மதரீதியாக கடவுளர் சிலைகளை சாலைகளில் அமைக்க எந்த விதி அனுமதிக்கிறது? உயர்நீதிமன்றம் கடுமையான கேள்வி
சென்னை: சாலைகளில் மத விழாக்கள் என்று கடவுளர் சிலைகள், மற்ற கட்டுமானங்களை அமைப்பதற்கு அனுமதிப்பது எவ்வாறு என்று சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
கடந்த வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ் கே. அக்னிஹோத்ரி மற்றும் எம்.எம்.சுரேஷ் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வில் பொதுநல வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாட்டில் சாலைகளை ஆக்கிரமிப்பதனால் எண்ணிலடங்காத வகையில் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து தமிழக அரசு விளக்கமளிப்பதற்கு இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி அன்று இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பொதுநல வழக்கு மனுதாரர் கூறும்போது, தமிழ்நாடு முழுவதும் 77 ஆயிரம் சாலையோரக் கோயில்கள் உள்ளன. வண்டிகள் செல்வதற்கும், பாதசாரிகள் நடப்பதற்கும் பெரும் இடையூறாக அவை உள்ளன. ஏராளமான சாலைகள், தெருக்கள் மதரீதியான செயல்களின் பேரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதில் எந்த மதமும் விதிவிலக்கின்றி அஞ்சத்தக்க வகையில் செயல்படுகின்றன.
அண்மையில் சென்னைக் காவல்துறையின்சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி பெயரால் விநாயகர் சிலைகள் அமைக்கப்படும் இடங்கள் குறித்த விதிமுறைகளை காவல்துறை வகுத்துள்ளது. இது அரசிலமைப்புக்கு முற்றிலும் எதிரானது. ஏனென்றால், காவல்துறை சாலைகளுக்கும், நடைபாதைகளுக்கும் உரிமையாளர்கள் அல்ல. அலுவலக ரீதியில் அனுமதியின்றி சிலைகளை சாலைகள் மற்றும் தெருக்களில் நிறுவ அனுமதிப்பது என்பது ஆட்சியாளர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீறுவதாகும். காவல்துறையினரின் கண்மூடித்தனமான செயல்களால், அபாயங்கள் விளைகின்றன. கோவில்களை நிறுவுவது அல்லது அனுமதிப்பது என்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைகின்றன. மற்றவர்களும் பக்தி உள்ளவர்களாக இருப்பினும், அதே நம்பிக்கையில் இருப்பதில்லை என்று மனுதாரர் கூறி உள்ளார்.
மனுதாரரின் வேண்டு கோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இதுநாள் வரையிலும் இதை முறைப்படுத்துவதற்கு சட்டம் இல்லை. ஆகவே, அரசு பதில்மனுவை தாக்கல் செய்வதற்கு, 5_-9_-2013 தேதி யில் தாக்கீது அனுப்பியும், இதுவரை எந்த பதிலும் இல்லை. இறுதி வாய்ப்பாக இரண்டு வாரங்கள் அளிக்கப்படுகின்றன. இவ்வழக்கில் உள்ள வாய்ப்புகள் அல்லது விதிமுறைகள் மற்றும் ஆட்சியாளர்களின் இவ்வழக்கின் மீதான செயல்பாடுகள் குறித்து பதில் அளிக்க இரண்டு வாரங்கள் இறுதிக் கெடுவாக அளிக்கப்படுகின்றன.
Read more: http://viduthalai.in/headline/85063-2014-08-01-10-47-44.html#ixzz39DuxevUE