Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும் இணை வைத்தலைத் தவிர!

Posted on July 24, 2014 by admin

எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும் இணை வைத்தலைத் தவிர!

இவ்வுலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! சந்தர்ப்ப சூழ் நிலையாலும், ஷைத்தானின் தூண்டுதலாலும், அலை பாயும் மனதாலும், அறியாமையாலும், அநேக பாவங்களைச் செய்து விடுவது அனைவருக்கும் இயல்பு.அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மக்கள் அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! அவர்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடக் கூடியவர். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)

உலகில் பிறந்த அனைவருமே பாவம் செய்யக் கூடியவர்கள் தான் என்பதை மேற்கண்ட நபி மொழியின் மூலம் அறியலாம்.மனிதர்கள் தாம் செய்து விட்ட பாவங்களை உணர்ந்து திருந்தி, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்கிறான். இதை திருமறை குர்ஆனின் ஏராளமான திரு வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு (மறைத்தவற்றைத்) தெளிவு படுத்தியதைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 2:160)

அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு அதன் பின்னர் மன்னிப்புக் கோரி திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான். அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 16:119)

திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்து பின்னர் நேர்வழி பெற்றவரை நான் மன்னிப்பேன். (திருக்குர்ஆன் 20:82)

இன்னும் எண்ணற்ற வசனங்களில், தன் அடியார்கள் செய்யும் பாவங்களை மன்னிப்பதாகக் கூறும் மாபெரும் கருனையாளனாகிய அல்லாஹ், ஒரேயொரு பாவத்தை மட்டும் ‘மன்னிக்கவே மாட்டேன்’ என்று மிகவும் கண்டிப்புடன் கூறுகிறான். மன்னிப்பே இல்லாத அந்த மாபெரும் பாவம் தான், ஷிர்க் என்னும் இணை வைத்தல் ஆகும்.

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (திருக் குர்ஆன் 4:48)

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) வெகு தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார். (திருக்குர்ஆன் 4:116)

இணை வைத்தல் என்னும் பாவத்தை மன்னிக்கவே மாட்டேன் என்று கூறும் அல்லாஹ் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தெளிவாகக் கூறுகிறான். அல்லாஹ்வின் மன்னிப்பு இல்லை என்றாகி விட்ட பிறகு இணை வைத்தல் என்னும் பாவத்தை செய்தவருக்கு ஏற்படவிருக்கும் கதி என்ன? என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டாமா?

நல்லறங்கள் அழிந்து போகும்

அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக்குர்ஆன் 6:88)

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66

சொர்க்கம் செல்லவே முடியாது’

இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக்குர்ஆன் 5:72)

நரகமே நிரந்தரம்

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக்குர்ஆன் 98:6)

இறைமறை குர்ஆனும், இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரைகளும், அறிவித்துத் தந்த கொடிய பாவங்களாகிய கொலை, கொள்ளை, விபச்சாரம், மது, சூது, வட்டி, ஆகிய அனைத்துப் பாவங்களையும் விடக் கொடிய பாவம் தான், ஷிர்க் என்னும் இணை வைத்தல்.

எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும், தான் நாடியோருக்கு மன்னிப்பு வழங்குவதாகக் கூறும் அல்லாஹ், ஷிர்க் என்னும் பாவத்தை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் என்று தெள்ளத் தெளிவாக அறிவித்து விட்டதிலிருந்தே, இந்த ஷிர்க் என்னும் பாவம் எவ்வளவு கொடியது என்பதைப் புரிந்துக் கொள்ளலாம்.

அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத-
நல்வறங்கள் அனைத்தையும் பாழ்படுத்தக் கூடிய-
சொர்க்கத்தை விட்டும் தூரப் படுத்துகின்ற-
நிரந்தர நரகில் வீழ்ந்துக் கிடக்கக் காரணமாகிய-

அந்த ஷிர்க் என்னும் மாபெரும் கொடிய பாவம் குறித்துத் தெளிவாக அறிந்துக் கொண்டால் அல்லவா அந்தப் பாவத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்?இவ்வளவு அதி பயங்கரப் பாவமாகிய ‘ஷிர்க்’ என்றால் என்ன?

