நோன்பு நோற்றவர் ரய்யான் எனும் சுவன வாசல் நோக்கி…
நோன்பு நோற்றவர் ரய்யான் என்ற பிரத்தியேக வாயிலால் சுவனம் செல்வர்
கண்ணியமிக்க பேரருள்களைச் சுமந்து மீண்டும் ஒருமுறை எங்களை நோக்கி வந்திருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ். அந்த அருள்நிறைந்த மாதத்தை எவ்வாறெல்லாம் கண்ணியப்படுத்த வேண்டும் எத்தகைய செயல்களால் அந்த மாதத்தின் பரிசுத்தத் தன்மைக்கு களங்கம் கற்பிக்கக் கூடாது என்பதை இம்மாதத்தில் நீங்கள் கேட்கப் போகும் ஒவ்வொரு மார்க்க விளக்கமும் உங்களுக்கு விளக்கத்தான் போகின்றது.
அந்த விளக்கங்களுக்கு மத்தியில் ரமழான் எங்களை எங்கே அழைத்துச் செல்ல விரும்புகிறது அதன் அழைப்பை கௌரவித்து நாம் பதில் சொல்வோமா அல்லது அதன் அழைப்புக்கு பதில் சொல்லாமலே அதனை வழியனுப்பி விடுவோமா என்பது பற்றிய ஒரு சிந்தனையை இந்த இதழின் தஃவா களத்தினூடாக பகிர்ந்து கொள்கிறேன், இன்ஷா அல்லாஹ்.
குர்ஆன் ஓர் அழைப்பை விடுக்கிறது. கூர்ந்து நோக்கினால் அதுதான் குர்ஆன் இறங்கிய மாதத்தின் அழைப்பாகவும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
குர்ஆனின் அழைப்பு என்ன?
வானம் பூமியளவு விசாலமான சுவனத்தின்பாலும் உங்கள் இரட்சகனது மஃபிரத் (பாவமன்னிப்பு)தின்பாலும் விரைந்து வாருங்கள். (அந்த சுவனம்) இறையச்சமுள்ளவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.
குர்ஆனின் இந்த அழைப்பில் மூன்று விடயங்கள் இருக்கின்றன.
வானம், பூமியளவு விசாலமான சுவனம்
உங்கள் இரட்சகனது பாவமன்னிப்பு
பாவமன்னிப்புக்கு ஒரு மனிதனைத் தயார் செய்து சுவனத்தைப் பெற்றுக் கொடுக்கும் இறையச்சம்
இம்மூன்றையும் நினைவில் வைத்துக் கொண்டு நோன்பின் பக்கம் கவனத்தை சிறிது திருப்புவோம். அங்கும் இதோ மூன்று விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருப்பதை நீங்கள் காணலாம்.
நோன்பு நோற்றவர் ரய்யான் என்ற பிரத்தியேக வாயிலால் சுவனம் நுழைவார் என்றும், நோன்பு மாதத்தை அடைந்ததும் எந்த மனிதரது பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ, அவர் நாசமாகட்டும் என்றும்
உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்படுகிறது, நீங்கள் இறையச்சம் பெறலாம் என்பதற்காக என்றும்
அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன செய்திகள் குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளன.
ஆக, எதன் பக்கம் விரைந்து வாருங்கள் என்று குர்ஆன் அழைப்பு விடுக்கிறதோ, அதன் பக்கமே குர் ஆன் இறக்கியருளப்பட்ட மாதமான ரமழானும் அழைப்பு விடுப்பது தெளிவாகத் தெரிகிறது.
இங்கு நாம் படித்துணர வேண்டிய பாடம் என்ன? குர்ஆனும் ரமழானும் விடுக்கும் அழைப்பின் அர்த்தம் என்ன? இந்த அழைப்பின் பக்கம் நோன்பு நோற்கும் சமூகமும் செல்ல முயற்சிக்கிறதா அல்லது அழைப்பையும் புரியாமல் அழைப்புக்கு பதிலும் சொல்லாமல் ரமழானை நாம் கழித்து விடுகிறோமா?
முதலில் அழைப்பின் அர்த்தத்தை விளங்குவோம்.
சுவர்க்கத்தை நோக்கி விரையுங்கள்.
சுவனம் வேண்டுமாயின் உங்கள் இரட்சகனிடமிருந்து பாவமன்னிப்பைப் பெறுங்கள்.
பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமாயின், உங்கள் வாழ்வு முழுவதையும் இறையச்சத்தால் சீர்செய்து நெறிப்படுத்துங்கள்.
இறையச்சத்தைப் பெறுவதற்கு நோன்பு நோற்றுப் பயிற்சி பெறுங்கள்.
இறையச்சத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குர் ஆனையும் சுன்னாவையும் படியுங்கள்.
இவ்வாறு சங்கிலித் தொடராக பிணைக்கப்பட்ட ஒரு பாதையில் தொடர்ந்து முன்னேறிச் சென்று சுவர்க்கத்தை அடைந்து கொள்ளுங்கள் என்பதே குர்ஆனினதும் ரமழானினதும் அழைப்பின் அர்த்தமாகும்.
இந்த அர்த்தம் புரியப்பட்டுள்ளதா? நோன்பு நோற்பவர்கள் இவ்வாறானதொரு நீண்ட பாதையில் தமது பயணத்தை ஆரம்பித்து சுவனம் நோக்கிச் செல்கிறார்களா அல்லது நீண்டு செல்லும் சங்கிலித் தொடர் போன்ற இந்தப் பாதையில் ஒரு செயலை (நோன்பு) மட்டும் செய்துவிட்டு, அடுத்த ரமழான் வரை ஓய்வெடுத்துக் கொள்கிறார்களா? அல்லது ரமழானில் நோன்பும் ஷவ்வாலிலிருந்து ஓய்வும் எடுத்துக் கொண்டால் சுவனம் கிடைத்துவிடும் என்று வேறு ஓர் அழைப்பை விளங்கியிருக்கிறார்களா?
அன்பர்களே, சுவனத்துக்கு ஒரு பாதை இருக்கிறது. அந்தப் பாதையில் தொடர்ச்சியாகப் பல வேலைகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானதொரு வேலை தான் நோன்பு நோற்றலாகும்.
நோன்பு இறையச்சத்தைப் பெறுவதற்கான ஒரு பயிற்சி அல்லது பெற்ற இறையச்சத்தை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கும் பாதுகாத்துக் கொள்வதற்குமான ஒரு கேடயம்.
அவ்வாறாயின், நோன்பின் மூலம் பெற்ற இறையச்சத்தை வாழ்வு முழுவதிலும் செயற்படுத்த வேண்டும். அந்த இறையச்சமிக்க வாழ்க்கைக்கு குர்ஆன், சுன்னாவின் போதனைகள் அவசியமாகின்றன.
எனவே, அப்போதனைகளைக் கற்க வேண்டும்.
அவ்வாறு கற்ற போதனைகளால் அலங்கரிக்கப்படும் வாழ்க்கைதான் பாவங்கள் குறைந்த வாழ்க்கையாகும். அது மட்டுமல்ல, பாவங்களுக்குப் பரிகாரம் செய்யப் பட்ட வாழ்க்கையும் அதுதான்.
எந்த மனிதனின் வாழ்க்கை பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகிறதோ அவனுக்கு சுவனம் கிடைக்கும் என்பதை அல்லாஹ் ஆணித்தரமாகக் கூறுகிறான். இந்த அல்குர்ஆன் வசனத்தை உற்று நோக்குங்கள்.
நபியே! நரக வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் ஒரு வியாபாரத்தைக் காட்டி (கற்றுத்) தரட்டுமா என்று கேளுங்கள். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விசுவாசித்து, அல்லாஹ்வின் பாதையில் உங்கள் உயிர் உடைமைகளை அர்ப்பணித்து கடுமையாக உழையுங்கள். (நீங்கள் அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களது பாவங்களை மன்னிப்பான். சதாவும் நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனச் சோலைகளில் உங்களை நுழைவிப்பான். நிரந்தர சுவனத்தில் அதிசிறந்த வசிப்பிடங்களில் உங்களை வாழவைப்பான். அது மகத்தான் வெற்றியாகும். (61: 21)
ஆக, அர்ப்பணங்களும் தியாக உழைப்புகளும் மிக்க வாழ்க்கைதான் பாவங்கள் மன்னிக்கப்பட்ட வாழ்க்கை. அந்த வாழ்க்கைக்குப் பரிசாகவே சுவன பாக்கியம் தயார் செய்யப்பட்டுள்ளது என்ற உண்மை இந்த வசனத்தில் கோடிட்டுக் காட்டப்படுகிறது அல்லவா?
