வார, மாத, வருட தொழுகையாளிகளே!
பிறரை நம்பி மோசம் போகாதீர்கள்!
“இறைவழியில் அவனுக்காக நீங்கள் முயற்சி செய்ய வேண்டிய முறைப்படி முயற்சி செய்யுங்கள். அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுதான் உங்களின் தந்தையாகிய இப்ராஹீமின் மார்க்கமாகும். (அல்லாஹ்வாகிய) அவனே இதிலும் இதற்கு முன்னரும் உங்களுக்கு முஸ்லிமீன் எனப் பெயரிட்டுள்ளான்….” (22:78)
உங்களுக்கு(ஒவ்வொன்றையும்) எளிதாக்கவே அல்லாஹ் விரும்புகிறான். மேலும் பலவீனமான நிலையில் மனிதன் படைக்கப் பட்டுள்ளான். (4:28) (மேலும் பார்க்க : 54:17,22,32,40)
இந்த குர்ஆன் வசனங்களில் திட்டமாகத் தெள்ளத் தெளிவாக இம்மார்க்கத்தில் எவ்வித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. மிகமிக எளி தாக்கப்பட்டது, நீங்கள் முறைப்படி குர்ஆனில் முயற்சி செய்யுங்கள் எனக் கட்டளையிட்டுள்ளான் அல்லாஹ். அடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலைப் பாருங்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக, இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால் அது அவரை மிகைக்காமல் விடாது. எனவே (கூடுதலான வழிபாடுகள் உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றதைச் செய்யுங்கள். நற்செய்தி பெறுங்கள். காலையும், மாலையும் இரவில் சிறிது நேரத்தையும் துணையாக்கிக் கொள்ளுங்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ :39)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள்; நற்செய்திகளைச் சொல்லுங்கள். வெறுப்பேற்றி விடாதீர்கள். (அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ : 69)
குர்ஆனும், ஹதீஃதும் மிகமிக எளிதானது. பாமரனும் எவ்விதச் சிரமமும் இல்லாமல் தெளிவாக விளங்கி அதன்படி நடக்க முடியும் என்று உறுதி கூறுகின்றன குர்ஆனும் ஹதீஃதும்!
8:29 இறைவாக்கில் நம்பிக்கையாளர்கள் தக்வா-பயபக்தியுடன் நடந்தால் பிரித்தறிந்து கொள்ளும் தெளிவைத் தருவதாக வாக்களிக்கிறான் அல்லாஹ்.
29:69 இறைவாக்கில் முயற்சி செய்யும் (ஜிஹாத்) ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அல்லாஹ் அவனது வழிகளைக் காட்டுவதாகவும் உறுதி அளித்துள்ளான்.
இரவும் பகலைப் போல் தூய இஸ்லாமிய மார்க்கம் தெள்ளத் தெளிவாக இருக்கும் நிலையில் இந்த மவ்லவிகள் என்ன செய்திருக்கிறார்கள்? மேலே எழுதியுள்ள அனைத்து குர்ஆன் வசனங்களையும், ஹதீஃத்களையும் 2:159 இறைவாக்குக் கூறுவது போல் மறைத்து 42:21 இறைவாக்குச் சொல்வது போல் அல்லாஹ் விதிக்காததை எல்லாம் விதித்து 49:16 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கும் அதிமேதாவிகளாகத் தங்களைக் கற்பனை செய்கிறார்கள்.
2:186, 7:3, 18:102-106, 50:16 போன்ற இறை வாக்குகளை நிராகரித்து, இந்த மவ்லவிகள் அல்லாஹ்வையே முற்றிலும் நம்பவேண்டிய முஸ்லிம்களைத் தங்களை நம்ப வைத்துள்ளனர். அதன் விளைவு பெரும்பான்மை முஸ்லிம்கள் 49:14 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத்தில் ஈமான்-இறை நம்பிக்கை நுழையாத பெயர் தாங்கி முஸ்லிம்களாகவும், 12:106 இறைவாக்குக் கூறுவது போல் ஒஷிர்க்-இணைவைப்புடன் நம் பிக்கை கொண்டவர்களாகவுமே இருக்கின்றனர்.
