Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

திருமணமும் – மணவிலக்கும். (MARRIAGE AND DIVORCE)

Posted on July 31, 2014 by admin

திருமணமும் – மணவிலக்கும்

(MARRIAGE AND DIVORCE)

இஸ்லாம் தரும் கொள்கைகளுள் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவை அல்லது மிகவும் திரித்துக் கூறப்பட்டு வருபவை திருமணத்தைப் பற்றி இஸ்லாம் தரும் கொள்கைகளாகும்.

திருமணங்கள் குறித்து இஸ்லாம் தரும் விளக்கங்களை வெவ்வேறு தரப்பினரும் தங்களது விருப்பம்போல் விமர்சித்து வருகின்றார்கள். அவர்களுக்கு இஸ்லாம் எந்த நோக்கத்தோடு அணுகுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டுவது நிறைந்த பலனைத் தரலாம். ஆகவே இதுகுறித்து நாம் ஏற்கனவே தந்த விளக்கங்களுடன் இன்னும் சில விளக்கங்களை இங்கே தருகின்றோம்.

இஸ்லாத்தில் திருமணங்கள் என்பவை இலாபத்தை நோக்கமாகக் கொண்டு செய்யப்படும் ஒப்பந்தங்கள் அல்ல. யார் யார் எவ்வளவு பொருள்களை (’சீர்’ வரிசைகளை) தர வேண்டும், அதற்காக அடுத்தவர்கள் என்னென்ன கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் பட்டியல் போட்டுக்காட்டும் உலகாதாய ஒப்பந்தங்களும் அல்ல. நாம் பின்பற்றி வாழும் மதத்திற்கும் திருமண ஒப்பந்தங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதும் இஸ்லாத்தின் கருத்தல்ல.

திருமணங்கள் புனிதமானவை. அதை உலகியல் இலாபங்களின் அடிப்படையிலிருந்து விமர்சித்திடுவது முறையாகாது.

ஒழுக்கம், ஆன்மீகம், மனித இனத்தின் பாதுகாப்பு, அமைதி, அன்பு, கருணை அனுதாபம் ஆகிய மூலக்கூறுகளின் ஒருங்கிணைப்பே திருமணம். இவைகளெல்லாம் திருமணத்தின் முக்கிய மூலக் கூறுகள். இறைவனே முதல் சாட்சியாகவும், அவனே முதலில் முன்நிற்பவனாகவும் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுபவை இஸ்லாமிய திருமணங்கள். இந்த ஒப்பந்தங்கள் இறைவனின் பெயராலேயே நிறைவேற்றப்படுகின்றன.

இறைவனுக்கும், இறைவனின் சட்டதிட்டங்களுக்கும் கீழ்படிந்து நிறைவேற்றப்படுகின்றன. திருமணம் மிகவும் தூய்மையான உறவுகளையும், வாழ்க்கைத் துணையையும் ஏற்படுத்தித்தரும் ஒப்பந்தங்கள். அவை இறைவனால் அங்கீகரிக்கப்பட்டு, அவனால் கண்காணிக்கப்பட்டு வரும் புனித ஒப்பந்தங்களாகும். இறைவன் திருமறையில் தெளிவாக்கி உள்ளதுபோல், அவை இறைக்கருணையின் வெளிப்படையான அத்தாட்சிகளாகும். (சான்றாக திருமறையின் 30:21 வசனங்களைப் பார்க்கவும்.)

இஸ்லாத்தின் பார்வையில் திருமணங்கள் நிரந்தர உறவுகளை ஏற்படுத்தித்தரும் நிறைவான ஒப்பந்தங்களாகும் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். திருமணங்கள் தம்பதிகளிடையே ஒரு பிடிப்பை ஏற்படுத்துகின்றன என்பது மட்டுமல்ல அவை அந்தத் தம்பதிகளை இறைவனோடு இணைக்கின்றன. இரண்டு முஸ்லிம்கள் ஒரு திருமணத்தை செய்து கொள்கிறார்கள் என்றால் அவர்கள் அந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படும் உறவுகள் என்றென்றும் நீடித்திருக்க வேண்டும் என விரும்புகின்றார்கள் என்றே பொருள். இன்பத்திலும், துன்பத்திலும் அந்த உறவுகள் நின்று நிரந்தரமாக வாழ வேண்டும் என்றே விரும்புகின்றார்கள்.

