விவேகானந்தருக்கு விழா எடுப்போரே அவரின் மறுபக்கத்தை மறைப்பது ஏன்?
விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு விழாவாம்; இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று சில சக்திகள் ஊதிப் பெருக்கி உலகை வலம் வருகின்றன.
அஞ்சல் தலை வெளியீடு, நினைவு நாணயம் வெளியிடுதல், முக்கிய வீதி களுக்குப் பெயர் சூட்டுதல் பல்கலைக் கழகங்களில் ஆய்வு மய்யம் என்று களே பரமாகக் காரியங்கள் நடந்து கொண்டுள்ளன. விவேகானந்தர் ரதம் என்ற ஒன்றைக் கிளப்பி விட்டுள்ளனர். கல்வி நிலையங்களில் எல்லாம் புகுந்து புகுந்து வருகிறது.
உளுந்தூர்ப் பேட்டையில் ரதம் வந்த போது 10 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம் செய்தனராம். 100 வகைப் பலகாரங்கள் நிவேதிக்கப்பட்டனவாம். ராமகிருஷ்ண மடங்களும், தமிழ்நாடு ராமகிருஷ்ண விவேகானந்த பால பிரச்சார பிரச்சார் பரிஷத்தும் இணைந்தும் இவற்றை நடத்திக் கொண்டுள்ளன.
உண்மையிலேயே விவேகானந்தர் மீது பற்றும் அவர்தம் சிந்தனைகளைப் பரப்ப வேண்டும் என்ற நல்லெண்ணமும் அவர் களிடத்தில் இருக்குமேயானால் விவே கானந்தர் கருத்துக்கள் அனைத்தையும் ஒளிவு மறைவின்றி பரப்பும் வகை செய்திட வேண்டாமா?
அவர்கள் செய்யாவிட்டால் என்ன நாம் அந்த வேலையைச் செய்யலாம் அல்லவா!
இதோ விவேகானந்தர் பேசுகிறார்: அவரின் மறு பக்கத்தைக் காண்பீர்!
மத மாற்றத்துக்கும் கீழ்மைக்கும் யார் பொறுப்பாளி? இந்தியாவிலுள்ள ஏழை மக்களிடையில் முஸ்லிம்கள் அதிகம் இருக்கின்றார்கள். அதற்கு காரணம் என்ன?
கத்தியையும், வாளையும் காட்டிப் பயமுறுத்தி இந்துக்கள் முகமதியர்களாக மாற்றப்பட்டார்கள் என்று சொல்வது அறிவுடைமை ஆகாது.
நம் நாட்டிலுள்ள ஜமீன்தார்களிடமிருந்தும், புரோகிதர்களிடமிருந்தும் சுதந்திரம் பெற்று வாழ்வதற்குத்தான் இந்துக்கள் முஸ்லீம் மதத்துக்கு மாறினார்கள்.
வங்காளத்தில் விவசாயிகளுக்கிடையில் இந்துக்களைவிட முஸ்லீம்கள் அதிகமாக இருப்பதைக் காணலாம். அதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா? அக்காலத்தில் விவசாயிகளுக்கிடையிலிருந்த ஜமீன்தார் களுடைய கொடுமையிலிருந்து விலகிக் கொள்வதற்காக இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார்கள்.
தோட்டிகளையும், பறையர்களையும் இன்றைய இழிநிலைக்குக் கீழே இறக்கிக் கொண்டு வந்தவர்கள் யார்? அவர்கள் கீழ்மை அடைவதற்குப் பொறுப்பாளிகள் யார் என்னும் கேள்வி எழுமாயின் அதற்கு விடை வருமாறு: அவர்கள் கீழ்நிலை அடைவதற்கு ஆங்கிலேயர்கள் பொறுப் பாளிகள் அல்லர்.
அவர்கள் கீழ்நிலைக்கு வந்ததற்கு நாமே பொறுப்பாளிகளாவோம். நம்முடைய துன்பத்துக்கும் நம்முடைய கீழ்மைக்கும் நாம் தாம் பொறுப்பாளிகள், மதத்தில் போலிகளும், அவநம்பிக்கை உடையவர்களும் இருக்கிறார்கள்.
அத்தகைய நயவஞ்சகர்கள் மதத்தின் உட்கருத்தை வலியுறுத்தாமல் வெளி ஆசாரங்களைப் பிரமாதப்படுத்திச் சுய நலத்தை வளர்ப்பவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் பாரமார்த்திகம், வியவகாரிகம் என்ற கொள்கைகளின் வடிவங்களில் கொடுமையான செயல்கள் பலவற்றை உருவாக்கியுள்ளார்கள். அவை அவர்களுடைய குற்றங்களாகும்.