(மேலும் பார்க்க :12:108)
அடுத்து, தொழுகைக்காக ஒளூ செய்வதில் அல்லாஹ் விதிக்காத பெரும் பெரும் சட்டங்களை விதித்து ஒளூ செய்வதை லேசாக்குவதற்கு மாறாகக் கடினமாக்கி இருக்கிறார்கள். தொழுகையிலும் அல்லாஹ் விதிக்காததை எல்லாம் விதித்து (பார்க்க : 42:21, 49:16) தொழுகையையும் கடினமாக்கி இருக்கிறார்கள். வார, மாத, வருட முசல்லிகளின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஒளூ செய்ய வேண்டும் என்று நினைத்தவுடன் ஓர் அலாதியான பயம் பற்றிக் கொள்கிறது. அதேபோல் தொழுகைக்காக நின்றவுடனும் ஒரு பெரும் பயம் தொற்றிக் கொள்கிறது. ஒளூ செய்வதில், தொழுவதில் தவறிழைத்துப் பெரும் பாவியாகி விடுவோமோ என்ற அச்சம் மேலிடுகிறது. இறுதியில் தொழுது பாவியாகி விடுவதை விட தொழாமலேயே பாவியாக இருப்போம் என்று தொழுகையை கைவிட்டு விடுகின்றனர்.
ஆக அல்லாஹ்வோ, 7:157 இறைக் கட்டளைப்படி அவனது தூதரோ விதிக்காத விதிகளை இம்மவ்லவிகள் ஒளூவிலும், தொழுகையிலும் விதித்து 99% முஸ்லிம்களைத் தொழுகையற்றவர்களாக ஆக்கிவிட்டார்கள். பெருங்கொண்ட முஸ்லிம்களை தொழுகையற்றவர்களாக ஆக்குவதில் இந்த மவ்லவிகளுக்கு என்ன லாபம் என்று கேட்கலாம். நியாயமான கேள்வி!
அங்குதான் அவர்களின் சுயநலம் வெளிப்படுகிறது. எவர் 2:186 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வையே முழுமையாக முற்றிலும் நம்பி ஐங்காலத் தொழுகைகளைப் பேணி ஜமாஅத்துடன் தொழுது வருகிறாரோ அவர் அல்லாஹ்வுடன் நேரடித் தொடர்புடையவராகி விடுகிறார். அப்படிப்பட்டவர்கள் இந்த மவ்லவிகளை ஆபத்பாந்தவனாக நம்பி, அவர்கள் தங்கள் கையைப் பிடித்து சுவர்க்கத்தில் சேர்ப்பார்கள் என்று மூடத்தனமாக நம்ப மாட்டார்கள்.
இந்த உண்மையை தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கும் ஒரு மதரஸாவின் முதல்வர், ஆலிம்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டும் உள்ளார். அதாவது ஐங்கால தொழுகையாளிகளை விட தொழுகையற்றவர்களே ஆலிம்களாகிய எங்களைப் பெரிதும் மதித்துப் போற்றுகிறார்கள் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
ஆகத் தங்கள்கு ஆபத்து வராமல் இருக்க வேண்டுமென்றால் பெருங்கொண்ட முஸ்லிம்கள் தொழுகையற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதே இந்த மவ்லவிகளின் மாறாத இலட்சியமாகும். ஒளூவிலும், தொழுகையிலும் அல்லாஹ்வோ, அவனது தூதரோ ஏற்படுத்தாத கடின சட்டங்களை இம்மவ்லவிகள் ஏன் ஏற்படுத்தியுள்ளனர் என்பது இப்போது புரிகிறதா? ஆக, தொழுகையில், இல்லாத முரட்டு மூடச் சட்டங்களைக் கற்பனை செய்து பெருங்கொண்ட முஸ்லிம்களைத் தொழுகையற்றவர்களாக்கியதோடு அவர்களது நோக்கம் நிறைவேறுமா? இல்லையே! தொழுகையற்ற முஸ்லிம்கள் இம் மவ்லவிகளின் கையில் சிக்காமல் தப்பிப் போய் விடுவார்களே. இவர்களின் பிழைப்புக்கு ஆபத்து வந்து விடுமே!
இந்த அப்பாவி பெருங்கொண்ட முஸ்லிம்களைத் தங்கள் கைக்குள் போட்டுக் கொள்ள என்ன வழி? இந்த மவ்லவிகள் தங்கள் மூளையைக் கசக்கிக் கண்டு பிடித்தவைதான் தர்கா, தரீக்கா சடங்குகள், கத்தம், பாத்தியா, மவ்லூது, மீலாது, கந்தூரி இன்னும் இவை போல் எண்ணற்ற பித்அத்தான மூடச் சடங்குகள். ஷபே பராஅத், ஷபே மிஃராஜ் சடங்குகள், ரமழான் பிறை 27-ல் கத்ருடைய நாளை கத்ர் இரவாக்கி, அதையும் அவர்கள் கணக்கிலுள்ள பிறை 26-ன் இரவை, 27-வது இரவாக கற்பனை செய்து, இந்த வார, மாத, வருட முசல்லிகள் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுத்தப் பொய்யான, இட்டுக் கட்டப்பட்ட, பலவீனமான ஹதீஃத்களை, பெரும் ஆதாரமாகக் காட்டி அவர்களை மயக்கி வழி கெடுக்கின்றனர்.