திருமண ஒப்பந்தங்கள் நிரந்தரமாக இருந்திட வேண்டும் என்பதற்காகவும், அவைகள் விரும்பிய பலன்களை நிறைவாகத் தந்திட வேண்டும் என்பதற்காகவும் இஸ்லாம் சில நெறிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது. அந்த நெறிமுறைகளில் பின்வருபவையும் அடங்கும்.

1. ஒப்பந்தத்தில் ஈடுபடவிருக்கும் ஆணும், பெண்ணும் ஒருவரைப்பற்றி அடுத்தவர் எத்துணை அளவிற்கு அறிந்திட முடியுமோ அத்துணை அளவிற்கு அறிந்திட முயன்றிட வேண்டும். இதில் ஒழுக்கக்கேடு, நயவஞ்சகத்தனம், ஏமாற்று ஆகியவற்றுக்கு கிஞ்சித்தும் இடம் தந்திடக்கூடாது.

2. ஆண், தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்குமிடத்து அவளது நிரந்தரப் பண்புகளைத்தான் அடிப்படையாகக் கொள்ள வேண்டும். (உதாரணம்) இறையச்சம், மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுதல், ஒழுக்கபலம், குணநலன்கள் ஆகியவைகளையே கவனித்திட வேண்டும். இவற்றை விடுத்து அவளது செல்வங்கள், குடும்ப கௌரவம், வெளிப்படையாகத் தெரியும் கவர்ச்சி ஆகியவைகளை அளவுகோலாகக் கொண்டிடக் கூடாது.

3. தனக்கு வரும் வாழ்க்கைத் துணைவர் எல்லாவிதத்திலும் தனக்குப் பொருத்தமானவரா? என்பதை பழுதற தெரிந்து கொள்ளும் உரிமை பெண்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதாவது தனக்கு வரும் கணவர் உடல் அளவில் பொருத்தமானவரா? தன்னுடைய அன்புக்கும், மரியாதைக்கும் உரியவரா? தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்பவர்தானா? என்பவற்றை அறிந்துக்கொள்ள பூரண உரிமை பெண்ணுக்கு உண்டு. இந்த அடிப்படையில் அவள் தனக்குப் பொருத்தமில்லை என்று தான் கருதும் ஒரு ஆடவனை வேண்டாமென மறுத்து விடலாம். இல்லையென்றால் அவளது பிற்கால வாழ்க்கை பாதிக்கப்படலாம்.

4. பெண் தனது தகுதிக்கு ஏற்ற அளவிலும், வரப்போகும் கணவனின் நிதிநிலைமைக்கு ஏற்றவகையிலும் ஓரளவு திருமணப் பணத்தைக் (DOWRY) கோரலாம். அவள் இந்தத் திருமணப் பணத்தைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லது வேண்டாம் என்றும் சொல்லி விடலாம். இந்த உரிமையும் அவளுக்கு இருக்கவே செய்கின்றது.

இவ்வாறு கணவன் மனைவிக்குத் திருமணப்பணம் தந்திட வேண்டும் எனப் பணித்திருப்பதின் நோக்கம், அந்தப் பெண்ணை அவன் விரும்புகின்றான், அவளது தேவை அவனுக்கு இருக்கின்றது, அவளது பொருளாதாரத் தேவைகளையும் கவனித்திட அவன் தயாராக இருக்கின்றான் என்பதையெல்லாம் எடுத்துக் காட்டவேயாகும்.

அந்தப்பெண் அந்தத் திருமணத்தின் மூலம் எல்லாவிதமான பாதுகாப்பையும் பெறுகின்றாள் என்ற உத்திரவாதத்தின் வெளிப்பாடாகவும் அந்தத் திருமணப்பணம் அமையும். அத்துடன் மணமகன் அந்தத் திருமணத்தில் எந்தவிதமான பொருளாதார இலாபத்தையும் எதிர்பார்க்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அமையும். ஆணும், பெண்ணும் அந்தத் திருமண ஒப்பந்தத்தில் என்னென்ன எதிர்பார்க்கலாம், என்னென்ன எதிர்பார்க்கக் கூடாது என்பதை தெளிவாக வரையறுத்துக் கூறும் வரையறையாகவும் திருமணப்பணம் அமையும்.

5. நிர்பந்தங்களோ, கட்டாயங்களோ இல்லாமல் இருவரும் மனம்விரும்பி, மனதார, சுதந்திரமாக ‘சம்மதம்’ தெரிவித்திட வேண்டும். இது ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியாகும். இது இல்லையென்றால் ஒப்பந்தம் நிச்சயமாக செல்லுபடியாகாது. திருமணம் வெளிப்படுத்தப்பட்டு மகிழ்ச்சியாக எல்லோரும் கூடி நிறைவேற்றப்பட வேண்டும்.

