கார்களில் திரைச்சீலைகள் அகற்ற பெண்கள் கடும் எதிர்ப்பு!
கார்களில் திரைச்சீலைகளை போலீஸார் அகற்றுவதற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திரைச்சீலைகளை அகற்றுவதற்கு மோட்டார் வாகனச் சட்டத்தில் இடமில்லை என்று வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குடும்பமாக காரில் செல்லும்போது தனிமைக்கும், வெளியே தெரியாமல் இருப்பதற்கும், நம் பகுதிகளில் நிலவும் வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ளவும், ஏ.சி. நீண்டநேரம் இருக்கவும் (பெட்ரோலும் சிக்கனமாகும்) கார் கண்ணாடிகளில் கருப்பு பிலிம்கள் ஒட்டப்படுகின்றன.
அதேநேரத்தில் இந்த கருப்பு பிலிம்களால் பார்வை ஊடுருவும் திறன் குறைந்து இரவு நேரங்களில் விபத்துகளும், குற்றவாளிகள் தப்பித்துச் செல்லவும் காரணமாகின்றன.
டெல்லியில் காருக்குள் அதிகமான பாலியல் வன்முறைகள் நடந்ததாலும், தீவிரவாதிகளை அடையாளம் கண்டுபிடிக்கவும் கார்களில் கருப்பு பிலிம்கள் ஒட்ட உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
அதைத் தொடர்ந்து கண்ணாடிகளில் கருப்பு பிலிம் ஒட்டப்பட்டிருக்கும் கார்களை போலீஸார் நிறுத்தி, பிலிம்களை கிழித்து, ரூ.100 அபராதம் விதிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களும், தங்களது தனிமை பாதுகாக்கப்பட வேண்டுமென விரும்புவோரும், கருப்பு பிலிம்களுக்கு பதிலாக காருக்குள் திரைச்சீலைகளை போட ஆரம்பித்துள்ளனர். முதலில் திரைச்சீலைகளுக்கு அனுமதி அளித்த போலீஸார் இப்போது அவற்றையும் அகற்ற ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து கார் ஓட்டும் பெண்கள் சிலர் கூறுகையில், “கார் சிக்னலில் நிற்கும்போது காருக்குள் இருக்கும் பெண்களை சிலர் பல்வேறு கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். சிலர் கேலி கூட செய்கின்றனர். எனது காருக்குள் நான் அமர்ந்திருக்கும்போதுகூட எனக்கு சுதந்திரமில்லை. அப்போதும் மற்றவர்களுக்காக உடையை சரிசெய்து கொண்டு பொம்மைபோல இருக்க வேண்டியுள்ளது. விருந்து, விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது முன்புபோல் மேக்-அப், உடை மாற்றுவது போன்ற எதையும் செய்ய முடியவில்லை” என்றனர்.
வேறு சிலர் கூறுகையில், “மதிப்பு வாய்ந்த பொருட்களை காருக்குள் வைத்துவிட்டு செல்ல முடிவதில்லை. போலீஸாரின் நடவடிக்கைகள் தனிநபர்களின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் பாதிப்பதாக உள்ளது. எனது காரும் எனக்கு வீடு போன்றதுதான். எனது குடும்பத்தினர் எனது காருக்குள் விருப்பம்போல இருப்பதை தடுப்பது நியாயமில்லை. சென்னையில் இது போன்றதொரு குற்றம் நடக்காத நிலையில், எங்கேயோ நடந்த வழக்குக்காக சென்னையில் இருப்பவர்களைத் தண்டிக்கக் கூடாது” என்றனர்.
போக்குவரத்து போலீஸாரிடம் கேட்டபோது, “கார்களில் மாறுதல் ஏதும் செய்யக் கூடாது என்பது சட்ட விதிகளில் ஒன்று. பிலிம் ஒட்டக்கூடாது என்று கூறவில்லை. பார்வை ஊடுருவும் திறன் முன்பக்க கண்ணாடியில் 70 சதவீதமும், மற்ற பக்கங்களில் 50 சதவீதமும் இருக்கும் வகையில் உள்ள பிலிம்களை ஒட்டலாம். திரைச்சீலைகளை பயன்படுத்தலாமா, கூடாதா என்று சட்டத்தில் கூறவில்லை என்கிறார்கள்.
ஆனால் காருக்குள் நடக்கும் சம்பவங்கள் வெளியே தெரியவேண்டும் என்பது சட்டத்தில் உள்ளது. எனவே உள்ளே நடப்பதை மறைக்கும் வகையில் திரைச்சீலை போட்டாலும் தவறுதான்” என்றனர்.
சட்டத்தில் தடையில்லை
மோட்டார் வாகன வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் கோவிந்தராமனிடம் கேட்டபோது, “கார்களில் திரைச்சீலைகள் பயன்படுத்துவதை தடுக்க சட்டத்தில் இடமில்லை. 1989-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மோட்டார் வாகன சட்டம் 100-வது பிரிவில், கார்களில் திரைச்சீலை பயன்படுத்துவதை தடை செய்யவில்லை. கார்களில் திரைச்சீலை பயன்படுத்துவதை தடுக்கவோ, அதை அகற்றுவதற்கோ, அபராதம் விதிப்பதற்கோ போலீஸாருக்கு அதிகாரம் கிடையாது” என்றார்.
source: http://www.vkalathur.com/?p=21676#sthash.XH5sbPdh.CS6CUCyn.dpuf