ஏழைகள் என்று கூக்குரலிடுவதற்குப் பலர் இருக்கிறார்கள். ஏழைகளின் நலனுக் காக ஏதாவது செய்வதற்குச் சங்கங்கள் எத்தனை இருக்கின்றன? இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான ஏழைகளுடைய துன்பத்திலும் துக்கத்திலும் பங்கு கொண்டு உண்மையாகவே உருகி அழுபவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள்?
மக்கள் இனத்துக்காகப் பாடுபடும் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? மனிதர்களாகப் பிறந்துள்ள நாம் மனிதர்களுக்காக உருகா விட்டால் நம்மை மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? பசியின்றி பட்டினியின்றி மக்களினம் வாழ நாம் என்ன செய்கின்றோம்? மக்களையெல்லாம் மகேசுவரன் நிலைக்கு உயர்த்த நாம் என்ன செய்கின்றோம்? இவ்வுலக வாழ்வை கடந்து அப்பால் செல்லுவதற்கும் இந்துமதம் சிறந்த வழிகாட்டியாகவிருக்கின்றது.
இந்தமதத்தைச் சரியாக அறிந்து அதை மக்களுக்குப் புரியும்படி செய்வது இந்துவினுடைய பொறுப்பாகும். இதைச் செய்யாததால் இந்து மதத்திலிருந்து மற்ற மதங்களுக்கு மக்கள் போகின்றார்கள். பொதுவாக நம்மவர்களிடையே பேச்சு அதிகம். செயல் குறைவு. கிளிப்பிள்ளை போன்று புத்தகத்தில் படித்தவற்றையும் பிறரிடமிருந்து கேட்டவற்றையும் பேசிக் கொண்டிருப்போம்.
நமக்குப் பேசத்தான் தெரியும் நமக்கு எதையும் செயல்படுத்தத் தெரியாது. அதற்கு காரணம் என்ன தெரியுமா? நம்மிடம் போதுமான உடல் பலம் இல்லை. நம் முடைய துன்பத்துக்கு நம்மிடமுள்ள உடல் பலகீனமே காரணமாகும்.
மேலும் நாம் சோம்பேறிகளாகவிருக் கின்றோம். செயல்புரிய வேண்டும் என்ற உற்சாகம் நம்மிடம் இல்லை. நம்மிடம் ஒற்றுமையும் இல்லை. ஒருவரை ஒருவர் நேசிக்கும் தன்மையும் இல்லை. நம்மிடம் சுயநலம் மிகவும் அதிகம். கீழ்நிலையி லுள்ள மக்களைப் புறக்கணிப்பது மதமாற்றத்துக்கு ஒரு காரணமாகும்.
(தர்மசக்கரம் துந்துபி ஆண்டு கார்த்திகை மாதம் சக்கரம் -31, ஆரம் 11)
அட, புரோகிதர்களே!
மைசூர் ராஜ்யத்திலிருந்து புறப்பட்ட சுவாமிஜி, கொச்சி ராஜ்யத்தை அடைந்தார். அங்கு சில தினங்கள் தங்கிவிட்டு திருவனந்தபுரத்துக்குப் போனார். வழிநெடுகிலும் வனப்பு மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்ணுற்று மகிழ்ந்தவாறே திருவனந்தபுரத்தை அடைந்தார். அப்போது டிசம்பர் மாதம்.
பேராசிரியர் சுந்தரராம அய்யர் வீட்டில் சுவாமிஜி தங்கினார். சுந்தரராம அய்யர், திருவிதாங்கூர் இளவரசருக்கு ஆங்கிலக் கல்வி போதிக்கும் ஆசிரியர் ஆவார்.
சுந்தரராம அய்யர் பிராமண உணர்வு மிகுந்தவர், வைதிக ஹிந்து சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர், எதையும் பிராமண இயல்போடு நோக்குபவர், பிராமணர் அல்லாதவர்களை சமபுத்தி இல்லாதவர் என்று சுவாமிஜி கூறியதாக எழுதி இருப்பவர். இவர் கூற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது ஆராயற்பாலது. பிராமண குலம் இந்தியாவுக்கு மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறது. இப்பொழுதும் மகத்தான காரியங்களை செய்து வருகிறது. இனியும் மகத்தான காரியங்களைச் செய்யும் என்று சுவாமிஜி கூறியதாகச் சுந்தரராம அய்யர் எழுதி இருக்கிறார் பிராமணர்களைப் பற்றிச் சுவாமிஜி கூறியிருக்கும் கருத்துக்கு இந்தக் கருத்து முற்றும் முரண்படுகிறது.