6. திருமணம் சட்டப்படியானதாக இரண்டு (வயதுக்கு வந்த) பெரியவர்களால் சாட்சியம் வேண்டும். அத்துடன் அதிகாரப்பூர்வமான பதிவேடுகளில் பதிக்கப்பட வேண்டும்.

7. மனைவியின் முழுமையான பராமரிப்பும், பாதுகாப்பும் கணவனைச் சார்ந்ததே! இது திருமணத்தின் பலனாய் அவளுக்குக் கிடைக்கும் சிறப்புரிமையாகும். திருமணத்திற்கு பின்போ, முன்போ அவள் ஏதேனும் சொத்துக்களுக்கு உரியவளாய் இருந்தால் அது அவளுக்கே சொந்தம். அவளுக்குச் சொந்தமான சொத்துக்களில் கணவனுக்கு எந்த உரிமையும் கிடையாது.

இந்த விதியின் நோக்கம் மிகத் தெளிவானது. கணவன் மனைவியிடம் இருக்கும் சொத்துக்கள் தனக்கு கிடைக்கும் என்ற கீழான ஆசையால் உந்தப்பட்டு திருமணத்தை நாடுவதை இது தடுத்து விடுகின்றது. இதனால் திருமணங்கள் வியாபாரங்களாக மாற்றப்படாமல் அவற்றிற்கே உரிய புனித நோக்கங்களுக்காக நிறைவேற்றப்படும்.

இஸ்லாம் வகுத்துத் தந்துள்ள இந்த நெறிமுறைகள் திரும்ணங்கள் தூய்மையான உறவுகளை ஏற்படுத்தின ஆவனச் செய்யும். அந்த இல்லற வாழ்வு நீடித்து நிரந்தரமாக இருந்திடும். தம்பதிகள் மனமாச்சரியங்கள் ஏதுமின்றி மாண்புறு வாழ்வு வாழ்ந்திடுவார்கள். மனையில் அமைதியும், மனதில் திருப்தியும் மணவாழ்வில் விளையும்.

எனினும் மனிதன் தன் குணங்களில், நடத்தைகளில் அடிக்கடி மாறும் தன்மையும் கொண்டவன் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. நிரந்தரமாகவும், நிம்மதியாகவும் இருந்திட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு நிறைவேற்றி வைக்கப்படும் திருமணங்கள் சில நேரங்களில் எதிர்பாராத வேறு திசைகளை நோக்கியும் திரும்பி விடுவதுண்டு. இந்த எதிர்பாராத திருப்பங்களும் நிகழலாம் என்பதை இஸ்லாம் எதிர்பார்க்கவே செய்கின்றது. எதிர்பார்க்காதவைகள் எதிர்பட்டுவிட்டால் என்ன செய்திடுவது என்பதற்கான பரிகாரத்தையும் இஸ்லாம் தந்தே இருக்கின்றது.

ஏற்கனவே குறிப்பிட்டபடி திருமணங்கள் மிகவும் உயர்ந்ததொரு இலட்சியத்திற்காகவே நிறைவேற்றப்படுகின்றன. இந்த உயர்ந்த உன்னதமான இலட்சியங்கள் நிறைவேறவே திருமணங்கள். வெறும் சடங்கு சம்பிரதாயங்களுக்காக நிறைவேற்றப்படுபவைகளல்ல திருமணங்கள். திருமண ஒப்பந்தங்கள் நடப்பில் வராத வெற்றுத் தத்துவங்களாக காகிதத்திலேயே முடங்கிக் கிடந்திட முடியாது. அவைகளில் செயலில் வந்தாக வேண்டும். திருமணங்கள் மூலம் என்னென்ன நிறைவேறிட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறதோ அவை அனைத்தும் நிறைவேறியாக வேண்டும்.

