“பசி” – மனிதனுக்கு இறைவன் கொடுத்த பரிசோதனைப் பட்டறை
மவ்லவி, ஏ. உமர் ஜஃபர் பாஜில் மன்பயி
பசியை அடக்க முடியாத மனிதன் பிச்சையெடுக்கும் நிலைக்குக் கூட இறங்கி விடுகிறான். உண்ண உணவில்லை என்னும் போது பசியுணர்வு தூண்டி விட்டால் உரிமையில்லாத திருட்டுக்குக் கூட மனிதன் துணிந்து விடுகிறான்.
“பசி” என்பது மனிதனுக்கு இறைவன் கொடுத்த பரிசோதனைப் பட்டறை.
பசியை உருவாக்கி ஒரு மனிதனை மிருகமாகவும் மாற்றலாம். பசியைக் கொடுத்து ஒரு மனிதனைப் புனிதனாகவும் ஆக்கலாம்.
உலக வரலாற்றில் “பசி!” இல்லாத பக்கங்களே கிடையாது. நாட்டுக்காகப் பசி! வீட்டுக்காகப் பசி! மனைவிக்காகப் பசி! மக்களுக்காகப் பசி! ஆட்சிக்காகப் பசி! அதிகாரத்துக்காகப் பசி! பட்டதுக்காகப் பசி! பதவிக்காகப் பசி! பசி! பசி!! பசி !!!
அந்நியனின் கரங்களில் தாய் நாடு சிக்கிக் கிடக்கிறது! தாயக மக்கள் அடிமைத்தளையில் கட்டுண்டு கிடக்கின்றனர்! ஆளச் சுதந்திரமில்லை! அனுபவிக்கச் சுதந்திரமில்லை! பேசச் சுதந்திரமில்லை! எழுதச் சுதந்திரமில்லை! இப்படிப்பட்ட நிலையில் …. வேண்டும் ஓர் விடுதலை!
கத்திப் பார்த்தும் பயனில்லை. கதறிப் பார்த்தும் பலனில்லை! சொல்லிப் பார்த்தும் பலனில்லை! அடுத்தது ஆர்ப்பாட்டம்! அடிதடி! ஆயுதப் போர்! உதிரம் சிந்தியும், உடல்கள் சரிந்தும், உயிர்கள் பிரிந்தும் பலனில்லாத நிலை!
முடிவில் ஒரு முடிவு! “உண்ணாவிரதம்!” பசியை அடக்கிப் பலன் கேட்கத் துணிந்து விடுகிறான் மனிதன். விரதம் ஏற்கும் மனிதன் முகம் வாடுகிறது! உடல் சோர்கிறது! பசி உயிரைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறது. இப்படி ஒரு மனிதனல்ல! ஓராயிரம் மனிதர்கள் ஒன்று கூடிப் பசித்துக் கிடக்கும் போது அடக்கி ஆளும் அதிகார வர்க்கத்துக்கு செய்தி செல்கிறது.
ஆயுதமேந்திப் போர் புரிந்து உதிரம் சிந்தி, உயிர் நீக்கிக் கேட்டும் கிடைக்காத சுதந்திரம் உண்ணா நோன்பால் கிடைக்கிறது. உண்ணாமல் கிடந்த பசியால் நாட்டுக்கு விடுதலை! போராட்ட வீரர்களின் பசிக்குப் பரிசு விடுதலை. பசித்திருந்து அந்த விடுதலைப் பரிசை அடைந்து மகிழ்கின்றனர் மக்கள்!
ஆளத் தகுதியற்ற ஆட்சியாளரை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவதற்கும் ஒரு பசிப் போராட்டம்! தேவையான தலைவனைத் தகுதியான பீடத்தில் அமர்த்துவதற்கும் ஒரு பசிப் போராட்டம்.
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காவிட்டால், பசித்திருந்து அந்த ஊதியத்தைப் பரிசாகப் பெறும் போராட்டம்.
அநீதி தலை தூக்கி நிற்கும் போதும் அதை அடக்கிக் காட்டுவதற்கு உண்ணாவிரதப் (பசிப்) போராட்டம்!
இப்படிப்பட்ட பசிப் போராட்டங்களால் நாட்டில் நற்சுதந்திரம் பரிசாகக் கிடைக்கிறது! நல்லாட்சி மலர்கிறது! ஊதியம் உயர்கிறது! உவகை ததும்புகிறது! தான் கிடந்த பசியின் பரிசை எண்ணி காலமெல்லாம் குதூகலம் குதூகலம் தான்! இது நாட்டு நடப்பு! நம் கண்முன்னே நடக்கிறது!
கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு போராட்டங்கள்! தான் விரும்பிய பொருளை கணவன் வாங்கிக் கொடுக்க மறுக்கும்போது சமைத்த உணவைக் கூடச் சாப்பிடாமல் பசியோடு படுத்து விடுகிறாள் மனைவி! மறுநாள் அவள் கேட்ட பொருள் வீடு வந்து சேருகிறது! இது அவள் பசிக்குக் கிடைத்த பரிசு!
