ஆம்பிளைக்கு உண்டா இந்த ‘அட்வைஸ்’?
இரா. உமா
[ பொதுவாக நம் நாட்டில், இல்லத்தரசிகள் உண்டு _ இல்லத்தரசர்கள் கிடையாது; கற்புக்கரசிகள் உண்டு _ கற்புக்கரசர்கள் கிடையாது; குடும்பப் பெண்கள் உண்டு _ குடும்ப ஆண்கள் கிடையாது; மலடிகள் உண்டு _ மலடன்கள் கிடையாது; விதவைகள் உண்டு _ விதவன்கள் கிடையாது; விபச்சாரிகள் உண்டு _ விபச்சாரன்கள் கிடையாது _ இப்படி எல்லாச் சிறப்புகளையும் பெண்களுக்கு மட்டுமே உரித்தாக்கி இருக்கிற நாகரிக சமுதாயத்தின் நீட்சிப் போக்குகளே இக்கட்டுரைக்கான அடித்தளங்கள்.
வீட்டு வேலைகளையாவது சரிபாதியாகப் பகிர்ந்து கொள்வோமே என்ற குறைந்தளவு நியாயத்தையாவது செய்ய முன்வருகிறார்களா என்றால், பெரும்பாலும் இல்லை. கேட்டரிங் படிப்புப் படித்துவிட்டு, பெரிய உணவு விடுதிகளில் உணவு தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்ற ஆண்கள், வீட்டில் மனைவிக்கு உடல்நலமில்லாத சூழலில்கூட, சமையல்கட்டுப் பக்கம் போவதில்லை என்கிற ஆண்மைச் செருக்கோடு இருக்கிறார்கள்.
கணவன் மருத்துவராக இருந்தாலும், வீட்டில் குழந்தைக்கு உடல்நலமில்லை என்றால், அலுவலகத்தில் அனுமதி கேட்டோ, விடுப்பு எடுத்தோ மனைவிதான் குழந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
பெண்களும் இப்படிப்பட்ட மனநிலையோடு வாழப் பழகிக் கொள்கிறார்கள். வந்ததும் ஓடுறியே, ஒரு ரெண்டு நாள் தங்கிட்டுப் போயேன்டி என்று அம்மா வீட்டில் ஆசையோடு சொன்னாலும், அய்யய்யோ, நா இல்லாட்டி அவருக்கு எந்த வேலையும் ஓடாதும்மா… நா கௌம்புறேன் என்று சொல்லும் பெண்ணுக்குத் தெரியும், தான் இல்லாவிட்டாலும் எல்லாம் நடைபெறும் என்று.
இருந்தும், பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும், இல்லத்தரசிக்கான இலக்கணம், அவளை அப்படி ஓட வைக்கிறது. ஆனால் ஆண்களில் பெரும்பான்மையும், எம் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா…எம் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா… என்று துள்ளிக் குதிக்கும் ஜனகராஜ்களாகத்தான் இருக்கிறார்கள்.]
ஆம்பிளைக்கு உண்டா இந்த ’அட்வைஸ்’?
13.07.2014 நாளிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழில், இழு தள்ளு பகுதியில் ஒரு பதிவு வெளிவந்திருக்கிறது. பெப்சி நிறுவனத் தலைவராக உள்ள, இந்திரா நூயி அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய பேச்சை மய்யமாகக் கொண்டு அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கீழை நாடு, மேலை நாடு என்ற வேறுபாடின்றி எங்கும் நிறைந்திருக்கும் ஆணாதிக்கப் போக்கு, அதன் உற்பத்தியான பெண்ணடிமைச் சிந்தனை இவற்றின் அப்பட்டமான வெளிப்பாடாகவே அந்தக் கட்டுரை இருக்கிறது.