இந்த இலக்குகளை நிறைவேற்றாத திருமணங்கள், வாழ்க்கைக்குப் பயன் தராத திருமணங்கள். இவைகளால் எந்த பயனுமில்லை. ஆகவே அந்தத் திருமண ஒப்பந்தங்களை வைத்துக் கொண்டிருப்பது இருதரப்பிலும் இழப்புகளையே ஏற்படுத்திடும். அவைகளை உடைத்து இருவரும் நிவாரணம் பெற வழி வகுப்பதே சிறந்தது. இதுபோன்ற விரும்பத்தகாத சூழ்நிலைகளில் மணவிலக்கை முறையாக நிறைவேற்றி சம்பந்தபட்டவர்களை அனைவருக்கும் இழந்த உரிமையை மீட்டுத் தரலாம். திருமண ஒப்பந்தத்தை இரு சாராருமோ, ஒருவரோ மதிக்காதபோது அதை வைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

இஸ்லாமியத் திருமணங்கள் எல்லாவிதமான எச்சரிக்கைகளையும் மேற்கொண்ட பிறகு நிறைவேற்றப்படுபவைகளே. மேலே நாம் கோடிட்டுக்காட்டிய நெறிமுறைகள் அனைத்தும் மண ஒப்பந்தங்கள் உடைந்து விடாமல் பாதுகாப்பதற்காகத் தரப்பட்டவைகளேயாகும். இத்தனை முன்னெச்சரிக்கைகளுக்குப் பின்னும், இத்தனை முயற்சிகளுக்குப் பின்னும் அந்த மண ஒப்பந்தம் செயல்படவில்லையென்றால் அந்த மணவாழ்வில் ஏதோ அசாதாரணமானதொரு தடை, தவிர்க்கமுடியாத தடை இருக்கின்றது என்றே பொருள். இதுபோன்றதொரு சூழ்நிலையில் மணவிலக்குப் (DIVORCE) பரிகாரமாகப் பயன் படுத்தப்படலாம்.

ஆனால் மணவிலக்கு என்பது மாற்று வழிகள் எல்லாம் தோற்றுப் போகும்போது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இறைவனுடைய பார்வையில் மிகவும் வெறுக்கத்தக்க இறுதி வழியே மணவிலக்காகும் என இறைவனின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்துள்ளார்கள். மணவிலக்கு என்ற இந்த மனம் வெறுக்கும் இறுதி முடிவுக்கு வரும்முன் பின்வரும் முயற்சிகளும் தோற்றுப் போகும்போது மட்டுமே மணவிலக்குப் பரிந்துரைக்கப்படும்.

1. கணவனும் மனைவியும் பிரச்சினைகளைத் தாங்களாகவே தீர்த்திட முயற்சித்திட வேண்டும். அவர்கள் தங்களுக்குள்ளாகவே தீர்த்திட முனைதல் மிகவும் அவசியமாகும்.

2. அவ்வாறு அவர்கள் தங்களுக்குள் தீர்த்திட முடியாவிட்டால், கணவன் பக்கமிருந்து ஒருவரும், மனைவியின் பக்கமிருந்து ஒருவரும் சமரச முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

3. இந்த முயற்சியும் தோற்று போகுமேயானால் மணவிலக்குக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

சூழ்நிலைச் சிக்கலாகி மணவிலக்கே வழி என்றாகிடும்போது, இரண்டு பேரும் (கணவனும், மனைவியும்) அதனை ஒத்துக்கொள்ள வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை. மணவிலக்குக் கோரிடும் உரிமை இருபாலருக்கும் உண்டு. மனவிலக்குக் கோரிடும் உரிமையை ஆண்களுக்கு மட்டும் அல்லது பெண்களுக்கு மட்டும் உரியதாக மட்டுப்படுத்திடவில்லை இஸ்லாம். மணவிலக்குக் கோரிடும் உரிமை ஆண்களுக்கும் உண்டு, அதேபோல் பெண்களுக்கும் உண்டு.

தம்பதிகளில் யாரேனும் ஒருவர் மணவிலக்குத்தர மறுப்பாரேயானால், மணவிலக்குக் கோருபவரிடம் நியாயம் இருந்தால், நீதித்துறை அதில் தலையிட்டுப் பாதிக்கப்பட்டவருக்கு மணவிலக்கைப் பெற்றுத்தரும். இதில் அரசு தனிக்கவனம் செலுத்தும். சம்பந்தப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு முனைப்புடன் செயல்படும். அத்துடன் எந்த அளவிற்குப் பாதிப்புகளை குறைக்க முடியுமோ அந்த அளவிற்குக் குறைத்திட அரசு ஆவணச் செய்யும்.

மணவிலக்கு முடிந்தவுடன் “காத்திருக்கும் காலம்” என்ற ஒன்று இருக்கின்றது. (Waiting Period) இந்த “காத்திருக்கும் காலம்” மூன்று மாதம் முதல் பனிரெண்டு மாதம் வரை ஆகும். இந்தக் காலத்தின் அந்தப் பெண்ணின் பராமரிப்பு கணவனின் செலவிலேயே நடைபெறும். இந்த இடைவெளியில் அந்தப்பெண் வேறு எந்த ஆணையும் மணந்து கொள்ள முடியாது.