வேதங்களை இயற்றிவர்கள்?
வேதாந்தத்துக்கு ஆதாரமாய் இருப்பவை உபநிடதங்கள்; வேதங்களிலுள்ள இந்தப் பகுதிகள் க்ஷத்திரியர்களால் இயற்றப்பட்டவை என்பது சுவாமிஜியின் கருத்து. இது பிராமணர்கள் மகத்தான காரியங்களை இந்தியாவுக்கு செய்தார்கள் என்ற கருத்தோடு மாறுபடுகிறது.
வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர். பிராமணர்களின் கருணையின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார். அந்தக் கருத்துகளைத் தொகுத்து அடியில் தந்திருக்கிறோம்.
உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர்களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிடமிருந்து பிறக்கவில்லை (3.280)
முன் காலத்திலே ரிஷிகள் ஆனோர் பலர். வசிஷ்டர் பிறப்பினால் இழிந்தவர்; வியாசர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்தவர்; நாரதர் பணிப்பெண்ணின் பிள்ளையாகப் பிறந்தவர். இவ்வாறு பிறந்தவர்கள் பலர் ரிஷிகள் ஆனார்கள் (6.433). நெடுங்காலமாகத் தான் சேகரித்து வைத்திருக்கும் ஞானத்தைப் பிராமணன் இப்பொழுது பொது ஜனங்களுக்கு அளிக்க வேண்டும், இங்ஙனம் அவன் கொடுக்காத காரணத்தினால் முகம்மதியப் படையெடுப் புகள் சாத்தியமாயின. (6.234)
பிராமணரல்லாதார் துயில் நீக்கம்!
குமரிலர், சங்கரர், ராமானுஜர் போன்ற முனிவர்கள், பிராமணர் சக்தியை மீண்டும் நிலைநாட்ட முயன்றனர். சிறிது காலம் அச்சக்தி இராசபுத்திர அரசரது வாளின் ஆதரவையும் பெற்றது. சமண புத்த எதிரிகளின் வீழ்ச்சிக்குப்பின், அது தனது அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கவும் முயன்றது. ஆயினும், அது, முகம்மதியரது ஆட்சியின் கீழ் என்றைக்கும் உறங்கும்படி செய்யப்பட்டது. (1.172)
பிராமணரல்லாத வகுப்பார் படிப் படியாகத் துயில் நீங்கி எழுகிறார்கள். பிராமணருடைய சாத்திரங்களிலும் மந்திரங்களிலும் அவர்களுக்குள்ள நம்பிக்கை நீங்குகிறது. மேலை நாட்டுக் கல்வி பரவியதனால் பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்திலே பதுமா நதியினுடைய கரைகள் இடிந்து விழுவதுபோல அழிந்து போகின்றன! (5.180) இந்த அயோக்கியப் புரோகிதர்களோ, அல்லது இவர்களுடைய முன்னோர்களோ, சென்ற நானூறு தலைமுறைகளாக, வேதப் புத்தகம் ஒன்றைக் கூடப் பார்த்தது இல்லை. கலியுகத்துப் பிராமண ரூபத்தில் இருக்கின்ற இராட்சசர்களிடமிருந்து இந்த அப்பாவி மக்களை, இறைவா! காத்து இரட்சிப்பாயாக! (9.126)
ஆதாரம்: சுவாமி விவேகானந்தர் வரலாறு (பக்கம் 162 முதல் 164 வரை)
சுவாமி விவேகானந்தர்: சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப் போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்யமில்லை. என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை; அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப் பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத் துவத்தில் பெருமை பாராட்டுபவர். இக்காலத்துத் தென்னிந்திய பிராம்மணப் புரோகித வகுப்பார்போல, அவர் இயற்றிய வேதாந்த சூத்திர வியாக்கியானத்தில் பிராமணர் அல்லாத வகுப்பார் மேலாகிய பிரம்மஞானத்தை அடைய மாட்டார் என்று எவ்வளவு வாதாடுகிறார்! அவர் காட்டும் நியாயங்களோ எவ்வளவு நகைப்புக் கிடமாகின்றன.