இந்திரா நூயி பேசுகிறார்: வேலைக்குப் போகின்ற பெண்களால், குடும்பப் பொறுப்புகளைச் சரியாக ஆற்றமுடிவதில்லை என்பதுதான் உண்மை நிலை. சில பெண்கள் இல்லை இல்லை, நாங்கள் வேலை _ குடும்பம் என இரண்டையுமே சரியாகக் கையாள்கிறோம் என்று சொல்வது நம்பக்கூடியதாக இல்லை. அது வெறும் பாசாங்கு, சின்னக் குழந்தைகளாக இருக்கும் போது அம்மா அருகில் இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே மாதிரி அவர்கள் டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும்போதும், நமது துணை, நெருக்கம், வழிகாட்டுதல், ஷேரிங் எல்லாம் ரொம்ப ரொம்ப அவசியம். அந்தச் சந்தர்ப்பங்களில் நாம் அவர்களோடு இல்லையே என்கிற எண்ணம் குற்ற உணர்வாக மாறி என்னை வதைக்கும்.
முதலில், வேலைக்குப் போகின்ற பெண்களால் குடும்பப் பொறுப்புகளைச் சரியாக ஆற்ற முடிவதில்லை என்று கட்டுரையில் இருப்பதை எடுத்துக் கொள்வோம். பெண்கள் எத்தனை ஆண்டுகளாக வேலைக்குப் போகத் தொடங்கியிருக்கின்றனர்? குத்து மதிப்பாகப் பார்த்தால்கூட, 20 ஆண்டுகளாகத்தான் பெண்கள் வேலைக்குப் போவது அதிகரித்திருக்கிறது. அப்படி வேலைக்குப் போகின்ற பெண்களில் பெரும்பான்மையானவர்கள், ஓர் ஆணைச் சார்ந்திருக்காமல், தற்சார்போடு இருக்க வேண்டும் என்னும் பெண்விடுதலைச் சிந்தனையின்பாற்பட்டு வேலைக்குப் போவதாக எண்ணிவிட முடியாது. அதே போல், தன்னைப் போல தன் மனைவியும் சம வாய்ப்பும், மதிப்பும் இந்தச் சமூகத்தில் பெற வேண்டும் என்ற சமத்துவக் கொள்கையால் ஆட்கொள்ளப்பட்டு, ஆண்களும் தங்கள் மனைவிமார்களை வேலைக்கு அனுப்புவதில்லை.
மாறாக, பெருகி வருகின்ற நுகர்வுக் கலாச்சாரம், குழந்தைகளின் எதிர்காலம், குடும்பத்தின் தேவைகள் _ இவையே, இருவரையும் பொருளாதாரத்தை நோக்கி உந்தித் தள்ளுகின்றன. குடும்பத்தின் பொருளாதார, சமூக வளர்ச்சியில் பெண்களுடைய பங்களிப்பு இன்றைய சூழலில் தவிர்க்க முடியாதது என்பதை ஆண், பெண் இருவரும் நன்கு உணர்ந்தே இருக்கின்றனர். கணவனுக்கு நிகராக, சில வேளைகளில் கணவனைவிட சில படிகள் மேலான பதவிகளில் இருப்பவர்களாகவும், அதிக ஊதியம் பெறுபவர்களாவும் பெண்கள் இருக்கின்றனர்.
ஆனாலும், உண்மை நிலை என்னவாக இருக்கிறது? நாட்டுக்குத்தான் ராணியப்பா…வீட்டுக்கு அவ மனைவியப்பா என்றுதானே! இதைத்தான் இந்திரா நூயியின் அம்மாவும் அவரிடம் நினைவூட்டியிருக்கிறார். ஒரு விசயம் புரிஞ்சுக்கோடி, உன் கம்பெனி உலகத்துலயே பெரிய கம்பெனி, சரி. அதுல நம்பர் ஒன் போஸ்ட் ஒனக்குக் கொடுத்திருக்கா சரி. ஆனா இந்த வீட்டுக்குள்ள வரும்போது, நீ ஒரு மனைவி, ஒரு அம்மா, ஒரு மகள், ஒரு மருமகள். இது எல்லாமும்னு வச்சிக்கோ. இந்த ரோலை வேற யாருமே ஏத்துக்க முடியாது. அதனால உன் தலையில சூட்டுற கிரீடத்தை எல்லாம் இந்தக் கராஜ்லயே விட்டுட்டு வந்துரு. வீட்டுக்குள்ள கொண்டு வராதே.
