இந்துவாக பிறந்ததற்கு நான் எப்படி பொறுப்பாவேன்?
கேள்வி : மறுபிறப்பில் ஆபிராமிய மதங்களில் நம்பிக்கை இல்லை. ஒரே பிறப்புதான்.. அந்த ஒரே பிறப்பை, என்னை ஏன் ஹிந்துவாக பிறக்க வைத்தான் அல்லாஹ்? ஹிந்து தாய் தந்தைக்கு பிறந்தால், நான் ஹிந்துவாகத்தான் வளர்க்க படுவேன். யூதன் யூதனாக வளர்க்க படுவான். கிறிஸ்துவன் கிருதுவனாக வளர்க்க படுவான். பவுத்தான் பவுத்தனாக வளர்க்க படுவான்… -திரு ஜனவி புத்திரன்!
பதில் : இங்கு இறைவனை குற்றம் சொல்ல முடியாது. ஆதாமும் ஏவாளும் முதல் மனிதர்கள் இந்த உலகத்துக்கு. அதன் பின் நமது காலம் வரை இந்த உலகத்துக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான இறைத் தூதர்கள் மனிதர்களை நேர் வழிப்படுத்த வந்துள்ளார்கள். ஒவ்வொரு மொழிக்கும் தூதரை அனுப்பியுள்ளதாக குர்ஆனில் இறைவன் கூறுகிறான். ஆனால் மனிதனோ தனக்கு அருளப்பட்ட வேதத்தை சில காலத்துக்குப் பிறகு தனது வசதிக்காக மாற்றி விடுகின்றான்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இறைத் தூதரான ஏசு நாதரை இன்று கிறித்தவர்கள் கடவுளாக மாற்றியதை பார்க்கிறோம். அவரும் நபிகள் நாயகத்தைப் போல ஒரு இறைத் தூதரே! அதே போல் இந்து மத வேதங்களும் ஏக தெய்வக் கொள்கையையே பறை சாற்றுகின்றன. ஆனால் அந்த வேதத்தை மொழி பெயர்க்காமல் தெருவுக்கு ஒரு கடவுளை உண்டாக்கிக் கொண்டது யார் தவறு? ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்பதூனே நமது தமிழர்களின் பண்பாடு. அதனைத்தானே இஸ்லாமும் போதிக்கிறது?
ஒரு இந்துவுக்கு மகனாக பிறந்ததனால் நீங்கள் இந்துவுவாக உள்ளீர்கள். ஆனால் உங்கள் மூதாதையரில் யார் ஏக தெய்வ கொள்கையில் இருந்து பல தெய்வ கொள்கைக்கு மாறினாரோ அவரையே இறைவன் குற்றம் பிடிப்பான். ஆனால் உண்மை விளங்கிய பின்னும் முரட்டுப் பிடிவாதம் பிடித்தால் அவர்களை இறைவன் தண்டிப்பதாக கூறுகிறான்.
இந்த காலத்தில் உங்களுக்கு அனைத்து வேதங்களையும் பார்வையிட வசதியுள்ளது. இணையம் மிக அழகிய வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. உலக மதங்கள் அனைத்தையும் நமது உள்ளங் கையில் அடக்கி விடலாம். அந்த அளவு வசதிகள் வந்து விட்டது. இவ்வளவு வசதிகள் வந்த பின்னும் இத்தனை ஆதாரங்கள் இருந்த பின்னும் நான் எனது தாய் தந்தையர் வழியையே பின் பற்றுவேன் என்று அடம் பிடிப்பது யாருடைய குற்றம்? இதற்கு இறைவன் எப்படி பொறுப்பாவான்.
இனி இறைவன் பேசுகிறான் அதனைக் கேளுங்கள்:
இறைவனின் தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவை உண்டு பண்ணிக் கொண்டு மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் மாதிரி ஆகி விடாதீர்கள். அத்தகையோருக்குக் கடுமையான வேதனையுண்டு. (குர்ஆன் 3:105)
“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் – அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கிறார்களோ நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் அவர்களைச் சபிப்பதற்கு உரிமையுடையவர்களும் சபிக்கிறார்கள்”. (2 : 159)
ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் நல்லோருக்கு நன்மாராயங் கூறுவோராகவும் தீயோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களுக்கிடையே ஏற்படும் விகற்பங்களைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப்பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்களும் அத்தாட்சிகளும், வந்த பின்னரும் தம்மிடையே உண்டான பொறாமை, பகை ஆகியவற்றின் காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான்; இவ்வாறே அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான். (2 : 213)
“எவர்கள் தங்களுடைய மார்க்கத்தைத் தம் விருப்பப்படி பலவாறாகப் பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் நபியே! உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்” (6 : 159)
“அவர்களுக்கு (மார்க்க) விஷயத்தில் தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால் அவர்களுக்கு (வேத) ஞானம் வந்த பின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராயபேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்”. (45 : 17)
“நிச்சயமாக உங்கள் சமுதாயம் – வேற்றுமை ஏதுமில்லா ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் ரப்பு: ஆகையால் என்னையே நீங்கள் வணங்குங்கள்.
ஆனால் பிந்தைய சந்ததியர் தங்கள் மார்க்கக் காரியத்தில் பிளவுண்டு (பல பிளவுகளாகப்) போயினர், (ஆனால் இறுதியில்) இவர்கள் யாவரும் நம்மிடையே மீள்பவர்களாக இருக்கிறார்கள்”. (21 : 92, 93)
“நிச்சயமாக இதுவே (குர்ஆன்) என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள். இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்து விடும்; நீங்கள் (நேர்வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்குப் போதிக்கிறான்” (6 : 153)
source: http://suvanappiriyan.blogspot.in/2014/07/blog-post_5509.html