தனக்குத் தேவையான விளையாட்டுப் பொருளை தனக்கு வாங்கிக் கொடுக்கவில்லை என முரண்டு பிடித்து சாப்பிட மறுக்கிறது குழந்தை! உடனே அந்த விளையாட்டுப் பொருள் குழந்தை கைக்குக் கிடைக்கிறது! இது அக்குழந்தையின் பசிக்குக் கிடைத்த பரிசு! இது வீட்டு நடப்பு!
இப்படியே உலகில் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் நிலைகளிலும் ஒவ்வொரு பசிப்போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன! முடிவில் அந்தப் பசிக்குப் பரிசும் நிச்சயம் கிடைத்து விடுகின்றது!
ஏன் தெரியுமா? மனித உணர்விலேயே யாரும் சகித்துக் கொள்ள முடியாத ஓர் உணர்வு பசி உணர்வுதான்.
மக்கள் பசித்திருக்க மன்னன் சகிக்க மாட்டான். மனைவி பசித்திருக்கக் கணவன் சகிக்க மாட்டான். பிள்ளை பசித்திருக்க பெற்றோர் சகிக்க மாட்டார்கள்.
“மனிதனுக்கு மனிதனே சகித்துக் கொள்ள முடியாத உணர்வு தான் பசி உணர்வு !” ஆம்! இது தான் உண்மை!
“தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று சிந்து பாடி வைத்தான் சுதந்திரக் கவிஞன் பாரதி. ஒரு மனிதன் பசி கிடந்தால் கூட, உலகையே அழித்து விடலாம். என்று கொதிக்கிறான் அவன். மீண்டும் நினையுங்கள். “மனிதனுக்கு மனிதனே சகித்துக் கொள்ள முடியாத உணர்வு தான் பசி உணர்வு”
இந்த நிலையில் மனிதனின் பசியை இறைவன் சகித்துக் கொள்வானா? இதுதான் நமது கருப்பொருள்! நிச்சயம் சகித்திக் கொள்ளமாட்டான்.
கருணைக் கடாட்ஷமும், கொடைத்தயாளமும், அருளும், அன்பும் கொண்ட நிகரற்ற அந்த தலைவனுக்கு நமது பசி தேவையா? நாம் பசித்திருப்பது அவனுக்கு ஓர் இன்பமா? அது ஒரு திருவிளையாட்டா? இந்தப் மனிதப் பசி நிலையால் அவனுக்கு என்ன இலாபம்? எதுவுமே இல்லை. எதுவுமே இல்லை !!
மனிதப் பசியால் இறைவனுக்கு இன்பமும் இல்லை! மனிதப் பசியால் இறைவனுக்கு இலாபமும் இல்லை! மனிதப் பசி அவனுக்கு ஒரு விளையாட்டும் அல்ல! மனிதப் பசி அவனுக்குத் தேவையுமல்ல!
அப்படி என்றால் ஏன் மனிதனைப் பசித்து இருக்கச் சொல்கிறான்? பட்டினி கிடக்கச் செய்கிறான்? அந்தப் பசியை ஒரு மாதப் பகற்காலங்களில் கடமையாக ஏன் ஆக்கினான்? அதைக் கடைபிடிக்காதவரை ஏன் தண்டிக்கிறான்? எக்காலமும் போல் மனிதனை உண்டு தின்று வாழ விட வேண்டியது தானே?
அதற்குத்தான் இறைவன் சொல்கிறான் : “என்னை நம்பி விசுவாசிப்போரே! உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் பயபக்தி (என்னும் தக்வா) உடையவர்களாகலாம்” என அல்குர்ஆன் சூரா அல்பகரா வசனம் 183 ல் இறைவன் அறிவிக்கின்றான்.
இறைவனின் பயமும் பக்தியும் (தக்வா) ஒரு மனிதனின் உள்ளத்தில் உருவாகி விட்டால், அவன் தவறுகளிலிருந்து தவிர்ந்து கொள்கிறான். எந்த மனிதன் தவறுகளிலிருந்து தவிர்ந்து கொண்டானோ அவனே மனிதப் புனிதன். எந்த மனிதன் புனிதப்பட்டு விட்டானோ அவனே புண்ணியவான். புண்ணியவான்கள் புகும் தளம் சுவனலோகம். அந்தச் சுவனத்திற்கு வழிகாட்டுவதே உண்ணா நோன்பு. அந்த நோன்பு என்னும் பசிக்குப் பரிசு தான் சொர்க்கம். அந்த சொர்க்கம் என்னும் பரிசைப் பெற நாமும் புண்ணியம் பூத்துக் குலுங்கும் கண்ணிய ரமலானில் புனித நோன்பு நோற்றுப் பகலெல்லாம் பசியுடன் வாழுவோம். வாருங்கள்.
நன்றி : குர்ஆனின் குரல், ஜுலை 2013