அனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்
[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம் இயங்குவதில் ஓர் அர்த்தம் இருக்கும். ஆக, உலகம் இயங்குவதற்கு ஒரு உன்னதமான அர்த்தத்தை வழங்குவது உடலுறவு என்று சொல்வதில் தவறேதுமில்லை.
உடலுறவு மனித வாழ்வுக்கு எந்த அளவு முக்கியமோ அது போன்று இந்த உலகம் இயங்குவதை அர்த்தமுள்ளதாக்குவதற்கு உரிய ஒரு செயலாகவும் இருக்கிறது. எனவே அது எந்த அளவுக்கு ஒரு புண்ணியமான செயல் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அந்த புண்ணியமான செயலை இறைவன் அனுமதித்த விதத்தில் நாம் நிறைவேற்றும்போது அது ஓர் மகத்தான இறைவணக்கமாகவே ஆகிவிடுகிறது என்பது நிச்சயம். ஆம்! அனுமதிக்கப்பட்ட உடலுறவை இஸ்லாம் ஓர் இறை வழிபாடாகவே எடுத்தோதுகிறது.]
திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான்
நமது எண்ணங்கள் (நிய்யத்) தான் சாதாரண செயல்களைப் பெரும் நன்மையான காரியமாக உயர்த்தி, அளப்பறிய நற்கூலியை இறைவனிடம் நமக்குப் பெற்றுத்தருகிறது.
“செயல்கள் எண்ணத்தின் (நிய்யத்தின்) அடிப்படையிலேயே அமைந்துள்ளன. ஒருவர் எதை நாடுகிறாரோ அதுவே அவருக்குக் கிடைக்கும்…” அறிவிப்பவர்: உமர் இப்னுல் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். (இந்த நபிமொழியைத்தான் இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நபிமொழி திரட்டிலேயேயே மிகச்சிறந்த நூலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஸஹீஹுல் புகாரியின் முதல் நபிமொழியாக இடம் பெறச்செய்துள்ளார்கள்.)
இதன் மூலம், ஒருவர் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சரியான எண்ணம் அமைத்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். ஒருவரின் செயல் அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைவதற்கு, அதை அல்லாஹ்வின் அன்புத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிக்கேற்ப செய்வதாய் எண்ணம் கொள்ள வேண்டும். இல்லையெனில் அது வெறும் பழக்கச் செயலாகவே இருக்கும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, ஹளரத் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்: “திருமணம் என் வழியை (ஸுன்னா) சார்ந்தது. எவர் என் வழியை (நிராகரிக்கும் முகமாக) பின்பற்றுவதில்லையோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர். மேலும், திருமணம் செய்யுங்கள் (மற்றும் இனவிருத்தி செய்யுங்கள்) நிச்சயமாக நான் உங்களைக் கொண்டு, பிற சமூகத்தாரை எண்ணிக்கையில் விஞ்சிவிடுவேன்…” (நூல்: ஸுனன் இப்னு மாஜா 1846)
இந்த நபிமொழியிலிருந்து, மக்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதும், சந்ததியினரைத் தேடிக்கொள்வதும் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்வதன் அனுமதிக்கப்பட்ட குறிக்கோள்கள் என்பது தெளிவாக விளங்குகிறது.
திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம் இயங்குவதில் ஓர் அர்த்தம் இருக்கும். ஆக, உலகம் இயங்குவதற்கு ஒரு உன்னதமான அர்த்தத்தை வழங்குவது உடலுறவு என்று சொல்வதில் தவறேதுமில்லை.
உடலுறவு மனித வாழ்வுக்கு எந்த அளவு முக்கியமோ அது போன்று இந்த உலகம் இயங்குவதை அர்த்தமுள்ளதாக்குவதற்கு உரிய ஒரு செயலாகவும் இருக்கிறது. எனவே அது எந்த அளவுக்கு ஒரு புண்ணியமான செயல் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அந்த புண்ணியமான செயலை இறைவன் அனுமதித்த விதத்தில் நாம் நிறைவேற்றும்போது அது ஓர் மகத்தான இறைவணக்கமாகவே ஆகிவிடுகிறது என்பது நிச்சயம். ஆம்! அனுமதிக்கப்பட்ட உடலுறவை இஸ்லாம் ஓர் இறை வழிபாடாகவே எடுத்தோதுகிறது.
ஒருவர் தம் துணைவரோடு உடலுறவில் ஈடுபடும்போது, அனுபவித்து மகிழும், இச்சையைத் தணிக்கும் நோக்கம் கொள்வதில் தவறில்லை. அது இயற்கையானதே. உடலுறவு ஓர் அசிங்கமான செயலல்ல. மாறாக, அது எண்ணற்ற நபிமார்களும், அல்லாஹ்வின் நல்லடியார்களும் செய்துள்ள ஓர் உயர்வான செயல். எனவே, இச்செயலை சட்டத்துக்கு உட்பட்டு மகிழ்ந்து அனுபவிப்பது எவ்விதத்திலும் வெட்க உணர்வுக்கு எதிரானதல்ல, நற்பண்புக்கு முரணானதுமல்ல.
உடலுறவு அசுத்தமானது, இச்சையை பூர்த்தி செய்து கொள்வதற்காகத்தான் – மல ஜலம் கழிக்கும் தேவையைப் போலத்தான் அதை செய்ய வேண்டியுள்ளது. – என்று சிலர் காண்கின்றனர். இப்படி ஒரு தவறான எண்ணம் கொண்டிருக்கும் மனிதர்கள் தயக்கத்துடனேயே உடலுறவு கொள்கின்றனர். அதிலிருந்து கிடைக்கும் சுக அனுபவங்கள் அனைத்தும் அவமரியாதையானது, ஒழுக்கக்கேடானது என்று கருதுகின்றனர். உண்மையில் இவர்கள் உடலுறவின் அசல் தன்மையை தவறவிட்டு விட்டவர்கள்.
அனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்
அனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும். எனவே அதை இயன்ற அளவு அனுபவித்து மகிழ வேண்டும். தொழுகையை ஒருவர் எவ்வாறு இறைசிந்தனையுடன் மனம் லயித்துத் தொழுகிறாரோ அவ்வாறே அவர் முழு மன ஈடுபாட்டுடன் உடலுறவு கொண்டு அனுபவிக்கும் போதுதான் அவருக்கு இயற்கையாகவே; தனக்கு சுகத்திலும் சுகமான, சுவையிலும் சுவையான ஓர் அற்புத இன்பத்தை வாரி வழங்கினானே அந்த ஏக இறைவனுக்கு நன்றி சொல்லும் எண்ணம் வரும். அந்த நிலைக்கு நம் மனதை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சரியான எண்ணங்கள்; உடலுறவை ஓர் உடல் அளவிலான சுகம் என்பதிலிருந்து மாற்றி, ஓர் அளப்பரிய நற்கூலி கிடைக்கும் செயலாகவும், ஒருவகையான அறச்செயலாகவும் உயர்த்துகின்றன.
அபூதர் அல் கிஃபாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூரியதாக அறிவிக்கிறார்கள்:
“…நிச்சயமாக ஒவ்வொரு தஸ்பீஹும் (ஸுப்ஹானல்லாஹ் – இறைவன் தூய்மையானவன் எனக் கூறுதல்) அறச் செயலே,
ஒவ்வொரு தக்பீரும் (அல்லாஹு அக்பர் – இறைவன் மிகப் பெரியவன் எனக்கூறுதல்) ஓர் அறச் செயலே,
ஒவ்வொரு தஹ்மீதும் (அல்ஹம்துலில்லாஹ் – எல்லாப் புகழும் இறைவனுக்கே எனக் கூறுதல்) அறச் செயலே,
ஒவ்வொரு தஹ்லீலும் (லா இலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை எனக் கூறுதல்) அறச் செயலே,
நன்மையை ஏவுவதும் அறம், தீயதைத் தடுப்பதும் அறம், மற்றும் உங்கள் எல்லோரின் உடலுறவுச் செயலிலும் அறம் இருக்கிறது” என்றார்கள்.
(அப்போது நபித்தோழர்கள் கேட்டார்கள்), அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் உடலுறவு ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவா அவருக்கு நற்கூலி கொடுக்கப்படும்?”
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்; “அவர் அதை (உடலுறவை) விலக்கப்பட்ட விதத்தில் செய்தால் அவர் பாவம் செய்பவராகக் கருதப்படுவதை நீங்கள் அறியவில்லையா? அதுபோலத்தான், அவர் அதை அனுமதிக்கப்பட்ட விதத்தில் செய்தால், அவருக்கு நற்கூலி கொடுக்கப்படும்” (ஸஹீஹ் முஸ்லிம் 1006)
அல்லாஹ் தனது திருமறையாம் அல்குர்ஆனில் கூறுகின்றான்; “….மேலும், இப்போது அவர்களுடன் (உங்கள் துணைவியருடன்) உறவு கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ளதைத் தேடிக்கொள்ளுங்கள். (2:187)
“அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ளதைத் தேடிக்கொள்ளுங்கள்” எனும் வசனத்திலிருந்து அல்லாஹ் விதித்துள்ளதை தேடிக்கொள்வதற்காக வேண்டியாவது ஒவ்வொருவரும் உடலுறவு கொள்வது ஓர் இறைக்கட்டளை என்பதை விளங்கலாம். இறை கட்டளை எனும்போது அதை நிறைவேற்றுவது ஒவ்வொருவரின் கடமையென்பதை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
“பெண்களுடன் உடலுறவு கொள்வதன்மூலம், உங்களுக்காக விண்ணுலக ஏட்டில் (லவ்ஹூல் மஹ்ஃபூள்) விதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை நீங்கள் தேடிக்கொள்ள வேண்டும். வெறுமனே இச்சையைத் தணித்துக் கொள்ளும் உடலுறவு மட்டும் நோக்கமாக இருப்பது உவப்பானதல்ல” என்று தஃஸீரே உஸ்மானி (1:123) யில் எழுதுகிறார்கள்.
அனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும். எனவே அதை இயன்ற அளவு அனுபவித்து மகிழ வேண்டும். தொழுகையை ஒருவர் எவ்வாறு இறைசிந்தனையுடன் மனம் லயித்துத் தொழுகிறாரோ அவ்வாறே அவர் முழு மன ஈடுபாட்டுடன் உடலுறவு கொண்டு அனுபவிக்கும்போது அவருக்கு இயற்கையாகவே தனக்கு சுகத்திலும் சுகமான, சுவையிலும் சுவையான ஓர் அற்புத இன்பத்தை வாரி வழங்கிய அந்த ஏக இறைவனுக்கு நன்றி சொல்லும் எண்ணம் வரும்படி நாம் நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒருவர் பரவசத்தின் உச்சநிலையிலும்கூட தன் தம் துணைவரோடு கொள்ளும் உயலுறவு மூலம், ஆசை நிறைவேற்றத்துக்கு அப்பால் உள்ள பல உயர் நன்னோக்கங்களை நினைவில் நிறுத்த வேண்டும். அதே சமயம் உடலுறவின்போது இறைசிந்தனை இருந்தால்தான் அது வணக்கமாக ஏற்றுக்கொள்ளப்படும் எண்று அர்த்தமல்ல. அனுமதிக்கப்பட்ட வழியில் – திருமணம் முடித்து தன் மனைவியுடன் உடலுறவு கொண்டாலே அது வணக்கமாகத்தான் ஆகிவிடுகிறது.
அனைவருமே தொழுதாலும் ஒவ்வொருவருடைய எண்ணத்திற்கும் இக்லாஸிற்கும் தகுந்தாற்போல் நன்மைகளில் வித்தியாசம் உண்டல்லவா அது போலத்தான் இதிலும் என்று கொள்ளலாம். உடலுறவின்போது இறைவனின் நினைவு இருந்தால் அதற்கு அதிக நன்மை உண்டு என்பது அனைவரும் புரிந்துகொள்ளக்கூடியதே.
Source.. http://www.marhum-muslim.com