ஐங்கால தொழுகையற்றவர்கள் அந்தச் சடங்கு சம்பிரதாயங்களையும், பித்அத்தான ஷபே பராஅத், ஷபே மிஃராஜ் தொழுகைகளையும் மிகுந்த பேணுதலுடன் தொழுது வருகின்றனர். “ஷபே’ என்ற பதம் அரபு பதம் அல்ல. பார்சியிலிருந்து உரு துக்கு வந்த பதம். இதிலிருந்தே இந்த ஷபே மிஃராஜும் ஷபே பராஅத்தும் இந்த மவ்லவிகளின் கைச் சரக்கு, மார்க்கம் அல்ல என்று எளிதாகப் புரியும்.
இதேபோல் கத்ருடைய நாளை (லைலத்) பிந்திய ஒற்றைப்படை இரவுகளில் தேட வேண்டும் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளை. இந்த மவ்லவிகளோ கத்ருடைய நாளை கத்ருடைய இரவாக்கி அதையும் 27-ம் பிறை என கற்பனை செய்து, 3-ம் பிறை நாளை முதல் பிறையாகக் கொண்ட மூடக் கணக்குப்படி 29-ம் பிறையை 27-ம் பிறை நாளாகவும் கொள்கின்றனர்.
அதிலும் இன்னும் மூடத்தனமாக யூதர்களைப் பின்பற்றி நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்று நாளின் பின் வாசல் வழியாக நுழைகிறார்கள். எனவே 26-ம் பிறை நாளின் மாலையை 27-ம் பிறை இரவு என அறிவீனமாக நம்பிச் செயல்படுகின்றனர். அவர்களை நம்பியுள்ள ஐங்காலத் தொழுகையற்ற பெருங்கொண்ட முஸ்லிம்களும் அவர்கள் பின்னால் கண் மூடிச் செல்கின்றனர். 33:66-68 இறைவாக்குகள் சொல்வது போல நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு அவர்கள் நம்பிப் பின்பற்றிய மவ்லவிகளையே சபிக்கிப் போகின்றனர்.
எப்படி என்று பாருங்கள்.
வார, மாத, வருட மெளலவிகளிடம் ஐங்கால தொழுகை இல்லை என்பது திட்டமான விஷயம். நாளை மறுமையில் விசாரணையின் போது ஒவ்வொருவரின் ஈமான்-இறை நம்பிக்கை பற்றி முதலில் பார்க்கப்படும். 2:186, 7:3, 18:102-106, 50:16 இறைக் கட்டளைகள்படி அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் 9:31 இறைவாக்குக் கூறுவது போல் ரப்பாக -அதாவது இடைத்தரகர்களாக கற்சிலைகளையோ, இதர படைப்பினங்களையோ, கபுருகளையோ, கலீஃபாக்களையோ, நபி தோழர்களையோ, அவுலியாக்களையோ, இமாம்களையோ, மவ்லவிகளையோ, முன்னோர்களையோ (சலஃபிகள்) பின்னோர்களையோ, (கலஃபிகள்) மனிதர்களில் யாரையுமோ கொள்ளாமல், அல்லாஹ்வையே முற்றிலும் நம்பிச் செயல்பட்டிருக்கிறார்களா என்று பார்க்கப்படும்.
அல்லாஹ்வை மட்டுமே முற்றிலும் நம்பாமல் இடையில் இடைத்தரகர்களைப் புகுத்தி இருந்தால், 4:48,116, 12:106, இறைக் கட்டளைகள் கூறுவது போல் இறைவனுக்கு இணை வைத்தக் குற்றம் மன்னிக்கப்படாமலும், அவர்கள் செய்த அனைத்து நற்செயல்களும் நிறுக்கப்படாமலும் அவர்கள் நரகில் எறியப்படுவார்கள். (பார்க்க : 18:102-106)
இறைவனுக்கு இணை வைக்காத நிலையில் ஈமான்-இறை நம்பிக்கைத் தூய்மையான நிலையில் இருந்தால், அடுத்து அவர்கள் மீது கடமையாக்கப்பட்ட ஐங்காலத் தொழுகைகள் பரி சீலிக்கப்படும். அப்போது ஐங்கால தொழுகைகளில் சில்லறைக் குறைபாடுகள் இருந்தால் அக்குறைகள் உபரி தொழுகைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்படும். ஐங்காலத் தொழுகைகளைத் தொழாமல் பாழ்படுத்தியவர்களின் உபரி தொழுகைகள் மலையளவு இருந்தாலும் அவை கணக்கில் எடுக்கப்படாது. ஐங்காலத் தொழுகைகளை உரிய முறையில் பேணித் தொழாதவர் நரகில் எறியப்படுவார்.
உதாரணமாக ஐங்கால தொழுகைகளைத் தொழாத ஒரு முஸ்லிம், இதர பித்அத்தான ஷபே மிஃராஜ், ஷபே பராஅத் தொழுகை களை இரவு முழுவதும் நின்று தொழுதிருந்தாலும் அவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தராத பித்அத்கள் என நிராகரிக்கப்பட்டு நரகில் எறியப்படுவார்.
ரமழான் 29-ம் பிறை நாளை 27-ம் பிறை நாள் என மூடத்தனமாக நம்பி, அதிலும் 27-ம் பகல் முடிந்து ஆரம்பிக்கும் 27-ம் இரவைக் கொள்ளாமல், நாளில் கொல்லைப்புறமாகப் புகுந்து 26-ம் நாளின் இரவை 27-ம் நாளின் இரவாக மூடத்தனமாகக் கொண்டு அந்த இரவு முழுவதும் நின்று ஒருவர் வழிபடுகிறார்.
இப்படித் தொடர்ந்து தொழுது வரும் போது ஒற்றைப்படை நாட்களில் கிடைக்கும் ஆயிரம் மாதங்களைவிட மேலான கத்ருடைய நாள், 85 வயதுடைய ஒருவருக்கு 50 நாள்கள் கிடைத்தன என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவர் ஐங்கால கடமையான தொழுகைகளைத் தொழுதவர் அல்ல. இப்போது 50வு1000=50,000 மாதங்கள்=4166.6 வருடங்கள் வழிபட்ட நன்மைகள் கிடைத்தாலும் அவருக்கு அதனால் மறுமையில் எப்பிரயோஜனமும் இல்லை. அவரிடம் கடமையான ஐங்கால தொழுகை இல்லாததால் இந்த 4166.6 வருட வழிபாடும் எப்பிரயோஜனமும் தராது. நரகமே அவரது இருப்பிடம்.
இவற்றை நாம் சுயமாகக் கற்பனை செய்து சொல்லவில்லை. அல்குர்ஆன் 2:3,43,83,110,177, 238,277, 4:101,102,103,142,162, 5:6,12,55,58, 7:170, 6:92, 9:5,11,18,54,71, 10:87, 11:114, 13:22, 14:31,37,40, 17:78, 19:31,55,59, 20:14, 132, 21:73, 22:35,41,78, 24:37,56, 27:3, 29:45, 30:31 (இந்த வசனம் தொழுகையற்றவர்களை முஷ்ரிக் இணைவைப்பவர் என்கிறது) 31:4,17, 33:33, 35:18,29, 58:13, 62:9, 70:22, 23,34, 74:42, 43, 98:5, 107:4-6, 108:2 போன்ற வசனங்கள் கூறுவதையே கூறுகிறோம்.
இந்த வசனங்கள் அனைத்தையும் பொறுமையாக, நிதானமாகப் படித்து உணர்கிறவர்கள் ஒரு போதும் ஐங்கால தொழுகையற்றவர்களாக இருக்க முடியாது. ஐங்கால தொழுகைகளை உள்ளூரிலிருக்கும்போது ஜமாஅத்தைப் பேணித் தொழாதவன் 30:31 இறைவாக்குச் சொல்வது போல் முஷ்ரிக்காகத்தான் இருப்பான். அப்படிப்பட்டவன் குர்ஆன், ஹதீஃத்படி மார்க்கம் சொல்ல அணுவளவும் அருகதையற்றவன். அப்படிப்பட்டவனின் கூற்றை எவர்கள் வேதவாக்காக எடுத்துச் செயல்படுகிறார்களோ அவர்கள் நாளை தனது இருப்பிடத்தை நரகில் தான் தேடிக் கொள்ள முடியும்.