இவ்வாறு ஒரு நீண்ட பாதையில் பயணம் செய்து தான் சுவனத்தை அடைய வேண்டும்.
இன்றைய நோன்பாளிகள் பாதையை மறந்து விடுகிறார்கள். அதில் சுவனம் நோக்கிய ஒரு பயணம் இருப்பதையும் மறந்து விடுகிறார்கள். ரமழானோடு கடமைகள் முடிந்துவிட்டதாகவும் சுவனம் வாஜிபாகி விட்டதாகவும் நினைக்கிறார்கள்.
இவ்வாறு இலேசாக சுவனம் செல்ல முடியுமானால், இறுதித் தூதரோடு இணைந்திருந்த அந்த ஸஹாபிகள் சமூகம் 23 வருடங்களும் ரமழானை மாத்திரம் கொண்டாடியிருக்கலாமே! ரஸூலுல்லாஹ்வுடன் இணைந்து ரமழானைக் கொண்டாடக் கிடைப்பது அது எத்தனை பெரிய பாக்கியம்! ஏன் அந்த உத்தமத்தூதரோடு வாழ்ந்த சமூகம் அப்படியொரு விளக்கத்தை எடுத்துக் கொள்ளவில்லை?
ஆம், அவர்களுக்குத் தெரிந்திருந்தது சுவனப் பாதையில் இருக்கின்ற பிற வேலைகளையும் செய்து பயணித்தால்தான் சுவனத்தை அடையலாம் அவ்வாறு செய்யாத போது நோன்பில் எஞ்சிவிடுவது பசியும் தாகமும் மாத்திரமே என்று
எத்தனை நோன்பாளிகள் நோன்பு நோற்கிறார்கள்! அவர்களுக்கு அவர்களது நோன்பில் பசியையும் தாகத்தையும் தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகிறார்கள்.
மற்றோர் அறிவிப்பில், நோன்போடு தமது வேலையை நிறுத்திக் கொண்டு அதற்கடுத்த வேலையைத் தொடராதவர் நோன்பின் நன்மைகளை இழந்து விட்டார். அவரது நோன்பு அல்லாஹ்வுக்கு அவசியமற்றது என்ற கருத்தை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகிறார்கள். பின்வரும் ஹதீஸைப் படியுங்கள்.
கெட்ட வார்த்தைகளையும் கெட்ட நடத்தைகளையும் யார் விடவில்லையோ அவர் உணவையும் குடிப்பையும் விட வேண்டும் என்ற அவசியம் அல்லாஹ்வுக்கு இல்லை.
வார்த்தையும் நடத்தையும் தான் வாழ்க்கை. அந்த இரண்டிலும் கெட்டவற்றை விடாதவர் உணவையும் குடிப்பையும் மாத்திரம் விட்டுவிட்டால் சுவனம் செல்ல முடியுமா?
நோன்பு நோற்றவர் நரகம் செல்லக் கூடாது. அவர் ரய்யான் என்ற சுவன வாயிலை நோக்கிச் செல்ல வேண்டும். அது ஒரு பயணம் பாய்ச்சல் அல்ல. நோன்பு நோற்பவர் ஒரே பாய்ச்சலில் ரய்யான் என்ற வாயிலை அடைந்துவிட முடியாது. அவர் நோன்பு காலத்திலும் சரி, நோன்பு முடிந்த பின்னும் சரி, ரய்யான் நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். பயணத்தின் இடைநடுவில் வரும் ஆபத்துக்களை அறிந்திருக்கவும் வேண்டும். பயணப் பாதையில் சறுக்கும் இடங்களை அவர் அவதானமாகக் கடந்து செல்ல வேண்டும். பாதையின் இரு மருங்கிலும் முன்னாலும் பின்னாலும் சூழ்ந்திருந்து வழிகெடுக்கக் காத்திருக்கும் ஷைத்தானின் தீங்குகளை அறிந்திருக்க வேண்டும். ஷைத்தான் அல்லாஹ்விடம் சபதம் செய்துள்ளான்.
இறைவா! நான் உனது நேரான பாதையில் அவர்களை எதிர்கொண்டு அமர்ந்திருப்பேன். பின்னர் அவர்களுக்கு முன்னாலும் வருவேன் பின்னாலும் வருவேன். வலதாலும் வருவேன் இடதாலும் வருவேன்.(அவர்களை சூழ்ந்து வழிகெடுப்பேன்.) அவர்களுள் அதிகமானோரை நன்றியுள்ளவர்களாக இருக்க நீ காண மாட்டாய். (7: 16)
இத்தகைய தடைகளையெல்லாம் தாண்டித்தான் ரய்யான் எனும் சுவனவாயிலை நோக்கிய பயணம் அமைய வேண்டும்.
