நண்பர்களிடம் அக்கரை காட்டுங்கள்!
[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அகிலத்தின் தலைவராக இருந்தாலும், இறைவனின் தூதராக இருந்தாலும் நபித்தோழர்களுடன் எவ்வாறு நட்பு பாராட்ட வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்கள்.
சில நண்பர்களோடு பழகும்போது உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.
உங்கள் நண்பர்களுடன் பேசும்போது உங்களுடைய மனம் நேர் சிந்தனைகளில் நிறைகிறதா? எதிர் சிந்தனைகளில் நிரம்புகிறதா? என்று பாருங்கள். எதிர் சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.
போதை, திருட்டு, பாலியல், சமூக, விரோதச் செயல் போன்ற பல தவறுகளுக்கு இளைஞர்களை இட்டுச்செல்வதில் பெரும்பாலான பங்கு நண்பர்களையே சாரும், அத்தகைய ஒழுக்கத்தை மீறிய செயல்களுக்குள் உங்களை இழுப்பவர்கள் உங்கள் எதிரிகளே, நண்பர்கள் அல்ல.
நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன். எனக்குப் பிடித்த மாதிரி மாறினால் தான் உன்னோடு நட்பாய் இருப்பேன் என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி கொள்ளுங்கள்.]
நண்பர்களிடம் அக்கரை காட்டுங்கள்!
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ஒரு பகல்’ அல்லது “ஓர் இரவு’ (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அதற்கு, “பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!” என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியே வரச் செய்ததே என்னையும் வெளியே வரச் செய்தது” என்று கூறி விட்டு, “எழுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர். நூல் : முஸ்லிம் 4143
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: “இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்!” எனும் இந்த (49:2ஆவது) வசனம் அருளப்பெற்ற பின் ஸாபித் பின் கைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது இல்லத்திலேயே அமர்ந்து விட்டார்கள். “நான் நரகவாசிகளில் ஒருவன்’ என்று கூறிக்கொண்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வராமல் (வீட்டிலேயே) அடைந்து கிடந்தார்கள். எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஸாபித் குறித்து) சஅத் பின் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், “அபூ அம்ர்! ஸாபித்துக்கு என்ன ஆயிற்று? அவருக்கு உடல் நலமில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு சஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “அவர் என் பக்கத்து வீட்டுக்காரர்தாம். அவருக்கு எந்த நோயுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். பிறகு சஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று அல்லாஹ் வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதைப் பற்றிச் சொன்னார்கள்.
அப்போது ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “இந்த (49:2ஆவது) வசனம் அருளப்பெற்றுள்ளது. உங்களில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் குரலை உயர்த்திப் பேசுபவன் நான் என்பதை நீங்கள் அறிந்தே உள்ளீர்கள். ஆகவே நான், நரகவாசிகளில் ஒருவன்தான்” என்று கூறினார்கள். இதை சஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (சென்று) சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இல்லை. அவர் சொர்க்கவாசிகளில் ஒருவர் ஆவார்” என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம் 187
ஹாத்திப் பின் அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணை வைப்போரிடையேயுள்ள பிரமுகர்கள் சிலருக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்தார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ஹாத்திபே! என்ன இது?” என்று கேட்டார்கள்.
ஹாத்திப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கின்றார்கள். எனக்கு அவர்கஜடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று நான் விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்ட படி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை” என்று கூறினார்கள்.
(இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இவர் உங்களிடம் உண்மை பேசினார்” என்று கூறினார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்” என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒரு வேளை அல்லாஹ் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து, “நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்’ என்று கூறி விட்டிருக்கலாம்” என்று சொன்னார்கள். (நூல் : முஸ்லிம்)
நல்ல நட்பு என்பது….
o உண்மையான நண்பன் உங்களுடைய திறமைகளை முழுமையாய்ப் பயன்படுத்த ஊக்குவிப்பான். உதாரணமாக ஓர் துறையில் சிறந்து விளங்குவது உங்கள் இலட்சியமெனில், அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் எனும் விஷயங்களில் உங்களுக்கு உதவி செய்வான். உங்களைப் படிப்படியாக அந்தப் பாதையில் நடத்துவான். வெறுமனே உங்களுடைய வெற்றிகளில் வந்து கை குலுக்கிவிட்டுப் போகும் மனிதனாக அவன் இருப்பதில்லை.
o மற்ற நண்பர்களைப் பற்றி உங்களிடம் தரக்குறைவாக விமர்சிக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாய் இருக்க வேண்டும். உங்களைப் பற்றி அவர்கள் வேறு நண்பர்களிடமும் அதே போலப் பேசித் திரியும் வாய்ப்பு உண்டு. நீங்கள் நட்புறவு கொள்ளும் நண்பனுடன் இருக்கும்போது அடுத்தவர்களைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்களை அவிழ்க்கிறார்கள் என யோசியுங்கள். அந்த நண்பன் நல்ல நண்பன் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்,
o சில நண்பர்கள் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை போலத் தலையாட்டும் நண்பர்களே வேண்டுமென்பார்கள். அவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல. அவர்களுடைய நட்பில் வீசுவதும் சுயநல வாசமே. “தப்பான ஒரு செயலைச் செய்ய உங்களை ஊக்கப்படுத்துபவன் உங்கள் நண்பனல்ல. அப்படிப்பட்டவர்களை நீங்கள் முளையிலேயே கிள்ளி எறியலாம்.
o போதை, திருட்டு, பாலியல், சமூக, விரோதச் செயல் போன்ற பல தவறுகளுக்கு இளைஞர்களை இட்டுச்செல்வதில் பெரும்பாலான பங்கு நண்பர்களையே சாரும், அத்தகைய ஒழுக்கத்தை மீறிய செயல்களுக்குள் உங்களை இழுப்பவர்கள் உங்கள் எதிரிகளே, நண்பர்கள் அல்ல. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன். எனக்குப் பிடித்த மாதிரி மாறினால் தான் உன்னோடு நட்பாய் இருப்பேன் என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி கொள்ளுங்கள்.
o உங்கள் நண்பர்களுடன் பேசும்போது உங்களுடைய மனம் நேர் சிந்தனைகளில் நிறைகிறதா? எதிர் சிந்தனைகளில் நிரம்புகிறதா? என்று பாருங்கள். எதிர் சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.
o சில நண்பர்களோடு பழகும்போது உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.
o உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்குபேரை நினையுங்கள், அவர்கள் நல்லவர்களா, மோசமானவர்களா என இப்போது அளவிடுங்கள், தீய நண்பர்களெனில் ஒதுக்குங்கள்.
o கடைசியாக ஒன்று. நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள்! நமது பெற்றோரையும், உடன் பிறந்தோரையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நமது நண்பன் யாராக இருக்க வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும். நட்பு என்பது ஒருவரின் வாழ்வையே திசைமாற்றிவிடும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அகிலத்தின் தலைவராக இருந்தாலும், இறைவனின் தூதராக இருந்தாலும் நபித்தோழர்களுடன் எவ்வாறு நட்பு பாராட்ட வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்கள். அதனால்தான் அல்லாஹ் திருமறையில் இத்தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது என்பதாக சிலாகித்துச் சொல்லிக் காட்டுகிறான்.
எனவே நாமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போன்று நல்ல நண்பானாக நல்ல நட்பு கொள்ளக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.