என்பதைப் புரிந்துக் கொள்வதில் தான் பலரும் தவறிழைக்கின்றனர்.அநியாயமாக ஒரு உயிரைப் பறிப்பது கொலை என்பதிலும்-

அடுத்தவர் பொருளை அபகரிப்பது கொள்ளை என்பதிலும்-போதை தருவது மது என்பதிலும்-

மனைவியைத் தவிர மற்ற பெண்களை நாடுவது விபச்சாரம் என்பதிலும்,

கொடுத்ததை விடக் கூடுதலாகக் கேட்டுப் பெறுவது வட்டி என்பதிலும்,

யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. இவை அனைத்தும் பெரும் பாவங்கள் என்பதற்கு விளக்கமும் வியாக்கியானமும் தேவையில்லை.ஆனால் இவை அனைத்தையும் விடக் கொடிய பாவமான ஷிர்க் என்னும் பாவம் குறித்து போதிய தெளிவையும் விளக்கத்தையும் பலரும் பெறவில்லை என்றே சொல்லலாம்.பெரும் பாவங்கள் குறித்துப் புரிந்துக் கொண்டவர்கள், அந்தப் பாவங்களை விட்டும் தம்மைக் காத்துக் கொண்டவர்கள், அறியாமையால் செய்து விட்ட பாவங்கள் குறித்து வருந்தி- திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடியவர்கள் கூட-தங்களையும் அறியாமல், தங்களிடம் குடி கொண்டுவிட்ட இந்த ஷிர்க் என்னும் கொடிய பாவத்தை உணராமல் இருப்பது தான் வேதனையிலும் வேதனை.

தங்கள் எண்ணத்தில், செயல்களில், நம்பிக்கையில், இறை வணக்கத்தில், இந்த ஷிர்க் என்னும் பாவம் எள்ளளவும், எள்ளின் முனையளவும், இல்லாமல் பார்த்துக் கொள்வதும், காத்துக் கொள்வதும், இறை விசுவாசியாகிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும்.அல்லாஹ்வும் அவனது திருத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஏவிய அனைத்து நற் காரியங்களையும் செய்து, அனைத்துத் தீய காரியங்களிலிருந்தும் விலகி, எவ்வளவு தான் நல்லவராக ஒருவர் வாழ்ந்தாலும், அவரிடம் ஷிர்க் என்னும் இணை வைத்தல் இருந்தால், அவர் மறுமையில் வெற்றி பெற முடியாது. அவரின் நல்லறங்கள் அனைத்தும் பாழாகும். நல்லறங்கள் பாழானால் நரகமே நிரந்தரம் என்பதில் சந்தேகமில்லை.

கருத்து வேறுபாடுகளுக்குக் காரணம்

அல்லாஹ்வுக்கு இணை வைக்கக் கூடாது’ என்பது அடிக்கடி ஜும்ஆப் பிரசங்கங்களிலும், மார்க்க மேடைகளிலும், நாம் கேட்ட எச்சரிக்கை தான். இந்த எச்சரிக்கையின் உண்மைப் பொருளை விளங்கிக் கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தான், முஸ்லிம்களுக்கு மத்தியில் கொள்கையளவில் ஏற்பட்டப் பிரிவுகளுக்கு ஒரு வகையில் முக்கிய காரணம் என்று கூடச் சொல்லலாம். சரியாக விளங்கிக் கொண்டால் சண்டை சச்சரவுகளுக்கு இடமில்லை.ஒரு சாரார் மற்றொரு சாராரிடம் காணப்படும் செயல்களை, கொள்கைகளை, வணக்கங்களை, ஷிர்க் என வாதிடுகின்றனர். மற்ற சாரார் தமது செயல்களும், வணக்கங்களும், ஷிர்க் அல்ல என்று மறுக்கின்றனர். அப்படி மறுப்பவர்கள் கூட தமது செயல்கள் ஷிர்க்கானவை என்பதை உணராமல் தான் மறுக்கின்றனரே தவிர, ஷிர்க்கை அவர்கள் நியாயப் படுத்தவில்லை என்பது முக்கியம்.

ஒவ்வொருவரும் தமது கொள்கையும், செயல்களும், திரு மறை குர்ஆனின் அடிப்படையிலும், திருத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகான வழிகாட்டுதல் அடிப்படையிலும், ஒப்பிட்டுப் பார்த்தாலே தெளிவு கிடைத்து விடும். பிரிவினைகள் நீங்கி விடும்.நமது செயல்களிலும், சிந்தனையிலும், ஷிர்க் என்னும் இணை வைத்தல் ஊடுருவி, நமது நல்லறங்கள் பாழாகி நரகப் படுகுழிக்கு நாம் சென்று விடக் கூடாதே என்னும் கவலையிலும் நம் மீது கொண்ட கரிசனத்திலும், நம்மை எச்சரித்துக் காப்பாற்ற தெளிவான ஆதாரங்களுடன் களமிறங்கியுள்ள நல்லோர்களின் நோக்கத்தைப் புரிந்துக் கொண்டால், நமக்கிடையே இருக்கும் மனக்கசப்பு மறைந்து விடும். மாச்சரியங்கள் மாய்ந்து போகும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

53 − = 46

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb