மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கொன்றது நாங்கள் இல்லை என்று பலஸ்தீனிய அமைப்புகள் அனைத்தும் மறுத்துள்ள போதும் இஸ்ரேல் அவர்கள் தான் இதைச் செய்துள்ளனர் எனத் தன் தாக்குதலுக்கு நியாயம் சொல்கிறது. ஆதாரம் என்ன என ஐ.நா இஸ்ரேல் அரசைக் கேட்டதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆனால் தாக்குதல்கள் தொடர்கின்றன.
பலஸ்தீனியர்களின் ஹமாஸ் அமைப்பும் ராக்கெட் தாக்குதல்களை நடத்துகிறது என்றாலும் இதுவரை ஒரே ஒரு இஸ்ரேலியர்தான் கொல்லப்பட்டுள்ளார். ஹமாஸ் அமைப்புடன் நல்ல உறவில் இல்லாத தற்போதைய எகிப்து அரசு முன்வைத்தப் போர் நிறுத்தத் திட்டத்தை ஹமாஸ் நிராகரித்துள்ளது. அதை ஒட்டி இஸ்ரேல் தனது இரண்டாம் கட்டக் குண்டு வீச்சைத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேலின் போர் நிறுத்த வாக்குறுதிகளை நம்பவே இயலாது. அப்படித்தான் 2008ல் போர் நிறுத்தத்திற்கு ஒத்துக்கொண்ட இஸ்ரேல் பின்னர் சிறையிலுள்ள ஒரு இஸ்ரேலியன் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஒரு காரணத்தைச் சொல்லி மீண்டும் போரைத் தொடங்கியது. அந்தப் போரில் மட்டும் சுமார் 1200 பலஸ்தீனியர்கள் கொள்ளப்பட்டுள்ளனர்.
தமக்குள் எதிர் எதிராக நின்ற பலஸ்தீனிய அமைப்புகளான ஹமாசும் ஃபடாவும் சென்ற ஏப்ரலில் இணைந்து காசாவில் ஒரு “ஒற்றுமை அரசு” (unity Govrnment) அமைத்ததை இஸ்ரேலால் செரித்துக் கொள்ள இயலவில்லை. அதன் விளைவுதான் இந்தத் தாக்குதல்.
மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கொல்லப்பட்டததற்கு “ஒரு தந்தை என்கிற முறையில்” கண்ணீர் வடிப்பதாகச் சொன்ன ஒபாமா அந் நிகழ்ச்சிக்கு முன் இரு பலஸ்தீனிய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையும் பின் ஒரு பலஸ்தீனியச் சிறுவன் உயிருடன் எரிக்கப்பட்டதையும் கண்டிக்கவில்லை. சுமார் 250 பலஸ்தீனச் சிறுவர்கள் நீண்ட காலமாக இஸ்ரேலியச் சிறையில் அடைபட்டுக் கிடப்பது குறித்தும் பேசியதில்லை.
பலஸ்தீனர்களின் உரிமையை இந்தியா எப்போதுமே அங்கீகரித்து வந்துள்ளது. இந்நிலை 1998ல் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி வந்தபோது மாறியது. இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுத்தது. அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சி நேரு காலத்திய அணுகல் முறையைக் கைவிட்டு பா.ஜ.க தொடங்கிய வழியிலேயே சென்றது.
இன்று பா.ஜ.க அரசு இன்னும் ஒரு படி மேலே சென்று இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலில் “நடுநிலைமை” வகித்துக் கொலைக்குத் துணை போகிறது. குடிமக்களாகிய நாம் இதைக் கண்டிக்க வேண்டும். அறம் சார்ந்த ஒரு அயலுறவுக் கொள்கைக்காகப் போராட வேண்டும்.
குறிப்பு 1 : இந்துத்துவ அமைப்புகள் யூத ஆதரவு மேற்கொள்வது என்பதையும், யூத அமைப்புகளுடன் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் தொடர்புகளைப் பேணுவது என்பதையும் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளன. ஜனதா ஆட்சியின் போது அதில் ஓர் அங்கமாக இருந்த பாரதிய ஜனசங் தலைவர்களை இஸ்ரேலின் முன்னாள் தளபதி ஒற்றைக் கண் மேஷே தயான் இரகசியமாக வந்து சந்தித்துச் சென்ற கதை ஒன்றுண்டு.
2. சென்ற பா.ஜ.க தலைமையிலான ஆட்சியின்போது பொகாரனில் அணு குண்டு சோதனை நடத்திய கையோடு அன்றைய துணைப் பிரதமர் அத்வானி, இனி அயலுறவில் அறத்திற்கு இடமில்லை, “எதார்த்த அரசியலுக்கே (Real Politic) இனி இடமுண்டு” என்றது நினைவுக்குரியது.
3. பலஸ்தீனியத் தலைவர் யாசிர் அராபத் இறந்தபோது வரலாறு காணாத அளவில் உலகத் தலைவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். போகாத ஒரு முக்கிய தலைவர் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்.
-அ.மார்க்ஸ் அந்தோனி சாமி.