இந்தக் காத்திருக்கும் காலம், அவர்கள் இருவரும் தங்களது நிலையைநன்றாகச் சிந்தித்து மீண்டும் இணைவதற்கான சாத்தியங்களைக் காண்பதற்குக் கிடைத்த வாய்ப்பேயாகும். பிரிவு அவர்களை வாட்டிடும்போது சற்று விட்டுக்கொடுத்தாவது இணைந்திடலாம் என அவர்கள் எண்ணிடும் சாத்தியம் உண்டு. உண்மையிலேயே அவர்கள் மீண்டும் இணைந்திட ஊக்கம் தரப்படுவார்கள். அவ்வாறு அவர்கள் இணைந்திட அனுமதியும் உண்டு. சாதாரணமாக, பிரிந்திடும்போதுதான் ஒருவர் அடுத்தவரின் உயர்வை சிந்திப்பார்.

“காத்திருக்கும் காலம்” முற்றுப்பெற்று விட்டால் அந்தப் பெண் வேறு ஆண்களை மணந்துக் கொள்ளலாம். இந்தக் காத்திருக்கும் காலத்திற்குப் பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் கடமைப்பட்டவர்களல்ல.

மணவிலக்குப் பெற்ற பெண்ணுக்கும், அவளது முன்னாள் கணவருக்கும் இடையில் மீண்டும் இணைப்பு ஏற்படவேண்டுமானால் அது புதியதொரு திருமணமாகவே இருக்கும். இந்தத் திருமணத்திற்குப் பிறகும் அவற்களது உறவு முன்னேறவில்லை என்றால் அவர்கள் மீண்டும் மணவிலக்கே கோரிடவேண்டும். அதற்குப் பின்னரும் அவர்கள் இணைய விரும்பினால் அவர்கள் இன்னொரு முறை திருமணம் செய்து கொள்ளலாம். இந்த இரண்டாவது இணைப்பும் வெற்றி பெறவில்லையென்றால் அவர்கள் இறுதி மணவிலக்கை நிறைவேற்றலாம்.

விவாகரத்தை அனுமதிப்பதன் மூலம் ‘குடும்ப வாழ்வின் நோக்கத்தைப் பறித்திடும் திருமணங்களை இஸ்லாம் சகித்திட தயாராக இல்லை’ என்பதை வெளிப்படுத்துகின்றது. ஏனெனில் அதுபோன்ற திருமணங்கள் விவாகரத்தை விட அதிகமான பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். விவாகரத்துச் செய்திட முனையும் தம்பதியருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகளைத் தருவதன் மூலம் இஸ்லாம் திருமண ஒப்பந்தம் உடைந்து விடாமல் இருக்க தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கின்றது என்பதை தெளிவாக்குகின்றது.

விவாகரத்தை அனுமதிப்பதன் மூலம் இஸ்லாம் மணவாழ்வில் எதிர்வரும் எல்லாச் சூழ்நிலைகளையும் சந்திக்கத் தயாராக இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. இது வாழ்க்கை சுழற்சியின் எல்லாத் திருப்பங்களுக்கும் இஸ்லாம் நிறைவானத் தீர்வை தன்னகத்தே கொண்டிருக்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது. ஆகவே மணவிலக்கை அனுமதித்தன் மூலம் இஸ்லாம் மணவாழ்க்கைக்கு ஒரு ஆபத்தை ஏற்படுத்திடவில்லை. மாறாக, விவாகரத்தை அனுமதித்ததின் மூலம் தவறிழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றது.

பாதிப்புக்கு ஆளாகுபவர் மணவிலக்கு மூலம் அந்தப் பாதிப்புகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிட முடியும் என்பதே அந்த எச்சரிக்கை. இன்பத்திலும், துன்பத்திலும் சரியான ஈடுபாடு கொண்டு வெற்றிகரமாக அமைந்திடும் வரைதான் அந்த திருமண ஒப்பந்தம் இருவரையும் கட்டுப்படுத்தும் என்பதை மணமக்கள் அறிந்தே வாழ்கின்றனர். ஆகவே அவர்கள் அந்த மணவாழ்க்கை நிரந்தரமாக நீடித்திருக்க தங்களால் இயன்றவரை முயலுவார்கள். முயற்சி செய்திட வேண்டியது அவர்களின் கடமையாகும். அதுபோலவே அவர்கள் தங்களது துணையைத் தேர்ந்தெடுத்திடும்போது அதிகமாக கவனம் செலுத்துவார்கள். திருமணத்திற்குப் பின்னரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்திடுவார்கள்.

தம்பதிகள் இருவரும் ஒரு முடிவுக்கு வந்து, இருவருமே ஒப்புதல் தெரிவித்து மணவிலக்கினைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது நீதித்துறைத் தலையிட்டுப் பாதிக்கப்பட்டவருக்காகப் பரிந்து மணவிலக்கினைப் பெற்றுத்தரலாம் என்ற பொதுவிதியைத் தந்திருப்பதன் மூலம், இஸ்லாம் சமுதாயத்தின் பொதுவான ஒழுக்கத்தரம் பாதிக்கப்பட்டு விடாமல் பாதுகாக்கின்றது. அதுபோலவே மனித உரிமைகளையும், கண்ணியத்தையும் காத்திடுகின்றது. இருவரில் ஒருவர் நம்பிக்கைத் துரோகம் செய்து கொண்டிருப்பதையும், அதனால் அடுத்தவர் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருப்பதையும் பார்த்துக்கொண்டு இருக்க இஸ்லாம் தயாராக இல்லை. இதனால் சமுதாயத்தில் ஏற்படும் ஒழுக்க அநீதிகளைச் சகித்துக் கொண்டிருக்கவும் இஸ்லாம் தயாராக இல்லை.

இதுபோன்ற தம்பதியரைப் பார்த்து இஸ்லாம் சொல்லுவது இதுதான்: அன்போடும், ஒருவருகொருவர் விட்டுக்கொடுத்து மனநிறைவோடு வாழுங்கள். அல்லது கண்ணியமாகப் பிரிந்து விடுங்கள்.

விவாகரத்துப் பெற்றிட வேண்டும் என்ற முனைப்பில் ஒருவர் அடுத்தவர் மீது கண்ணியக்குறைவான அவதூறுகளை எடுத்தெறிந்திடுவதை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அனைத்து நிலைகளிலும் இருவரது கண்ணியத்திற்கும் களங்கம் வராமல் பார்த்துக் கொள்வது இஸ்லாத்தின் தனித்தன்மைகளுல் ஒன்று. மணவிலக்கைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னாலேயே தம்பதிகள் பிரிந்திட வேண்டும் என்பது இஸ்லாத்தில் இல்லை. அதுபோலவே மணவிலக்குச் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுத் தரப்படுவதுமில்லை.

சில சமுதாயங்களில் பழக்கத்தில் இருப்பதைப்போல மணவிலக்குப் பெறுவதற்கு பல வருடங்களுக்கு முன்பே தம்பதியரைப் பிரித்து விடுவது பல ஒழுக்கக்கேடுகளுக்கு வழிவகுக்கவே செய்யும். இப்படி பிரித்து வைத்திடுவது அவர்கள் தங்களது திருமண கடமைகளை நிறைவேற்றுவதற்கு மிகப்பெரிய தடையாகவே அமையும். அவர்கள் திருமணமானவர்கள். எனினும் அவர்கள் எத்துணை அளவுக்கு மணவாழ்வில் பலனடைந்தார்கள். மணமகன் திருமணம் செய்துகொண்டவன் என்ற அளவில் சில கட்டுப்பாடுகளும் கடப்பாடுகளும் உடையவன், பிரித்து வைத்து விட்டால் அவன் எந்தக் கட்டுப்பாடுமின்றி, நடந்திட முடிகின்றது.

பிரித்து வைக்கப்பட்டிருக்கும் இந்த பல வருடங்களில் அவன் மணவிலக்கைப் பெற்றிடவும் முடியாது. மறுமணம் செய்திடவும் முடியாது. ஆகவே அவன் ஒழுக்கத்தில் தவறிட நேரிடலாம். இந்த இடைவெளியில் அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு காத்திருப்பான் என எதிர்பார்ப்பதிற்கில்லை. அவன் தான் விரும்பும் பெண்களோடு எந்தக் கட்டுப்பாடுமின்றி சுற்றித்திரிவான். அதுபோல் அந்தப் பெண்ணும் ‘பற்றற்றவளாக’ வாழ்ந்திடுவாள், ஒழுக்க நெறிகளுக்குள் நின்றிடுவாள் என எதிர்பார்ப்பதற்கில்லை.