விதுரன் பிரம்ம ஞானத்தை அடைந்தான்; அது முற்பிறவியிலே அவன் பிராம்மணத் திருமேனியோடு பிறந்த காரணத்தினால், என்கின்றார். நல்லது; இந்நாளில் சூத்திரன் ஒருவன் பிரம்ம ஞானத்தையடைந்தால், உங்கள் சங்கரர் சொல்லுவது போலவே, அவன் முற்பிறப் பிலே பிராம்மணனாயிருந்த காரணத்தினால் அத்தகைய ஞானத்தை அடைந்தானென்று சொல்ல வேண்டுமா? அய்யோ பாவம்! பிராம்மணத்துவத்தை இவ்வளவு தூரம் இழுத்து வாதாடுவதில் என்ன பயன்? உயர்ந்த மூன்று வருணத்தாரும் வேதங் களை ஓதுவதற்கும் பிரம்மத்தை அடைவ தற்கும் உரியவரென்று வேதம் கூறவில் லையா? வேதப் பிராம்மணத்திற்கு எதிராகச் சங்கரர், இந்த விஷயத்தில் தமது புத்தி சாலித்தனத்தைக் காட்டுவது வேண்டப் படாத தொன்று. வாதத்திலே தோல்வி யடைந்த எத்தனையோ புத்த சந்நியாசி களை நெருப்புக்கு இரையாக்கின.
அவருடைய இதயத்தை என்ன வென்று சொல்வது! வாதத்திலே தோல்வியுற்றோம்! என்று நெருப்பிற் புகச் சித்தமாயிருந்த பவுத்தரும் மூடர்.
சங்கரர் இந்தச் செய்கையைச் செய்தது மூடப் பிடிவாதமின்றி வேறு என்ன? புத்தர் தேவருடைய இதயத்தை இதனோடு ஒப்பு வைத்து நோக்குவாயாக, சிறு ஆட்டுக் குட்டியினுடைய உயிரைக் காப்பாற்றத் தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருந்தார் புத்தர்; பஹுஜன ஹிதாய பஹுஜன ஸுகாய பலருடைய இதத்திற் காகவும் பலருடைய நலத்திற்காகவும் வாழ்ந்தார். எவ்வளவு அகன்ற சிந்தை! எவ்வளவு இரக்கம்!
***
பசுவதையும் இந்துமதமும் – விவேகானந்தர்
பசுக்களைப் பரிபாலிக்கிற சபை ஒன்றினுக்குரிய ஊக்கமுள்ள பிரசாரகர் ஒருவர் சுவாமிஜியைக் காணும் பொருட்டு வந்தார். அவர் தம் தலையிலே காஷாயத் தலைப்பாகை அணிந்திருந்தார்; தோற்றத்தில் வடநாட்டினரைப் போலக் காணப்பட் டார். அவரது உடை ஏறக்குறைய சந்நியாசிகளுடைய உடை போன்றிருந்தது. அந்தப் பசு பரிபாலன சபைப் பிரசாரகர் வந்தார் என்று கேள்விப்பட்டதும் சுவாமிஜி சாலை அறைக்கு வந்தார். பிரசாரகர் சுவாமிஜியை வணங்கிப் பசுத்தாயினுடைய படம் ஒன்றினைச் சுவாமிஜிக்குக் கொடுத் தார். சுவாமிஜி படத்தைப் பெற்று அருகில் நின்ற ஒருவர் கையில் கொடுத்த பின்னர், பின்வரும் சம்பாஷணை நிகழ்ந்தது.
சுவாமி விவேகானந்தர்: உங்களுடைய சங்கத்தின் நோக்கம் என்ன?
பிரசாரகர்: நமது நாட்டிலுள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்களும் வலுவிழந்தனவும் கசாப்புக்காரர் களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவததற்காகப் பசு வைத்திய சாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம்.
சுவாமி விவேகானந்தர்: அது மிக நல்லது. உங்கள் வருவாய்க்கு வழி என்ன?
பிரசாரகர்: உங்களைப் போன்ற பெரிய மனிதர் அன்போடு கொடுக்கின்ற நன்கொடைகளைக் கொண்டே சபையின் வேலை நடந்து வருகின்றது.
சுவாமி விவேகானந்தர்: இப்பொழுது எவ்வளவு பணம் சேர்த்து வைத்திருக்கிறீர்கள்?
பிரசாரகர்; இந்த முயற்சிக்கு மார்வாடி வணிகர் கூட்டம் சிறந்த உதவி புரிகின்றது. இந்த நன்முயற்சிக்காக அவர்கள் பெருந்தொகை கொடுத்திருக்கின்றார்கள்.
சுவாமி விவேகானந்தர்: மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் என்று இந்திய அரசாங்கத்தார் செய்தி வெளியிட்டிருக்கின்றனர். இதற்கு உதவி புரிவதற்கு உங்களுடைய சபை ஏதாவது செய்திருக்கின்றதா? மக்களுக்கு இரங்கோம்: மாடுகளுக்கே இரங்குவோம்
பிரசாரகர்: பஞ்சம் முதலிய துன்பம் வரும்பொழுது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத்தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது.
சுவாமி விவேகானந்தர்: உங்களுடைய சொந்தச் சகோதர சகோதரிகளாகிய லட்சக்கணக் கான மக்கள் பஞ்சத்தினால் துன்பம் அடைந்து மரணத்தின் வாயில் விழும் பொழுது அவர்களுக்கு எவ்வழியிலாவது உணவளித்துக் காப்பாற்ற வேண்டுவது உங்கள் கடமை என நீங்கள் நினைக்க வில்லையா?
பிரசாரகர்: இல்லை. இந்தப் பஞ்சம் மக்களுடைய பாவகருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே.
பிரச்சாரகர்: இந்த வார்த்தைகளைக் கூற, இவறறைக் கேட்டுச் சுவாமிஜியினுடைய கண்களிலிருந்து நெருப்புப் பொறி பறப்பது போன்றிருந்தது. முகம் சிவந்தது. அவர் தம் சினத்தை அடக்கிக் கொண்டு, பின்வருமாறு சொல்லுவராயினார்:
தம்முடைய சொந்தச் சகோதரர் பட்டினியினால் இறக்க, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் பொருட்டு ஒருபிடி அரிசி கொடாமல், மனிதர் மேல் அனுதாபமின்றிப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் குவியல் குவியலாக உணவைக் கொடுக்கின்ற இத்தகைய சபைகளில் நான் புகுவதில்லை. மக்கள் சங்கம் இவற்றினால் நன்மை அடை கிறதென நான் எண்ணவில்லை.
மனிதர் தம் கருமத்தினால் இறக்கின்றனரென்று நீர் வாதிப்பீராயின், இவ்வுலகத்திலே எதைக் கருதியும் முயல வேண்டுவதில்லை என்பது தீர்மானமாகின்றது. விலங்கு களைப் பரிபாலிப்பதற்காக நீர் செய்கிற வேலையும் இவ்விதிக்குப் புறம்பாகாது. பசுத்தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்காரர்களுடைய கையிலகப்பட்டு இறக்கின்றன வென்று சொல்லிவிட்டுச் சும்மா இருக்கலாமே?
பிரசாரகர் சிறிது நாணி, ஆம். நீங்கள் சொல்வது உண்மை. ஆனால், பசு நம் அன்னை என்று சாத்திரங்கள் சொல்லு கின்றனவே? என்றார்.
சுவாமிஜி நகைத்துக் கொண்டே, ஆம், பசு நம் அன்னை என்பதை நான் அறிந்து கொண்டேன்; இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்!
(சுவாமி விவேகானந்தர் சம்பாஷணை பக்கம் 5,7)
பசுவைப் பாதுகாப்போம் என்று தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ள பா.ஜ.க.வினரே விவேகானந்தர் எழுப்பிய இந்த வினாவுக்கு என்ன பதில்?
பசுவை கோமாதா என்று போற்றும் மாட்டுக்குப் பிறந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., உள்ளிட்ட சங்பரிவார்க் கூட்டமே, உங்களையெல்லாம் மாட்டுக்குப் பிறந்தவர்கள் என்று கூறிப் பிய்த்து எடுக்கிறாரே – விவேகானந்தர் – இதற்குப் பதிலைச் சொல்லி விட்டு, விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு விழாவை விசேடமாக நடத்துங்கள்; அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம் என்பது.
விவேகானந்தர் பார்வையில்…
சுவாமி விவேகானந்தர், மதச் சண்டைகளும், சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும் – இருப்பதும் ஸமஸ்கிருத மொழியேயாகும் என்றும், ஸமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால், இப்போராட்டங்களும் தொலைந்து போகுமென்று வருந்திக் கூறினார்.
– மறைமலைஅடிகள், (தமிழர் மதம் நூலில் – பக்கம் 24)
Read more: http://viduthalai.in/2011-07-25-07-58-59/83867-vivekananda.html#ixzz39zrzeXFa