம் பணிந்து மரியாதை செய்ய முன் வந்த போது, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை அங்கீகரிக்க வில்லை என்பது மட்டுமல்ல தடுத்து விட்டார்கள்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணிவதை நான் வெறுக்கிறேன். அது ஆகுமாக்கப் பட்டிருந்தால் மனைவி கணவனுக்கு சிரம் பணிய அனுமதித்திருப்பேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் திருமறை தெளிவாகக் கூறகின்றது இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள். அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள். (திருக் குர்ஆன் 41:37)
source: http://masdooka.blogspot.in