அல்லாஹ்வின் தூதரும் அன்னாரின் தோழர்களும் நோன்புகளை நோற்றுவிட்டு ரய்யான் திறந்து கொள்ளும் என்று வாளாவிருக்கவில்லை. அவர்கள் பயணித்துக் கொண்டே இருந்தார்கள். அவர்களது பயணத்தில் பெரும் சவால்கள் காத்திருந்தன. பத்ரும் உஹதும் ஹந்தக்கும் சாமான்ய சவால்களா?
ரமழான் மாதத்தில்தான் பத்ரையும் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது, ஏன் இத்தனை சிரமம்? எங்களைப் போன்று நோன்புகளோடு கடமைகளை முடித்துவிட்டு ரய்யான் திறந்து கொள்ளும் எனக் காத்திருந்திருக்கலாமே! ரமழானில்தானா மக்காவை வெற்றி கொள்ளப் புறப்பட வேண்டும்? மக்கா திறந்து கொள்ளாவிட்டாலும் ரய்யான் திறந்து கொள்ளும் என்று அவர்கள் இருந்திருக்கலாமே!?
அன்பர்களே! நாம் விளங்கிய மார்க்கம் வேறு நபிகளார் விளக்கி, செய்து காட்டிய மார்க்கம் வேறு. அவர்கள் காட்டிய மார்க்கத்தில் ஒரு தெளிவான பாதையும் பயணமும் இருந்தன. அந்தப் பயணத்தில் ஆரம்பம் எது, முடிவு எது பாதையில் மேடு எது, பள்ளம் எது சவால் எது, சாணக்கியம் எது பயிற்சி எது, பண்பாடு எது? போன்ற அனைத்தும் தெளிவாக இருந்தன.
நாங்கள் விளங்கிய மார்க்கத்தில் அப்படியொன்றும் இல்லை. ஸஹர் உணவை எதுவரை சாப்பிடலாம்? பேரீத்தம் பழத்தினால் நோன்பு துறப்பதா? பழம் இல்லாமலே நோன்பு துறக்கலாமா? நோன்பாளி ஊசி மருந்து ஏற்றிக் கொள்ளலாமா? இரவில் எத்தனை ரக்அத்துகள் தொழ வேண்டும்? பிறை சர்வதேசத்துக்கா, நம் தேசத்துக்கா? ரமழானில் (வாழ்க்கையிலல்ல) செய்ய வேண்டியவை எவை, செய்யக் கூடாதவை எவை?
இப்படியான சில பல விடயங்களோடு நாங்கள் அறிந்து வைத்திருக் கிற மார்க்கம் முடிவடைந்து விடுகிறது. நாங்கள் அறிந்த மார்க்கம் ரய்யான் வரை பயணிக்கும் மார்க்கம் அல்ல ஷவ்வாலோடு கரைந்து விடும் மார்க்கம்.
அவ்வாறு கரைந்து செல்லும் மார்க்கத்தினுள் மனிதர்களை வைத்துக் கொள்ளத்தான் நாம் பகீரதப் பிரயத்தனம் செய்கிறோம் ரய்யான் வரை பயணிக்கும் மார்க்கத்தில் மனிதர்களை ஒன்று சேர்ப்பதற்கல்ல.
இந்நிலை ஆபத்தானது. இதன் பாரதூரத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ரமழானில் அதிகமாக நன்மைகளில் ஈடுபடுங்கள். வணக்க வழிபாடுகள், கற்றல் கற்பித்தல், ஸதகா, தருமங்கள், பயான்கள், ஒன்றுகூடல்கள்… என நன்மைகள் இம்மாதத்தில் அதிக ரிக்கட்டும். எனினும், ஒரு பயணத்துக்காக அன்றி ஷவ்வாலுடன் விடைபெறுவதற்காக அல்ல!
நீண்டு செல்லும் பயணத்தில் நிலைத்து நிற்கும் உள்ளங்களை வல்ல நாயன் நோன்பாளிகளுக்கு வழங்கு வானாக!
–உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
source: http://usthazhajjulakbar.org/index.php/தஃவாக்களம்/125-ரய்யான்-எனும்-சுவன-வாசல்-நோக்கி