அதே போல் தங்களின் கடமையான ஐங்கால தொழுகைகளுக்கு நாளை மறுமையில் அல்லாஹ்விடம் கூலி-சம்பளத்தை எதிர்பாராமல், அற்பமான இவ்வுலகில் அற்பமான கூலி-சம்பளத்திற்கு விற்றுவிட்டவர்களும் நாளை மறுமையில் தொழுகை அற்றவர்களாகத்தான் எழுப்பப்படுவார்கள். இங்கு தொழுகையை அற்பக் காசுக்கு விற்ற பின் அத் தொழுகைகளில் அவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதுதானே உண்மை!
இந்த பெருமை பேசும், மார்க்கத்தை விற்பனைப் பொருளாக்கிய மவ்லவிகளின் நாளை நிலை நரகமே என்பதையும் மேலே எழுதியுள்ள குர்ஆன் வசனங்கள் உறுதிப் படுத்துகின்றன.
வார, மாத, வருட மெளலவிகளே உங்களிடம் எமது வேண்டுகோள், நீங்கள் நாளை நரகிலிருந்து தப்ப வேண்டுமானால், நீங்கள் இந்த மவ்லவிகளை உங்களின் ஆபத்பாந்தவனாக, நாளை உங்களை கையைப் பிடித்து சுவர்க்கத்தில் சேர்ப்பார்கள் என்று மூடத்தனமாக நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லாமல் 2:186 இறைவாக்குக் கட்டளையிடுவது போல், அல்லாஹ்வையே முற்றிலுமாக நம்பி, 3:103ல் அல்லாஹ் கட்டளையிட்டிருப்பது போல் அதற்கு அடிபணிந்து தரீக்கா, மஸ்லக், இயக்கம், இன்னும் பல பிரிவுகளாகப் பிரியாமல் அல்குர்ஆனைப் பற்றிப்பிடித்து அதன் முஹ்க்கமாத் வசனங்கள் நேரடியாகச் சொல்வதை அப்படியே ஏற்று, அவற்றிற்கு இந்த மவ்லவிகள் சொல்லும் சுய விளக்கங்களை நிராகரித்துச் செயல்பட முன்வந்தால் 62:2 இறை வசனம் கூறுவது போல் ஆலிம் எனப் பெருமையடிக்கும் மவ்லவிகளை விட பெருமையற்ற நீங்களே குர்ஆனை மிக எளிதாகவும், சரியாகவும் விளங்க முடியும் என பல வசனங்களில் அல்லாஹ் உறுதி அளிக்கிறான்.
வார, மாத, வருட மெளலவிகளே! ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். ஒருவர் 50:16 இறைக் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து தனக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் மனிதர்களில் யாரையும் இடைத்தரகராகக் கொள்ளாமல், 2:186, 7:3, 18:102-106 இறைக் கட்டளைகள்படி அல்லாஹ்வையே முழுமை யாக நம்பித் தூய கலப்படமற்ற ஈமான்-இறை நம்பிக்கையுடன் கடமையான ஐங்காலத் தொழுகை மற்றும் கடமையான அமல்களைச் செய்கிறார். சுன்னத்தான, நஃபிலான எந்த அமலையும் செய்யவில்லை. ஒரேயொரு கத்ருடைய நாளையும் அவர் பெறவில்லை. ஆயினும் அவர் சுவர்க்கம் நுழைவது உறுதி. சுவர்க்கத்தில் உயர் பதவிகள் கிடைக்காமல் போகலாம் என்பதே குர்ஆன், ஹதீஃத் தெளிவு!
அதற்கு மாறாக அல்லாஹ்வுக்கும், தங்களுக்குமிடையில் மவ்லவி, மவ்லவி அல்லாத மனிதர்களில் எவரையும் இடைத்தரகராகப் புகுத்திக் கொண்டு எப்படிப்பட்ட உயர் அமல்களைச் செய்தாலும் 9:31 இறைவாக்குச் சொல் வது போல், அவர் அல்லாஹ்வுக்கு இணை வைப்பதால் சுவர்க்கம் போக முடியாது. நரகமே அவர் இருப்பிடம் என பல குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.
குறிப்பாக ஐங்கால தொழுகையற்ற நிலையில் அவர் மலையாளவு அல்ல, உலகளவு சுன்னத்தான, நஃபிலான அமல்கள் செய்திருந்தாலும், அவை மறுமையில் கணக்கில் கொள்ளப்பட்டு நிறுக்கப்படாது. அவர் சென்றடைவது நரகமே என்றுதான் குர்ஆன் வசனங்களும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களும் கூறுகின்றன. (பார்க்க : 18:102-106) சுயமாகச் சிந்தித்துச் செயல்பட முன்வாருங்கள், அல்லாஹ் உதவி செய்வானாக!
source: http://annajaath.com/?p=7038