இதே போன்ற அறிவுரையை, ஒரு அம்மா தன் மகனிடமோ, ஒரு மாமியார் தன் மருமகனிடமோ சொல்லிவிட முடியுமா? குடும்பம் என்பது கணவன் மனைவி இருவரும் இணைந்து நடத்துகின்ற ஒரு நிறுவனம் என்னும்போது, பொறுப்புகள் இருவராலும் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுவதுதானே நியாயம்? அதைவிட்டுவிட்டு, பெண்கள், வேலைக்குப் போய் பணமும் சம்பாதித்துக் கொடுத்து, வீட்டுப் பொறுப்புகளையும் தலைமேல் போட்டுக்கொண்டு செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது மனிதநேயச் செயலாகுமா?
காலங்காலமாக, புருஷன் வீட்டில் வாழப் போற பெண்ணுக்கும், தங்கச்சிக் கண்ணுக்குமே புத்திமதிகள் சொல்லி அனுப்பும் நம் சமூகத்தில், வீட்டு வேலைகளும், இன்னபிற குடும்பப் பொறுப்புகளான குழந்தை வளர்ப்பு, மாமியார் மாமனாரைக் கவனித்தல், நாத்தனாருக்கு நல்லது கெட்டது பார்ப்பது, மச்சினருக்குப் பொறுப்பை உணர்த்தி நல்வழிப்படுத்துவது போன்ற குடும்பக் கடமைகள் தங்களைச் சார்ந்தவை மட்டுமே என்று பெண்கள் மனங்களில் பதிய வைக்கப்பட்டுவிட்டன. மேற்படிக் கடமைகளைச் சரிவரச் செய்யும் பெண்களுக்கு மட்டுமே, இங்கு குடும்பப் பெண் பட்டம் வழங்கப்படும். பெண்களும் இயல்பாகவே இந்தப் பட்டத்தைச் சுமக்க மனத்தளவில் பயிற்றுவிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளச் செய்யப்படுகிறார்கள்.
இந்தச் சிந்தனைதான், இந்திரா நூயியின் பேச்சிலும் வெளிப்படுகிறது. குழந்தைகளோடு நேரம் செலவிட முடியாதது தனக்குக் குற்ற உணர்வைத் தருவதாகச் சொல்கிறார். பல வீடுகளில், தங்கள் பிள்ளைகள் என்ன படிக்கின்றனர், எப்படிப் படிக்கின்றனர், எப்போது வீட்டிற்கு வருகின்றனர், அவர்களுடைய நண்பர்கள் யார் _ எப்படிப்பட்டவர்கள், அவர்களுக்குப் பிடித்தவைகள் என்ன, பிடிக்காதவைகள் என்ன என்பதெல்லாம் அப்பாக்களுக்குத் தெரிவதே இல்லை. ஆனால், அது குறித்த எந்தக் குற்ற உணர்வும் அவர்களுக்கு எழுவதும் இல்லை.
இந்த வீட்டுக்குள் வரும்போது, நீ ஒரு மனைவி, ஒரு அம்மா, ஒரு மகள், ஒரு மருமகள். இது எல்லாமும்னு வச்சிக்கோ _ என்கிறார் இந்திரா நூயியின் அம்மா. இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பப் பதவிகள் பெண்களுக்கு மட்டுமே நினைவூட்டப்படுகின்றன. இதே காரணத்தை முன்வைத்து ஏற்கெனவே அரசியலில் உயர் பதவிகளில் இருந்த மூன்று பெண்கள் பொறுப்புகளைக் கைவிட்டு இல்லத்தரசிகளாக மாறினர் என்றும் கூறி, இக்கட்டுரை தன் தரப்புக்கு வலுசேர்க்க முயல்கிறது.
பொதுவாக நம் நாட்டில், இல்லத்தரசிகள் உண்டு _ இல்லத்தரசர்கள் கிடையாது; கற்புக்கரசிகள் உண்டு _ கற்புக்கரசர்கள் கிடையாது; குடும்பப் பெண்கள் உண்டு _ குடும்ப ஆண்கள் கிடையாது; மலடிகள் உண்டு _ மலடன்கள் கிடையாது; விதவைகள் உண்டு _ விதவன்கள் கிடையாது; விபச்சாரிகள் உண்டு _ விபச்சாரன்கள் கிடையாது _ இப்படி எல்லாச் சிறப்புகளையும் பெண்களுக்கு மட்டுமே உரித்தாக்கி இருக்கிற நாகரிக சமுதாயத்தின் நீட்சிப் போக்குகளே இக்கட்டுரைக்கான அடித்தளங்கள்.
எந்தவொரு ஆணும், அய்யகோ, என்னால் குடும்பப் பொறுப்புகளைச் சரியாகச் செய்ய முடியவில்லையே, என் மனச்சாட்சி என்னைக் கேள்வி கேட்கிறதே. நான் வேலையை விட்டுவிட்டு, என்னுடைய குடும்பக் கடமைகளைக் கவனிக்கப் போகிறேன் என்று ஒரு பேச்சுக்குக்கூட சொல்வதில்லை.
சரி, போகட்டும். வீட்டு வேலைகளையாவது சரிபாதியாகப் பகிர்ந்து கொள்வோமே என்ற குறைந்தளவு நியாயத்தையாவது செய்ய முன்வருகிறார்களா என்றால், பெரும்பாலும் இல்லை. அண்மையில் என்னோடு, தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டவர், இப்ப இருக்கிற பொம்பளைங்க, ஆம்பிளைங்கள வீட்டு வேலை செய்ய வைக்கிறாங்க. வேலைக்குப் போறதுனால, நா பாதி வேலைய செஞ்சா, நீ பாதி வேலைய செய்யின்னு பெண்ணுரிமை பேச ஆரம்பிச்சிடுறாங்க என்றார். இது மனித உரிமை. மனித உரிமைதான் பெண்ணுரிமை என்று அவருக்குப் புரிய வைப்பதில், பண்பாடு, கலாச்சாரம் எனப் பல தடைகள் குறுக்கே நிற்கின்றன.
கேட்டரிங் படிப்புப் படித்துவிட்டு, பெரிய உணவு விடுதிகளில் உணவு தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்ற ஆண்கள், வீட்டில் மனைவிக்கு உடல்நலமில்லாத சூழலில்கூட, சமையல்கட்டுப் பக்கம் போவதில்லை என்கிற ஆண்மைச் செருக்கோடு இருக்கிறார்கள்.
கணவன் மருத்துவராக இருந்தாலும், வீட்டில் குழந்தைக்கு உடல்நலமில்லை என்றால், அலுவலகத்தில் அனுமதி கேட்டோ, விடுப்பு எடுத்தோ மனைவிதான் குழந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
பெண்களும் இப்படிப்பட்ட மனநிலையோடு வாழப் பழகிக் கொள்கிறார்கள். வந்ததும் ஓடுறியே, ஒரு ரெண்டு நாள் தங்கிட்டுப் போயேன்டி என்று அம்மா வீட்டில் ஆசையோடு சொன்னாலும், அய்யய்யோ, நா இல்லாட்டி அவருக்கு எந்த வேலையும் ஓடாதும்மா… நா கௌம்புறேன் என்று சொல்லும் பெண்ணுக்குத் தெரியும், தான் இல்லாவிட்டாலும் எல்லாம் நடைபெறும் என்று.
இருந்தும், பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும், இல்லத்தரசிக்கான இலக்கணம், அவளை அப்படி ஓட வைக்கிறது. ஆனால் ஆண்களில் பெரும்பான்மையும், எம் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா…எம் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா… என்று துள்ளிக் குதிக்கும் ஜனகராஜ்களாகத்தான் இருக்கிறார்கள்.