இதுபோன்ற ஒழுக்கக்கேடுகள் நாளும் நடக்கின்றன என்பதை நாம் மறந்திடவே முடியாது. இப்படித் தம்பதியரைப் பிரித்து வைத்திடுவது பின்னால் ஏதேனும் ஒருவர் மணவிலக்கைப் பெற்றிட வகை செய்யலாம். ஆனால் அதற்குள் – அந்தப் பல வருட இடைவெளிக்குள் சமுதாயம் உள்ளாகும் ஒழுக்கக்கேடுகள் ஏற்படுத்தும் இழப்பு ஏராளமானதாகும். இஸ்லாம் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஏனெனில் பொதுவான ஒழுக்கம் என்பது இஸ்லாம் கண்ணெனப் போற்றிப் பாதுகாப்பவற்றில் ஒன்றாகும்.

மணவிலக்குக் கோரிட கூடாஒழுக்கம் (Adultery) ஒரு தேவை என நிபந்தனை போட்டிருக்கும் சமுதாயத்தவருக்கு நாம் சொல்லும் பதில் இதுதான். ஒரு மனிதன் கூடாஒழுக்கத்தில் ஈடுபட்டிட வேண்டும் அல்லது அவ்வாறு ஈடுபட்டதைப்போல் பாசாங்கு செய்திட வேண்டும் என்பது மனிதனின் கண்ணியத்திற்கும் மனித மாண்புகளுக்கும் தரப்பட்ட மரண அடியே ஆகும். பிறன்மனை நோக்கும் மனிதனுக்கு இஸ்லாம் எத்துணைக் கடுமையான தண்டனையைத் தருகின்றது என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம்.

கூடாஒழுக்கத்தில் (அல்லது விபச்சாரத்தில்) ஈடுபட்டால் அந்த விவாகரத்தை ரத்துச் செய்திட வேண்டும் என ஒரு விதியை வைத்திருக்கும் சமுதாயத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கின்றது என்பதை நாம் அறிவோம். அங்கு மணவிலக்கு பெற்றிடவே கூடாஒழுக்கத்தில் ஈடுபடுகிறார்கள் அல்லது அதில் ஈடுபட்டதாக நடிக்கிறார்கள். ஏனெனில் அங்கு மணவிலக்கை வேறு வழிகளில் பெற்றிட முடியாது. அல்லாமல் கூடாஒழுக்கத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் மணவிலக்குச் செய்யப்படுவதில்லை. இந்த விதியும் அது ஏற்படுத்திடும் விளைவுகளும் மனித இனத்தை அவமானத்தை நோக்கி இட்டுச் செல்பவைகளேயாகும்.

மணவிலக்குப் பெற்றிட தம்பதிகள் சில வருடங்கள் பிரிந்திட வேண்டும் அல்லது கூடாஒழுக்கத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற நியதிகளை வகுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ‘இஸ்லாம்’ சொல்லும் தீர்ப்பு இதுவேயாகும். திருமண வாழ்க்கை நிறைவர நிறைவேறாமல் மணவிலக்குக் கோரிடும் விரும்பத்தகாத சூழ்நிலை ஒன்று ஏற்படுமேயானால், மணவிலக்கு கண்ணியமான முறையில் தரப்பட வேண்டும், சம்பந்தபட்டவர்கள், கண்ணியம் குறைந்திடாமல் பிரிந்திட வகைச் செய்யப்பட வேண்டும்.

இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பெற்ற திருமணங்கள், உடைந்துபோக நேரிடுமேயானால், அங்கு மணவிலக்குக் கோரி பல ஆண்டுகள் பிரிந்திருத்தல் அல்லது கூடாஒழுக்கத்தில் ஈடுபட்டிருத்தல் என்பனவற்றிற்கு இடமே கிடையாது. அதுபோலவே அவைகள் ஹாலிவுட் – விவாகரத்துக்களைப் போலவும் (Hollywood Type Divorce) இருந்திட முடியாது. ஹாலிவுட் திருமணங்கள் செயல்படுத்திக்காட்ட முடியாத நிபந்தனைகளைக் கொண்டவை. ஆகவே அங்கே விவாகரத்துக்கள் மிகச் சாதாரணமான காரணங்களுக்காக செய்யப்பட்டு விடுகின்றன. காலையில் திருமணம் மாலையில் விவாகரத்து என்ற அளவிற்கு விவாகரத்துக்கள் போய்க்கொண்டிருக்கின்றது.

மனிதனோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நியதியும், அவனால் செயல்படுத்திக்காட்ட முடியக்கூடிய அளவிலேயே இருந்திட வேண்டும். அவனது இயற்கைக்குச் சாத்தியமாகாதவைகளை அவன்மீது திணித்திடக் கூடாது. அவனது பலவீனங்களுக்கும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ற வகையில்தான் பொதுவான நியதிகள் இயற்றப்பட வேண்டும். இதனைப் புறக்கணித்துக் கொண்டு எதேச்சையாக, செயல்படுத்த முடியாத சில நிபந்தனைகளை மனிதன் மீது திணித்திடும் சட்டங்கள் செயல்படுத்தப் படாது காற்றிலே பறக்க விடப்படும். இஸ்லாம் நிச்சயமாக இதுபோன்ற பலவீனங்களிலிருந்து விடுபட்டதாகவே இருக்கின்றது. (சான்றாக திருமறையின் 2:224-232, 4:34-35, 4:127-130 வசனங்களைக் காணவும்.)

இது குறித்து இறுதியாக இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். மனித வரலாற்றில் இதுவரையில் இருந்த சமுதாய அமைப்புகள் ஒவ்வொன்றிலும், விவாகரத்துக்கான வழிவகைகள் இருந்தே இருக்கின்றன. இன்றைய இயந்திர உலகில் விவாகரத்துக்கள் எண்ணிக்கையில் அதிகமாகிக் கொண்டே போகின்றன. அதேபோல் விவாகரத்துக்கான நிபந்தனைகளும் சட்டங்களும் பெருமளவில் தளர்த்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. எனினும் இஸ்லாத்தில் விவாகரத்து என்பது ஒழுக்கம் பேணும் உரிய செயலாகவே இருந்து வருகின்றது.

தம்பதிகள் இரக்க சிந்தனையோடும், பொறுமையோடும் வாழ்ந்திட வெண்டும் என இறைவன் அறிவுறுத்துகின்றான். ஒருவர் அடுத்தவரிடம் தனக்குப் பிடிக்காத ஒரு குணம் இருப்பதைக் காணலாம். ஆனால் அதிலும் பல நன்மைகள் இருக்க முடியும். ஆகவே அதைப் பெரிதுபடுத்தி பூசல்களை வளர்க்க வேண்டும் என இறைவன் தம்பதியரை எச்சரிக்கின்றான். இந்தப் பொறுமையையும், சகிப்புத்தன்மையும் அவர்கள் மேற்கொண்டால் நிச்சயமாக உதவி அளிக்கப்படுவார்கள் என இறைவன் உறுதி கூறுகின்றான். அவர்கள் அதில் நிலைத்திருந்தால் இறைவனின் அருள் நிச்சயமாகக் கிடைக்கும்.

ஆனாலும் அவர்கள் பிரிந்திட வேண்டிய அவலநிலை ஏற்பட்டால், அதில் எந்த அளவுக்கு இழப்புகளை தடுத்திட முடியுமோ அந்த அளவிற்குத் தடுத்திட வேண்டும். இதில் அவர்கள் தாராளத் தன்மையோடும் கண்ணியம் குன்றாவண்ணமும் நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்து கொள்பவருக்கு இறைவன் தனது அளவற்ற அருளிலிருந்து அள்ளித் தருவான். இதுவும் இறைவன் தரும் உறுதிமொழியாகும்.

திருமணப் பேச்சுக்கள் முதல் அதைத் தொடர்ந்து வரும் அத்தனை செயல்களும் இறையச்சத்துடனும், இறைவன் நம்மைக் கவனித்துக் கொண்டு இருக்கின்றான் என்ற எண்ணத்தோடும் தான் செய்யப்படுகின்றன.

திருமறையில் மணவிலக்குக் குறித்து வரும் அத்தனை வசனங்களும் வெறும் விதிகளை மட்டும் வரையிட்டுக் காட்டிவிட்டு இருந்திடாமல் ஒழுக்கத்தைப் பேணுங்கள் என சொல்பவைகளாகவும் இருக்கின்றன. அவைகள் ஆரம்பிக்கும்போதும் ஒழுக்கம் பேண வலியுறுத்தத் தவறுதில்லை. மணவிலக்குத் தரப்பட்ட பின்னரும் அவர்களின் ஒழுக்கம் பேணும் உயரிய கடமை நீடிக்கின்றது. அனைத்தும் ஒழுக்க நியதிகளைப் பேணுவதையே இலக்காகவும், அவைகளோடு பின்னிப்பிணைந்தவைகளாகவும் இருக்கின்றன.

source: http://islamkural.com/?p=4394

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

48 − 40 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb