அந்தப்புறக் காவலுக்கு
அரசர்கள் வைத்த அலிகள் !
தஸ்பீஹ் மணிகளைக்
கொத்தித் தின்னும்
இஸ்ராயீல் கழுகுகளின்
ஏவுகணை அலகுகளில்
அத்தஹியாத் விரல்கள் !
செடார் மரக் கிளைகளில்
தொட்டில்கள்
தொங்கும் கல்லறைகள் !
காற்றும் கந்தலாக்கும்
கந்தக எச்சில்கள்
காருவது அமெரிக்கா
உமிழ்வது இஸ்ரேல் !
அந்தப்புரக் காவலுக்கு
அரசர்கள் வைத்த
அலிகளைப்போல்
ஐ.நா .
மானபங்கப்படும்
மனிதநேயத்திற்கு
உத்தரீயம் கொடுக்கவும்
அமெரிக்க சகுனியிடம்
உத்தரவு கேட்கும்
கவுரவர் சபை
பஞ்ச பாண்டவர்களாய்
வளைகுடா நாடுகள் !
கிப்லாவை
டாலருக்கு மாற்றிக் கொண்டு
முசல்லாவை விற்று
அமெரிக்க அழகுச் சிலை வாங்கியதால்
மினாராக்கள்
யூதர்களுக்கு சஜ்தா செய்கின்றன !
ஆப்கன் விதைஎடுத்து
அமெரிக்கா பயிரிடும்
கொடிமுந்திரித் தோட்டக்
குலைகளில்
முஸ்லிம் குழந்தைகளின்
முழிக்கும் விழிகள் !
அமெரிக்க – இஸ்ரேல்
காக்டெயில் விருந்தின்
ஐஸ்க்ரீம் மகுட உச்சியில்
செர்ரிப் பழமாய்
பாய்மார்களின்
தாய் மார்க்காம்புகள் !
அலிப்
எழுத்துப்போல சேராது
தனித்திருக்கும்
அரபு நாடுகளே …
ஒன்றாய் நீங்கள்
ஒன்றுக்கிருந்தால்
மூத்திரத்தில் மூழ்கிப்போகும்
யூத – அமெரிக்கக்
கள்ள உறவில் தோன்றிய
கர்ப்பக் கழிவு !
அஸாக் கோல்களால் ஆன
சந்தூக்குகள்
அமெரிக்காவில் கிடைக்கலாம் !
ஆனால்…
மூமின் உடல்களை
அடக்கம் செய்ய
ஓரடி மண்கூட
உங்களிடம் இருக்காது !
உங்கள் பாலஸ்தீன
கபர்க்குழி ஒன்றிலிருந்து
கடிதம் ஒன்று
கண்ணிமை உதடு திறக்கிறது !
பாலஸ்தீன விடுதலை இயக்கப்
பதினாறு வயதுப்
பச்சிளம் பிறை நான் !
போரில் வெடித்து சிதறிய
விரலால்
இரத்தம் தொட்டு எழுதுகிறேன் !
வீரர்களே …
தாயக மீட்சிக்காக
தீன் நெறி ஆட்சிக்காக
என் கையத்துப் போனாலும்
என் மெய்யத்துப் போனாலும்
நான் மையத்து ஆனாலும்
என் நிய்யத்துப் போகாது !
மூமின்களே …
ஆமீன்களுக்காக மட்டும்
உயரும் கரங்கள்
புனித
ஆயுதங்களுக்காக உயரட்டும் !
விடுதலை விதைகளே…
நீங்கள் எப்போதாவது
களத்தில்
நிராயுதபாணியாக நின்றால்
ஆயுதம் இல்லையே என
அவதியுற வேண்டாம் !
என் சவக்குழியைத் தோண்டுங்கள்
என் கபாலத்தைக் கேடயமாக்குங்கள்
என் கைகால் எலும்புகளை
ஆயுதமாக்குங்கள்
என் எலும்புகளுக்கு
இரண்டாம் முறையும்
போரிடும் வாய்ப்பு
எம் சமூக விடுதலைக்காக… ! “
-கவிமாமணி பேராசிரியர் தி.மு அப்துல் காதர்