கணவன் வேலைக்குப் போவது, குடும்பத்தின் நலனுக்காக என்றால், மனைவி வேலைக்குப் போவதும் குடும்பத்தின் நலனுக்காகத்தான். இருவரின் நோக்கமும் ஒன்றுதான் என்று ஆகும்போது, மனைவியின் வேலை மட்டும் குடும்பப் பொறுப்புகளுக்குத் தடையாக இருக்கிறது என்பது எப்படிச் சரியாகும்? ஆண் என்பதாலேயே, ஓர் ஆணால், தன் வாழ்க்கையின் எந்த நிலையிலும் தன்னுடைய அடையாளத்தை இழந்துவிடாமல், தனக்கான அனைத்தையும் பெற்றுக் கொள்ள முடிகிறது. பெண் என்பதாலேயே, வேலைக்குக்கூட குற்ற உணர்வில்லாமல் போக முடிவதில்லை. இதைத்தான் மூளையில் போடப்பட்ட விலங்கு என்றார் தந்தை பெரியார்.
குழந்தைகளைக்கூடக் கவனிக்காமல் பணத்தின் பின்னால் ஓடும் பெற்றோர்களைப் பார்த்து _ அதாவது கணவன், மனைவி இருவரிடமும் _ யாருக்காக ஓடி ஓடிப் பணம் சம்பாதிக்கிறீர்கள்? குடும்பத்திற்குத்தான் என்றால், குழந்தைகள், பெற்றோர் இல்லாமல் ஏது குடும்பம்? என்று கேட்டால் அது நீதி. அதைவிட்டுவிட்டு, என்னால் பிள்ளைகளை, குடும்பத்தைச் சரியாகக் கவனிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வைப் பெண்களிடம் ஏற்படுத்தி, தங்களை விடுவித்துக் கொள்ளும் ஆணாதிக்கச் சிந்தனை சமூக முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் தடை.
புஷ் காலத்தில் அவருடைய ஆலோசகர் மற்றும் உதவியாளர் பொறுப்புகளை வகித்த, கேரன் ஹ்யூக்ஸ், மேரி மேடலின் இருவரும் சொல்லும் யோசனையைக் கட்டுரை ஆசிரியர் இறுதியாக முன்வைக்கிறார். அன்றாட குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றத் தடையாக இல்லாத வேலை அல்லது தொழிலை நாம் தேர்வு செய்வதுதான் ஒரே வழி என்பதுதான் அந்த உலகப் புகழ்பெற்ற யோசனை. அடடா, பெண்கள் மீதுதான் எத்தனை பரிவு? இந்த யோசனை பெண்களுக்கு மட்டும்தான். ஆண்களுக்குக் கண்டிப்பாகக் கிடையாது என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும்.
கட்டுரை ஆசிரியர் மேற்கோள் காட்டும் பெண்கள் அனைவருமே, மேல்தட்டு வர்க்கப் பெண்கள் அல்லது மேலைநாட்டுப் பெண்களாகவே இருக்கின்றனர். இவ்வளவு குற்ற உணர்ச்சியோடு இருந்தாலும், ஆண்டுக்கு 75 கோடி ஊதியம் பெறும் தன்னுடைய வேலையில் இன்றும் இந்திரா நூயி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார். மேலைநாட்டுப் பெண்களே இவ்வளவு குடும்பப் பொறுப்போடு சிந்திக்கும் போது, பாரதப் பெண்கள் பண்பாட்டின் உச்சியில் நின்று யோசிக்க வேண்டாமா என்னும் தொனிதான் கட்டுரையில் இழையோடிக் கொண்டிருக்கிறது.
எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகு, பெண்கள் பல துறைகளிலும் வாய்ப்புகளைப் பெற்று, சாதனையாளர்களாக வலம் வரத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களை மீண்டும் கொல்லைப்புறத்தில் முடக்கிவைக்கும் உளவியல் தந்திரமே இவை போன்ற கருத்து உருவாக்கங்கள்.
source: http://www.unmaionline.com/new/2139-womem-man-advice.html